அஸ்தினாபுரத்துக்கான அரசுரிமை அரசியல் நெறிப்படி உரியது துரியோதனனுக்கா அல்லது தருமனுக்கா என்பதற்கான வாதம் இன்னமும் தொடர்ந்து கொண்டே வருகிறது. இதில் நம் வாசகர்களுக்கிடையேகூட இரு வேறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன. வெண்முரசில் இவ்விவாதம் பலர் வாயிலாக ந்டைபெற்று வருகிறது. பலராமர் மற்றும் கிருஷ்ணர் இதைப்பற்றிய தம் தர்க்கங்களைக் கூறீயிருந்தனர். இப்போது பீஷ்மரும் தாரையும் ஒன்றூகொண்று மாறுபடும் இருதர்க்கங்களை வைக்கின்றனர். இருவரும் நேருக்கு நேர் இதைப் பேசிக்கொள்ளவில்லையென்றாலும் இந்த இருவேறு கருத்துக்கள் ஒன்றுக்கு ஒன்று குறைவற்று இருப்பதாக தோன்றுகிறது. இதை நாம் இன்னும் நுணுகிப் பார்க்கவேண்டும் என நினைக்கிறேன்.
பீஷ்மர் தன் தர்க்கத்தை எதன் அடிப்படையில் வைக்கிறார் என்று முதலில் குறிப்பிடுகிறார். தான் நெறிகளை மாற்றியமைப்பவன் இல்லை என்கிறார். தான் நிகழும் வரலாற்றை மாற்றியமைக்க இயலாதவன் என்று கூறுகிறார்.
“என்னை எவ்வாறு நான் வனைந்துகொள்கிறேன் என்பது முதன்மையான வினா என்று இன்று புலரியில் கண்டடைந்தேன். இளஅகவையில் வரலாற்றுத்தலைவனாக நான் என்னை எண்ணிக்கொண்டேன். நானறிந்த மெய்மையின் அடிப்படையில் வரலாற்றை திசைதிருப்ப வேண்டுமென்றும் மாற்றியமைக்க வேண்டுமென்றும் கற்பனை செய்தேன். நீங்கள் அனைவரும் அறிந்ததுபோல் அம்பெய்து ஆற்றுக்கு அணைகட்ட முயன்றவன் நான். கங்கையை அவ்வாறு அணைகட்ட இயலாதென்று இந்த அகவையில் உணர்கிறேன். கங்கையை அம்பெய்து நிறுத்தும் ஆற்றல்கொண்ட தெய்வங்கள்கூட விண்ணுலாவும் முகில்பெருக்கை நிறுத்த இயலாது.”
“பின்னர் என்னை இக்குடியின் பிதாமகன் என்று எண்ணிக்கொண்டேன். என் கண்ணெதிரில் இவர்களின் வாழ்வழியலாகாதென்ற இலக்கொன்றை முன்வைத்து இதுநாள் வரை வாழ்ந்தேன். அதுவும் என் நெஞ்சுக்கும் அறிவுக்கும் கைகளுக்கும் அப்பாற்பட்டதென்று இப்போது உணர்கிறேன். இன்று என்னை எளிய முதுமகன் மட்டுமே என எண்ணுகிறேன்.
ஆகவே இப்போது இருக்கும் அரசியல், குல நெறிகள் சார்ந்தும் மற்றும் தன் தன்னறத்தின்படி மட்டுமே தான் நடக்கமுடியும் என்று கூறுகிறார். அவர் பின்பற்றும் நெறிகள் என்பது தன் தந்தை தாய் மற்றும் மூதாதையர் கூறிய சொற்களாகும். அவர் தன்னறம் எனக் கொண்டிருப்பது சொன்ன சொல்லை எக்காரணம் கொண்டும் கைவிடாதிருத்தல்.
பீஷ்மர். “அவையீரே, முதுமகனாகிய நான் இரண்டு நெறிகளுக்கு மட்டுமே கட்டுப்பட்டவன். என் அன்னையரும் தந்தையரும் குலமும் மூதாதையரும் எனக்களித்த ஆணைகளுக்கு முதலில். நான் பிறருக்கு அளித்த சொற்களுக்கு பிறகு. அதையன்றி பிறிதனைத்தையும் என்னிலிருந்து உதிர்த்துவிட முடிவெடுத்தேன்.”
