அன்புள்ள ஜெ
வெண்முரசின் வெவ்வேறு
நிலங்கள், நாடுகள் பற்றிய ஒரு சர்ச்சை இதிலே ஓடிக்கொண்டிருக்கிறது. நான் அதில் சுட்டிக்காட்ட
விரும்புவது சந்தைகள். வெண்முரசு முழுக்க பீஷ்மரும் பீமனும் அர்ஜுனனும் பூரிசிரவசும்
எல்லாம் சந்தைகளிலே சுற்றித்திரிகிறார்கள். சந்தைகளில் என்னென்ன விற்கப்படுகின்றன என்ற
தகவல்கள் வந்துகொண்டே இருந்தன.நான் முதல் இந்தச் சந்தைச்சித்தரிப்பு எதற்காக என்று
எண்ணிக்கொண்டதுண்டு. குறிப்பாக இளநாகனின் பயணத்தில் விஜயபுரியில் ஒரு முழு அத்தியாயமும்
சந்தைதான்.
ஆனால் இப்போது
வாசிக்கும்போது ஒரு சந்தையில் என்னென்ன விற்கப்படுகிறது என்பதுதான் ஒரு ஊரின் பண்பாட்டையே
காட்டுவது என்று தெரிகிறது. ஜராசந்தனின் மகதத்திலுள்ள சந்தை வேறு, விஜயபுரியின் சந்தை
வேறு. இரண்டையும் ஒப்பிட்டாலே வேறொரு சித்திரம் வந்துவிடுகிறது.
இந்த இயல்பு உங்கள்
பயணங்களிலும் இருக்கிறது. நீங்களும் செல்லுமிடமெல்லாம் சந்தைகளைப் பார்த்துக்கொண்டே
இருக்கிறீர்கள்
ராஜேந்திரன் எம்