அன்புள்ள திரு.ஜெ
வணக்கம்.
அன்னையர்களை அன்னையர்
என்று உணரவைக்கும் திறப்புகளை சொற்களின் சாவியால் செய்யும் உங்களுக்கு முதலில் எனது
அன்பு வணக்கமும் நன்றியும்.
வெண்முரசின் சிறிய
நாவல்கள் செம்மணிக்கவசம், எரிமலர். புல்லின்தழல் போன்ற நூலின் வரிசையில் தீர்க்கதமஸின்
கதையையும் தனி நாவலாக வைக்கலாம். இருள்மலரின் ஒளித்தேன் வடியும் இந்த குறுங்காவியத்தைக்கொண்டு
வாழ்க்கையை உணர்ந்துக்கொள்ளலாம் என்பதை விட தன்னைத்தான் ஒரு மனிதன் உணர்ந்து தெளியலாம்
என்பதே முழுமையான சரி.
இந்த கதையை படிக்கும்போது
எழுதத்தூண்டிய உண்மைக்கதைகளை எழுத முடியுமா?
என்று என்னைக்கேட்டுக்கொண்டேன். பயமாகத்தான் இருக்கிறது. இந்த பயம் என்னைத்காத்துக்கொள்ளவா?
அல்லது கதைவழி எழுபவர்களைக்காக்கவா? என்ற எண்ணமும் முன்பின் இழுக்கிறது. வேண்டாம், இதுபோன்ற எண்ணற்ற
உண்மைக்கதைகளைத்தாண்டியே ஒவ்வொருவரும் வந்துக்கொண்டும் வாழ்ந்துக்கொண்டும் இருக்கிறார்கள்.
வண்ணங்கள் வடிவங்கள் மாறலாம் சுவை அதேதான். உடல் காமம், உள்ளத்தின் காமம், காமம் மட்டுமேயான
காமம். இப்படி காமங்கள் எங்கும் ஒன்றுதான் ஆனால் உண்மையின் முன்பு நெஞ்சு அதிர்ந்து வெடித்து நின்ற கணங்கள் மட்டும் அவரவருக்கும்
மாறுபடும்.
//பிறரது துயரையும் வெறுப்பையும் எள்ளலையும் அறியாத இருளுலகில் தனித்த மதவேழம் மூங்கில் காட்டில் உலவுவது போல் அவர் கொம்பிளக்கி தலை குனித்து துதிக்கை சுழற்றி அலைந்து கொண்டிருந்தார். அங்கு பல்லாயிரம் ஊற்றுகள் என பெருகி வழிந்தது அவரது காமம்//
பிறரது
துயரையும் வெறுப்பையும்
எள்ளலையும் என்ற சொற்களைக்கொண்டு நீ்ங்கள் நெஞ்சளக்கும் நெஞ்சை அள்ளும்
நெஞ்சைக்கிள்ளும்
வித்தையில் மகிழ்கின்றேன். இந்த மகிழ்ச்சி வெறும் மகிழ்ச்சி மட்டும் இல்லை.
துயர் வெறுப்பு
எள்ளல் என்ற சொற்கள் தங்கும் இதயம் படும்பாடு ஒரு சொல் மட்டும் அல்ல, அது
வாழ்க்கை.
அந்த சொற்கள் நெஞ்சில் ஏறிவிட்டப்பின்பு இறங்குவதில்லை
அதைக்கடந்துப்போவதற்கு படும்பாடு
யுத்தமும் தவமும். டில்லிமாணவி காமத்தால் பட்டப்பாடு துயரம், சில
ஆண்டுகளுக்கு முன்பு உணவுக்கடை அண்ணாச்சியின் காமம் வெறுப்பு, ஏதோ ஒரு
குடும்பம் கண்ணீரில் விழுந்திருக்கும் என்று தெரிந்தும் எள்ளலை மட்டுமே
உருவாக்கும் கள்ளக்காதல்.
பெரியக்கோட்டை சின்னதாக்க பெரியக்கோடு
போடுவதுபோல இந்த துயரையும் வெறுப்பையும் எள்ளலையும் சின்னதாக்க அதனினும் பெரும் துயரத்தையும்
வெறுப்பையும் எள்ளலையும் கண்டடையவேண்டும் இது ஒரு எளிய வழி. எளிய வழி, அவசர வழி ஆனால்
நிரந்தரவழியில்லை. துயரத்தையும் வெறுப்பையும் எள்ளலையும் நிரந்தரமாக சின்னதாக்க தாண்டிப்போக
பெரியவழி பெரிதினும் பெரியதில் இந்த சிறியதை கொண்டு வைத்துவிடுவதுதான்.
