வெண்முரசின் சிறப்பம்சங்களில் ஒன்று அதில் பல்வேறு தருணங்களில் கதைமாந்தர்களிடம் வெளிப்படும் உடல் மொழி. சில இடங்களில் இயல்பாகவும், பல சமயங்களில் அக்கதாபாத்திரத்தான் வெளியிடமுடியாத அகமாகவும் வெளிப்படுத்தப்படும். அதைத் தவற விடும் வாசகன் அக்காதாபாத்திரத்தை மிக எளிதாகத் தவறாக எடைபோட்டு விடக் கூடும், அப்பாத்திரங்களின் எதிரிலிருப்பவர்கள் போன்றே.
சமீபத்திய அத்தியாயங்களில் சட்டென்று உறுத்திய உடல் மொழி துரியனுடையது. கணிகர் தன் சதி கீதையை உரைத்து, புரோசனனின் திட்டத்தை விளக்கி அனைத்து கௌரவர்களின் ஒப்புதலையும் பெறுமிடத்தில் துரியனின் உடல் மொழி அவனின் அழுந்தப்பட்டிருக்கும் அகத்தின் வெளிப்பாடு. துச்சாதனன் அவன் கணிகரை வாளால் போழ்ந்து விடுவான் என்றே நினைக்கிறான். மிக நுட்பமாக எழுதப்பட்ட இடம் அது. அங்கு பேசியவர்களி்ல் துரியன் கிடையாது. துச்சாதனன் தான் பேசுகிறான். தமையனுக்காக முன்பே பீமனுக்கு வஷம் வைத்த சதியைச் செய்தவன் தானே அவன். அச்சதியில் துரியனுக்கு எப்பங்குமில்லையே!!
அதன் பிறகு மேற்கு பகுதியில் இருக்கும் ஏரிக்குச் செல்கிறான் துரியன். செல்லும் வழியெல்லாம் காறியுமிழ்ந்து கொண்டே செல்கிறான் அவன்.
அந்த உமிழ்தல் ஓர் முக்கியமான உடல்மொழி. இளவயதி்ல் என் பாட்டியால் வெறுக்கப்பட்டு அடி பல வாங்கிய என் தந்தையிடமிருந்த உடல்மொழி அது. மனம் விரும்பாத ஓர் தூசு பட்டதால் அதை வெளித்தள்ள முயலும் ஆழ்மனதின் வெளிப்பாடு அது. ஜெ மிகச் சரியாக வாயில் தூசு பட்டது போல என்கிறார். ஆம், தூசு தான் பட்டது. ஆனால் எதில்? அதையறிந்து கொள்ளத் தானே அவன் அந்த மேற்கு கரை ஏரிக்குச் செல்கிறான். அந்த ஏரியில் துச்சாதனனுக்குத் தெரியும் அந்த கரிய பெரிய நாகம் கார்க்கோடகன் தான். அந்த ஏரியில் தானே துரியன் இளம்பிராயத்தில் கார்க்கோடகன் வாயிலாக அவன் வாழ்வின் காரணத்தை விளங்கிக் கொண்டான். பீமனை அவன் அறிந்து கொண்டதும் அங்கு தானே! மேலும் அன்று கார்க்கோடகன் சொன்ன மற்றொன்று, துரியன் அஞ்சுவது தன்னிடமுள்ள பெருந்தன்மையைத் தான் என்பது. தூசு பட்டது வாயிலல்ல. இதுவரையிலும் சிறுமை துஞ்சாத துரியனின் பெருந்தன்மையில்.
இதன் பிறகு நாம் துரியனைப் பார்ப்பது ஏழு வருடங்களுக்குப் பிறகு, கர்ணனுடன். இங்கும் துரியனிடம் இரு முக்கியமான உடல்மொழிகள் வெளிப்படுகின்றன. ஒன்று அவனிடமிருக்கும் ஏளனச் சிரிப்பு. இரண்டாவது அவனது அனிச்சையான வலத்தொடையாட்டல்.
