அன்புள்ள ஐயா
வெண்முரசு பேரொலி எழுப்பிக் கொண்டிருக்கிறது. கீதை கர்ணனுக்கும் பீஷ்மருக்கும் சொல்லப்பட்டு விட்ட து. அடுத்தும் நிறைய பேர்கள் வரலாம். குந்தி, பாஞ்சாலி மட்டும் இந்த கேட்பு மனநிலைக்கு வரமாட்டார்கள் என்று தோன்றுகிறது
சொல்லை துரியத்துக்குள் செலுத்தும் கண்டகர் பீஷ்மருக்கு வலிமையின் மனப் பரிமாணத்தைக் காட்டுகிறார். இந்த இட த்தில் அறிவர் அல்லது சாதகன் ஜெயமோகன் முன்னிற்கிறார். வெறும் வழிகாட்டி என்று இமையத்தனிமையில் தாங்கள் துயருற்றது தேவையற்றதோ என நினைக்கிறேன். சொல்லில் இருந்து ஒலியை பிரிக்கும் அறிவின் துளியை குருநித்யா அவர்கள் தங்களுக்கு கடத்தாமலா விட்டிருப்பார்கள்?
எழுத வேண்டாம் என்று எத்தனை முயன்றாலும், மனம் முட்டிக் கொண்டு இதை அனுப்புகிறேன். தியானத்தைப் பற்றி எழுதுவேன் என்று சொல்லி இருக்கிறீர்கள். என்றாவது ஊழ்கத்தை செயல்முறையாக கொடுக்காமலா போய்விடுவீர்கள்?
கண்டகர் என்ற சொல்லின் வேர் என்ன என்று அறியக்கூடவில்லை. ஒரு வில்பாய்ச்சலைக் கண்டதை வைத்தே அகத்திற்குள் ஆழ்ந்தவர் என்று இருக்கலாம். (எப்படிஆயினும் தவறாகச் சொன்னால், உளம் தாங்காது விளக்கி விடுவீர்கள்). வில் விடுதலை விட வில் தடுத்தல் தப்பித்தல் பெருங்கலை. அதைவிட வில்செயல் முன்னறிதல் பெருங்கலை என்று விழியற்ற காலகண்டகர் சுட்டுகிறார். செயலை விட உயர்ந்தது கூரிய சொல். சொல்லை விட அரியது கூரிய உட்சொல் அல்லது எண்ணம். ஒலியற்ற சொல்லின் ஒலி. ஊழ்க முனிவர் உடலை வில்லாக்கி எண்ணத்தை அம்பாக்கி பேருண்மை என்னும் இலக்கை எய்துகிறார்.
புலன் வழிச் செல, விழியென்ன, உடலே வேண்டாம் என்று மன்மதன் கதையை புரிய வைக்க நீங்கள் பதிவிட்டிருந்தது நினைவு வருகிறது. நினைப்பு மூலம் வரும் இன்பநாட்டம் மனபோகம் என்று காமரூபிணியில் சொல்லப்படுகிறது. அதேபோல பீஷ்மருக்கு அவரது ஆழத்தைக் கண்ணன் காட்டுகையில், அவர் அஞ்சி ,விலக்கிய தன் ஆழத்தின் இருட்டுகள் துலங்குகின்றன. பிம்பத்தை உடைத்து கடமையை செய்ய வைக்கும் நினைவூட்டலே கண்ணன் செய்வது.
காட்சி அமைப்புகள் அற்புதம். கனவு போன்ற நினைவு அல்லது காய்ச்சலில் அல்லது கஞ்சா உட்கொண்டு வரும் பித்து நிலையில் ஏற்படும் குழப்பமான நிகர்வாழ்வுக்குள் யமனும் பீஷ்மரும் ஆடுகிறார்கள். மூளைஎன்னும் அந்த காலிபிளவர் அவ்வளவுதான் என்பது மானுடப் பெருந்துயர்
பீஷ்மர் கண்டகரிடம் “:வடநாட்டு காமத்துறப்பு நெறியன். கைகளில்லாமல் எங்ஙனம் விற்தொழில் அறிந்தீர் என்று நான் அறியலாமா?” என்று கேட்பதில் ஒவ்வொரு சொல்லும் பொருள்விரிகிறது. புலன் வாழ்வில் செயலளவில் ஈடுபடாமல் மனத்தளவில் அலைவுகளைக் கொண்ட ஒருவர், செயலளவில் வில்லைத் தொடாமல் மனத்தளவில் துறைபோகியவரிடம் கேட்கிறார்.
