Friday, October 31, 2014

பிரயாகை 8 - ஒருமையின் நேர்த்தரிசனம்




அன்பு ஜெயமோகன்,
          துருபதனுக்கும், கர்ணனுக்கும் இடையே நிகழும் போர் ஒற்றை நிகழ்வாக மாறிவிடும் காட்சியை அர்ச்சுனன் காண்கிறான். அக்காட்சி எனக்கு நடராச வடிவத்தை நினைவூட்டியது போலிருந்தது. முதலில் சிவனும், நடனமும் தனித்தனியாகத் தெரிகின்றன. உச்சகட்ட நடனத்தில் நடனத்தையும், சிவனையும் பிரிந்துப்பார்க்க இயல்வதில்லை.  சிவன் நடனமாக மாறினானா.. இல்லை, நடனம் சிவனாக உருவெடுத்து விட்டதா? அறிவால் விளங்கிக் கொள்ள முடியாத அழகான மனநிலையது. சிவனைப் பார்க்கிறவர்கள் அவனோடு நடனத்தையும் சேர்த்தே பார்க்கின்றனர்; நடனத்தைப் பார்க்கிறவர்கள் அதனுடன் சிவனையும் இணைத்தே காண்கின்றனர். உணர்வால் நடராச வடிவத்தை அணுகும் ஒருவனுக்குஇருமைகளுக்குள் திணறியபடி இருக்கும் ஒருமையின் நேர்த்தரிசனம் கிட்டுகிறது. போர்க்காட்சியின் ஊடாக அர்ச்சுனன் அத்தரிசனத்தையே பெறுவதாக நினைக்கிறேன். பார்முதல் பூதங்களால் மறைக்கப்பட்டிருக்கும் பரத்தை எளிதில் மாமத யானையால் நமக்குக் காட்டிவிடும் திருமூலரின் மந்திரத்தால் அர்ச்சுனன் மனநிலை எளிதில் விளங்கிவிடுகிறது. தர்மனின் சொற்கள் ஆழ்மனதில் அவனையறியாமல் இடம்பெற்றுவிட்டதன் விளைவாகவும் அவனுக்கு போர்க்காட்சி ஒற்றை நிகழ்வாய்த் தோற்றம் தந்திருக்கலாம்.
          முருகவேலன்(சக்திவேல் ஆறுமுகம்),
கோபிசெட்டிபாளையம்.