பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
நீங்கள் அடிக்கடி ப்ராமணர்களை நிலைசக்தி என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால் தமிழ்ப் பண்பாட்டுக்கு இப்போதைய நிலைச்சக்தி என்பது ஜெயமோகன் என்ற தனிமனிதர்தான் என்று எனக்குத் தோன்றுகிரது. உதாரணம், இந்தக் கடிதம் எழுதுமுன் அஷ்டபதி பற்றித் தமிழில் ஏதாவது பதிவுகள் உள்ளதா என்று தேடினேன். அஷ்டபதி என்று தமிழில் தட்டச்சு செய்தால் இரண்டாவது ரிசல்ட் உங்கள்
நீலச்சேவடி பதிவுதான் வந்தது. (இந்தக் கடிதம் எழுத அதுவே தூண்டுதல்.) உங்கள் வாசகர் என்ற முறையில் தனிப்பட்ட முறையில் பெருமையாக இருந்தது. இது முதல் முறையல்ல, பண்பாடு தொடர்பாக ஏதாவது தேடும்போது பல முறைகள் கூகிள் உங்கள் பக்கத்தைக் காட்டுகிறது.
இன்று ப்ரியே சாருசீலே என்ற 19வது அஷ்டபதிக்குத் தமிழில் பொருள் கிடைக்கிறதா என்று தேடியபோது தினமலர் வலைத்தளத்தில் ஒரு கட்டுரை கிடைத்தது. அதில் அருணகிரிநாதர் "பணியா என வள்ளிபதம் பணியும் தணியா அதிமோக தயாபரா" என்றும் "மாது குறமகள்பாதம் வருடிய மணவாளா" என்றும் பாடுகிறார் என்று அறிந்தேன்.
கேரளத்தைக் கிருஷ்ணபூமி என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். ராதை கிருஷ்ணன் என்ற வடநாட்டுத் தத்துவமும் எங்கோ ஒரிசாவில் பிறந்த ஜெயதேவரின் அஷ்டபதி சோபான சங்கீதமாக ஒலிப்பது இந்தியாவின் பண்பாட்டு விசேஷங்களில் ஒன்று.
தமிழ்நாடோ முருகனின் நிலம். இங்கே குறிஞ்சித்திணை காதலுக்கான நிலமாகவும் இருந்துள்ளது. கண்ணனுக்கு ராதைபோல் முருகனுக்கு வள்ளி என்ற தத்துவம் ஏன் தத்துவமாகவே நின்றுவி
ட்டது? வள்ளி ஏன் ராதையைப் போல் இலக்கிய மரபில் விரிவாகவில்லை?
பணிவன்புடன்,
வித்யா ஆனந்த்