எத்தகைய நெறிகளாக இருந்தாலும் ஒருவைன் தன்னறம் எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும் அவற்றுக்கு ஒரு எல்லை உண்டு. அவை அந்தந்த காலம் சூழலுக்கு உட்பட்டது காலம் மாறுகையில் மற்ற நெறிகள் மாற்றப்படுகையில் ஒரு நெறி மாற்றப்படலாம். அதைப்போன்றே தன்னறத்தை கடும் பிடிவாதத்தோடு எப்போதும் கடைபிடிக்கவேண்டும் என்று சொல்ல முடியாது. இதுவரை நடக்காத புதிய நிகழ்வின்போது இதுவரை இருந்துவந்த நெறி அல்லது ஒருவர் தன்னறம் அதற்குப் பொருந்தாமல் போகலாம்.
அடுத்து அவர் கொடுத்த சொல்லுறுதிகள் எவையென்று கூறுகிறார். அவருடைய முதல் சொல்லுறுதி அவர் தாய் தந்தையர்க்கும் மூதாதையர்க்கும் கொடுத்தது.
“எந்நிலையிலும் அஸ்தினபுரியின் முடிக்குக் காவலாக படைக்கலமேந்தி துணை நின்றிருப்பேன் என்பது என் அன்னை சத்யவதிக்கும் தந்தை சந்தனுவுக்கும் நான் அளித்த சொல். அதிலிருந்து எதன்பொருட்டும் நான் பிறழ முடியாது. தொல்காலம் முதல் இக்குடி பேணிவரும் நெறிகளுக்கு முற்றிலும் கட்டுப்பட்டவன் என்பது நான் என் பிறப்பால் தலைக்கொண்ட கடமை. இங்கு எவரை அரியணை அமர்த்தவேண்டுமென்பது எனது பொறுப்பல்ல. அரியணை அமர்ந்தோருக்குக் காவலென அமைவதே நான் செய்யக்கூடியது. எது குடிமுறையோ அதை பிழையின்றி பேணியாகவேண்டியவன் நான்.”
நெறிகளை உருவாக்கியளித்தவர்கள் மூதாதையர்கள் ஆவார்கள். ஆகவே ஒருவன் அவன் நலமுடன வாழ்வதற்கு இச்சமூகத்தை கட்டி வழிநடத்திய மூதாதையர்களுக்கு ஒவ்வொருவருக்கும் இருக்கும் சொல்லுறுதி அவர் அந்த நெறிகளைப் பின்பற்றுவேன் என்பதாகும். ஆகவே அவர் குல நெறியின்படி சரியென தான் நினைப்பதைக்கூறி அதை நான் கைக்கொள்வேன் என்று கூறுகிறார்.
“குலநெறிகளின்படி இந்த மணிமுடி என் மைந்தன் திருதராஷ்டிரனுக்குரியது. பதினெட்டு ஆண்டுகளுக்கு அவனால் பாண்டுவுக்கு கையளிக்கப்பட்டது. அச்சொல் மூதாதையருக்கும் தெய்வங்களுக்கும் முன் என் விழிசெவி சான்றாக அளிக்கப்பட்டதாகையால் எந்நிலையிலும் மாற்றத்தக்கதல்ல. அவனால் கூட. ஆகவே பதினெட்டாண்டுகள் அகவை நிறைவடைகையிலேயே திருதராஷ்டிரனின் மைந்தன் துரியோதனன் அரியணைக்குரியவனாகிவிட்டான். அவன் கோல்கொண்டு முடிசூடி இங்கு அமர்ந்திருப்பது மாறாத குலநெறிகளின்படியே.”
இதில் எனக்கு மாற்றுக்கருத்துக்கள் உள்ளன. குலநெறியின்படி திருதராஷ்டிரனுக்கு மணிமுடி உரியதென்றால் பின்னர் ஏன் அது பாண்டுவுக்கு அளிக்கப்பட்டது. குல நெறிகளைக் காப்பாற்றுபவர்கள் மற்றும் இதுபோன்ற சிக்கல்களில் உரிய நெறி எதுவெனக் கூறுபவர்கள் குலத் தலைவர்கள். அவர்கள் ஒப்புதல் அளித்த ஒன்று குலநெறிக்குகந்தது என ஆகிறது. அவர்கள் சொற்படிதானே பாண்டுவுக்கு மணிமுடியளிக்கப்பட்டது. பின்னர் அதை திருதராஷ்டிரனுக்கு உரியது என்று எப்படி சொல்ல முடியும்? பதினெட்டு ஆண்டுகள்தான் பாண்டுவிற்கு கையளிக்கப்பட்டது பிறகு அது துரியோதனனுக்கு வழங்கப்படவேண்டும் என்பது பீஷ்மரின் தனிப்பட்ட சொல்லுறுதி அது குலத் தலைவர்களின் கருத்தல்ல. ஆகையால் அது குலநெறியும் அல்ல. ஆகவே துரியோதனனுக்கு அரியணை குல நெறியின்படி அமைந்ததல்ல.
