சமூகம் முன்னேறிக்கொண்டிருக்கிறது என்று சொல்கிறோம். அதை யாராலும் மறுக்க முடியாது. இப்படி முன்னேறிச் செல்வதை தடுக்கவும் முடியாது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மதம் அரசியல் பண்பாடு அறிவியல் வணிகம் கல்வி மருத்துவம் என சமூகம் அடுத்தடுத்த நிலைக்கு சென்று கொண்டே இருக்கிறது. இந்த வளர்ச்சியில் நாம் நிறைய பெற்றிருக்கிறோம். ஆனால் அதற்கான விலையாக நம்மிடம் இருந்துஅதிகமாகவே பெறப்பட்டிருப்பதாக தோன்றுகிறது.
இடும்பகுடியினர் தம் சமூக மாற்றத்தைப்பற்றி பேசுவது நமக்கும் பொருந்துவதாக இருக்கிறது.
இடும்பகுடியிலிருந்து ஏதோ ஒன்று விலகிச்சென்றுவிட்டிருப்பதை அனைவருமே உணர்ந்திருந்தனர். முதியவர்கள் அனைவரும் அதை சொன்னார்கள். ஆனால் அது என்ன என்று எவராலும் வகுத்துரைக்க முடியவில்லை. ஒவ்வொருவரும் அவ்வப்போது அவர்கள் இழந்தவை என உணர்வது எதையோ அதை சொன்னார்கள். ஆண்களின் அச்சமின்மை என்றனர் பெண்கள். இளையோரின் கவலையின்மை என்றனர் மூத்தோர். முதியோர் இல்லத்திண்ணையிலிருந்து முற்றத்திற்கு இறங்குவதுபோல் இறப்பை நோக்கிச் செல்லும் இயல்பை என்றனர். ஏதோ ஒரு கணத்தில் அதை உணர்ந்து நெஞ்சு நெகிழ விழிகசிந்து விம்மத் தொடங்கினர்.
“இந்நகரம், இந்த மாளிகைகள், இச்செல்வம், நாம் அவைகளில் கொண்டுள்ள முதன்மை அனைத்தும் அதை கொடுத்து நாம் பெற்றுக்கொண்டதே” என்று கள்மயக்கில் அழுதபடி பூதர் அவனிடம் சொன்னார். “விலைகொடுக்காமல் எதையும் தெய்வங்கள் அளிப்பதில்லை. சிறகுகளை கொடுத்த பின்னரே யானை துதிக்கையை பெற்றது என்பது நம் குலக்கதை. நாம் பெற்றது இவை என்றால் கொடுத்தது என்ன? தெய்வங்களின் ஆடலில் ஒரு நெறி உண்டு. தெய்வங்கள் அளித்ததில் நிறைவுகொள்ளாமலேயே நாம் புதியது கோருகிறோம். எனவே அரியதை கொடுத்தே சிறியதை பெறுவோம்.” அவன் அவர்கள் சொல்வதென்ன என்று நன்றாகவே உணர்ந்திருந்தான். அத்துயரில் இணைந்து அவன் பெருமூச்சுவிட்டான்.
ஆம் நாம் எதைக் கொடுத்து எதை வாங்கியிருக்கிறோம் என்பதை சற்றே திரும்பிப்பார்த்தால் மிக வியப்பாக இருக்கிறது.
ஆயுளை நீட்டித்திருக்கிறோம். ஆனால் உடல் உபாதைகள் அதிகரித்திருக்கின்றன. உணவு தட்டுப்பாடு பெருமளவு குறைந்திருக்கிறது. அப்போது பசியைத் தீர்க்கும் அளவுக்கு உணவில்லை. ஆனால் இப்போது உணவிருக்கும் அளவுக்கு பசியில்லாமல் குறைந்திருக்கிறது. பொழுதுபோக்கு சாதனங்கள் அதிகரித்திருக்கின்றன. ஆனால் அவற்றில் உடலும் மனமும் அடையும் புத்துணர்ச்சி குறைந்திருக்கிறது. மனிதன் வேலைகளை எளிதாக்கும் கருவிகள் அதிகரித்துவிட்டன. ஆனால் உடலும் உள்ளமும் அதிகம் சோர்வடைகிறது. உலக கலைகள் அனைத்தும் நம் அனுபவத்திற்கு எளிதாக கிடைக்கின்றன. ஆனால் அதில் கலந்துகொள்பவராக இல்லாமல் வெறும் காட்சியாளராக மாறி வருகிறோம். விளையாட்டை பார்ப்பது அதிகமாகி விளையாடுவது குறைந்துவிட்டது. பெரும்பாலான நோய்களுக்கான மருந்துகள் கிடைக்கின்றன. ஆனால் அதற்கான செலவு ஒருவரை ஏழ்மையாக்கி துன்பத்திற்கு ஆளாக்குகிறது. தகவல்களை எளிதாக அனுப்பி பெற்றுக்கொள்கிறோம். ஆனால் கடிதங்களாக பெற்று படிக்கும் ஆவலுக்கு நிகராக அது இருப்பதில்லை. பல்வகை ஊடகங்கள் வழியாக செய்திகள் வந்து குவிகின்றன. ஆனால் அவற்றில் நாம் அறிந்துகொள்வதில் உண்மைகள் குறைவாகவே இருக்கின்றன. கல்விசாலைகள் அதிகரித்து இருக்கின்றன. ஆனால கற்பதிலான இன்பம் குறைந்து மன அழுத்தத்தை அளிப்பதாக மாறியிருக்கிறது. கோயில்கள் அதிகமாகியுள்ளன. ஆனால் அவற்றில் பக்தி குறைந்து வணிகத்தலங்களென தோன்றுகின்றன. வணிகம் பெருகி அதில் ஈடுபடுபவர்களுக்கு லாபம் அதிகரித்திருக்கிறது. ஆனால் உற்பத்தி செய்பவனும் பயன்படுத்துபவனும் அடையும் பலன்கள் குறைந்திருக்கின்றன.
பலன்கள் அதிகம் பெற்றிருக்கிறோம் என்பது உண்மை. அதற்கு விலையாக இழந்த இன்பங்களை ஒரு பெருமூச்சோடு கடப்பதைத்தவிர வேறுவழியில்லை என்றுதான் தோன்றுகிறது.
தண்டபாணி துரைவேல்