அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,
தீயின் எடை அத்தியாயம் 15. யானையின் மீதமர்ந்து வேட்டைக்குச் செல்லும் கிருபர் அதன் மீதான தன் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதை உணரும் தருணம். அதைப்போலவே அதனினும் மிக்கதாக ஆகிவிட்ட குருஷேத்திர களம். இயற்கையின் விசைகளின் மீதான மனித கட்டுப்பாட்டு தளரும் கணங்கள். இயற்கையின் விசைகள் மனிதனுக்கு எதிர்வினை ஆற்றுவதில்லை. உண்மையில் அவை மனிதனின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன என்பதும் கூட கற்பிதமே என்று தோன்றுகிறது. அவை அவற்றின் வழியில் இருக்கின்றன. ஆனால் அப்படி வகுத்துக் கொள்வது மனிதனின் தேவையாக, வாழ்வாக இருக்கிறது. இயற்கையின் விசைகள் ஒன்றையொன்று மனிதன் முன்னறிந்திரா வகையில் சந்தித்துக்கொள்ளும் போது, அந்த யானைகளின் களியாட்டைப் போல, மனிதன் திகைத்து, அறியாத ஒன்றின்முன் அஞ்சி, பின்னடைந்து தற்காத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. சேற்றின் வழி கங்கையில் சேரும் கிருபரைப் போல்.
பி்ன் சிகண்டியுடன் (சக மனிதருடன்) அம்பால் உரையாடல் போல நிலை மீண்டு அடுத்தகட்ட அறிதலுக்கு நகர்தல்.
உலகியல் அப்பாலானவை எனிலோ பித்தர்களுடன் இணைதல் அல்லது பேரா இயற்கை நோக்கு சுத்த அறிவே சிவம் எனிலோ ”இறுதிச் சொல்லும் மறைந்து வெறும் சித்தம் எஞ்சுகையில் இக்களம் நிறைவடையும்” என்று முனிதல்.
குருக்ஷேத்ரத்தில் நிகழ்ந்தது வெறும் கற்பனை என்று எண்ணத்தலைப்படுகிறாரே கிருபர்?
முன்னதாகவும் பின்னும் சில அத்தியாயங்கள் மகத்தானைவை. எண்ணங்களை சரியாக சொல்லாக்க எனக்கு வரவில்லை. உவகையாக ஊழ்கமாக என்னிடம் வைத்துக்கொள்கிறேன்.
அன்புடன்
விக்ரம்
கோவை.