“ஒரு குடியின் மூத்த மைந்தனே முடிசூட வேண்டுமென்பது தொல்மரபு. ஆனால் அவர்களில் எந்த மைந்தன் முடிசூட வேண்டுமென்று தந்தையர் விரும்புகிறார்களோ அவர்களுக்கே மேலும் உரிமை என்பதும் தொல்மரபே” என பீஷ்மர் தொடர்ந்தார். “குடிமைந்தரில் மூத்தவர் எவர் என்பதும் எளிதில் வகுக்கக்கூடியதல்ல. இன்று ஒருவர் மூத்தவராக இருக்கலாம். உண்மையில் பிறிதொருவரே மூத்தவரென்று பின்னர் தெரியவரலாம். அவ்வாறு தெரியவரும்போதெல்லாம் முடியுரிமை தொடர்ந்து மாற்றப்படுமென்றால் அக்கோல் நிலைபெறாது.”
பீஷ்மர் இங்கு தேவையற்ற ஒரு சிக்கலை உருவாக்குகிறார். மூத்தவன் என்பது ஊரறிய தந்தையின் அறிதலுக்கேற்ப மூத்தவன் என இருப்பவரைத்தான். அதுவே உலக வழக்கு. . இங்கு பீஷ்மர் தந்தையர் என்று சொல்வதை விட அரசர் என்று சொல்வதே சரியானது. அரசனாக இருக்கும் தந்தையின் மூத்த மகனே அரியணைக்குரியவன். அதுவும் பட்டத்து அரசியின் மைந்தர்களில் மூத்தவன். குந்தியே பட்டத்து அரசி அவளின் மூத்த மகனாக பாண்டு எற்றுக்கொண்டவன் தருமன் மட்டுமே. மேலும் பாண்டு தனக்குப்பின் அரியணை அமர்த்த விழைந்த மகனும் தருமன்தான் ஆவான். இதில் பீஷ்மரின் தர்க்கம் சரியில்லை என்று கருதுகிறேன். இந்த விஷயத்தில் விகர்ணனின் மனைவியான தாரையின் கூற்று பீஷ்மரின் தர்க்கத்தை தகர்த்துவிடுவதைக் காணலாம்.
இந்நாடே பாண்டவர்களுக்குரியது. அனைத்து அரசமுறைகளின்படியும் இது அவர்களுக்குரிய நிலம்” என்றாள் தாரை. “என்னடி சொல்கிறாய்?” என்றாள் காந்தாரி. “ஆம், இது அவர்களின் நிலம். அவர்கள் வைத்திழந்தது மட்டுமல்ல. மொத்த அஸ்தினபுரியே அவர்களின் தந்தை பாண்டு வழியாக அவர்களுக்குரியதே” என்றாள் தாரை. “அவர்களுக்கு காண்டவப்பிரஸ்தத்தை மட்டும் அளித்து அனுப்பியதுதான் முதற்பெரும்பிழை. அங்கு நம் குரல் எழுந்திருக்கவேண்டும். அப்போது செய்த பிழையே பெருகிப்பெருகி பூதப்பேருருவென நம் முன் வந்து நின்றிருக்கிறது.” சீற்றத்துடன் கைநீட்டி முன்னால் வந்த சத்யசேனை “என்ன உளறுகிறாய்? இது பாண்டுவுக்கு பதினெட்டாண்டு காலம் மட்டும் ஆட்சிசெய்யும்பொருட்டு அளிக்கப்பட்டது. பட்டத்து இளவரசன் துரியோதனன் அகவைநிறையும்போது இயல்பாகவே அவனுக்கு வந்துவிட்டது” என்றாள். “இது எந்த ஊர் வழக்கம்? முன்பு பாரதவர்ஷத்தில் இது நடந்துள்ளதா என்ன?” என்றாள் தாரை. “அரசமுடி என்பது முற்றுரிமைகொண்டது. முடிசூட்டிக்கொண்டவர் அதை தெய்வங்களிடமிருந்தே பெற்றுக்கொள்கிறார், எந்த மானுடரும் அதை அளிக்கவில்லை என்றே நெறிநூல்கள் சொல்கின்றன. பாண்டு முடிசூட்டிக்கொண்டதுமே இந்நாட்டின் முழுமுதல் உரிமையாளர் ஆகிவிட்டார். அவர் அளித்தாலொழிய இந்நிலம் பிறருக்குரியதல்ல. அவர் அளித்திருந்தாலும்கூட அவர் மைந்தர் அதை மறுக்க நூல்கள் ஒப்புகின்றன.” (குருதிச்சாரல் - 10)
