ஜெமோ,
இந்தியாவில் பிற இடங்களில் அதிகம் இல்லாத ஒரு சிலை தென்னாட்டிலே உள்ளது. அது ரதிதேவியின் சிலை. அது காமதகனம் என்ற கொண்டாட்டம் பழையகாலத்திலே நடந்ததற்காக அமைக்கப்பட்டது. காமதகனம் ஒரு விருஷ்டிச்சடங்கு. மழைவந்து விளைச்சல் பெருகுவதற்காக நடத்தப்படுவது. வயலிலே செய்திருக்கிறார்கள். அதுக்கு ரதி மன்மதன் சிலைகளை செய்திருக்கிறார்கள். பிறகு அந்தச் சடங்கு நின்றுபோய் கோயிலில் ரதிமன்மதன் சிலைக்கு முன் முளைப்பாரி வைப்பது மாதிரி மாறியது
அந்தச்சடங்கு அதுக்கு முன்னால் இந்திரனை வழிபட்ட சடங்காக இருந்திருக்கலாம். அதை பாகவதத்திலே சொல்லியிருக்கிறது. ஆனால் இன்னொருபக்கம் ஒரிசா மாதிரி பகுதிகளில் அதை தேவிசாந்தி வழிபாடாகச் செய்கிறார்கள். அந்த தேவிசாந்தி வழிபாடுதான் கொடுங்கல்லூர் போன்ற கோயிலில் தேவிக்கு காவுதீண்டல் போன்ற வழிபாடாக மாறிவிட்டது. கெட்டவார்த்தைப்பாடல்களைப்பாடி வழிபடுகிறார்கள். தேவியின் காமத்தை வழிபாடு மூலம் தணிப்பது
அந்தத்தாந்திரீகச் சடங்கின் மூலம் என்ன என்று யோசித்துக்கொண்டிருந்தேன். வெண்முகில் நகரம் 19 ஆவது அத்தியாயம் தெளிவைத்தந்தது. அது ஒரு பெரிய பித்துநிலை. ஆனால் விரிவான ஆராய்ச்சியைச் செய்யவேண்டிய ஒரு synthesis of iconography அதில் உள்ளது என்று நினைக்கிறேன்
சுவாமி