அன்புள்ள திரு.ஜெ வணக்கம்
//தோழி, விழியின்மை என்பது ஒரு பார்வையாவதைக் கண்டேன். சிறகின்மை என்பது ஒளியின்மையாவதைக் கண்டேன்//
அற்புதமான ஞானம் கனியும் சொல்லாடல்.
ஆனால் விழியின்மை என்பது ஒரு பார்வையாவதைக் கண்டேன் என்பது நன்றாக புரிகின்றது. நடைமுறை
வாழ்விலும் கண்டுக்கொள்ள முடியும். வெண்முரசில் திருதராஷ்டிரனே அதற்கு ஒரு சிறந்த உதாரணம்.
கர்ணன் அஸ்தினபுரம் வரும் அன்று கண்தெரியாத சூதக்குழந்தை கதிர் என்பது ஒரு
உச்ச உதாரணம்.
சிறகின்மை என்பது ஒளியின்மையாவதைக்கண்டேன்.
என்ற சொற்றொடர் சுட்டும் பெரும் தத்துவம் புரிவதுபோலும் உள்ளது. புரியவில்லை என்பதுபோலும்
உள்ளது. மிகபெரும் உண்மையை மூன்றுச்சொல்லில் எளிதாக சொல்லிச்செல்கின்றீர்கள். சற்று
விளக்கமுடியுமா?
சிறகு விடுதலையின் குறியீடாகவும்,
ஒளியை பிரமத்தின் குறியீடாகவும் கொள்ளலாமா? விடுதலையில்லையேல் பிரமம் கிட்டுவதில்லை.
பெரும் கனவாக சித்தரிக்கப்படும்
இந்த அத்தியாயம். பெரும் தவத்தில்மூழ்கும் யோகத்தின் விளையாடல்போலவும், தூங்காமல் தூங்கும்
ஞானியர் கனவுப்போல் உள்ளது.
கனவுபோல் நினைத்தால் யோகம் இல்லை,
யோகம்போல் நினைத்தால் கனவு இல்லை. அற்புதமான
அத்தியாயம் உள்ளம் உருகுகின்றது. தாயின் கனவு தீரா மோகமாக பாலாக
வழிகின்றது..
கதையாக மட்டும் பார்த்தால் அற்புத கதையாக நிற்கின்றது.
தத்துவமாகப்பார்த்தால் விழியடங்கா பெரும் மணியின் சிறு ஒளி மின்னல் மட்டும்
விளங்கும் தத்துவமாகவும் உள்ளது.
முழுவதும் புரிந்துக்கொள்ள முடியவில்லை.
ஆனால் சர்க்கரை மலையின் ஒரு துகள் மட்டுமே மலையளவு இனிக்கிறது. .
நன்றி
வாழ்க வளமுடன்
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல் அன்புள்ள ராமராஜன்,
நீலம் பகுதியில் பல வரிகள் ‘விளக்க’ முடியாதவை. அவற்றை விளக்கலாம், ஆனால் விளக்கும்போது அறிவு அறியும் ஒரே அர்த்தம் நோக்கி நம் அகம் சென்று அமைந்துவிடும். இத்தகைய வரிகளை மனதில் ஓடவிடுவதே சிறந்த முறை
இவற்றை அறிவதற்கான மரபார்ந்த வழிமுறை ஒன்றே. அனைத்து வார்த்தைகளுக்கும் அர்த்தம் கொடுக்க முயல்வது.வார்த்தைகளின் அனைத்து அர்த்தங்களையும் கொள்வது. முந்தைய பிந்தைய வரிகளுடன் இணைத்தும் பிரித்தும் பொருள் கொள்வது
ஒளி என்பதற்கு பார்வை, அறிவு, வழி என பல பொருட்கள் உண்டு அல்லவா?
ஜெ