Sunday, October 29, 2017

தனிமை



இனிய ஜெயம் ,

நேற்று மாலை புதுவை வெண்முரசு கூடுகை . மீண்டும் நண்பர்களுடன் வெண்முரசுடன் ஒரு இனிய மாலை .  நண்பர்  கிருபாநிதி ஹரிகிருஷ்ணன் இல்லத்தில் ,  வெண்முரசு தொடர்ந்து வாசிக்கும் நாங்கள் ஒரு ஐந்து பேர் கூடி  ஏதேனும் ஒரு மாலை  அதன் அனுபவங்களை பகிர்ந்து கொள்வோம்  என முடிவு செய்து , முதல் கனல் நாவலை குறுநாவல் ,குறுநாவலாக அதன் பகுதிகளை வாசித்துவிட்டு வந்து ,அதன் மேல் விவாதிக்கலாம் என ஒரு முதல் வரைவை உருவாக்கிக் கொண்டோம் . 

சராசரியாக பதினைந்து நண்பர்களுடன் தொடர்ந்து நடந்த அந்த கூடுகையில் இதோ வேங்கையின் தனிமை வரை வந்துவிட்டோம் .   இந்த கூடுகையின் உரையாடலை துவங்கி வைத்த ஆனந்தன்  அவர்கள் , பெரும்பாலானோரை போல வெண்முரசின் காதலர் .  இதுவே தீவிர இலக்கியத்தின் வாசிப்புக்குள் அவர் நுழையும் முதல் நூல் .  வெண்முரசு செம்பதிப்பு வரிசை மொத்தமும் வாங்கி தனது வரவேற்பு அறையில் , நூலக  அலமாரி வைத்து அழகு செய்திருக்கிறார் . பார்ப்போர் எடுத்து வாசிக்க  பேப்பர் கட்டு  புத்தகமும் அதன் உடன் வாங்கி வைத்திருக்கிறார் .  வயதானவர்கள் வாசிக்க வசதியாக , கணக்கு லட்ஜ்ர்  அளவில் ,பெரிய எழுத்துருவில் ,ஷண்முகவேலின் வண்ண ஓவியங்களை உள்ளிட்டு ,  அவரே  தனியாக வெண்முரசு நூல் வரிசை ஒன்று நீர்க்கோலம் வரை தயார் செய்திருக்கிறார் . இளையவர்கள் வாசிக்க வசதியாக கிண்டிலில்  அனைத்து வெண்முரசு வரிசையும் சேர்த்து வைத்திருக்கிறார் . 

அடுத்த கூடுகையில் உரையாடலை துவங்கிவைக்கப்போகும் ராதாகிருஷ்ணன் அவர்கள் ஒவ்வொரு கூடுகைக்கும் பண்ரூட்டியில் இருந்து வருகிறார் . சஹ்ருதயர்களுடன் மற்றொரு மாலை . 

ஒவ்வொரு கூடுகை முடிவிலும் ,அக்கணம் கண்டடைந்த ஒன்று  உரையாடல் வழியே என்னை வந்து அடையும் .இம்முறையும் அது நிகழ்ந்தது . ஒன்று தர்மன் .மற்றவன் பீஷ்மன் . சொல்வளர்க்காட்டில் ''என்னை உண் ''  எனும் சொல் வழியே தர்மன் அடையும் மெய்மை எங்கே துவங்குகிறது என்பதை இன்றைய உரையாடல் வழியேதான் அறிந்தேன் . பாண்டு பிறப்புக்கு நிமித்திகர் கூறும் முன்கதையில் ,ஒரு  சக்கரவாகபறவை  தாய்   தனது ஐந்து குழந்தைகளுக்கு ''என்னை உண் ''என்று தன்னையே உணவாக அளித்து குழந்தைகளை வளர்க்கிறது . அந்த மெய்மையைத்தான்  தர்மன் அடைகிறான் .

