Monday, August 10, 2020

கூத்து



அன்புள்ள ஜெ

மீண்டும் வெண்முரசு வாசித்துக்கொண்டிருக்கிறேன். இம்முறை நான் என் மனைவியுடன் சேர்ந்து வாசிக்கிறேன். இன்று இந்தப்பகுதி

இளநாகன் எரியாடிய முக்கண்ணன் ஆலயம் தொழச்சென்றவர்களுடன் இணைந்து சிற்றம்பலநகரி சென்று அங்கே கூத்துக்குழுவினருடன் இணைந்துகொண்டான். பிண்டியும், பிணையலும், எழிற்கையும், தொழிற்கையும், குடையும், விடையும் காட்டி பாண்டரங்கமும் கொடுகொட்டியும் ஆடும் கூத்தருக்கு பண்ணோடியைந்த பாவமைத்துக்கொடுத்தான். எரிக்கூத்தாடிச் சுழலும் கலைக்கூத்தனின் உடலில் ஊழியில் எஞ்சும் நிலைக்கூத்தன் தோன்றுவதைக் கண்டு இறைநூல்கள் சொல்லா மெய்யறிவையெல்லாம் அறிந்தான்

மனைவி இதன்பொருளென்ன என்று கேட்டபோதுதான் இதை அப்படியே கடந்து கதைச்சுவாரசியத்தையே தொடர்ந்து சென்று வாசித்திருக்கிறேன் என்பதை உணர்ந்தேன்
சிற்றம்பல்நகரி என்றால் சிதம்பரம் இல்லையா? பிண்டியும்
, பிணையலும், எழிற்கையும், தொழிற்கையும், குடையும், விடையும் காட்டிஎன்ற வரி சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய அரங்கேற்றுக்காதை படலத்திலிருந்து எடுக்கப்பட்டது. பிண்டியும் பிணையலும் எழிற்கையுந் தொழிற்கையுங் கொண்ட வகையறிந்து அவள் கூத்து ஆடியதாக இளங்கோ சொல்கிறாள். பிண்டி பிணையல் இரண்டும் கைமுத்திரைகள். எழிற்கை என்பது தாமரைமுத்திரை. தொழிற்கையென்பது அபயம். சிவன் ஆடும் இருவகை ஆடல்கள் கொடுகொட்டியும் பாண்டன்gகங்கமும்

அடுத்தவரி சிலம்பிலிருந்து நுட்பமாக மேலே பாய்கிறது. கலைக்கூத்தனாகிய நடராஜன் ஊழித்தீயில் ஆடும்போது விசையின் உச்சியில் இறுதியில் நிலைக்கூத்தன், அசைவில்லாத பரம்பொருள் தோன்றுகிறது

சட்டென்று இப்படி பெரிதாக எழும் ஆயிரம் இடங்களாவது வெண்முரசிலே உண்டு

ஆனந்த்குமார்