Saturday, July 11, 2020

கற்றுக்கொண்டவை

அன்புள்ள ஆசிரியர்  ஜெயமோகன் அவர்களுக்கு,


வணக்கம். நான் நேற்று காணொளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். தயக்கம் காரணமாக பேச முடியவில்லை. என் சிறு வயது முதல் மஹாபாரதம் முழுமையாக படிக்க வேண்டும் என்ற ஏக்கம் இருந்தது.  நண்பர்  ஒருவர் வெண்முரசு பற்றி அறிமுகம் செய்து வைத்தார்,  ஓஷோ  புத்தகங்கள் படித்து சலித்து போன சமயம் அது. அது (2014)  முதல் இன்று வரை தினமும் வேணுமுரசு படித்துக்கொண்டு இருக்கிறேன்.  


அன்று முதல் நீங்கள் தான் என் ஆசிரியர்.  என்  சிந்தனையில்  மாற்றம் கொண்டு வந்தவர் நீங்கள்.


நான் தங்களிடம் கருக்கொண்ட விஷயங்கள்:


1. எந்த ஒரு கருத்திற்கும் இரண்டு தரப்பு உண்டு. இரண்டையும் அது  நடந்த  காலத்தோடு  இணைத்து சிந்திக்காமல் முடிவிற்கு வரக்கூடாது.


2. எந்த ஒரு மனிதனும் ஒற்றைப்படையானவன் அல்ல. யாரையும் முழுமையும் நல்லவனாகவோ, கெட்டவனாகவோ கருதாமல் முழுமையாக புரிந்து கொள்ள முயல வேண்டும். துரியோதனன், கர்ணன், அர்ஜுனன், பீமன், தர்மர் முதலிய  கதாபாத்திரங்களை படித்தே அந்த கருத்தை அடைந்தேன் . கணிகர்  அனைவருக்குள்ளும் இருக்கும் சுயநலத்தை நம்பி செயல் போது காந்தி  போன்றவர்கள் அனைவருக்குள்ளும்  இருக்கும் அறத்தை நம்பி செயல் படுகிறார்கள்.


மொத்தத்தில் நான் என்னையும் என் சூழலையும்  புரிந்து கொள்ளவே வெண்முரசு நாவலையும் தங்கள்  படைப்புகளையும் படிகிறேன் . பல சமயங்களில் எனக்கு நான் ஏன் வாழ்கிறோம் என்ற எண்ணம் வரும் போதும், மனம் விரக்தி அடையும் போதும், நான் மிகவும் நம்பும் ஒருவர் எனக்கு துரோகம் செய்யும் போதும்,  எதிர்பாராத சம்பங்களின் போதும் நான் நாடுவது தங்கள் எழுத்தையே. உங்கள் எழுத்து வாழ்க்கை பற்றிய  ஒரு புரிதலை கொடுத்துக்கொண்டே உள்ளது.

இதற்கு எவ்வளவு நன்று கூறினாலும் அது பத்தாது. எதையும் எதிர்பாராமல் ஒரு யோகமாக இதை  செய்வது பிரமிப்பூட்டுகிறது. மிக்க நன்றி.

வெண்முரசு முடிவடைவது பெரும் வெற்றிடத்தை தருகிறது. தாங்கள் நலமாக வாழ வேண்டும்.  மேலும் இது போன்ற நாவல்களை  எழுத வேண்டும்.

நான் இதற்கு முன் தங்கள் என்  முதல் கடிதத்திற்கு உடனே பதில் எழுதிய போது அதை சரியாக  புரிந்து கொள்ளாமல் அதிகப்பிரசங்கித்தனமாக கடிதம் எழுதினேன். அதுக்கு என்  ஆணவமே  காரணம்.  நான் இன்னும் அந்த  செயலுக்காக  வருந்துகிறேன். அதற்காக  என்னை மன்னித்துக்கொள்ளவும்.

இன்று தங்கள் தளத்தில் விநய சைதன்யி  அவர்களை பற்றி படித்த போது, அவரின் தாக்கம் சொல்வளர் காடு நாவலில் வரும் சாந்தீபனி குருவின் மகனில் உள்ளதாக தோன்றியது.

நன்றி , அன்புடன்
அருண்.