     பீஷ்மர் அனைவராலும் பயன்படுத்தப்பட்டு ,தூக்கியெறியப்பட்டவராக [தேவைப்படும்போது  அழைத்துக்கொள்ளப்படுவார் ]   புறக்கணிக்கப்பட்டு  நகர் நீங்குகிறார் .  [உதடு கடிபட்டு குருதி வழியும் வலியோடு ].

அவரை அவரது இருக்கத்திலிருந்து முற்றிலும் விடுவிக்கிறான் அந்த சூதன் .  என்ன ஒரு நிலை பீஷ்மருக்கு . ஏழு பேரை விழுங்கி ,சொந்த சகோதரர்களை கொன்று ,இந்த பூமியில் உயிர்த்துக் கிடப்பவன்  பீஷ்மன்  என அவனது தாய் ,அவளது இருப்பால் சொல்கிறாள் .  அவன் வென்ற கங்கர் நிலம் ,  அவனது அஸ்தினாபுரி ,எதுவும் அவனுடையதில்லை , தந்தைக்காக அனைத்தையும் துறந்தவன் ,பெண்பழி சூடியவன் , தன் குருதி வழி பிள்ளை செல்வம் அற்றவன் , தனக்கென எதுவுமே செய்து கொள்ளாதவன் ,தேவைக்கு மட்டுமே வேண்டப்படுபவன் .
இந்த நரகு ,இதிலிருந்து விடுகிறான் பீஷ்மரை .பீஷ்மரையே சிரிக்கவைத்து அனுப்புகிறான் . இன்னும் ஒரு தங்கநாணயம் கொடு ,விசித்திர வீரியனை பற்றி பாடுகிறேன் என்கிறான் சூதன் .பீஷ்மர்  போதும் என சொல்லி விடுகிறார் . அந்த  சூதனின் பாதங்களுக்கு கனகாபிஷேகம் செய்வித்துவிட்டு கிளம்புகிறார் பீஷ்மர் .ஒவ்வொரு நாணயத்துக்குமான பாடலை எங்கோ அவன் பாடிக்கொண்டிருப்பான் .

உரையாடல் முடிக்கையில்  உணர்ந்தேன் , மொத்த குருக்ஷேத்ரமும்   பீஷ்மர்   நீலன் இருவருக்கு இடையில் மட்டுமே  நிகழ்கிறது .  ஆம் பிற அனைவரும் இவர்கள் இருவரும் வைத்து ஆடும் காய்களே .களத்தின் இப்பக்கம் நீலன் .அப்பக்கம் பீஷ்மர் . 

நீலன்  சகோதரர்களின் குருதியை உண்டு பிழைத்தவன்தான் . தந்தை பழி சூடியவன் ,குரு துரோகி , சூழ சூழ பெண்களின் பிரேமையால் மட்டுமே ஆராத்திக்கப் படுபவன் .  தனக்கான விளைவை நோக்கி ,அனைத்தையும் மாற்றி வைத்து விளையாடுவான் , இங்கிருப்பவன் .கடந்தவன் . 

பீஷ்மர் தனது ஒட்டுமொத்த வாழ்வயும் எதன்பொருட்டு  இழந்தாரோ அதன் பொருட்டே களம் நிற்கிறார் .

எதன் பொருட்டு எதையும் இழப்பானோ நீலன் அதன் பொருட்டு களம் நிற்கிறான் . 

ஒரே வித்யாசம் பீஷ்மர் விதியின் மகன் .நீலன்  யுக புருஷன் .

இந்த அத்யாயத்தில் சூதனின் சொல்லாக ஒன்று வருகிறது ,

சிறியவர்களுக்கு சிறிய வீழ்ச்சி ,பெரியவர்களுக்கு பெரிய வீழ்ச்சி .

நீலன் ,பீஷ்மர் இருவரில் யார் ஆகச்சிறந்த பெரியோர் ? அதுவே போரின் விடை 

கடலூர் சீனு