அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.
சுவாமி விவேகானந்தர் “சிங்கத்தின் வீரத்துடன், அதேவேளை மலரின் மென்மையுடன் வேலை செய்” என்கின்றார். ஒவ்வொரு இலட்சியமும் முழு கனியாக சிங்கத்தின் வீரமும், மலரின் மென்மையும் தேவைப்படுகின்றது.
சிங்கத்தின் வீரமும், மலரின் மென்மையும் எதிர் எதிர் புள்ளிகள். எதிர் எதிர்ப்புள்ளிகளை இணைக்கும் நேர்க்கோடு வாழ்க்கை. வாழ்க்கை ஒவ்வொரு கணமும் முரண்களை இணைக்கும் வித்தையாகவே இருக்கிறது.
வெண்முகில் நகரம் தோன்றி மலைகளின் மடி வரும்வரை ஒரு நெருப்பு நதியின் கரையில் நடந்த உணர்வு இருந்தது. உடம்பில் அந்த அனலின் வெம்மை தகித்துக்கொண்டே இருந்தது. மலைகளின் மடிவந்தபோது திரௌபதி என்னும் அனல்நதியின் பிடியில் இருந்து வெளிப்பட்டு வெட்டவெளியில் விழுந்த மீனின் துள்ளல். இது பரவசம் என்று சொல்லமுடியாது மாறாக இடம்மாறியதன் சுவாச இம்சையாக இருந்தது. முற்றும் வெறுமையில் விழுந்ததுபோல முற்றும் புதிய கண்காணாத இடத்தில் எறியப்பட்டதுபோல, முற்றும் புதிய நிலத்தில் புடுங்கி நட்ட நாற்றுபோல வாடி வதங்கவேண்டியதாக இருந்தது. ஏன் இந்த மாற்றம்? உச்சத்திற்கு பிறகு வரும் சூன்யம்.
வெண்முகில் நகரம் மலைகளின் மடிக்கு முன் ஒரு புள்ளி என்றால் மலைகளின் மடிக்குபின்பு ஒரு புள்ளியாக இருந்து இரண்டும் இடையில் ஓர் நேர்கோடு விழுந்து வாழ்க்கையாகின்றது என்று காட்டுகின்றது.
பாஞ்சாலிக்கு இந்த பாரத வருஷம்வேண்டும் அதன் சக்கரவர்த்தினியாக வேண்டும் என்பது ஒரு இலட்சியபுள்ளி. இந்த இலட்சியத்தை அடைய தேவையான வேண்டிய அணைத்தும் அவளிடம் உள்ளது. பூரிசிரவஸ் போன்றவர்களுக்கு இப்படி ஒரு லட்சியம் இருக்குமா? இருந்தாலும் இல்லாவிட்டாலும் இது லட்சியத்தின் எதிர்ப்புள்ளியாக ஆகிவிடுகின்றது. வெண்முரசு என்னும் பெரும் காவியம் இலட்சியத்தின் முதல் புள்ளியில் நின்றுவிடாமல் அதன் எதிர்புள்ளியையும் தொட்டுவிரித்து செல்லும் அதன் அற்புதத்தால் பெரிதுபட்டு நிற்கின்றது. மலைகளின் மடி ஏன்? ஏன் இது இத்தனை நாட்களை தன்னகத்தே இழுத்து பெரிதாகின்றது என்ற நினைப்பு இன்றுதான் தீர்ந்தது. ஒரு லட்சியம் அதன் உயரத்தை மட்டும் சார்ந்தது அல்ல அதன் பாதாளத்தையும் சார்ந்ததே.
லட்சியம் பெரிதாக இருந்தால்மட்டும் அகம் மகிழ்ந்துவிடுகின்றதா? இல்லை. லட்சியம் இருக்கும் உயரமும், அதை அடையவேண்டியதூரமும் சேர்ந்து அல்லவா லட்சியத்தை மதிப்பாக்குகின்றது. பூரிசிரவஸ் பாஞ்சாலியின் திருமணத்திற்கு சென்றபோது அது ஒரு சடங்கு மட்டும் என்றுதான் நினைத்தேன். இவர்கள் எல்லாம் அங்கு வந்து இருக்கவேண்டியதே இல்லை என்றுதான் தோன்றியது. இப்போதுதான் பாஞ்சலம் இருக்கும் உயரம் தெரிகின்றது. பால்ஹிகரைத்தேடி பூரிசிரவஸ் தேடி சென்ற அன்றுதான் இலட்சியம் இருக்கும் தூரம் தெரிகின்றது. ஒரே ஒரு பூ பூக்க மரம்தான் எத்தனை உயரம் வளர்ந்து எத்தனை இலைகளை சுமந்து வாழவேண்டி இருக்கிறது.
