Friday, January 2, 2015

அகல்நுனியில் தீத்தழல்


துருபதனுடன் போர் புரிகையில் அர்ஜுனன் இப்படி வர்ணிக்கபடுகிறான். "அகல்நுனியில் தீத்தழல்போல அவன் உடல் நெளிந்து நடனமிட்டது." படித்தவுடன் ஒரு அக எழுச்சி தோன்றியது. எவ்வளவு நுண்ணியமான உவமை என்று. அர்த்ததினால் அல்ல அந்த காட்சியினாலேயே உணர்வு தூண்டப்பட்டது.

பிறகு யோசித்து பார்த்தேன். ஒரு வீரனுக்கு இதை விட அழகாக உவமை சொல்ல முடியுமா? நெளியும் சுடறில் தெரியும் நளினம். ஒரு கலையை முற்றிலும் கற்றறிந்தவனுக்கே அதில் நளினம் கை கூடுகிறது. அதை முழுதாய் கற்று தேராதவன் அந்த கலையை சரியாக நிகழ்த்துவதிலேயே கவணம் செலுத்துவான்.

ஆனால் அதை கச்சிதமாக செய்யக்கூடியவன், அந்த நம்பிக்கை உடையவன், அதை அநாயாசமாக எந்த ஒரு பதட்டமும் இல்லாமல் செய்கிறான். அந்த செயலை செய்யும் போதே அதில் மேலதிக அழகை உருவாக்குகிறான். அவன் செயலழகே அங்கு நளினமாக வெளிப்படுகிறது. 

போர் கலையை முற்றறிந்த வீரனிடம் வெளிப்படுவது நளினம். அது கதையை சுழற்றும் பீமனிடம் வெளிப்படுகிறது, திருதராஷ்டரனிடம் மல்யுத்தம் செய்த பீஷ்மரிடம் வெளிப்படுகிறது. துரோணரிடமும் வெளிப்படுகிறது. ஆனால் துரியோதனனிடம் மூர்க்கம் தான் வெளிப்படுகிறது.

விற்ப்போரில் மனது உணர்வுகளுக்கு ஆட்படலாகாது என்று அந்த அத்தியாயத்திலேயே வருகிறது. அகல் நுனியில் தீத்தழல் தான் நெளிந்து நெளிந்து எரிகிறது அதிலிருக்கும் எண்ணை சிறு அசைவை கூட அடைவதில்லை. உடல் சுடர் போல, மனம் அகலின் எண்ணை போல. அதுவே வில்லாளிக்கு அழகு என்கிறது அந்த உவமை.

 ஹரீஷ்

குழும விவாதங்களில் இருந்து