பீஷ்மர் அஸ்தினாபுர அரியணையில் இருப்பவனுக்கு காவல் புரிவேன் என்று அன்னை சத்தியவதிக்கு கொடுத்த சொல்லுறுதி, சிறு மகனாக திருதராஷ்டிரன் இருந்தகாலத்தில் அவனுக்கு அவர் அளித்த சொல், பின்னர் சகுனிக்கு அவர் அளித்த வாக்கு இவற்றின்படி அவர் முடிவெடுக்கிறார். அது சரியாக இருக்கலாம். அது அவரின் தன்னறம். ஆனால் அதற்கு அவர் குல நெறிகளைத் துணைக்கழைப்பது சரியென ஆகாது. அதனால் பீஷ்மர் துரியோதனனுக்கு துணை நிற்கிறேன் என்பது அவர் தனிப்பட்ட கருத்தே தவிர அது குல நெறியின் பாற்பட்டதல்ல.
"ஆகவே அஸ்தினபுரியின் அரசனென அறுதியாக துரியோதனனை நான் ஏற்கிறேன். இனி அதில் எந்த பிறசொல்லுக்கும் இடமில்லை. அவன் அருகே வாளேந்தி நிற்கவும் அவனுக்காக களம்புகவும் உறுதி கொண்டிருக்கிறேன்” என்றார் பீஷ்மர். “அவையோரே, எனது சொல் இருமுறை அளிக்கப்பட்டது. முதற்சொல் என் மைந்தனாகிய திருதராஷ்டிரனுக்கு நான் அளித்தது, இறுதி வரை அவனுக்கும் அவன் மைந்தருக்கும் கொடிவழியினருக்கும் உரியவனாக நின்றிருப்பேன் என்று. அவன் ஆணவமனைத்தையும் இழந்து விழியிழந்த வெறும் இளையோனாக அன்று என் முன் வந்துநின்றான். தந்தை என என் உளம் நெகிழ்ந்தது. அச்சொல்லை நான் அவனுக்களிக்கையில் வானும் மண்ணும் சான்றாகுக என்றேன்.”
திருதராஷ்டிரர் விழிகளில் நீர்வழிய கைகூப்பி அமர்ந்திருந்தார். “இரண்டாவது சொல் நான் காந்தாரருக்கு அளித்தது” என பீஷ்மர் தொடர்ந்தார். “அஸ்தினபுரியின் மணிமுடி பாண்டுவுக்கு அளிக்கப்படுகையில் பதினெட்டாண்டுகளுக்குப் பின் அதை நானே பெற்று காந்தார அரசியின் மைந்தனுக்கு அளிக்கிறேன் என்று இளைய காந்தாரருக்கு சொல்லுறுதி அளித்தேன். அதிலிருந்து எந்நிலையிலும் நான் வழுவ இயலாது.” சகுனி தலைவணங்கினார்.
இறுதியாக அவர் கூறுவது குலநெறியைப் பேணுங்கள் என்பதல்ல. அவர் தன்னை வெறும் காவலனாகக்கொள்ளுங்கள் என்பதைத்தான். முடிவுகளை எடுக்கும் அரசவையின் ஒரு உறுப்பினர் என்ற பொறுப்பைக்கூட துறந்துவிடுவதாகக் கூறுகிறார்.
பீஷ்மர் “இவ்விரு சொற்களுக்கும் என் வாழ்வை அளிக்கும் பொறுப்பும் எனக்கு உண்டு. இதற்கப்பால் அஸ்தினபுரியில் அரசுசூழ்தலில் என்ன நிகழ்கிறது என்பதை அறியவோ, வழிநடத்தவோ, முரண் கொள்ளவோ நான் முனையப் போவதில்லை. போர் நிகழவேண்டுமா, நிலம் பகுக்கப்படவேண்டுமா, பிறிதேதும் வழிகள் உண்டா என்பதை இவ்வரசும் அவையும் தங்கள் விருப்பப்படி முடிவெடுக்கட்டும். அதில் ஒருபோதும் ஒரு சொல்லையேனும் நான் உரைக்கப் போவதுமில்லை. இனி எவரும் இதன்பொருட்டு என்னை அணுகவேண்டியதும் இல்லை” என்றார்.
