மழைப்பாடலில் எனக்கு மிகவும் பிடித்தது முகத்தாலேயே தங்கள் எண்ணத்தை வெளிப்படுத்தும் ஆளுமைகள் அதில் அதிகம். ஏனெனில் அதில் தான் குந்தி, விதுரர், சகுனி, வசுதேவர் எல்லாம் அறிமுகப்படுத்தபடுவார்கள். எல்லாருமே மதிசூழ்பவர்கள். நாம் பேசும் மொழியை விடவும் கண்களின் மொழி மிக சக்தி வாய்ந்தது. வாய் சொல்லும் சொற்களை கண்களால் மறுக்கலாம். கண்களாலேயே ஒருவருக்கு தாழ்வுணர்ச்சி கொண்டு வந்து விடலாம். குந்தி தன் வளர்ப்பு அன்னை, குந்தி போஜனின் மனைவிக்கு செய்வதை போல. தர்மன் மேல் பீஷ்மருக்கு வெறுப்பு வருவதும் உணர்ச்சியில்லா அவன் கண்களை பார்த்து தானே.
குந்தியும், விதுரரும் ஒவ்வொரு பார்வையையும் எண்ணி எண்ணியே பிறரை பார்க்கிறார்கள். சகுனி ஒரு சலிப்பை எப்போதும் மூஞ்சில் படர விட்டு இருக்கிறான். வசுதேவர் தன் பதட்டத்தை அடக்க கட்டை விரலையும் ஆள்க்காட்டி விரலையும் அழுத்தி கொள்கிறான். எத்தனை நுட்பங்கள்? அருமையாக அவையெல்லாம் கூறப்பட்டிருக்கும்.
இதை போன்ற முக திரைகளை அணியும் எத்தனை பேரை நாம் நேரில் காண்கிறோம். சிரிக்காமலேயே தமாஷ் செய்யும் அதிகாரிகள். பேசும் போதே கோட்டாவி விடும் சக வேலையாட்கள். நேருக்கு நேர் பார்த்தாலும் முதலில் அடுத்தவர் சிரிக்கும் வரை காத்திருந்து சிரிப்பவர்கள். இந்த முகத்திரைகளை அணிய நினைத்து தோற்றுபோகும் எனக்கு இதன் அருமை புரிகிறது.
பின்குறிப்பு: ஜெயமோகனின் உலோகம் என்ற நாவலில் கூட ஒரு இடத்தில் தனது உணர்வுகளை மறைப்பதற்காக அதன் நாயகன் தன் கீழ் வரிசை பற்களை மேல் வரிசை பற்களுக்கு முன் கொண்டு வந்து வைத்து கொள்வான்.
வெண்முரசு விவாதக்குழுமத்தில் ஹரீஷ்