நன்றே வருகினும் தீதே விளைகினும் நான் அறிவது
ஒன்றேயும் இல்லை உனக்கே பரம் எனக்கு உள்ளதெல்லாம்
அன்றே உனது என்று அளித்துவிட்டேன் அழியாத குணக்
குன்றே அருட்கடலே இமவான் பெற்ற கோமளமே-அபிராமி அந்தாதி.
இது எளியதா? எல்லாம் உனது என்று அளித்துவிடமுடியுமா?
அப்படி அளித்துவிட்டால் துயரம் வெறுப்பு எள்ளல் என்ன செய்யமுடியும். அந்த நிலையை அடைந்தவர்கள்
பற்றி பேச்சில்லை இது. எளிய மனிதர்கள் வாழும் உலத்தைப்பற்றி பேசக்கூடியது. எல்லாம் எனது என்ற ஆசைக்கொண்ட விழைவும் காமமும்
கொண்ட மனிதர்களைப்பற்றி பேசும் வாழ்க்கை இது. இவர்களால் இவர்களை அன்றி வேறுயாரைப்பற்றிக்கொள்ள
முடியும். இவர்கள் உணவாலும் விழைவாலும் இருக்கக்கூடியவர்கள். இருப்பதாலேயே வளரக்கூடியவர்கள். வளர்வதன் மூலமாகவே வாழ்வதாகவும்
இருப்பதாகவும் உணரக்கூடியவர்கள்.
பெரியதைப்பற்றிக்கொள்பவர்கள் விண்ணோக்கியும் சிரியதைப்பற்றிக்கொள்பவர்கள்
மண்ணோக்கியும் இழுக்கப்படுகிறார்கள். அது ஒளியுலகாகவும் இது இருள் உலகாகவம் இருக்கிறது.
ஒளிவந்தால் இருள் இல்லை, ஒளியில்லாமல்போனால் இருள் உண்டு. ஒளிவந்தால் இருள் இல்லை என்று
எழுதியதுபோல் இருள்வந்தால் ஒளியில்லை என்று எழுதமுடியாது. ஒளியைத்தான் உண்டாக்கவேண்டும்,
இருளை உண்டாக்கவேண்டிய அவசியம் இல்லை என்பதால் இருளும் ஒளியும் அப்படி உள்ளது. இந்த
வல்லமைதான் இருளை பிரமம் என்று எண்ணவைக்கிறது. இருளென வந்து நிற்கும் காமமும் தன்னை பிரமம் என்று எண்ணவைக்கிறது.
காமம்
பிரமம்தானா? என்ற வினாவை இந்த கதை உருவாக்கி விடைத்தேடுகின்றது. ஒளி முன்
இருள் அழிவதுபோல் விழிக்கும்போது காமம் அழிகின்றது என்ற விடையை
கதைத்தருகின்றது. பிரமம்போல் பகல்வேடம்போடும் காமம் பிரமம் இல்லை என்பதை
தெளிவாக்குகின்றது.
காமத்தை நாம் உண்டாக்கவேண்டியதில்லை,
காமம் இன்மைத்தான் நாம் உண்டாக்கவேண்டி உள்ளது.
தீர்க்கர்ஜோதிஷாக இருக்கவேண்டியவனை தீர்க்கதமஸாக்கியது
பிரஹஸ்பதியின் காமம். தீர்க்கதமஸ்கள்தான் உலகம் முழுவதும் கண்ணுக்கு முன் முளைத்திருக்கிறார்கள்.
பிரஹஸ்பதிகள் கண்ணுக்கு தெரியாமல் காற்றுப்போல உலகம் முழுவதும் பரவி இருக்கிறார்கள்.
தீர்க்கதமஸ்கள் விழியற்ற குருடர்கள். பிரஹஸ்பதிகள் கணநேரகுருடர்கள். நான் பிரஹஸ்பதிக்காகவே
வருந்துகின்றேன். பிரஹஸ்பதியின் துயரமே பெரும் துயரம். திர்க்கதமஸ்கள் அழவைப்பவர்கள்.
