அன்புள்ள ஜெ,
சிறிய இடைவெளிக்குப்பின் எழுதுகிறேன்.வடகிழக்குப் பயணத்திலிருந்து திரும்பி இருப்பீர்களென்று எண்ணுகிறேன்.நான் ஏற்கனவே எழுதியதைப் போல உங்கள் பயணங்களின் ரசிகை நான்.பதிவுகள் மிக நன்றாக இருந்தன.உங்களுடன் நானும் பயணித்த மனநிலையிலேயே வாசித்தேன்.வெண்முகில் நகரம் என்னுள் கொஞ்சம் கொஞ்சமாய் எழுப்பப்படுகிறது.பித்து நிலைபற்றி நிறைய எழுதிவிட்டார்கள்.நானும் அதனுள் மூழ்கி விட்டேன்.அதனாலேயே எழுத இயலாத ஒரு நிலை.
தற்போதைய பூரிசிரவஸ்,பிரேமை உறவை மிக நுட்பமாக வடிக்கிறீர்கள்.மலைமக்களின் பழங்குடி வாழ்வின் நுண்ணுணர்வுகள் சரியாக வருகின்றன.என் பெற்றோரின் பணி காரணமாக இருபது வயது வரை பழங்குடியினர் வாழும் மலைப்பகுதியிலேயே வளர்ந்தேன்.
இமய மலையின் உயரம் தவிர பிற சூழல் இதே நிலையில் தான் இன்றும் இருக்கிறது.பழங்குடி மக்கள் வாழுமிடங்கள் தனித்தவை.பிறருடன் தொடர்புகள் குறைவு.இன்றும் ஏர் உழுவது பெரும்பாலும் பெண்களே.காட்டிற்கு விறகெடுக்கச் சென்று தனியே குழந்தை பெற்று மடியில் தூக்கிவரும் வலு இன்றும் அப்பெண்களிடம் மிகச் சாதாரணம்.இருளிற்கோ,வனத்திற்கோ அஞ்சாத பெண்களை நான் எப்பொழுதும் பார்த்திருக்கிறேன்.பிரேமையின் ஆளுமை,அன்பு அவனைக் கட்டிப்போடுவது அழகு.மலைமக்களின் தேவைகள் குறைவு எனவே கொண்டாட்டம் அதிகம்.அப்படிப்பட்ட வாழ்வு ஆசீர்வதிக்கப்பட்டது.நாம் தான் அவர்களை நம்முடன் ஒப்பிட்டு முன்னேறவில்லை என்பிறோம் .ஆனால் அவர்கள் இயல்பாகவே உயரிய மகிழ்வுடனே வாழ்கிறார்கள்.
பழங்குடியினருடனே நான் படித்ததால் அவர்களின் பல பண்புகள் இயல்பாக என்னிடம் உண்டு.என்
கல்லூரியில் என்னை மலைராணி என்றே கூப்பிடுவார்கள்.காரணம் பிறர் செய்ய இயலா வேலைகளை நான் சாதாரணமாகச் செய்வேன்.பெரிய மரங்களில் ஏறுவது,அதிக எடையுள்ள பொருட்களைத் தூக்குவது,பிரண்ட்ஸை இரு கரங்களில் தூக்குவது,தலை குப்புற கவிழ்த்து விடுவது,நள்ளிரவில் பத்தாவது மாடிக்குத் தனியே செல்வது,பையன்களிடம் சரிக்குச்சரி நின்று மல்லடிப்பது, என்று நிறைய.இவற்றையெல்லாம் எழுதலாமா என்று கூடத் தெரியவில்லை.ஒரு நட்பாக
எண்ணி எழுதுகிறேன்.வெண்முரசின் மலைப் பயணம் என் பால்யத்தை எனக்கு மீட்டுத் தருகிறது.குளிரும்,ஆடுகளும்,வலு
அதே போன்றே பாலியல் சார்ந்த கருத்துகளும்.ஆணும் பெண்ணும் சேர்ந்து சில காலம் வாழ்ந்து பார்த்து விட்டு பிறகே மணமுடிக்கும் இயல்பு இன்னும் சிலரால் பின்பற்றப்படுகிறது.குழந்தைகள் பிறந்த பின் திருமணம் என்பதை சாதாரணமாக பழங்குடியினரில் கண்டிருக்கிறேன்.பிடிக்கவில்லை எனில் பிரிந்து விடுகிறார்கள்.அதே போன்று விதவைகளைக் காண்பது அரிது.எந்த வயதிலும் மறுமணம் சாத்தியம்.Your children and my children are playing with our children என்னும் ஐரோப்பிய நடைமுறை இங்கு இன்னமும் சாதாணம்.
ஆண்களே பெண்ணிற்கு திருமணச்சீர் அளிக்க வேண்டும்.நான்கு ஆண்களைப் பெற்ற பெற்றோர் திருமணச் செலவிற்கு திண்டாடுவர்.பெண்ணின் பெற்றோரே செல்வாக்கு பெற்றவர்கள்.
மலையை விட்டு வந்து பல ஆண்டுகள் கடந்த பின்பே பிற பகுதியினரின் பாசாங்குகள் சிறிதளவு எனக்குப் புரிந்தது.இப்பொழுதும் பல நேரங்களில் நான் ஏமாறுவது சாதாரணம்.எனக்கு இங்குள்ள பல அரசியல் நடிப்புகளும்,தந்திரங்களும் இன்னும் புரிவதில்லை.மனதிலுள்ள அனைத்தையும் சொல்லிவிடக் கூடாது என்று மட்டும் கொஞ்சம் புரிந்து வைத்திருக்கிறேன்.பல புரிதல்கள் உங்கள் தளத்தின் மூலமே என்றே கூறுவேன்.
மிக அற்புதமான ஒரு அனுபவத்தை பூரிசிரவஸ்,பிரேமை வாழ்வின் மூலம் கண்டேன்.இடும்பி பீமன் அத்தியாயம் போலவே எனக்கு மிகவும் நெருக்கமாக உணர்ந்தேன்.
நன்றி.
எனக்கு நீங்கள் தந்த எம் என்ற பெயரே நன்றாக இருக்கிறது.அப்படியே இருக்கட்டுமே.
அன்புடன்
எம்.