இழக்க விரும்பாத, அரிய ஒன்றை இழக்க நேரும் மனது அவ்விழப்பை பிறர் அறியாமலிருக்கவும், தன்னை சகஜமாகக் காட்டிக் கொள்வதற்கும் முகத்தில் அணிந்து கொள்ளும் திரை தான் அந்த ஏளனச் சிரிப்பு. அந்த சிரிப்பிற்கும் நாம் பேசுவதற்கும் எந்த தொடர்பும் இருக்காது. அதை நம்முடன் தினம் பழகும் எவரும் உணர்ந்து கொள்வதுமில்லை. இது என் சொந்த அனுபவம். இப்போதும் கூட சில சமயங்களில் தொடர்பேயில்லாமல் சிரித்துப் பேசுவது என்னையுமறியாமல் நடக்கத் தா் செய்கிறது. என் இரு வருட அமெரிக்க வாசத்துக்குப் பிறகு சந்தித்த என் தந்தை தான் எனது இந்த மாற்றத்தைக் கவனித்துச் சொன்னார். அன்றிலிருந்து அதைக் குறைக்க முயற்சியெடுத்து அதில் பெருமளவு வெற்றியும் பெற்றுள்ளேன். இதை மிகக் கச்சிதமாக படம்பிடிக்கிறார் ஜெ. கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்குப் பிறகு சந்திக்கும் கர்ணன் இம்மாற்றத்தை உடனடியாகக் காண்கிறான்.
இரண்டாவதாக ஜெ காட்டும் வலத்தொடையாட்டல் இன்னும் நுட்பமான ஓர் உடல்மொழி. மனதில் நிறைவின்மையையும், வாழும் விழைவையிழந்து தமோ குணம் மேலிட எரிச்சலும், அந்த எரிச்சலால் விளையும் அமைதியின்மையையும் கொண்டிருக்கும் மனதின் வெளிப்பாடு தான் அந்த தொடையாட்டல் உடல்மொழி. பீமனின் இருப்பு தான் துரியோதனனை வாழ வைத்துக் கொண்டிருந்தது. இளமை முதலே தன்னைச் சுற்றி நிலைத்தவற்றையும், தன்னுள்ளே நிலையின்மையையும் கொண்டிருந்த துரியோதனன் தன் எதிரியாக பீமனை உணர்ந்த கணம் தொட்டு ஷாத்ர குணத்தோடு வாழத் துவங்குகிறான். அவன் கதை பயின்றதும், வாழ்ந்ததும் பீமனை வெல்வதற்காகவே. இன்று பீமனே இல்லையென்றான பின்னர் அவன் வாழ்வின் அர்த்தம் தான் என்ன? மீண்டும் வெறுமை. அதனால் விளைந்த நிறைவின்மை. என்ன செய்து என்ன என்ற விட்டேத்தியான தாமச மனோபாவம். அதனால் தான் அவன் கதைப் பயிற்சியை விட்டு வடுகிறான். முடி சூடாமல் ஏழுவருடம் காத்திருந்தது ஒன்றும் அவனை அலைகழிக்கவில்லை. அவ்வரியணை கிடைத்திருந்தால் கூட அவன் மகிழ்ந்திருக்க வாய்ப்பில்லை. எதிரியே இல்லாத போது வெற்றியால் என்ன பயன்?! இதன் விளைவு தான் அந்த தொடையாட்டல்.
ஏன் வலத்தொடை? இடத்தைாடையாக இருக்கக் கூடாதா? நிச்சயம் இருக்காது. ஏனென்றால் அந்த இடத்தொடை துரியோதனனின் பெருந்தன்மையும், பேரன்பும் உறையுமிடம். ஆம், அவனே அவனில் அஞ்சிய அப்பெருந்தன்மை தான். அவன் அன்னை காந்தாரி அவனில் காணாத ஒரே உடல் பகுதி அது. அவள் காணாததாலேயே அவளின் நினைவி்ல் என்றென்றைக்குமாய் நிலைத்திருக்கும் பகுதி. இளவயது துரியன் தன் கோபத்தையோ, இயலாமையையோ அந்த இடத்தொடையில் அறைந்து தான் வெளிக்காட்டுவான். ஆக, நிறைவின்மை வெளிப்பட ஏதுவான பகுதி அனது வலத்தொடை தான்.
நினைக்கவே பிரமிப்பாக இருக்கிறது. எவ்வளவு நுணுக்கமாக ஓர் கதாபாத்திரம் வடிக்கப் படுகிறது.! ஜெ முன்பு ஒருமுறை சொல்லியிருந்தார், எழுதத் துவங்கிய பின்னர் அக்கதாபாத்திரம் கண்ணுக்குத் தெரியத் துவங்கிவிடும் என்று. அப்படிப் பார்த்து தான் எழுதுகிறாரோ!!!! துரியோதனனை நமமிடையே ரத்தமும் சதையுமாக உலவ விடுவதில் இம்மொழிகளின் பங்கு மிகப் பெரிது. நான் துரியோதனனை விரும்புவதும் அதன் காரணமாகவே!!
அன்புடன்,
மகாராஜன் அருணாச்சலம்.
மகாராஜன் அருணாச்சலம்.