பிரஹஸ்பதிகள் அழவைத்ததற்காகவும் அழுபவர்கள். தீர்க்கதமஸ்களை யாரும் அறியமுடியும். பிரஹஸ்பதிகளை
அவரவர்கள் மட்டுமே அறியமுடியும். பிரஹஸ்பதிகளாக இருக்காதவர்கள் யார்? பிரஹஸ்பதிகளால்
பெண் அடையும் துன்பமே துன்பம். பிரஹஸ்பதிகள் அனைவரும் கணவன் என்னும் கவசம் பூண்டவர்கள்.
பிரஹஸ்பதி ஒரு திருப்பத்தில் கண்விழித்துக்கொள்கிறான்.
தீர்க்கதமஸ் கண்விழிப்பதே இல்லை. தீர்க்கதமஸ் கண்விழிக்கும்போது அவனிடம் பழைய கண்ணும்
பழைய உலகமும் இல்லை.
//இந்திரன் தன் பாரிஜாத மாலையைக் கழற்றி அவர் தோளில் இட்டார். ஒளி மிக்க இருவிழிகள் அவர் முகத்தில் திறந்தன. இருண்ட நிழல்கள் ஆடும் மண்ணுலகை நோக்கி “அது என்ன?” என்று கேட்டார். “உத்தமரே, இத்தனை நாள் தாங்கள் இருந்த உலகு அது” என்றார் தேவர்க்கரசன்.
“இவ்விருளிலா மனிதர்கள் வாழ்கிறார்கள்?” என்றார் தீர்க்கதமஸ்.//
தீர்க்கஜோதிஷாகப்பிறக்கவேண்டி யவன், தீர்க்கதமஸாக
பிறந்து, தீர்க்கதமஸாகவளர்ந்து, தீர்க்கதமஸாகவாழ்ந்து, தீர்க்கதமஸாக சாகமல் தீர்க்கசிரேயஸ் என்றும் தீர்க்கபிரேயஸ் என்றும் அவர் அழைக்கப்படுகின்றார் என்பது அவர்ப்பெற்ற சொற்களின்
கொடை.
காவியங்கள் இவ்வளவு சொற்களை
வாரிவாரி வழங்கிக்கொண்டே இருப்பது தீர்க்கதமஸ்களை விண்ணேற்றுவதற்குத்தான்.
இந்த பதிவின் ஆரம்பத்தில்
நான் சொல்லவந்த உண்மைக்கதைகளின் தீர்க்கதமஸ்கள் பிரஹஸ்பதிகள் காவியங்கள் கற்கதொடங்கி
இருந்தால் அவர்களின் விழி திறந்திருக்கும் அல்லது விழி கிடைத்திருக்கும், விழிதிறக்காவிட்டாலும்,
விழிகிடைக்காவிட்டாலும் குறைந்தபட்சம் தனது விழிநீருக்கு விதி காரணம் இல்லை என்பதாவது
புரிந்திருக்கும்.
இந்த பெரும்பொருள்பேசும்
குறுங்கதையில்வரும் பாத்திரங்களுக்கு உதத்யர், பிரஹஸ்பதி, மமதை, தீர்க்கஜோதிஷ், தீாக்கதமஸ்,
தீர்க்கசிரேயஸ், தீர்க்கபிரயேஸ், பிரத்தோஷி, வாலி, சுதேஷ்ணை என்ற பெயர்கள் தரும் உருவகம்
உறையவைக்கிறது. அதற்கு விளக்கம் தருவதுபோலவே ஜெ இந்த கதையில் பெயர் பெரும் வலிமையின்
கணத்தை எழுதியது அற்புதம்
//“பெண்ணே, எவருக்கும் அவர் பெயர் தற்செயலாக அமைவது அல்ல. அப்பெயர் சூட்டப்படும் கணத்தை அமைக்கும் தெய்வங்கள் அவர் இயல்பை அறியும். அவர்கள் அப்பெயராக முழுதமையும் கணமும் வரும்” என்றார்//
அன்னையர்களைப்பற்றி
எழுதத்தான் தொடங்கினேன். வழக்கம்போல நீச்சல் தடத்தையும் இலக்கையும்
கடலேமுடிவுசெய்கிறது . கடலி்ல் நீந்துவது இலக்கை தொடுவதற்காகவா?
நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.