அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.
வாழ்க்கை மாயையால் ஆனது. மாயையை இருட்டு என்று சொன்னாலும் அந்த இருட்டுக்குள் இருந்து வெளிவரும் வண்ண ஒளிகள்தான் பிரபஞ்சத்தை கட்டிப்போட்டு உள்ளது. மனிதன் ஆடும் அட்டம் எல்லாம் அந்த வண்ணத்தின் ஒளியை சுவைக்கத்தான். ஒளியை பிடித்து யாரும் பானைக்குள் வைத்துக்கொள்ள முடியாது என்று அனைவருக்கும் தெரியும் ஆனால் அந்த ஒளியை பிடிப்பதற்கு ஆடுவது போட்டியிடுவது சுகமாக இருக்கிறது. வாழ்ந்ததுபோல் இருக்கிறது.
மாயை என்றால் என்ன? என்பதை நீலம்-9ல் அழகாக சொல்லி உள்ளீர்கள் ஜெ.
//மாயை என்றால் என்னவென்று நினைத்தாய்? நெகிழாமைநெகிழ்வதும் நெகிழ்வதெல்லாம் கல்லாவதும் அல்லவா?” என்றாள். .-நீலம்-9//
பீமனின் வடிவத்திற்கு காதல் தேவையான ஒன்றா? இல்லவே இல்லை. உண்டு உண்டு மலையாவது, மலைகளின் பாறைகள் சிதறுவதுபோல் பகடி செய்வது அதுபோதும் பீமனுக்கு. அவனுக்கு எதற்கு காதல்? அர்ஜுனனை பரத்தையர்வீதியில் இருந்து அழைத்துவரும் அன்று பீமனை சந்திக்கும் அந்த பரத்தை என்ன எண்ணி இருப்பாள்? இவன் அகத்தில் பெண்ணிற்கு இடம் இருக்குமா? என்ற கேள்வியில் மூழ்கி இருப்பாள். அவள் விழிகளின் வழி பீமன் ஒரு கல். நெகிழாதவன் என்பதுதான்? மனிதர்களை அவர் செயல்களின் வழியாக தனது வார்த்தைகள் வழியாக பகடி செய்து விஷம் கக்கும் நாகம் அவன். தருமனின் பார்வையில் பீமன் ஒரு மிருகம். அவன் நூல் கற்க தெரியாதவன். அவனுக்குள் நெகிழ்தல் உண்டா? ஆனால் இடும்பியை கண்டு அவன் நெகிழ்கின்றான். இடும்பியின் தனத்தில், கடோத்கஜன் கண்ணில் அமுதம் வழிவதைக்கண்டு திளைக்கிறான். சாகாவரம் பெறுகின்றான். மகனை தந்தையின் இடத்தில் வைத்துப் பார்க்கின்றான். மகன் தரும் உணவை கண்ணீரோடு தொண்டை அடைக்க திங்கின்றான். கண்ணீர் விடும் இடும்பியை மௌனத்தில் அணைக்கின்றான். எத்தனை..எத்தனை காதல் அவனிடம். எத்தனை நெகிழ்வு அவனிடம்.
//அவர்கள் செல்லச்செல்ல பீமனின் விழிகள் மேலும் கூர்மைகொண்டு அவர்களை நோக்கின. காட்டின் எல்லைவரைக்கும் கூடவெண்ணிற அசைவாக அவர்களின் தோலாடை தெரிந்தது. பின்னர்மரங்கள் அசைவதையும் அவன் கண்டான்//-பிரயாகை-64.
மரமாக நின்றுக்கொண்டு அகம் நெகிழும் கணத்தை அடைந்த பீமனின் உள்ளம் நினைந்து நினைந்து உருக வைக்கின்றது. ஒரு கல் நெகிழ்ந்து தண்ணீராக ஓடும் காட்சி அவன் இருளில் தலைகுனிந்து அமர்ந்திருக்கும் காட்சி.
அந்த பீமன்தான் குந்தியின் சொற்களுக்கு கட்டுப்பட்டு மீண்டும் கல்லாகின்றான். //இவர்களின் பேரன்பை நான் அறிந்துகொள்கிறேன்.ஆனால் நீ அவர்களுடன் இணைந்து வாழமுடியாது. நீஅஸ்தினபுரியில் என் வயிற்றில் பிறந்துவிட்டாய்” என்றாள். பீமன் தன்கைகளை நோக்கி சிலகணங்கள் இருந்தபின் “உண்மைதான்,அன்னையே” என்றான்//-பிரயாகை-64
பீமனை இடும்பவனத்திற்குள் சுமந்து செல்லும் இடும்பி உங்களை வயிற்றால் சுமந்து செல்கின்றேன் என்ற நாளில் நீராக இருந்தவன் பீமன். என்வயிற்றில் நீ பிறந்துவிட்டாய் அதனால் அஸ்தினபுரியில் கடமை இருக்கிறது என்னும்போது கல்லாக ஆகிறான் பீமன். பெண்ணின் ஒரு வயிறு நீராகவும், ஒரு வயிறு கல்லாகவும் ஆக்கும் இந்த தருணம் பீமன் வாழ்வில் முதலும் முடிவும் சந்திக்கும் புள்ளி.
வண்ணக்கடலில் காதலை மாயை என்று சொன்னீர்கள் ஜெ. அதுதான் எத்தனை உண்மை. அது பீமனின் வாழ்வில் மையம் கொள்ளும் தருணத்தை கண்டு சிலிர்க்கின்றேன்.
//காதல் மாயை என்றறிந்தவனே காதலில் திளைக்கமுடியும்இளம்பாணரே. மாயையை அறிந்தவன் மாயையை அடிநுனிசுவைப்பவனாகிறான்” என்றான்.-வண்ணக்கடல்-12.
காதலில் வெற்றி என்பது என்ன? சேர்ந்து வாழ்வதா? பிரிந்தும் வாழ்வதா?. பீமனின் கண்ணோட்டத்தில் காதல் என்பது மாயை என்றாகிவிட்டது. இடும்பியின் வாழ்வில் அது இனி என்னவாக இருக்கும்?. காதலிகள் எல்லாம் ராதை என்றால் இடும்பியும் ராதைதானே. நீலத்தில் ராதை இப்படி சொல்கின்றாள். //காதல்மனம் கையிலிட்டு களியாடும் கயவன். கண்பார்த்திருக்கவேகவர்ந்துசெல்லும் கள்வன். அவன் பொருளில்லா சொல்லும்அருளில்லா நோக்கும் வெறுத்தேன். பொன்கொண்டு வரினும்பூகொண்டு வரினும் இனி அவன் புன்மொழிகேட்க ஒப்பேன்.-நீலம்-33//
எங்கோ ஒரு புள்ளியில் இடும்பியை ராதையாக்கிவிட்டுபோகும் பீமனை இரவு சிரித்துக்கொண்டு கண்ணீர்விட்டுப்பார்த்திருக்கு ம். இரவுகூட நீலத்தின் உறைந்த வடிவம்தான்.
பெண்கள் அனைவரும் ராதைகள் ஆனால் கண்ணன் ஒருவன்தான். பெண்களை கண்ணீர்விட வைப்பதில் ஆண்கள் அனைவரும் கண்ணன்தான்.
நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.