ஜெ
மிகக் கொந்தளிப்பான இடம் வழியாக பிரயாகை சென்றுகொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே உச்சகட்ட நாடக முகூர்த்தங்கள் வழியாகத்தான் பிரயாகை செல்கிறது. இதை அறிந்துதான் பிரயாகை என்றே பெயர் வைத்திருப்பீர்கள்
எல்லாமே விதியின் விளையாட்டு போல நடக்கிறது. துருபதனை அர்ஜுனன் அவமானப்படுத்தியது முதல் இதுவரை. எவராலும் ஏதும் செய்யமுடியாது என்பதுபோல.
இன்று [ 35] தருமன் அறியாமலேயே நியாயம் பேசி துரியனை அவமதிக்கும் இடம் அற்புதமான ஒரு நாடகத்தருணம் நூறுபேரையாவது கொடு என்று துரியன் கேட்கிறான். இதேபோல பிறகு துரியனிடம் கிருஷ்ணன் வந்து நூறு ஊராவது கொடு என்று கேட்கப்போகிறான் என்று தெரிந்தவர்களுக்கு இந்த இடம் விதியின் மேடை என்றுதான் நினைக்கத் தோன்றும்
இந்த இடத்தில் தப்பு சரி என்றெல்லாம் பேசவேண்டியதில்லை. இருபக்கமும் சரிதான். இருபக்கமும் நியாயம்தான், எவருடைய வாழ்க்கையிலும் இதேபோன்ற இடங்கள் வந்துகோண்டுதான் இருக்கும். அதில் குற்றவுணர்ச்சி அடைந்தால் அர்த்தமே இல்லை
மகாபாரதம் இன்றைக்கும் இப்படியே நடந்துகொண்டே இருப்பதைப் பார்க்கமுடிகிறது
ஜெ