தப்தோர்ணமெனும் பசுங்காட்டில் ஏதும் நிகழா
நாட்காவலில் இருப்பவனாய், கனவுகளும் கேள்விகளும் நிறைந்தவனாய் அறிமுகமாகி,
உள்நுழைய ஒப்புதலின்றியும் வெளியிலிருந்தே நிலவு காட்டினுள்
இறங்குவதையும், பணியில் காடு மறைவதயும் உறங்காமல் முழங்கால்களைக்
கட்டிக்கொண்டு பார்த்திருந்து,புலரியின் ஒளியில் இலைகலின் கூரை, மலர்களின்
அனலை ,சுனைகளின் விழிதிறப்பை என அக்காட்டை நாளும் அணுக்கத்தில்
அறிந்துகொண்டே இருந்தவன் முக்தன்
புதையலைக்காக்கும்
பாம்பைபோல இருந்த அவன் உத்தரை அக்காட்டுக்குள் நுழைந்த அன்றே பரபரப்பும்
அவதானிப்புகளும் சிந்தனைகளும்,அழைக்கழிப்புக்களு ம், காதலும்,வசீகரங்களும் நிறைந்த இன்னொரு வாழ்விற்குள் பிருகந்நளையுடன் இணைப்புரவியொன்றில் ஏறி நுழைந்துவிட்டான்
பிருகந்நளை
உத்தரைக்கு நடனம் கற்றுத்தந்த முதல் நாளிலேயெ முக்தன் அரிய பொருளோன்றைத்
தொலைத்தவனாக பேரிழப்பொன்றை முன்பே அறிந்தவனாக காட்டப்பட்டு, வாசிக்கும்
நமக்கெல்லாம் பிருகந்நளையாகிய அர்ஜுனன், உத்தரை விராடநாட்டின் கதையெல்லாம்
சொல்லிக்கொண்டுவந்த கதைசொல்லியாக இருந்தான்
.பெரும்பாலான அத்தியாயங்களை முக்தனின் பார்வையிலேயே கண்டுகொண்டுவந்தேன் இன்று வரை
இன்றைய
போர்சூழ்கையிலும், சிற்றோய்வில் ஒரு சிறு கனவுக்குள்
செல்பவன்,விண்மீண்களையும் விடிவெள்ளியையும் கவனித்தபடி கரவுக்காட்டின் கனவு
இல்லமொன்றில் சிறிது நேரம் வாழ்ந்தவன், வேட்டையில் ஆடுகளென போர்வீரர்களை
கழுத்துக்குழியில் குத்திக்கொல்லும் உணர்வில் அழைக்கழிக்கப்பட்டு,அவன்
இதயத்தில் அம்பொன்று தைத்ததையும் விழிகள் விரிய கனவொன்றினைக்காண்பது போலவெ
பார்த்தபடி இருக்கிறான்
கனவுகளும் காதலுமாய்
நம்மிடையே வாழ்ந்திருந்த அந்த இளைஞ்னுடன் சேர்ந்து இன்று மெல்லிய உதையாக
நானும் அம்பை நெஞ்சில் உணர்ந்து குருதி வெம்மையாய் வழிய, மூச்சு
சிக்கிக்கொண்டு, கொழுங்குருதியும் நிண்முமாய் இருமலில் தெறிக்க களத்தில்
சாய்ந்தேன்
அத்தனை துல்லியமாக அத்தனை உணர்வுபூர்வமாக முக்தனின் மரணத்தை என்னால் என்னுடயைதென உணர முடிந்தது வாசிக்கையில்
பிருகந்நளையை
காண ஒருநாளின் சீவிடுகள்நிலைக்காத கருக்கிருட்டில் புறப்பட்டு வந்து, அவளை
மிக நெருக்கத்தில் காணும் உளவெழுச்சியில் திணறியபடி, முகம் சிவந்து பதற,
உள்ளங்கால்களெல்லாம் வியர்த்து, அடுமனையின் உள்ளிருந்து வரும் ஒவ்வொரு
ஓசையிலும் அவளை உணர்ந்தபடி காத்திருந்த அந்த இளைஞனை இன்று கண்ணீருடன்
நினைவுகூர்ந்தேன்
லோகமாதேவி