இனிய ஜெயம்,
இன்றைய அத்யாயம் [பிரயாகை உருகும் இல்லம் 3 ] வரை இன்னமும் திருதுராஸ்த்ரர் பாண்டவர்களை கட்டி அணைக்கவில்லை என்பது ஏக்கம் கொள்ள செய்கிறது. போர் முடிந்து பாண்டவர்களின் வருகை நாள் துவங்கி, நேற்றைய உண்டாட்டின் புறக்கணிப்பு வரை திருதுராஸ்த்ரர் அனைத்து சந்தர்ப்பங்களிலும் மேன்மை குன்றாதவராகவே செயல்பட்டிருக்கிறார்.
இன்றய அத்யாயம் சகுனி சொற்களில் எத்தனை விஷம். திருதுராஸ்த்ரர் சொன்னதை எத்தனை நுட்பமாக திரிக்கிறார்? தனக்கு மகனாக இரு என்ற பேரரசரின் சொல்லை ''உங்கள் தமையனை என்றும் பாண்டவர்களின் தாசனாக இருக்க சொல்கிறார்'' என்ற திரிபு வார்த்தையை முதல் சொல்லாகக் கொண்டு பேச்சைத் துவக்குகிறார்.
துரியன் உட்பட யாரும் மாற்றுக் குரல் எழுப்பவோ, ஐயங்களை கேட்கவோ, சமயமே அளிக்காமல் கணிகனும், சகுனியும் அனைத்தையுமே சொற்களைக் கொண்டு இறுதி செய்து விடுகிறார்கள். இதுவே முதலும் இறுதியுமான சந்திப்பு என்பது எத்தகைய குயுக்தி. யாருக்கும் மனம் திரும்ப வழியே இல்லை.
மேலும் அநிவார்யம் என்பதை 'அரசன்' நேரடியாக செய்யக்கூடாது என்பது மற்றொரு தாழ். மனித அகம் கொள்ளும் அறக் கூச்சலை மௌனம் கொள்ள வைக்கும் மிகச் சரியான யுக்தி.
அனைத்தும் முடிந்ததும், இது திருதுராஸ்த்ரர் அறியா வண்ணம் நிகழ்ந்ததுதானா என பாண்டவர் சரிபார்க்க வழி குறைவு. ஆகவே பாண்டவர்களுக்கும் பேரரசருக்குமான பிளவே கூடிக்கொண்டே போகப் போகிறது.
இனி திருதுராஸ்த்ரர் பாண்டவர்களை கட்டித் தழுவும் தருணம் பாரதப் போருக்குப் பிறகுதான் நிகழுமா? ஏக்கம் கூடிக் கூடி வருகிறது.
கடலூர் சீனு