இனிய ஜெயம்,
பெண் கொண்ட காமத்தின், காமம் எனும் நெருப்பின், தீண்டும் அனைத்தையும் உண்டு செறித்தபின்னும், ராஜ நாகம் பிற அரவங்களை உண்டு வளர்வதுபோல எஞ்சும் தாபத்தின் சித்திரம் , பாணன் பின்வாங்கி, விறலியின் பாடல் வழியே சொல்லப்படுவது சொல்லப்படுவனவற்றுக்கு மேலும் அழுத்தம் கூட்டுகிறது.
புலோமன் காவல் இருக்க, புலோமி பிருகு உடன் கூடுகிறாள். நாளை பாண்டவர்கள் திரௌபதி இடையே நிகழப் போகும் ஒன்று அளிக்கப் போகும் தத்தளிப்புக்கு இப்போதே விடை தேடும் படலம் துவங்கி விட்டது.
அனலே வடிவான புலோமை. ஒன்று அனலாக மாறி அவளுடன் கலக்க வேண்டும். அல்லது அவளது கூந்தலில் சூடும் வாடாத மலராக இருக்க வேண்டும். புலோமை அனலை அனலால் உண்டு செறிப்பவள். அதே சமயம் தான் சூடிய பூவை எரிக்காதவள். ஒவ்வொருவருக்கும் தன் ஆற்றலின் ஒவ்வொரு நிலையைக் காட்டி அவர்களை தன்னுடன் கரைத்துக் கொள்பவள்.
புலோமி பெற்ற சியவனைக் கண்டு பயந்து புலோமன் பயந்து ஓடி மறைகிறான். ஆம் 'புலோமி கொண்டவற்றை எல்லாம் பெருக்கி மகனாக திருப்பி அளித்திருக்கிறாள்'.
புலோமனும் நெருப்பே, பிருகுவும் நெருப்பே, அக்னியும் நெருப்பே ஆனால் புலோமி கொண்ட நெருப்புக்கு முன் யார் யார் எவ்வளவு தூரம் அவளுடன் வர முடியும் என்பதே அவர்களின் எல்லையே, புலோமியின் அடுத்தடுத்து நகர்வு எனும் நிலையை தீர்மானிக்கிறது. அகலில் உள்ளதும் நெருப்பே, யாக குண்டத்தில் உள்ளதும் நெருப்பே, அந்த நெருப்பெல்லாம் எரிமலை நெருப்பின்முன் என்னாகும்?
பெண் கொண்ட காமம் எனும் பேராற்றலின் சாரம்தான் என்ன? அதை அறிய முடியாது. அறைகூவவும் முடியாது.
ஆம் அது தாய்மை எனும் பேராற்றலின் பிறிதொரு வடிவம்.
திரௌபதியின் வடிவம்.
கடலூர் சீனு