நாய்கள் மனிதனுடன் இயல்பாக நட்பு பாராட்டுபவை. அது அதன் குணம். அதன் தன்னறம் என்றுகூட சொல்லலாம் . மற்ற விலங்குகள் அவ்வளவு எளிதாக மனிதனிடம் நட்புகொள்வதில்லை. ஆனாலும் சிறிது பழக்கப்படுத்தினால் நிறைய விலங்குகள் மனிதனிடம் நட்புகொள்கின்றன. யானைகள் மட்டுமல்லாமல் புலி சிங்கம் போன்ற கொடிய வன விலங்குகள்கூட் மனிதனிடம் நட்போடு இருப்பதை கண்டிருக்கிறோம். அவை தம் குணத்தை மேம்படுத்திக்கொள்கின்றன. அல்லது தன் அறத்தை மேலும் விரிவுபடுத்திக்கொள்கின்றன. ஆனால் விலங்குகளில் ஓநாய் அப்படி நம்முடன் இணங்கி வாழாது என்று கூறுவார்கள். அது மனிதனால் பழக்கவே முடியாத விலங்கு என அறியப்படுகிறது. எக்காரணம் கொண்டும் அது தன் குணத்தை மாற்றிக்கொள்வதில்லை. அது பின்பற்றும் ஒரே அறம் தன் நலனுக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் அப்படி எதைச் செய்வதிலும் தவறில்லை என்பதுதான். தன் வாழ்வின் ஒரே நோக்கம் தன் பசியை தீர்த்துக்கொள்வதுதான் என வாழும் விலங்கு ஓநாய். அதை வெண்முரசு இப்படி கூறுகிறது:
“என் அன்னை என்னிடம் சொன்னாள், குட்டிஉயிர்களைக் கிழித்து உண்க, மைந்தா. அவற்றின் எஞ்சிய காலம் உன்னிடம் வரட்டும். இளையவற்றைத் துரத்தி உண்டு அவற்றின் ஆற்றலை அடைக. முதியவரை வீழ்த்தி உண்டு அவற்றின் மாளாப் பொறுமையை பெற்றுக்கொள்க. நீ உண்ணத்தகாதது என இங்கு ஏதுமில்லை.
அது தன் சுயநலத்துக்காக அல்லது தான் எடுத்துக்கொண்ட ஒரு நோக்கத்திற்காகவென, தன் கொண்டுள்ள வஞ்சத்திற்கென ஒருவன் இந்த ஓநாயின் அறத்தை கையிலெடுத்துக்கொண்டிருக்கலாம். . ஆனால் அதற்கு அவன் தன் புகழ் மதிப்பு என அனைத்தையும் அவன் விலையாக கொடுக்க வேண்டியிருக்கும். சமூகத்தின் அச்சத்திற்கும் வெறுப்புக்கும் ஆளாகி நிற்க நேரிடும். அவன் இறப்புக்கு பின்னும் அவன் எடுத்த நிலைக்காக நினைவுகூறப்படுவான். வரலாறெங்கும் இப்படியான எதிர் நாயகர்கள் இருக்கிறார்கள். தான் எடுத்த நிலைக்காக பல உயிர்கள் கொல்லப்படுவதை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள், ஒரு பாவமும் அறியாத பல்லாயிரம் உயிர்களை நச்சுப்புகையிட்டு அழித்திருக்கிறார்கள். எவ்வித நீதிக்கும் உட்படாத கடுசிறைத்தண்டனைகளை நிரபராதிகளுக்கு கொடுத்திருக்கிறார்கள். பல நூறு சின்னஞ்சிறு சிறுவர்களின் உயிரை பனயமாக வைத்து கொடும்போரில் திணித்திருக்கிறார்கள். அவர்கள் தாம் செய்வது அடாத செயல் என அவர்கள் அறிந்திருக்க மாட்டார்களா என்ன? அறிந்திருந்தும் அவர்கள் அப்படி நடந்துகொண்டதற்கு அவர்கள் கொண்டிருந்த இந்த ஓநாயின் அறம் மட்டுமே காரணமாக அமைய முடியும்.
சகுனி தன் மைத்துனன் துரியோதனனின் முடியுரிமைக்காக ஓநாயின் அறத்தைக் கொண்டிருக்கிறான். வாரணாவத தீவைப்பு, சூதாட்டத்தில் பாண்டவர்களின் நாட்டை பறித்துக்கொண்டது போன்ற செயல்களுக்கான அடிப்படை இதுதான். ஆனால் அவன் கடந்த பதிமூன்று ஆண்டுகளில் இத்தகைய செயல்கள் எதுவும் செய்வதற்கு தேவையில்லாமல் இருந்தது. மீண்டும் அதற்கான நேரம் வந்திருக்கிறது, இப்போது அவன் மீண்டும் அந்த அறத்தை தீவிரமாக மேற்கொள்ள மனதளவில் தன்னை தயாராகிக் கொள்வதை ஓநாயுடன் சந்திக்கும் நிகழ்வு கூறப்படுகிறது. இந்த இடைவெளியில் அவன் மனம் சற்றேனும் நெகிழ்ந்து விட்டிருக்குமோ. அவனுள் செலுத்தப்பட்டிருக்கும் அந்த ஓநாயின் நஞ்சு அவன் உடலில் வீரியத்தை இழந்திருக்குமோ என அவன் மனம் சற்றே ஐயுறுகிறது.
தான் மேற்கொண்டிருக்கும் ஓநாயின் அறத்தில் தவறாதிருக்கப்போவதை தன் குருதியைக்கொடுத்து தனக்குத்தானே உறுதி செய்துகொள்கிறான் சகுனி.
தண்டபாணிதுரைவேல்