மதிப்பிற்குரிய ஐயா,
வணக்கங்கள் பல.
தாங்களின் மகாபாரத நாவல் வடிவை 10 புத்தங்களையும் படித்தேன். முதல் பாக நூலை நூற்நிலையில் இருந்தும் மீதம் 9 பாகங்களை வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்தும் படித்தேன்.
வார்த்தைகள் இல்லை. தங்களின் நாவல் வடிவு இறை சக்தி & பிரபஞ்ச சக்திகளின் அருளை காண்கின்றேன். மிகைப்படுத்தவில்லை. உள்ள கருத்துகள் ஒவ்வொறுவரின் உளநிலைகளுடன் படிப்பவரின் உளநிலையை மேம்படுத்தும் நிலையில் எழுதப்பட்ட படைப்பு. சிறந்த படைப்பு என்று சாதாரணமான சொற்களில் சொல்ல முடியவில்லை, சொல்ல முடியாது. மனிதம் மேம்பட இதிகாசங்களை படிப்பவரை சோம்பலுறாமல் சிறந்த சொல்லாற்றலை நூல் வடிவில் படைத்துள்ளீர்கள்.
படிக்கும் போது பின்னனியில் காட்சிகளை விரித்து கதாபாத்திரங்களின் உளநிலையை படிப்பவரின் உளநிலையுடன் தானாகவே பொருத்தி சரியில்லாதவற்றை உணர செய்து, மனித எண்ணங்களை மேம்பட செய்வதாக உள்ளது.
தாங்களின் மீதம் உள்ள 16 பாகங்களையும் படித்துணர வேட்கை உள்ளது. புத்தங்களை வாங்கும் அளவுக்கு பொருளில்லை. அரசு நூலகஙகளில் முதல் பாகத்தை தவிர வேறு எதுவும் கிடைக்கவில்லை.
தாங்கள் 11 வது நூல் முதல் 26 நூல் வரை pdf வடிவை அனுப்பினீர்கள் என்றால் என்னால் படித்துணர முடியும். இவ்வாறு கேட்பது தவறு எனில் மன்னியுங்கள்.
மீண்டும் மிகைப்படுத்தவில்லை. தாங்களின் மகாபாரத நூற் தொகுப்பு முழவதையும் படிப்பதற்கும் பிரபஞ்ச அருள் வேண்டும் என எண்ணுகிறேன். ஏனெனில் தாங்களின் முதற் பாகத்தை படித்த பின் தீராத வேட்கையுடன் மீதமுள்ள பாகங்களை பல வகையில் தேடி 5 மாதம் கழித்து வலைதளத்தில் 2 முதல் 10 பாகங்களை கண்டு படித்துணர்தேன்.
இயலுமெனில் புத்தகங்களை pdf வடிவில் நூற்பிச்சை இடவும். நூல் பல கற்பதற்கு இதுவும் முறையன என் ஆசிறியர்கள் உறைத்துள்ளார்கள்.
வணக்கங்களுடன் நன்றிகள் பல.
அன்புடனும் ஆனந்தத்துடனும்
ந.சண்முகநாதன்
பொன்னேரி - சென்னை
nashasur@yahoo.com
அன்புள்ள சண்முகநாதன்
நாவலை பிடிஎஃப் வடிவில் சுழலவிடுவது சட்டப்படி குற்றம். அப்படி வாசிப்பது ஓர் ஆசிரியருக்கு இழைக்கும் அநீதி
ஆசிரியரே நாவலை இலவசமாக வாசிக்க ஒரு வழி உருவாக்கியிருந்தால் அதை நாடுவதே கௌரவமானது
வெண்முரசு அனைத்து நாவல்களையும் என் தளத்திலும் வெண்முரசு இணையதளத்திலும் முழுமையாக இலவசமாகவே வாசிக்கலாம்
ஜெ