அன்பு ஜெயமோகன்,
முகில்களில் ஒளிந்திருக்கும் அழியா நெருப்பைக் கண்டறிந்து முதல் அத்தியாயம் துவங்கி இருக்கிறது. நெருப்பை இதுவரை நெருப்பாக மட்டும் அறிந்திருந்தேன். ஐம்புலனகளின் பார்வையில் அது ஒளி, இடி, வெம்மை, புகை, மழையாக ஐந்துவிதமாகப் பரிணமிக்கும் நுட்பத்தை வாசித்தபோது அதிசயித்தேன். அத்தோடு எனக்கான அதிசயங்கள் நின்றுபோகவில்லை. வேர்களில் திசைகளாக, வயிற்றில் பசியாக, உடலில் விழைவாக.. நெருப்பின் தாண்டவத்தை இவ்வளவு நுட்பமாக அணுகமுடியுமா? உங்கள் சொற்களில் பொன்னொளிர் நாக்கின் சிறுபொறிகள் புலப்படத் துவங்கிவிட்டன.
நெருப்பு தகித்தபடியே இருக்கிறது அகத்திலும், புறத்திலும். எண்ணங்களாய் அசைந்தபடியே இருக்கும் நெருப்பின் கதிர்கள் செயல்களாக மாறிய பின்னர்தான் அமைதியாகின்றன. எந்த எண்ணத்தில் அனல் இல்லையோ அது செயலாவதில்லை.
நான் யார் எனும் கேள்வி அலைக்கழிக்கும் மனதில் நெருப்பின் பொறிகள் சுழன்றபடியே இருக்கின்றன. நகர்ந்து கொண்டே இருக்கும் முகில்களுக்குள் நெருப்பு இருப்பதைக் கண்டுகொள்பவனுக்கு பிரபஞ்ச அசைவுக்கான காரணமும் ஓரளவு விளங்கத் துவங்கிவிடுகிறது.
மொழியின் மாயத்தில் சிக்கவைத்து விடுகிறீர்களோ எனும் குற்றசாட்டு இவ்விடத்தில் நினைவுக்கு வருகிறது. அதை உண்மையென்றே நான் நம்பவும் செய்கிறேன். மொழியின் மாயத்தில் திகைப்பவனாலேயே இயற்கையின் மாயத்தை ஓரளவேனும் விளங்கிக் கொள்ள இயலும் எனும் என் நம்பிக்கை இதுவரை என்னைக் கைவிட்டதில்லை. இயற்கையின் மாயங்கள் புரிபடத்துவங்கும் ஒருவனுக்கு வாழ்வின் மாயங்கள் பெரிதும் திகைப்பைத் தந்துவிடா.
நின்று எரியும் நெருப்பிலிருந்து வெண்முகில் நகரத்துக்கான பாதை துவங்கி இருக்கிறது. மெய்மையின் முலையுண்டு அது நீளட்டும்.
முருகவேலன்,
படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை,
கோபிசெட்டிபாளையம்.