அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.
இலங்கை அண்ணன் திரு.கோவிந்தசாமி ஒருநாள் “நேற்று மகன் வந்து சென்றார், அடுத்த முறை வரும்போது உங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றேன்” என்றார்.
அண்ணனுக்கு இரண்டு மகன்கள் இருவரும் இலங்கையில் படிக்கின்றார்கள், ஒரேநாளில் வந்து ஒரேநாளில் எப்படி இலங்கைக்கு செல்லமுடியும் என்ற எண்ணத்துடன் அண்ணனைப்பார்த்தேன். அண்ணன் புரிந்துக்கொண்டு இவர் அன்பால் மகனானவர் என்று கூறினார். அண்ணன் மகன்கள் உடன் அன்போடு போன்பேசுவதும், அவர்கள் இவரிடம் பேசுவதும் கண்ட அந்த பையன் எனக்கு இப்படி ஒரு அப்பா இல்லையே என்று வருந்திய அன்று “மகனே ஏன் வருந்துகின்றாய், இன்றிலிருந்து நான் உன் அப்பா” என்று சொல்ல அன்றிலிருந்து இருவரும் அப்பா மகனாகவே இருந்தார்கள். அந்த பையனின் வீட்டில் இலங்கை அரசு போட்ட குண்டுவிழுந்து அவர்களின் உறவுபெண் ஒருவர் நின்றபடியே முழுதும் சாம்பலாகிப்போனார் என்றார். அந்த பையனிடம் கோபம் வரும்போது பார்த்தால் அனல்போலவே இருக்கும். அந்த பையன் முழு அன்பையும் முழு கோபத்தையும் பொதிந்து வைத்த ஒரு பேழை.
பகனின் கதையைப்படித்தபோது இந்த நினைவுத்தோன்றியது. ஒரு இடத்தில் அன்புநீர் வற்றிப்போகும்போது தழைக்க மற்றொரு அன்பு ஊற்று கிடைத்தால் பிழைக்காலம். காலம் ஒரு மனிதனுக்குள் உள்ள அன்பென்னும் ஈரம் முழுவதையும் உறிஞ்சி காயவைத்துவிடும்போது அவன் ஒரு தீமட்டும் இருக்கும் விறகு. அந்த விறகு எரிவதன்காரணமாக அருகில் இருக்கும் அனைத்தையும் எரித்துவிடுகின்றது. இதில் என்ன தவறு இருக்கின்றது. தீ எரிவதன்மூலமாகவே தன்னை உண்டு பசியாறுகின்றது. பகன் கதையை கேட்க கேட்க கெட்டவன் எல்லாம் உருவாக்கப்படுகின்றானோ என்ற பிரேமை ஏற்படுகின்றது.
ஏகலைவன் பகனின் கோட்டைமீது படைக்கொண்டு சென்று அழிக்கும்போது அங்கு ஏகலைவன் மறைந்து இலங்கை அதிபர் ராஜபக்சே வந்து உட்கார்ந்து கொள்கின்றான். பகனின் குடிகள் எல்லாம் வெந்துஅழியும் அந்த கொடுமை முழுவதும் இலங்கை தமிழர்களை நினைக்க வைத்து நெஞ்சை பிசைகின்றது.
//“எத்தனை தலைமுறைகள்! எத்தனை பேரரசுகள்! அன்றும் இன்றும்அவ்வண்ணமே கொன்று குவிக்கப்படுகிறார்கள். சேர்த்துக்கொளுத்தப்படுகிறார்கள். அள்ளிப் புதைக்கப்படுகிறார்கள். அக்கணமேமறக்கப்படுகிறார்கள். எளியமக்கள் அநீதியால் கொல்லப்படுவதுமிகநன்று. அப்போதுதான் அவர்களுக்காக ஒரு துளி விழிநீராவதுசிந்தப்படுகிறது. ஓரிரு சொற்களையாவது காவியங்கள்சொல்லிவைக்கின்றன.//
ஏகலைவன்போன்றவர்களின் போர்கள் ஆட்சி இருப்பதால் நடக்கிறது. எப்படியாவது வென்றுவிடுகின்றார்கள். வென்றபின்பு அப்பாவிகளை கொன்றதற்காக பாவநோம்பு நோற்கின்றார்கள். வெள்ளை ஆடையில் படிந்த இரத்தத்தை சிகப்பு சாயத்தை கழுவுவதுபோல் கழுவி சென்றுவிடுகின்றார்கள்.
