அன்புள்ள ஜெ வணக்கம்.
மண்மூடிய விதைக்கு மண்மட்டும் அல்ல வானமும் எதிரிதான். மண் மூச்சு முட்டவைக்கிறது. வான் சுட்டு அவிக்கிறது. வெல்லும் விதை மண்ணை அன்னை என்றும் விண்ணை தந்தை என்றும் அறிகின்றது. ஆனால் விண்ணும் மண்ணும் ஒரு விதையை அழுத்துவதும் அவிப்பதும் இருவேறு காலத்தில் அல்ல ஒரே காலத்தில். ஒரு காலத்தில் இருவேறு வினைகளுடன் போராடி வெல்லும் விதைதான் கற்பக தருவென்று கொண்டாப்படுகின்றது.
கிருஷ்ணாஅர்ஜுனன் என்ற பெயர் கொண்ட அபிமன்யூ கிருஷ்ணனாலும் அர்ஜுனனாலும் மூடி முளைக்கவைக்கப்படுகின்றான். அவன் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் காலம் அவன்மீது மண்ணை’யும் விண்ணையும் அள்ளி அள்ளிவைத்து விதையாக்கிவிட்டது. கிருஷ்ணனாலும் அர்ஜுனனாலும் மூடப்பட்ட கூட்டுப்புழு வெளியே பட்டாம் பூச்சியாக வருமா? அல்லது குளவியாக வருமா? ஏதாவது ஒன்றாக அது உலகுக்கு வந்தே ஆகவேண்டும் இல்லை என்றால் அது காலத்தால் கைவிடப்பட்டு குப்பயைாக்கப்பட்டுவிடும்.
கூட்டுப்புழு கூடு உடைத்து வண்ணத்துப்பூச்சியாக வந்தால் உலகுக்கு இன்பம். அதே கூட்டுப்புழு குளவியாக வந்தால் தனக்கு பலம். வண்ணத்துப்பூச்சியாக வருவதா அல்லது குளவியாக வருவதா என்ற முடிவெடுக்க முடியாமல் இளைய மனம் தவிக்கும். அந்த தவிப்பை இளைய மனம் அன்றி வேறு யார் அறியமுடியும். அந்த நிலை பிள்ளைக்கு சங்கடம். பெற்றவருக்கும் உறவுக்கும் வேதனை. இவன் ஏன் இப்படி இருக்கிறான்? என்று மீண்டும் மீண்டும் இளையவர்களைப்பார்த்து பெற்ற மனம் பித்தாகும். இது தலைமுறை இடைவெளியாக தோன்றி காலத்தில் நிற்கின்றது. அபிமன்யூ தன்னை கண்ணனாக வெளிக்கொண்டு வருவானா? அல்லது அர்ஜுனனாக வெளிக்கொண்டு வருவானா?அவனால் கண்ணனை ஏற்றுக்கொண்டு அர்ஜுனனை விட முடியாது. அர்ஜுனனை ஏற்றுக்கொண்டு கண்ணனை விடமுடியாது. கண்ணனை மட்டும் ஏற்றுக்கொண்டால் அவனுக்குள் உள்ள வில்லாளி அவனை நோகடிப்பான். அர்ஜுனனை மட்டும் ஏற்றுக்கொ்ணடால் அவனுக்குள் உள்ள தீராதவிளையாட்டுப்பிள்ளையும் அனைவரையும் நேசிக்கும் பாங்கும் அவனை குத்தி எடுக்கும். எனவே அவன் இரண்டாகவும் எழவேண்டி உள்ளான். இரண்டும் ஒன்றாகி ஒரு உருவாய் எழுந்து நான் அபிமன்யூ என்று நின்றால்தான் அவனால் நிறைவடைய முடியும். அந்த நிறைவை நோக்கி செல்லும் அபிமன்யூ ஏதாவது ஓரு கணத்தில் எல்லோராலும் விரும்பப்பட்டும் எல்லோராலும் வெறுக்கப்பட்டும் நடத்தப்படுகின்றான்.
அன்னை தந்தையால் பிறக்கப்படும் குழந்தை முழுக்க முழுக்க அப்பாபோலவோ அல்லது அம்மாபோலவோ இருந்துவிடமுடிவதில்லை. அப்படி இருந்தால் அது பேரின்பம் அடைவதும் இல்லை. அம்மையப்பரின் கூட்டாக இருக்கம்போதே அதன் ஆதி அந்தமும் ஆராதிக்கப்படுகி்ன்றது. எல்லா குழந்தைகளுக்கும் இந்த நிலை வருகின்றது என்றாலும் அபிமன்யூவிற்கு கிருஷ்ண அர்ஜுனனால் வருகின்றது.
அன்புள்ள ஜெ, எழுதழல் எழுந்து விரிந்து விரிந்து வந்துக்கொண்டு இருக்கும்போது அபிமன்யூவை இரண்டின் ஒன்றாக நீங்கள் உருவாக்கும் அற்புதத்தில் நாவல் மிகவும் சிறப்பாக உள்ளது. மகாபாரதத்தின் வேறு எந்த நாயகருக்கும் இல்லாத இந்த தனித்தன்மையை கணம்தோறும் கணம்தோறும் நீங்கள் செதுக்குவதால் அபிமன்யூ படைப்பு அற்புதமான ஒன்றாக அமைகின்றது. ஓர் உடல் கொண்ட இரட்டை மனத்தின் ஈடில்லா அற்புதம் வெண்முரசின் அபிமன்யூ. அபிமன்யூவை இந்த இரட்டை மனநிலை இல்லாமல் புரிந்துக்கொள்ள முடியாது. எப்போதும் போல் ஈடில்லா படைப்பு அபிமன்யூவின் பாத்திர படைப்பு. “மயிற்பீலியை திருப்பி இருவண்ணம் பார்ப்பதுபோல“ அற்புதமான உவமை.
