நதியின் பெரும் சுழலில் மாட்டிக்கொள்ளும்போது ஏற்படும் உயிர்பயத்தில் தப்பிக்க நினைத்து பார்க்கையில் எல்லா திசையிலும் பெருகிவரும் நீரே மரணபயத்தை ஏற்படுத்தி சாவதற்கு முன்பே சாகடித்துவிடும். பிரயாகை-44ல் எல்லா திசையிலும் உணர்சிப்பெருக்கால் சூழப்பட்டு கொல்கிறது. எந்த திசையை நோக்கினாலும் அதே அளவு உணர்ச்சி.
இன்று வரும் பாத்திரங்கள் அனைத்தும் தன்னோடு தானே முட்டிக்கொள்கின்றன? தன்னைத்தானே முறுக்கி பிழிகின்றன. முன்னையும் பின்னையும் நோக்கிப்பார்த்து எது திசை என்று அறியாமல் தவிக்கினறன.
இன்று திருதராஷ்டிரனிடம் இரு்ககும் குரல் அவன் குரலல்ல ஆனால் அவன் குரலாக அது இருக்கிறது. பாண்டவர்கள் பாவம் கழுவ செல்ல திரும்பும் நேரத்தில் “மைந்தர்களே” என்று அகம் காட்டுகின்றான். அவர்கள் திரும்பும்போது விழியில்லாமல் இருந்தும் முகம் திருப்பிக்கொள்கிறான். விழியிருந்தால் விழிவழியாக அகம் அறியமுடியும் என்கிறார் வள்ளுவர். விழியே இல்லாதவன் அகம் அறிவது எப்படி? ஆனால் திருதராஷ்டிரன் அகம் வெளியே தெரிந்துவிடுமோ என்று அவனும் விழி உள்ளவன்போலவே அஞ்சுகின்றான். இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன். நினைத்துவாழ ஒன்று மறந்துவாழ ஒன்று. அவன் தந்தைமை பாடும்பாட்டு.
துரியோதன் முகம் கல்லால் ஆனதுபோல் இருந்தது ஆனால் பாண்டவர்கள் செல்லம்போது அவன் அர்ஜுனனைத்தொட்டான். வாழ்த்துங்கள் மூத்தவரே என்னும்போது துரியோதனன் இமையில் மெல்ல துடிப்பைக்கண்டான் அர்ஜுனன். “நலம் பெறுக” என்று அடைத்தக்குரலில் சொல்கின்றான் துரியோதன். இது கல்லுக்குள் ஈரம். இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன். நினைத்துவாழ ஒன்று மறந்துவாழ ஒன்று.அவன் சகோதரபாசம் பாடும் பாட்டு.
தனது பாதம் வணங்கிய தருமனை வாழ்த்தியதோடு நிறுத்திக்கொள்ளாமல் மெல்ல அணைத்துக்கொண்டு பேசிப்படியே செல்கின்றார் விதுரர். மகனைபிரியும் தந்தையின் பிரிவு. இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன். நினைத்துவாழ ஒன்று மறந்துவாழ ஒன்று.
காலையில் எழுந்ததும் அருந்துவதற்கு கொஞ்சம் நஞ்சுக்கொண்டுவரும்படி சொல்லும் அளவுக்கு அகம் உள்ள பீமன் இந்த அஸ்தினபுரியை விட்டு செல்வது பெரும் விடுதலை என்று நினைக்கும்போதும் பீமன். “ஏதோ ஒரு அறநம்பிக்கையின் பேரில் அந்தக் கணிகனின் மண்டையைகதாயுதத்தால் தட்டி உடைத்து வீசாமல் செல்கிறேன். அதைஎண்ணித்தான் நான் வியந்துகொண்டிருக்கிறேன்” என்றான்.என்று சொல்கின்றான். மனிதர்களின் இடத்தில் விடத்தை கண்டு அவர்களின் சிறுமையை உணர்ந்து நிற்கும்போதும் பீமன் கண்டுக்கொள்ளும் அறம் மனிதன் எந்த நிலையிலும் மனிதன்தானே என்று உணரவைக்கிறது. இதுபீமனின் அறம். அஸ்தினபுரிமீது கொண்ட பினணப்பு. இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன். நினைத்துவாழ ஒன்று மறந்துவாழ ஒன்று அவன் அகமும் பாடுகிறது.
பீமன் செய்யும் பகடியில் வந்துவிழும் வார்த்தைகளில் உள்ள நச்சை உணர்ந்து இது சாபம் அல்லவா என்று கேட்கும்போதும், வாரணவதம் சிவன்கோவில் நோம்புக்கு பின் மீண்டுவிடலாம் என்று எண்ணும்போதும் உள்ள குழந்தைத்தனமான அர்ஜுனன். தன்னால் மீளமுடியாது என்பதையும், பிறருக்கான வஞ்சினத்தை தான் சுமந்து திரிய பிறந்தவன் என்னும்போதும் ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் நோ பீஸ் அப் மைண்ட் என்று கூவும் அளவுக்கு செல்கின்றான். அர்ஜுனன் மட்டும் ஏன் கீதை வருவதற்க்கான கேள்வியை கேட்கின்றான் என்று விளங்கும் காட்சி. அர்ஜுனன் வெற்றிக்கு பின்னால் உள்ள வெறுமையை அறியும் தருணம். இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன். நினைத்துவாழ ஒன்று மறந்துவாழ ஒன்று. அவனின் சூன்யமனம் கண்டுக்கொள்ளம் பாட்டு.
