Friday, August 7, 2020

இரு பார்வைகள்



அன்புள்ள ஜெ

நலம்தானே? நானும் நலமே. வெண்முரசை ஆரம்பத்திலிருந்தே படித்துக்கொண்டு வருகிறேன். வண்ணக்கடலை வந்தடைந்துவிட்டேன். இந்நாவலில் ஒரு சூட்சுமமான விஷயம் உள்ளது என்ற எண்ணம் இப்போது உருவாகியது. இந்நாவல் இரண்டுவகையானவர்களின் பார்வை வழியாகச் சொல்லப்படுகிறது. ஒருசாரார் உள்ளே இருப்பவர்கள். அர்ஜுனன் போன்ற கதாபாத்திரமோ அல்லது பூரிசிரவஸ் போன்ற மையமில்லாத கதாபாத்திரமோ.

இன்னொருசாரார் வெளியே இருப்பவர்கள். வேடிக்கைபார்ப்பவர்கள். அப்படி பலர் இந்நாவல் முழுக்க வந்துகொண்டிருக்கிறார்கள். இளநாகன் அவர்களில் ஒருவன். கடைசிநாவல் வரை அப்படி சிலர் வந்துகொண்டே இருக்கிறார்கள். இளநாகன் முதல் சீர்ஷன் வரை என்று ஒரு பட்டியலிட்டு இந்த அவுட்சைடர்களின் பார்வையை கொண்டு ஒரு வெண்முரசை தொகுக்கலாம். இந்த இரண்டு பார்வைகளும் எங்கெல்லாம் முரண்படுகின்றன என்று பார்க்கலாம். வாசிப்புக்கான ஒரு பெரிய வாய்ப்பு அது

நா.செல்வக்குமார்