Friday, April 10, 2015

திருதராஷ்டிரனின் மாற்றம் 3



பால் மோரென மாறத்தொடங்கும் முதற்கணம் எது என்று அஸ்வினிதேவர்கள் மட்டுமே அறிவர் என்று யாதவர் சொல்வதுண்டு//


இந்த உவமையின் மூலம் மோரான பாலுக்குகூட அந்த கணம் தெரியவில்லை என்ற குறிப்பும் இருக்கிறது. இந்த இடத்தில் பால் மோர் என்ற பொருள்களை விட்டுவிட்டு அந்த “முதற்கணம்” என்பதுதான் சுட்டப்படுகிறன்றது. உலக வரலாற்றை,பெருங்காவியங்களை அந்த அந்த முதற்கணமே ஆட்டிப்படைக்கிறது. சீதை லட்சுமணனைப்பார்த்து “அப்படி ஒரு நினைப்பா” என்ற கணம்.  வள்ளுவர் சொல்லும் விருந்து முகந்திரிந்து நோக்க குழையும் கணம். 

சில கணங்கள்மீது சில சொற்கள் ஏறி வரலாறு வாழும்வரைக்கும் வாழும். சிலகணங்கள் மீது  சிலசெயல்கள் ஏறி வரலாற்றில் வாழும். தந்தை மகனுக்கு இடைப்பட்ட கணங்கள் வரலாறு ஆகமுடியாத ஆனால் வரலாற்றுக்கணங்கள்தான்.  இருவரும் கண்களாலேயே பார்த்துக்கொள்ளும் கணம்.  கண்ணில்லா இந்த அப்பாவின் இந்த கணம் இன்னும் வெற்றிடமாய் இருந்து கனமில்லாத கனத்தை தருவதால் வெற்றிடத்தில் நிற்பதுபோல் இருக்கிறது. 

இந்த வெற்றிடத்தின் கனத்தில் மாட்டிக்கொள்ளக்கூடாது என்றுதான் திருதராஸ்டிரன் இத்தனை மேன்மையானவனாக தன்னைக் கட்டிவைத்து காட்டிக்கொள்கின்றான். என்னதான் சிரிக்கவைத்தாலும், சிரித்தாலும், சிரிப்பு நடிகன் தன் கண்ணீரை தடுக்கமுடியாத கணம்.  ஆடியன்ஸ் காணவிட்டாலும் கண்ணன் என்னும் திரைஇழுப்பவன் கண்டுகொண்டான். 

ராமராஜன் மாணிக்கவேல்