சதசிருங்கக்காட்டில் இருந்து ஐந்து குழந்தைகளின் பேதைத்தாயாக காணடிந்த கர்ணனின் கண்ணீர் அன்னையாக அஸ்தினபுரிவரும் குந்தி பேரரசியின் சுவை உணரும் தருணத்தில் சிம்மாசனத்தின் அடியில் உள்ள எண்ணிறந்த முட்களின் கூரைப்பார்க்கிறாள். அறிவு அரசியலும், சூழ்ச்சி அரசியலும் அவளை முறுக்குகிறது. அன்னையாகவும் இருக்க முடியாமல் பேரரசியாகவும் இருக்கமுடியாமல் தவிக்கும் தவிப்பு. வஜ்ரமுகி குருவிப்படும்பாடு.
//குந்தி ஈரமான விழிகளுடன் மூச்சிரைக்க அவனை நோக்கினாள்.முகம் வியர்வையில் நனைந்திருந்தது. “அவர்களுக்குகாந்தாரத்தின் பெரும் செல்வம் இருக்கிறது. ஷத்ரியர்களின்படைபலம் இருக்கிறது. மேலும் துணையரசுகளைதிரட்டிக்கொள்ள முடியும். நமக்கு மதுராவும் மார்த்திகாவதியும்அன்றி பிற துணைநாடுகளே இல்லை. இளையவனே, ஒரேவருடத்தில் தருமனை வென்று எஞ்சிய அஸ்தினபுரியை அவர்கள்வெல்வார்கள்… இதுதான் அவர்களின் திட்டம். ஒருபோதும் நான்அவர்கள் வெல்லவிடப் போவதில்லை. நானும் அரசியலின்வழிகளை அறிந்தவளே.”//
ஈரமான விழிகளும், வியர்வையில் நனைந்தமுகமும் உள்ளும் புறமும் வதைப்படும் தருணம். அதற்காக அஸ்தினபுரியை இழந்துவிட முடியுமா? இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன். நினைத்துவாழ ஒன்று மறந்துவாழ ஒன்று அவள் அகத்திலும் ஒலிக்கும் பாட்டு.
அஸ்தினபுரி மக்கள்கூட பாண்டவர்களுக்கு சதி நடக்கிறது என்பதை அறிந்து அவர்களுடன் சென்றுவிட துடிக்கும் கூட்டம். தருமன் சொல்கேட்டு நகர்நீங்க முடியாத கட்டம். அவர்கள் மனதிலும் இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன். நினைத்துவாழ ஒன்று மறந்துவாழ ஒன்று என்னும் பரிதாபப்பாட்டு.
எதையும் கண்டுகொண்டுவிடும் அர்ஜுனன் கண்கள் இன்று கண்டுக்கொண்டது //கிழக்கு வானத்தின் அடியில் மிகமெல்லியத்தீற்றலாக செம்மை தெரிந்தது. அங்கே ஏதோ தீப்பிடித்து எரியத்தொடங்குவதுபோல என்று அர்ஜுனன் எண்ணிக்கொண்டான்//-பிரயாகை-44//
அன்று வஜ்ரமுகி குருவியின் மூலம் கண்டுக்கொண்டது. //குருவி மீண்டும் வந்தது. அறைக்குள் சுவர்களில் சிறகு உரசிசுழன்று பறந்தது. தீப்பந்தத்தை சுழற்றுவதுபோல அது ஒலிப்பதாகஅர்ஜுனன் எண்ணிக்கொண்டான்/பிரயாகை-37
அன்றும் இன்றும் அர்ஜுனன் எண்ணம் தீயை ஞாபகப்படுத்துவது எத்தனை பெரிய நுணுக்கம். ஜெ ஒளிர்கின்றார்.
எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவதோர் நோய்-திருக்குறள்.
குந்தி என்னும் வஜ்ரமுகி குருவியின் தாய் தவிப்பை அறிந்தவன் யார்?
//போரில் அவன் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தான். அது ஏதோபோர் மந்திரம் என எண்ணினேன். என்ன என்று கேட்டேன். அதுசூதர்களின் காதல்பாடல். உன் கூர்முலைகளின் வேல்களால்என்னைக் குத்து. உன் இதழ்களின் விஷத்தால் என்னைக் கொல்என்று பாடிக்கொண்டிருக்கிறான். போரின்போது பக்கவாட்டில்அவன் முகத்தை நோக்கினால் இனிய இசையொன்றைக்கேட்டபடி தென்றல் தவழும் புல்வெளியில் அமர்ந்திருப்பவன்போலிருக்கிறான். நூற்றுக்கணக்கில் தலைகளைக் கொய்துவீழ்த்தியபின் தன் இடையிலிருந்து இனிப்புப்பண்டம் ஒன்றைஎடுத்து வாயிலிட்டு சுவைக்கிறான்.”//
அவனை நினைக்கும் போது விதுரருக்கு மட்டும் அல்ல எனக்கும் “பாட்டா” என்றுதான் சொல்லத்தோன்றியது. புன்னகையும் குருதியும் கலந்த பெரும்காவியம் செய்யும் வியாசன் எனக்கும் பாட்டன்தானே!
மாயன் அவனை நினைக்க இரண்டு மனம் வேண்டும் அவனை நினைத்துவாழ ஒன்று, அவனை மறந்துவாழ ஒன்று.
நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.