இலட்சியம் உயரத்திலம் தூரத்திலும் இருக்கிறது என்பது அறியமுடிகின்றது அதை எப்படி அடைவது? சிங்கத்தின் வீரத்தால், மலரின் மென்மையால் அடையவேண்டிய ஒன்று. இலட்சியம் எப்படி உருவாகின்றது. கனவுகள் இலட்சியமலையாக திடப்படுகின்றன. லட்சியங்கள் கனவு அலைகளாக ததும்புகின்றன. அப்படி என்றால் கனவும் இலட்சியமும் ஒன்றுதானா?. உருவம் பெறும் கனவுகள் இலட்சியங்கள். உருவம் இல்லாத இலட்சியங்கள் கனவுகள்.
பூரிசிரவஸ் உருவம் இல்லாத இலட்சியத்திற்குள்ளும், உருவம் உள்ள கனவுக்குள்ளும் தவழ்ந்து தவழ்ந்து செல்கின்றான். பூரிசிரவஸ் செல்லும் இடமெல்லாம் மலையும் அங்கு ஒரு பெண்ணும் ஒரு கதையோட்டத்தின் கதையுத்திப்போல என்று நினைத்தேன். அது ஒரு படிமமாகி இந்த அத்தியாயத்தை அழகு செய்கின்றத. கடினமும் மென்மையும் கலந்து, அகமும் புறமும் கனிந்து செல்லும் வாழ்க்கை அப்படித்தானே இருக்கும்.
ஏன் இவன் இப்படி செல்லவேண்டி உள்ளது. ஒரு பாண்டவர்கள்போலவோ, கௌரவர்கள்போலவோ, யாதவர்கள் போலவோ ஏன் பூரிசிரவஸ் ஒரு மையம் கொண்டு இயங்க முடியவில்லை. இந்த மனநிலையை திரு.ஜெ அற்புதமாக வடிக்கின்றார்.
சல்லியர் தொடர்ந்தார் “இன்றும் அதை நான் காண்கிறேன்.நம்குலத்தவர் மலைவெளியில் தங்கள் ஆடுகளுடன் மாதக்கணக்கில்பிறிதொரு மானுடனை பாராமல் மகிழ்ந்து வாழ்கிறார்கள். ஆயினும்நெடுந்தொலைவுகளை அவர்களின் விழிகள் கூர்ந்துநோக்கிக்கொண்டிருக்கின்றன. சிற்றொலிகளுக்காக அவர்களின்செவிகள் காத்திருக்கின்றன. விழிதொடும் தொலைவிளிம்பில்சிற்றுயிரின் அசைவென ஒரு மானுடனைக் கண்டால் அக்கணமேபாறைகளுக்குள் மறைந்து அசைவற்றுவிடுகிறார்கள். அசைவற்றுகண்மூடி அமர்வதுதான் அவர்கள் அறிந்த மிகப்பெரிய தற்காப்பு”
அசைவற்று இருக்கும் பூரிசிரவஸ் குலங்கள் ஒரு புதிய இலக்கை அடையும்போது கழுத்தில் புண்படும் வன்மையும், காதலில் சுகப்படும் மென்மையும் கொண்டே செல்லவேண்டி இருக்கிறது.
பூரிசிரவஸ் கடந்துபோகும் பல கடினமலை நிலங்களையும் காட்டி அதன் வழியாக பெண்களின் காதலை கனவுகளை மென்மைகளை காட்டிப்போகும் இந்த அத்தியாம் மலைகளின் மடி என்று சேர்த்துப்பார்க்கும்போது திமிலும் கொம்பும் கொண்ட பசுவின் தோற்றம் வரும்போதே அதன் பால்மடியும் வந்து கனியச்செய்கின்றது.
நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.