அன்புள்ள எழுத்தாளர் ஜெயமோகனுக்கு
கர்ணனின் வாழ்நாள் கனவு என்பதே போர்க்களத்தில் அர்ஜுனனை வெல்வது என்பதே. .காம்பில்யப்போரில் வெற்றியின் விளிம்பு வரை வந்த கர்ணன் போர்சூழ்கையின் சதி செயல்களால் அர்ஜுனன் முன்பு வில் தாழ்த்தினான். அதனை இளைய யாதவரிடம் உரையாடும் திரௌபதி சொல்முகமாக வெண்முரசு விவரிக்கிறது
வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 48 திரௌபதி “நன்று. அவர் (கர்ணன் ) நலம்பெற்றாகவேண்டும். காம்பில்ய போரில் அவர் தோற்றது அவரது குறைவீரத்தாலும் அல்ல. அச்சூழல் அவ்வண்ணம் ஆகியது” என்றாள்.கிருஷ்ணன் புன்னகையுடன் “போரில் வெற்றியும் தோல்வியும் பகடைப்புரளலின் நெறிகளை ஒத்தவை” என்றான். “பகடைகளை ஆடுபவர்கள் களத்திற்கு வெளியே நின்றிருக்கிறார்கள்.” திரௌபதி சில கணங்கள் அவனை விழி தொட்டு நோக்கியபின் விலக்கிக்கொண்டு “ஆம், நான் விளையாடினேன்” என்றாள். “அஸ்தினபுரியின் படகுகளில் பன்னிரு படகுகளே எரிந்தன. ஆனால் நீரில் சென்றவை நாற்பதுக்கும் மேற்பட்ட படகுகள். கங்கைக்கரையில் சித்ரபதம் என்ற படகு சீரமைக்கும் இடம் எங்களுக்குண்டு. அங்கிருந்த அனைத்துப் படகுகளையும் எரியூட்டி நீரில் ஒழுக்க நான் ஆணையிட்டேன்” என்றாள் திரௌபதி. ”அப்படி அஸ்தினபுரியின் படகுகள் செல்வதை ஜயத்ரதனுக்கு சுட்டிக்காட்டிய படைத்தலைவனிடம் என் ஒற்றன் அணுக்கச்சேவகனாக பணிபுரிகிறான்.” கிருஷ்ணன் “அவன் பெயரையும் நான் கேட்டு அறிந்துகொண்டேன்” என்றான். ஆம் திரௌபதியின் போர் சூழ்ச்சி கர்ணனை போரில் பின்வாங்க செய்தது .
அதன் பின்பு விராட தேசத்தில் நடந்த போரிலும் அர்ஜுனனை வெல்ல கர்ணனால் இயலவில்லை .பரசுராமரின் முதன்மை சீடனாக விஜயம் என்ற தெய்வங்கள் வார்த்தெடுத்த வில்லை கர்ணன் ஏந்தியதுவும் அர்ஜுனன் முன் சமயுத்தம் புரிவதற்காத்தான் .அதற்கான உகந்த நேரம் சூரியமைந்தனுக்கு கனிந்தது குருஷேத்திர யுத்த களத்தில் பிஷ்மர் களம் கண்டபின்பு தான் .இதோ பீஷ்மர் இல்லாத முதல் நாள் போரில் பீஷ்மர் களம் பட்டதால் ஏற்பட்ட வெற்றிடத்தை கர்ணன் கனகச்சிதமாக நிரப்பி விட்டான் .ஆம் பாண்டவ சேனைகளை காட்டெரி என நிர்மூலம் செய்தவர் பிதாமகர் .கர்ணன் பாண்டவ சேனைகளை அதிக விசையில் தாக்கி பெருமளவில் உயிர் சேதங்களை உண்டாக்கி ,பாண்டவ படையின் முன்னணி வீரர்களையும் பின்னடைய செய்தான் .
‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-23 - புரவியில் வந்து இறங்கிய திருஷ்டத்யும்னன் யுதிஷ்டிரரை அணுகி தலைவணங்கி “பேரழிவு! இப்போர் தொடங்கிய பின்னர் இன்றுபோல் அழிவு என்றுமில்லை. பீஷ்மர் உருவாக்கிய அழிவுக்கு ஒரு படி மேல்” என்றான். யுதிஷ்டிரர் “ஆம், அதை எவரும் சொல்லவேண்டியதில்லை. விழிகளே காட்டின” என்றார். ஆனால் அன்று இரவு துரியோதனன் அவையில் அடுத்த நாளுக்கான போர்சூழ்கை குறித்த கூட்டத்தில் கர்ணன் தான் பெற்ற வெற்றிகள் குறித்து ஒருசொல்லும் உரைக்கவில்லை .அர்ஜுனனை ஒருநாளேனும் போரில் வெல்லும் தனது வாழ்நாள் இலட்சியத்தை எய்திட்டதை பற்றி சொலெடுக்கவில்லை .மேலும் அவையில் கர்ணன் உடலசைவில் கூடஅர்ஜுனனை நிலம் வீழ்த்திய வெற்றியின் மமதையோ ,ஆணவமோ . அகங்காரமோ ,செருக்கோ ,பெருமிதமோ , தற்பெருமையோ ,எழாவண்ணம் கருவறை தெய்வம் என மௌனியாக பீடத்தில் அமர்ந்திருந்தான்.அதற்கான முதன்மைகாரணம் துரோணர் .ஆம் அவையில் அர்ஜுனன் தோல்வியை கர்ணன் கொண்டாடினால் அது துரோணரை அவைசிறுமை செய்ததாகத்தான் பொருள்படும் .ஏனென்றால் அர்ஜுனன் துரோணரின் முதன்மை சீடன் .அதனால் தான் போர்க்களத்தில் பூரிசிரவஸ் அர்ஜுனன் வீழ்ந்ததை துரோணரிடம் உரைத்தபோது அதனை துரோணர் ரசிக்கவில்லை .
‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-22 பூரிசிரவஸ் உரத்த குரலில் “வீழ்ந்தார் பார்த்தர்! இனி அவர் களமெழப்போவதில்லை என்கிறார்கள்” என்று கூவினான். கைகளை விரித்தபடி புரவியில் அமர்ந்தபடியே களிவெறியுடன் நடனமிட்டு “இனி அவர் களமெழப்போவதில்லை! இனி காண்டீபம் எழப்போவதில்லை!” என்றான். சீற்றத்துடன் அவனை நோக்கித் திரும்பிய துரோணர் கைவீசி “விலகு, அறிவிலி!” என்றார். மறுபுறத்தில் துரோணரை நோக்கி புரவியில் வந்த அஸ்வத்தாமன் “அவர் உயிர்துறக்கவில்லை, தந்தையே! அது வெறும் மயக்கம்தான்.இன்றைய போரிலிருந்து கற்றுக்கொண்ட அனைத்து ஆற்றலுடன் நாளை எழுவார். ஐயமில்லை!” என்றான். துரோணர் மெல்ல முகம் மலர்ந்து “ஆம்! அவனை வெல்ல இயலாது!” என்றார் “காண்டீபம் ஒருபோதும் தோற்காது, தந்தையே!” என்றான் அஸ்வத்தாமன். துரோணர் “ஆம்! மெய்!” என்றார்.
ஆம் உண்மையே .பரசுராமரின் சீடன் கர்ணன் .துரோணரின் சீடன் கர்ணன் .ஆதலால் இதில் துரோணர் எந்த பக்கம் சாய்வார் என்பது அனைவரும் அறிந்ததே .அதனால் தான் துரோணரால் சிறை பிடிக்கப்பட்ட யுதிஷ்டிரரை அர்ஜுனன் மீட்டபோது ,அர்ஜுனனை குறைகூறாமல் இளைய யாதவரை தான் துரியோதனன் அவையில் துரோணர் கூறுகிறார் .இதெல்லாம் அறிந்தே தான் அர்ஜுனனை வென்றதை பற்றி ஒரு சொல்லேனும் உரைக்காமல் அமைதி காத்தான் சூரிய மைந்தன் கர்ணன் .இது கூட கர்ணனுக்கு துரோணர் இழைத்த துரோகங்களையும் ,ஒரவஞ்சனைகளையும் மீண்டும் எண்ணி நாணிட தூண்டும் .இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல். என்ற தெய்வப்புலவரின் வரிகளை நினைவு படுத்துவது கர்ணனின் செய்கைகள் .அதனால் தான் அர்ஜுனனை வீழ்த்தியதை பற்றி சொல்லாமல் கர்ணன் அவை நீங்கினான் .அது கர்ணனின் பெருந்தன்மை .சூரியனின் பெருந்தன்மையே பூமியில் உயிர்களின் வாழ்வு .அதனை தான் கர்ணனும் நிகழ்த்தி விட்டான் . நன்றி ஜெயமோகன் அவர்களே !
தி .செந்தில்
ஸ்ரீவில்லிபுத்தூர்