இனிய ஜெயம்,
நான் நீண்டநாள் எதிர்பார்த்த துச்சாதனனின் ஆளுமை விரிவு எதிர்பாரா வண்ணம் இன்று நிகழ்ந்துவிட்டது.
அண்ணன் சொன்னால் அவருக்காக உயிரையும் கொடுக்க சித்தமாகும் பாண்டவருக்கு நேர் எதிர் துச்சாதனன். அண்ணன் ஆணையிட்டால் அவரது உயிரையும் எடுக்க துணியும் தம்பி.
உணர்ச்சிக் கொந்தளிப்புகளை ஒதுக்கிவிட்டு நோக்கினால், அவன் செய்ய முயன்றது 'கருணைக் கொலை' அன்றி வேறில்லை.
துச்சாதனின் நேர்மையான உணர்சிக் கொந்தளிப்பை, அதைக் காட்டிலும் மேலான நேர்மை கொண்ட உணர்சிக் கொந்தளிப்பை கொண்டு திருதுராஸ்த்ரர் கடப்பது இதுவரயிலான வெண் முரசு அத்யாங்களின் தனித்துவமான பகுதியாக இந்த அத்யாத்தை மாற்றுகிறது.
எந்த சூழலிலும் 'பிரிவினையை' விதைக்கும் எந்த ஆற்றலுக்கும் செவி கொடுக்காத பேரரசர், முதன் முறையாக உண்டாட்டை தவிர்க்கும் காரணம் அவரது மேன்மைக்கு மற்றுமொரு சான்று.
அவரது மேன்மையே இனி கணிகர் சகுனி போன்றோரால் கீழ்மையாக திரிக்கப்படப் போகிறது. தன்னியப்பால் பிறிவினையை ஆழ்மனதால் விரும்பும் சமூக மக்களின் கீழ்மையை கணிகன் இதற்க்கு பயன்படுத்துவது பதட்டத்தை உருவாக்குகிறது.
பிரும்மாண்ட தேர் நகரும் நிகழ்வைக் காணும் எவரும் அவரது அடி மனதில் அத் தேரின் அச்சு முறியும் சித்திரத்தை பகல் கனவில் கூடவே காண்கிறார்கள் என்றொரு உளவியல் கண்டடைதல் சொல்கிறது.
கனிகனும் சகுனியும் அந்தப் பகல் கனவை கொண்டு, ஹச்தினாபுரியின் சமூக மனதை ஆட்டுவிக்கப் போகிறார்கள்.
நாவலுக்கு வெளியே 'எழுத்தாளர் ஜெயமோகனாக' நீங்கள் தொடர்ந்து பிரிவினை கருத்தியல் எழுத்துக்களுக்கு எதிராக செய்துவரும் சமரை இந்தப் பின்னணியைக் கொண்டு நோக்கினால், அந்த சமர் எழுத்தாளர் ஜெயமோகனின் தன்னரம் எனப் புரிகிறது.
கடலூர் சீனு