அன்புள்ள ஜெ
வெண்முரசில் சில குறியீடுகள் உத்வேகம் மிக்க ஃபான்டஸி பாணி கதையால்
கண்ணுக்குப் படாமல் போய்விடுகின்றன.அதில் ஒன்று துரியோதனன் ஒளிந்திருக்கும் அந்தச்
சுனை. அவன் அதற்குள் இருக்கிறான். ஆனால் அதை பீமன் அவனேதான் எடுத்தாகவேண்டும் என்று
இளைய யாதவர் சொல்கிறார். உன் போர், நீதான் எடுக்கவேண்டும் என்கிறார். அவன் மனம் கலங்கியிருக்கிறது.
அவனால் துரியோதனனை மீட்டு எடுக்கவே முடியவில்லை. அவன் அந்தச் சுனையில் கிடந்து கொந்தளிக்கிறான்.
அவனுடைய அந்த அலைக்கழிவு அவன் மனம் எப்படி நிலையில்லாமல் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.
அவன் விலங்காக ஆகிறான்
கிருஷ்ணன் அச்சுனையிலிருந்து துரியோதனனை எடுத்துக்காட்டுகிறான்.
அப்படியென்றால் அவன் எங்கிருந்து துரியோதனனை எடுத்தான்? பீமனின் மனதிற்குள் இருந்தா?
அல்லது தன் மனதிற்குள் இருந்தா? கிருஷ்ணனின் நீர்நிழல்தான் துரியோதனன் போல ஆகி எழுந்து
வந்து பீமனிடம் போரிடுகிறது என்ற ஒரு வரி வருகிறது. இப்படி இந்த அத்தியாயங்களைக் கூர்ந்து
வாசிப்பவர்கள் கண்டடைவதற்கு பல உள்மடிப்புக்கள் காணப்படுகின்றன
ரவிச்சந்திரன்