உண்மையில் சத்தியவதி பேரரசியாக இருந்த காலத்திலிருந்தே அரியணை அமர்ந்தவரின் சொல்லாணைப்படி நடக்கும் ஏவலராகவே அவர் நடத்தப்பட்டிருக்கிறார். ஆனால் அவரின் வயதிற்கு, அனுபவத்திற்கு, போர்த்திறனுக்கு, தியாகத்திற்கு, தவவாழ்க்கைக்கு மதிப்பளிக்கும் விதமாக அவரின் சொற்கள் கேட்கப்படுகின்றன என்பதைத் தவிர அவர் சொல், மீற இயாலாத ஒன்றென எப்போதும் இருந்ததல்ல. ஒவ்வொருமுறையும் சிக்கலான முடிவுகளை அவரின் மூலமாக செயல்படுத்தி பாதகமான விளைவுகளுக்கு அவரைக் காரணம் காட்டுவதே நடந்துவந்திருக்கிறது. தன்னை அரியணை அமர்ந்தவர் கையில் இருக்கும் ஆயுதம் என்றே கருதுகிறார். இப்போது தன் வாக்குகளை காப்பதை மீறி வேறு எதையும் சிந்திக்க விரும்பவில்லை எனக் கூறுகிறார்.
சேணம் பூட்டப்பட்ட குதிரையின் கண்களின் பக்கவாட்டில் தோலினால் செய்யப்பட்ட இரு திரைகள் போன்ற அமைப்புகள் இருக்கும். குதிரையின் பார்வை, அது செல்லும் வழியை மட்டுமே பார்க்கவேண்டும் மற்றும் வேறு காட்சிகளைக்கண்டு அது வழிவிலகி செல்லக்கூடாது என்பதற்கான அமைப்பு அது. ஆங்கிலத்தில் அதற்கு blinker என்று பெயர். அதைப்போன்று சிலர் உயர்ந்த இலட்சியங்களை அடைவதற்கு மனம் ஒருங்கிசெல்வதற்காக சில கட்டுப்பாடுகளை கண்களுக்கருகில் கட்டிக்கொண்டு மற்றவற்றில் மனம் செலுத்தாமல் தம் இலக்கு நோக்கி செல்வார்கள். ஆன்மீக ஞானத்தை இலக்காகக்கொண்டு புலனடக்கத்தை இப்படியான பார்வைத் திரைகளாகக்கொள்வர் முனிவர்கள். கல்வியில் உயர் ஞானத்தை பெற களிவிளையாட்டுக்களில் ஈடுபடாமல் திரைபோட்டுக்கொள்வார்கள் அறிஞர்கள். இப்படிச்செய்வது உயர்ந்த விஷயங்களுக்கு மட்டும்தான் என்பதல்ல. சிலருக்கு தான் கொண்டிருக்கும் வஞ்சங்களைத் தீர்த்துக்கொள்வது என்றும் சிலருக்கு பெரும் விழைவுகளை நிறைவேற்றிக்கொள்வது என்றும் கூட இலக்குகள் இருக்கும். அதற்காக சில நல்லெண்ணங்கள மனதில் வரவிடாமல் திரைபோட்டுக்கொள்வதும் உண்டு. சிலர் இயல்பாக எழும் தம் அறவுணர்வுகள் தன் நோக்கத்தை தடுத்துவிடப்போகிறது என்று தன் அகம் அவற்றைக்காணாமல் திரைபோட்டுக்கொள்வதுண்டு.
பீஷ்மர் தன் அறிவுக் கண்களை தான் அளித்திருக்கும் சொல்லுறுதிகளாலான திரையைக் கட்டிக்கொண்டு தன் பார்வையைக் குறுக்கிகொண்டிருப்பவராகவே நான் கருதுகிறேன். அதனால் அவர் பாண்டவர் தரப்பு நியாயத்தைப் பார்க்கத் தவறிவிடுகிறார் என்று நினைக்கிறேன்.
தண்டபாணி துரைவேல்