இரட்டை அகம் கொண்ட அபிமன்யூவின் பாத்திரம் போகும் வெளியில் உங்கள் உடன் வருவது சற்று கடினமானதாக இருக்கிறது. அந்த கடினம் இல்லாமல் கிருஷ்ணாஅர்ஜுனன் என்னும் பாத்திரத்தை எப்படி உள்வாங்கிக்கொள்வது.
எல்லாருக்குள்ளும் கிருஷ்ணா அர்ஜுனனாக தோன்றி வளரும் அபிமன்யூ கிருஷ்ணன் இடமும் அர்ஜுனன் இடமும் தோன்றும் போது ஆடி முன் ஆடை அவிழும் நிலைக்கு தள்ளப்பட்டு தடுமாறுகின்றான். தந்தையும் மாமனும் இல்லாத இடம் நோக்கி தாவித்தாவிச்செல்கிறான். தந்தையும் மாமனும் இல்லாத இடத்தில் அவர்களை அவன் உருவெளிசித்திரமாக்கி காட்டுகின்றான்.
கிருஷ்ணாஅர்ஜுனனாக இருக்கும் அபிமன்யூ உள்ளத்தில் நாடிழந்து எதிலியாக திரியும் தந்தையர் மைந்தனாக வாழும் அபிமன்யூ உள்ளத்தில் அது ஒரு காயமாக உள்ளது, திருமணநிகழ்வில் பெரிதாக ஆடை அணிகள் புனைந்துக்கொள்ள நினைக்காத நிலையில் அதை வெளிப்படுத்துகின்றான். அது அவமானம் என்று கருகின்றான். அந்த காயத்தை ஆற்றவே எல்லோரையும் தன்னவர்கள் என்று நினைக்கும்படியாக நடந்துக்கொள்கின்றான். யாரும் என்னுடையவர்கள் அல்ல அனைவரையும் வென்று கொன்று செல்லவேண்டும் என்றும் நினைக்கின்றான்.
காலவெள்ளத்தில் எல்லாவற்றை இழந்து ஊரைவிட்டு வெளியேற நினைத்த உறவினர் அப்பாவை பார்க்கவந்தபோது அம்மாவிடம் “நான் எதுக்கும் வேதனைப்படலை மச்சா., பெரிய பயலின் மௌனம் என்னை கொல்லுது“ என்று கண்ணீர் விட்டாராம். வியபாரத்தில் காலவெள்ளம் இழுத்துபோன செல்வத்தை காலவெள்ளமே கொண்டு வந்து கொடுத்து. இன்று நன்றாக உள்ளார்.
அபிமன்யூ குழந்தை தன்னையுடன் இருப்பது அர்ஜுனனுக்கு ஒவ்வாமையாக இருக்கிறது. அவனே பெரியவர்கள்போல ஒரு மௌனத்தை கடை்பிடித்தால் அது அர்ஜுனனுக்கு எத்தனை வலிக்கும். குழந்தைகள் பேரறிஞர்கள் ஆவது பெரிய வரம்தான் ஆனால் அவர்கள் குழந்தமையை இழப்பது பெற்றவர்களை வாட்டி வதக்கிவிடும். அபிமன்யூ இரட்டை மனநிலையில் கிருஷ்ணா அர்ஜுனனாக இருந்தாலும் தனது ஆழ் உள்ளத்தை காலத்தின் கசடுகள் ஏறி வெம்பிவிடாமல் இருக்க அவனுடைய பயணமும் ,பேச்சும், போரும், உற்சாகமும் அற்புதமாக வரும்படி செய்து உள்ளீர்கள்.
காலம் எந்த உள்ளங்களை பதம்பார்க்கவில்லை, அபிமன்யூவை பார்த்து இளைஞர்கள் தன்னை ஊக்கப்படுத்திக்கொள்ளவேண்டும்.
பெரியவர்கள் தன்னை மதிக்கவில்லை என்று அறிந்து அதற்காக வருத்தப்பட்டு கொண்டு நில்லாமல் உத்திரையாவது தன்னை மதிக்கின்றாளா என்பதை பார்க்கபோகும் அபிமன்யூ, முதல்முறை காதலியிடம்பேசும் ஆண்மகன் வாங்கும் பல்பூபோல எல்லா வண்ணவிளக்குகளை வாங்கி கடைசியல் “நீஇனியவள். உன்னை விரும்புகிறேன் என்று சொல்லும்பொருட்டே வந்தேன். அதையன்றி பிறஅனைத்தையும் சொல்லிவிட்டேன் போலும்” என்றான்.
என்னதான் அபிமன்யூ கிருஷ்ணா அர்ஜுனனா இருந்தாலும், பெண்கள் ஒரு பொருட்டல்ல என்று தந்தை அர்ஜுனன்போல தன்னை நினைத்துக்கொண்டாலும், பெண்களை தவிரவேறு ஒரு பொருட்டு உலகில் இல்லை என்று மாமான் கண்ணன்போல் தன்னை நினைத்துக்கொண்டாலும், காதலில் ஒப்பனைகள், இரட்டை மனம், ஆழ் மனம் எதுவம் பயன்படுவதில்லை என்பதை அபிமன்யூ அறியும் இடம் நேர்த்தியனது. ஆடம் மனம்தின் நிசப்தம் கூடிய தருணம் அது.
அன்புடன்