அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
வணக்கம்
இன்றைய நீர்ச்சுடரில் ‘’ஈரிலை முளை’’ என்று ஒரு சொல் வருகின்றது. ''Dicotyledonous plumule'' என்பதின் மிச்சரியான தமிழாக்கம் இது. வெண்முரசில் இப்படி ஏராளம் தாவரவியல் தகவல்களும், அத்துறை சார்ந்த ஆங்கிலசொற்களுக்கு இணையான மிகச்சரியான தமிழ்ச்சொற்களும் வந்துகொண்டே இருக்கின்றன. இவற்றைக்கொண்டு ஒரு நல்ல தாவரவியல் அகராதியை தொகுத்துவிடலாம்.
காந்தாரியின் திருமணத்தின் போது தாலிக்கு ஓலை தேடி பாலையில் பெண்கள் கண்டடையும் தாலிப்பனை-Corypha taliera என்று அறிவியல் பெயரிலேயே தாலியைக்கொண்டிருக்கிறது. ஒரிடத்தில் ‘’தன்னந்தனியே நிற்கும் கலையறிந்தது தாலிப்பனை’’ என்று சொல்லி இருப்பீர்கள், Corypha taliera குறித்த விவரணைகள் // A solitary, massive, moderately slow growing, monoecious palm// என்றுதான் துவங்கும். காண்டீபத்தில் ஒரு Dry Desert scrub jungle அழகாக விவரிக்கப்பட்டிருந்தது
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். பலவறை தொகுத்து வைத்திருக்கிறேன். சகுனியின் கைகளில் நீலநரம்புகள் புடைத்தெழுந்திருப்பதை, ஊமத்தம் பூவினுள்ளிருக்கும் நரம்புகளுக்கு ஒப்பிட்டிருப்பீர்கள், அர்ஜுனனுக்கான மருத மரத்தின் அறிவியல் பெயர் Terminalia arjuna.
என் எல்லா வகுப்புக்களிலும் எப்படியும் இதுபோல வெண்முரசில் வரும் தாவரவியல் சார்ந்த தகவல்களை சொல்லிவிடுகிறேன். எனக்கு இவற்றை தொகுக்க தொகுக்க பிரமிப்பு கூடிக்கொண்டேயிருக்கின்றது. வெண்முரசு காட்டும் தாவரவியல் தகவல்ளை மட்டும் ஒரு பெரிய ஆய்வாக செய்யலாம்.
நேற்று டார்வினின் பரிணாமக்கொள்கையில் இயற்கையின் சமநிலைப்படுத்துதலை சொல்ல வேண்டியிருக்கையில் வெண்முரசில் கடந்த ஞாயிறன்று சொல்லியிருந்த // காட்டில் புல் வறளும் போது பெரும்புலிகள் தங்கள் குட்டிகளை கொன்றுவிடும் என்கிறார்கள் // என்பது நினைவுக்கு வந்து அதையும் சொன்னேன். என் மாணவர்கள் நல்ல தமிழிலும் தாவரவியல் படிக்கிறார்கள் உங்களால்.
அனைத்திற்கும் நன்றி
லோகமாதேவி