பகன்கள் வயிற்றுக்காக யுத்தம் செய்கின்றார்கள். உலகை, உறவை, நாட்டை அனைத்தையும் வயிறுகளாகப்பார்க்கிறார்கள். வயிற்றுக்காக போராடுகின்றார்கள். வயிற்றுக்காக போராடிய மக்கள் எல்லாம் கொல்லப்பட்டு, அவர்களுக்காக போராடியவன் அனைவரும் கெட்டவன் என்று அழிக்கப்பட்டு வரலாற்றில் கெட்டவன் என்ற அடையாளம் தாங்கி வாழ்கின்றார்கள். ஏதோ ஒன்று அவர்களை கெட்டதாகவும் சமநிலை குலைந்ததாகவும் செய்து விடுகின்றது. அவர்களுக்குள் உள்ள பாசமும் கோபமும் அதற்கு காரணம். அவர்களின் பாசம் களவாடப்படும்போது அவர்கள் கோபத்தட்டுமட்டு சுமைமிகுந்து பூமியை அழுத்தி பள்ளமாக்குகின்றது. பகனைப்பற்றிய பெரும் திறப்பில் பகன்களின் மறுபுறம் காண்கின்றேன் ஜெ.
காலில்லாத
கையில்லாத
கண்ணில்லாத
உருப்பில்லாத மனிதர்கள் உண்டு
எங்காவது வயிறில்லாத மனிதர்கள் உண்டா? என்ற கவிதை வந்து நெஞ்சில் அறைகின்றது.
பகன் தனது குல அடையாளமான ராவணன்மோதிரத்தையும், குரு அடையாளமாகிய பலராமன்மோதிரத்தையும் ஆற்றில் விட்டுவிட்டது அவன் குலத்தையும், ஞானத்தையும் விட்டுவிட்டான் என்பதைக்காட்டுகின்றது. ஏன்? அவன் அழிந்துபோன தனது உறவுகளுடன் இருக்கவிரும்பினான். இறந்துவிட்டான் ஆனால் வாழ்கிறான். கொல்வதன் மூலமே அவன் தனது உறவோடு இருப்பதாக எண்ணுகின்றான். ஒவ்வொரு மரணஓலத்திலும் தனது மக்களின் மரணத்தை காண்கின்றான். மனம் முன்னோக்கி எவ்வளவு வேகத்தில் செல்லுமோ அதே வேகத்தில் பின்னோக்கியும் செல்கின்றது. வரலாற்றின் கொடுமைக்காரர்கள் பின்னோக்கி செல்லும் மனத்தால் ஆனவர்கள். காலம் இவர்கள் மூலமாகவே பெரும் படிப்பினையை உலகத்திற்கு தருகின்றது. இவர்களின் அகங்களே இருமுனைகள் கொண்ட திசைகளைக்காட்டுகின்றது.
தப்பிவந்த குற்ற உணர்ச்சி பகனைக்கொல்கின்றது. அவன் கதையால்தனது நெஞ்சில் அடித்து சாகநினைத்தபோதே விட்டு இருந்தால் இத்தனை கொலைகள் இல்லை. இது காலம் விளையாடும் விளையாட்டோ //கொல்லக்கொல்ல அவன் விழிகள்மாறிக்கொண்டே வருவதை வீரர் நோக்கினர். அவனை அறிந்தநாள்முதல் அவற்றில் அவர்கள் கண்ட பெருந்துயர் ஒன்றுமுழுமையாக அகன்றது. அங்கே எப்போதும் மின்னும் இளநகைகுடியேறியது//
நாரைகளின் குரல்
நினைவுப்படுத்திக்கொண்டே இருக்கிறது
எங்கோ தொலைவில் உள்ள
என் கிராமத்தை-என்ற கவிதைவரிகள் பகனின் முன் கவிதை இல்லை வாழ்க்கை.
நன்றி
அன்புடன் .
ராமராஜன் மாணிக்கவேல்.