Saturday, November 1, 2014

விஷாதயோகம்



[அர்ஜுனன் காகிதவெட்டு ஓவியம்]

அன்புள்ள ஜெ

நேற்றைய பிரயாகை வாசித்தபோது தோன்றியது, போரில்தான் உண்மையில் எல்லா விஷயங்களையும் பரிசீலிக்கமுடியும் என்று தோன்றியது. அதாவது போர் என்பது ஒரு உச்சகட்டம். இருதரப்பில் ஒன்று அழியும். ஒன்று ஜெயிக்கும். அந்த உச்சகட்டத்தில்தான் எது சரி எது தவறு என்று உறுதியாகச் சொல்லியாகவேண்டும்

அப்படி எளிமையாகச் சொல்லிவிடமுடியாது என்ற எண்ணம் வருகிறது. எளிமையாகச் சொன்னால் அங்கே வேலைக்காவாது. ஆகவேதான் போரில் பெரிய தர்மசங்கடங்கள் வருகின்றன.

துருபதனிடம் போர் புரிகையிலேயே அர்ஜுனன் அந்த தர்மசங்கடத்தை அறிந்துவிட்டான். துரோணரின் ஆணையா தர்மமா என்றகேள்வி வந்துவிடுகிறது. தர்மம் வேண்டாம் குரு போதும் என முடிவெடுக்கிறான்

ஆனால் அந்த அத்தியாயத்தில் அவன் சஞ்சலம் உடையவனாகவும் ஒட்டாமல் ஒதுங்கி நின்றுபார்ப்பவனாகவும் எழுதுகிறீர்கள். அந்த இருநிலை அவனிடம் இருக்கிறது

அது கடைசிவரை அவனிடமிருந்து போகவில்லை. அதுதான் கீதோபதேசம் வரை வந்து சேர்ந்தது. அர்ஜுனனின் அந்த  ‘விஷாதயோகத்தை’ ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டீர்கள்

போர் என்ற உரைக்கல்லை வைத்து தர்மத்தை ஆராய்ச்சி செய்யும் நூல் மகாபாரதம். நான் அவன் என்று பிரித்து நாம் அவர் என்று பார்த்தாலும் நீபேசும் நியாயங்கள் நிற்குமா என்று பார்த்தால்தானே அறம் என்னவென்ரு தெரியும்

அந்த உச்சகட்டம் இன்றைக்கு வந்த அத்தியாயம்.


சிவராமன்