ஜெ,
குந்தி சொல்லும் கதை மகாபாரதத்தின் தொடக்கத்திலேயே வந்துவிடுவது. அது வேதகாலத்திலேயே இருந்த ஒரு பழைமையான குலக்கதை என்று ஆய்வாளர்கள் சொல்வார்கள். அதில் மதமே இல்லை. பெரும்பாலான பழங்குடிகளில் உலகம் உருவானதைப்பற்றியும் சிருஷ்டி நடந்ததைப்பற்றியும் அப்படி ஒரு தொன்மையான கதை இருக்கும்
அது உண்மையிலே ஒரு குழந்தைக்கதையாகவே இருக்கும். இந்துமரபில் உள்ள பல உருவகங்கள் அப்படிப்பார்த்தால் வேதங்களுக்குக்கூட முந்தையவையாக இருக்கலாம். இந்த கத்ரு- வினதை கதை. திசையானைகளின் கதை. இதெல்லாம். கருடன் கதைகூட ஒரு ஃபோக் கதை மாதிரித்தான் இருக்கும்
அந்தக்கதையை மகாபாரதம் நேரடியாகவே சொல்லிவிட்டு ஆரம்பிக்கிறது. சொல்லப்போனால் மகாபாரதம் அளிக்கும் முதல் பிரபஞ்ச தரிசனம் அதுதான். அதை பிறகு பலவகையிலே விளக்கியிருக்கிறார்கள். நீங்களும் முதற்கனலில் சொல்லியிருந்தீர்கள்
அந்தக்கதையை இப்போது அம்மா தன் பிள்ளைகளுக்குச் சொல்லும் கதையாக காட்டியிருக்கிறீர்கள். ஆகவே பிரயாகையில் உள்ள ரேஷனல் தன்மையை விட்டுவிட்டு முழுக்க ஃபேண்டசியாகவே சொல்ல முடிந்திருக்கிறது
அதோடு அந்த primitive jungle லில் அந்தக்கதையைச் சொல்லும்போது இன்னும் அர்த்தம் கூடுகிறது. அங்கேதான் கதையைச் சொல்லமுடியும் என்று தோன்றுகிறது. அந்தக்கதையை மிகமிக முன்பு ஏதோ காட்டுமிராண்டி அம்மாதான் தன் பிள்ளைகளுக்கு அதே மாதிரிச் சொல்லியிருப்பாள் என்ற எண்ணம் வந்துவிட்டது
அந்த இடமும் அவள் கதைச் சொல்லும் சூழலும் எல்லாம் அற்புதமாக பொருந்திவிட்டன
ராஜேந்திரன்