Sunday, July 16, 2017

வஞ்சப்பெருங்காட்டின் விதை




நீர்க்கோலம் – 49 ல் காப்பு காட்டில் நிலவு நோக்கி சிலையென அமர்ந்திருக்கிறார்  நிலைக்கா கால் கொண்ட காற்றின் மைந்தன், பல காலம் முன் இப்படி ஒரு கானாடலில் ஆருயிர் துரியனுடன் ஏற்பட்ட துயரத்தை எண்ணிக்கொண்டு.
 
வாழ்வை சிதறடித்து இன்று முளைத்து நிற்கும் வஞ்சப்பெருங்காட்டின் விதை அன்று விழுந்தது.
அனைத்துயிர்க்கும் உணவளித்து  உயிர்காக்கும் கருணை கொண்ட பேரன்னை  என  இன்றிருக்கும் பீமர் அறிவார், இன்னும் சில காலத்தில் இவ்வுலகம் இதுவரை காணாத கொலைதெய்வமென, தலைகளை சிதறடிக்கும் குல நாசகனாக மாறப்போவதை.
 
சந்தனம் ஒற்றும் பெண்ணின் கைகள்போல மெல்ல மெல்ல மண் தொட்டு செல்லும் பாதங்கள் மட்டுமல்ல அவை, மண்ணில் அறம் காக்கும் காலனின் காலடிகள்.
 
நீர் கோலம் 50 மற்றும்   51  அத்தியாயங்கள் முழுக்க படிமங்களாலும் குறியீடுகளாலும் ஆனவை. அவற்றின் முழு அர்த்தங்களும் என்றைக்கு அறிவேன் என்று தெரியவில்லை.
 
கீசகன் தன் நிழல் கண்டு தானே அஞ்சி பின் புதர்காட்டுக்குள் வேகமாய் செல்கிறார்.அவர் அறிந்திருக்கலாம் அது  நிழல் அல்ல தன் மரணம் என்று.
 
தத்த தய தம! தத்த தய தம!  சொல்வளர் காட்டில் தருமர் அறிந்த ஆதிசொல். மூவேதங்களும் உருவாக காரணமாக இருந்தவை.
 
ஆசானின் சொல்லும் எழுத்தும் வாளின்   கூர்மையிலிருந்து மின்னலின் கூர்மைக்கு மாறிவிட்டது.
 
வணக்கம்.
 
B. பரமேஸ்வரன்