Wednesday, August 5, 2020

பன்னிரு படைக்களம்


அன்பு ஜெ

சற்று முன்னர் தான் பன்னிரு படைக்களம் வாசித்து முடித்தேன். சொல்லெழா நிலையில் கட்டுண்டு இருக்கிறேன். முக்கியமாக கடைசி 20 அத்தியாயங்கள் என்னை முழுமையாக ஆட்கொண்டு விட்டது. என்னை சூழ்ந்துள்ள முழு உலகையும் மறந்தேன், வாசித்துதான் இதை அறிகிறேனா என பதை மறந்தேன், நான் என்பதை மறந்தேன். என்னை கடந்து ஒவ்வொரு சொல்லும் காட்சியான தருணத்தை உணர்ந்தேன். பன்னிரு படைக்களம் நடந்த அரசவையில் கெளரவரில் ஒருவனாக, விகர்ணனாக, சுபாகுவாக, துச்சாதனனாக நான் மாறினேன். ஒரு கணத்தில் பேரன்னையின் முன் தவழும் குழவியானேன். மற்றொரு கணத்தில் கொற்றவை முன் விழி சொர்ந்து நின்றேன். இன்னொரு கனத்தில் அவளும் நானும் வேறில்லை என்று உணர்ந்தேன். அவள் அடைந்த துயரெல்லாம் நானடைந்து துயருற்றேன். தன் இருப்பை இல்லாமலாக்கும் கலை கற்ற கனகர் போல் அங்கிருந்தேன். என்னை மறந்த வாசித்த அத்தியாயங்கள். தெய்வத்தை கண்டால் திகைத்து நிற்கும் நிலையில் உள்ளேன். 

எளியவனென்று முற்றிலும் கைவிடப்பட்டவனென்று முன்னரே வகுத்த பாதையில் செல்லும் துளியென்று உணரும் தருணம் ஒன்று ஒவ்வொருவருக்கும் உண்டு. இது அது. இன்று இறந்தேன். 

இவ்வரிகள் மந்திர சொற்கள் போல் மீண்டும் மீண்டுமென என் மனம் சொல்லிக் கொண்டிருக்கிறது. இவ்வரிகளை கண்டதும் அடுத்த தருணம் குண்டலகேசியிலிருந்து இவ்வரிகள் அது நான்தான் என எழுந்து வந்தன,

பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும்
காளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும்
மீளும்இவ் வியல்பும் இன்னே மேல்வரும் மூப்பு மாகி
நாளும் நாம் சாகின்றேமால் ; நமக்கு நாம் அழாத தென்னோ?

இவ்விரண்டும் இனைந்து வாசிக்கையில் அடையும் மெய்மை என்னென்று சொல்வேன். ஆம் இப்புடவியில் தினமும் இறந்து பிறந்து அடைபவர்களை கணக்கில் கொள்ள முடியுமா என்ன? நானும் தினம் தினம் என அங்கு இறந்து பிறப்பவன்தான். 

காலம்தோறும் பெண்மை வென்று கொண்டிருக்கிறது. மண் என விரிந்து இங்கெழுந்தவை அனைத்தையும் அவள் உண்கிறாள். மழையெனப் பொழிந்து இங்குள்ள அனைத்தையும் புரக்கிறாள். முலையெனக்கனிந்து இங்குள அனைத்தையும் ஊட்டுகிறாள். வெல்பவள், கடக்க முடியாதவள், ஆக்கி அளித்து ஆடி அழிப்பவள். அவளுக்கு எதிராக நின்றிருக்க கல்வியோ வீரமோ தவமோ உதவுவதில்லை. 

ஆம் வெல்லற்கரியவள்  பெண். அவள் வென்று தருக்கி பேரன்னை என நிற்பவள். திரௌபதி அவைக்கு அழைத்து செல்லும் பொழுது பேசிய சொற்களுக்கு அவள் அமரும் பீடம் ஒன்றில் நான் அவள் குழவியெனஅடையும் இன்பத்தை தந்தது. 

வெண்முரசின் பல தத்துவ வரிகள் எக்காலத்துக்குமானவை. என்றும் மாறாதவை. அத்தகைய ஒரு தத்துவ வரிகள் இது.

மானுடவாழ்வென்பது நேற்றிருந்தோரின் நீட்சி. நாளைவருபவர்களின் தொடக்கம். அதை அறிந்து வாழ்பவர்களே முழுமையாக வாழ்கிறார்கள். தானென்று எண்ணி தன்னதென்று இவ்வாழ்வை காண்பவன் துயரை அன்றி பிறிதை அடைவதில்லை.

இதை கண்டதும் என் உள்ளத்தில் முதல் எழுந்த உருவம் துரியோதனன். இதை வாசித்ததும் எத்தகைய பேருண்மை இது என்றறிந்தேன். இதை பொருத்தமான சொற்களால் படைத்தளித்த உங்கள்  உள்ளம் அடைந்த இன்பத்தை நான் உணர்ந்தேன். நீங்களென நான் மாறிய தருணம் பல உண்டு வெண்முரசில். உங்கள் உள்ளம் செல்லும் பாதை இதுவென அது சென்றடைவதற்கு முன்பு நான் கண்டடையும் தருணம் பேரானந்தத்திற்கு உரியது. 

சுருதை இறப்பிற்கு பின் விதுரர் அடையும் மாற்றம், உறுதி நெகிழச் செய்கிளது. ஒரு வேளை இப்பெரும் போரை சுருதை இறக்காமல் இருந்திருந்தால் நிச்சயம் தடுத்திருப்பார் என எண்ணிக்கொள்கிறேன். 

அலைதலும் அறிதலும் அமர்தலும் என என் மனம் பேரன்னையையே நாடுகிறது. இந்நாள் அவளுடையது என அறிகிறேன். 

பேரன்புடன்
ரா. பாலசுந்தர்.