ஜெ
சதானிகன் காலையில்
உணரும் இரண்டு மன உச்சங்களை மொத்தமாகச் சற்றுக்கழித்துத்தான் எண்ணிப்பார்த்தேன். முதலில்
அவன் நிர்க்குணப்பிரம்மத்தை உணர்வதற்கான மொழியற்ற தியானத்தை அவனுடைய ஆசிரியரிடமிருந்து
உபதேசமாகப்பெறுகிறான். அதன்பின் சகுணப்பிரம்ம வழிபாட்டுக்கான அறிவுறுத்தலை தந்தை நகுலனிடமிருந்து
பெறுகிறான். முதலில் வடிவமும் சொல்லும் இல்லாத தியானநிலையை அறிகிறான். அதன்பின் அதன்
வடிவாக அவன் தந்தை குதிரையைப்பற்றிச் சொல்கிறார்
ஒவ்வொன்றாக விலக்கிச் செல்கையில் எஞ்சிடும் வெறுமையே
பரம் என்று கார்க்யாயனர் சொல்கிறார். ஒவ்வொன்றும் விலகுவது ஞானம். ஆனால் நகுலன்
ஒன்றை பற்றுக! அது அருகிருக்கும் மரக்கிளைகூட ஆகலாம். காலிடறும் கூழாங்கல்லாகலாம்.
ஒன்றை பற்றுக! அதை தெய்வமெனக் கொள்க! என்கிறான்.
இந்த முரண்பாட்டை சதானீகன் உணரவில்லை. அவன் இரண்டையும்
இயல்பாக இரு மனநிலைகளாக எடுத்துக்கொள்கிறான். இதுவும் இளைஞர்களின் மனநிலைதான். அவர்கள்
எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு அதில் சாரம்காண முயல்கிறார்கள்
சத்யமூர்த்தி