செயலின்மையில் செயலை அடையமுடியும் என்று பின்னர் ஜனகர் மூலம் விளக்கம் வருகிறது. வடக்குமுகம் கொள்ளவேண்டி இருக்கிறது என்று பீஷ்மரிடம் கண்ணன் விடைபெறும்போதும் சொல்கிறான். வடக்குமுகம் நாடகம் மீண்டும் படித்துப் புரியவேண்டும். வடமீன் துருவனிடம் செல்வது குறித்த்தா என்று தெரியவில்லை.
பீஷ்மரின் இரு அடித்தளங்கள் காம மறுப்பு மகாவிரதம் மற்றும் வில்வலிமை. இரண்டும் ஒரே அத்தியாயத்தில் பொடிகிறது. மீண்டும் மீண்டும் இந்திய இறையியலில் நைஷ்டிக பிரம்மச்சரிய வாழ்வின் முடிச்சுகள் பேசப்பட்டுள்ளன. கலியுகத்தில் மனதால் ஏற்படும் பிழை துயர்கொள்ளற்குரியது அல்ல என்று தூய அன்னை சாரதாதேவியின் கூற்று நிலைகொள்ளாமல் தவிக்கும் சாதகர்களுக்கு ஒரு கடல்நடுமேடுபோல. துறந்தார் பெருமை பெரிது; அதனினும் பெரிதாகும் இங்கு குறைந்தாரைக்காத்து எளியார்க்குணவு ஈயும் தவமும் என்று உணர்த்தப் படுகிறார் பீஷ்மர்.
வேள்வியாக மாறும் செயல், வியக்த – அவ்யக்த விளக்கம் என கீதை இங்கேயே கொட்டப்படுகிறது. விளக்கம், விரிவு, முன்செல்லல் என மைய்மைகள் விரைகின்றன. இனி போர்க்களத்தில் வெளிப்படுவதற்கு மிச்சமில்லையோ. அல்லது ஆசிரியரின் புதிய கீதையோ
செயல் மூலம் செயலைக்கட த்தல், உங்கள் சிலம்பப் பயிற்சியை நினைவூட்டுகிறது. தான் மறைந்து குச்சி மட்டுமே இருக்கவேண்டும். அல்லது பிறிதொன்றின்மை நிலையை அடைய வேண்டும் என்ற அனைத்து துறை சாதகர்களுக்கும் பேரளி பொங்க வேண்டும்.
இடையில் quantum mechanics probability waves வருகிறது. இங்குள்ளது நிகழ்வு. அங்குள்ளது தகவு. அருமை. பல்பரிமாண புடவியின் விளிம்பில் இருந்து வீசும் எலக்ட்ரான்களின் projection தான் இது எல்லாமும் என்று விரியும் விளிம்பு இயற்பியலில் அடுத்த புரிதலுக்கு காலமற்ற காலத்தில் எத்தனை தொலைவு செல்வதோ? எண்ணி எண்ணிப் பல நாளும் முயன்றிங்கு இறுதியில் சோர்வோமோ?
கதை கூர்கொண்டு செல்லும் தோறும் ஒரு அச்சம் வருகிறது. முடிவுறும்போது தங்களுக்கு நேரும் சோர்வு , ஊசல் பயணிக்கும் தொலைவு அதிகரிக்கக் கூடாது என்று வேண்டிக்கொள்கிறேன். மெதுவாகப் பயணிக்கும் சிற்றறிவர்களுக்கும் பேராவலும் பேரார்வமும் வரும் காலம் வரும். அப்போது கதையும் எஞ்சவேண்டும். ஆசிரியரும் முழுமையாக, பெருங்கருணையுடன்.
நன்றி
ஆர் ராகவேந்திரன்
கோவை