ஜெ,
ஐந்து கணவர்கள் என்னும் ஐந்து பூதங்களால் சூழப்பட்ட சக்தியாகிய திரௌபதியின் தரிசனம் வியப்பை அளித்தது. அதற்குப்பின்னர் ஐந்து பூதங்களால் சூழப்பட்டிருக்கும் அலைக்கழிக்கும் ஆன்மாவான பூரிசிரவஸின் கதை இன்னொருவகை வியப்பை ஏர்படுத்துகிறது. ஆனால் இந்த வெண்முரசு தொடரிலேயே மிக உற்சாகமான பகுதி என்பது இதுதான். பூரிசிரவஸை ஆர்வமாக பின் தொடரமுடிகிறது.
பூரிசிரவஸின் எதிர்காலம் என்ன அவன் ஆற்றப்போகும் பணிகள் என்ன என்பதெல்லாம் அல்ல உண்மையான பிரச்சினை என்று தோன்றுகிறது. அவன் எல்லாரையும் இணைத்துக்கொண்டே போகிறான். அவன் வழியாக பல கதாபாத்திரங்கள் அறிமுகமானபடியே வருகின்றன. அதை அவன் ஒவ்வொரு முறையும் நுட்பமான கையாள்கிறான். அந்த அழகு தான் இப்பகுதியை நல்ல வாசிப்பனுபவமாக ஆக்குகிறது
மலைப்பகுதி - பாலுசிஸ்தான் - அற்புதமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. மகாபாரதம் நடக்கும் கங்கைச்சமவெளிக்கும் அதற்கும் மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு. அவர்களுக்கு சம்பந்தமே இல்லாத போர். அங்கே எப்போதுமே அருமையான அமைதி. இங்கே கொந்தளிப்பு. இந்த வேறுபாட்டையும் அருமையாக காணமுடிகிறது
சிவராம்