Friday, January 2, 2015

குருதிச் சுவை



ஆசிரியருக்கு ,

பிரயாகை -72, இந்நாவலிலேயே நிகழ்ந்த இரண்டாவது எழும்பல் எனச் சொல்லலாம் . இது நமக்குள் இருக்கும் குருதிச் சுவையைவும் , தாள மயக்கத்தையும் தூண்டுகிறது . வரி வரியாக காட்சி காட்சியாக அசைவசைவாக  கணம் கணமாக விவரித்துக் கொண்டே வந்து இறுதியில் கழுத்தறு பலியில் முடிவது நமக்குள் இருக்கும் ரகசிய நாவுக்கு ஒரு குருதி விருந்தளிக்கிறது . 

குறப்பாக அந்த தாலமேந்திய  இரண்டாமவன் தாளத்தின் உச்சகட்டத்தில் அந்த ஜோதியில் கலந்து தன்னை பலி  கொடுத்துக் கொள்கிறான். “பிடி! பிடி!” என கூவிய முதுகணியர் ஒரு நொடி முன் நிகழப் போவதை ஊகித்து விடுகிறார் , கூடவே நாமும். துகளிலும் துகளான அந்த நேரத்தில்  அவன் அடைந்த அதி உச்ச நிலைக்கு ஏதும் ஒப்பிலை, வலியும் உயிரும் கூட  ஒப்புநோக்க  ஒரு மலிவான பண்டமாற்றமே.     வெட்டி விழுந்த தலையும், பீய்ச்சி அடிக்கும் ரத்தமும் துடிக்கும் கால்களும் அரைவட்டமாக திரும்பும் முண்ட உடலும் பின்னணியில் முறுக்கேறும் தாளகதியும் விறைத்து  உமிழ்ந்து  அடங்கும் ஒரு உடலுறவு நிமித்தத்திற்கு ஒப்பானது. 

கோவில் திருவிழாக்களில் பறை துவங்கியவுடன் பூசகர் ஆடத் துவங்குவார்  சன்னதம் வந்து , கூட்டத்தில் எந்த திட்டமும் இல்லாத ஒருவர்  களத்தில் குதித்து  ஆட்டத்தில் கலப்பதை நான் கண்டிருக்கிறேன்.  சுமார் பாடகர்கள் கூட  ஒரு கூடுகையில் இசையின் கூட்டு உச்ச கணத்தில்  சேர்ந்து பாடுவதைக் கண்டிருக்கிறேன் (நமது ஏற்காடு சந்திப்பு ) , அதன் ஆதி வடிவமான பலி சடங்கில் அதன் உக்கிரம் தாளாமல் , அந்த கணத்தை பருகிவிடும் வீரியமிக்க காமத்துடன் ஒருவன் பலியாவது நமது ஆதி விசைகளை தூண்டுகிறது.

இந்நாவலில் துவக்கத்தில் துருவன் வரும்  பகுதியில் தேடித் தேடி விண்ணையும் இரவையும் பார்த்தேன், விதுரன் கை ரத்தினத்தின் போது தேடித் தேடி வைரங்களைப் பார்த்தேன்.  இப்போது தலை வெட்டுதல்களை காண ஒரு ஓரத்தில்  தூய விலங்குணர்வு துடிக்கிறது , கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.  

கிருஷ்ணன்