Thursday, January 15, 2015

அருகில் இருக்கும் தொலைவு



ஆசிரியருக்கு ,

பிரயாகை -85- ஒரு கவிதை ஒரு சிறுகதை ஒரு நாவல். இதன் விரிவும் ஆழமும் மயக்கமும் ஒரு கட்டுரையில் ஒரு கடிதத்தில் கூற இயலாது . அதி அடர்ந்த அதி உன்னத பகுதி இது. 

இதில் வரும் பார்வையும் சைகையும் உடலசைவும்,  காலச் சுருக்கம் மற்றும் நீட்சியும் , நாடக கதைத் தருணமும், சம்பவ கனமும், மனித குனாதிசைய  மேன்மையும், தத்துவ வினாவும் மற்றும் விவரிப்பும் தனித்தனியாக அணுகச் சொல்லி ஒரு தீவிர வாசகனுக்கே சாவால் விடுக்கிறது. 

1. கர்ணன் பார்வையில் திரௌபதி , அர்ஜுனன் பார்வையில் கர்ணன், கர்ணன் பார்வையில் அர்ஜுனன்,திரௌபதியின் பார்வையில் கர்ணனும் அர்ஜுனனும் , கர்ணன் திரௌபதி பார்வை உறவை பார்க்கும் அர்ஜுனன், துரியன் பார்க்கும் கர்ணன், அனைத்தையும் பார்த்து கல்லென இருக்கும் த்ரௌபதி , அனைத்தையும் பார்த்து புன்னகைக்கும்  கிருஷ்ணன். தீற்றலாக தர்மனும் பீமனும். கர்ணனும் அர்ஜுனனும் ஒருவர் எழ பிறர் காக்கிறார்கள் அந்த நொடியின் எடை தாளாமல்  கர்ணன் எழுகிறான் உடலசைவிலேயே இருவரும் உரையாடி விடுகின்றனர். வில்லெடுத்த கணம் திரௌபதியின் முகம் கல்போல உணர்வற்று இருக்கிறது இது ஒரு நிராகரிப்பு, முகக் குறிப்பிலேயே இதை அவள் செய்துவிடுகிறாள். இது கர்ணனை சினம் கொள்ளச் செய்கிறது குறி தவறுகிறது.  

இவ்வளவுகாலம் மொழி தன வசப்படுத்தியது எல்லாம் மனித பார்வையின் சைகையின் உடலசைவின் சிறு பகுதியாக்கி விட்டது வெண் முரசு. மனித மனம் மொழியில் வெளிபடுவது துளியளவு  அசைவில் வெளிப்படுவது கடலளவு.  

2. கர்ணன் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஒரு வாழ்க்கை. இங்கு காலம் நீள்கிறது , கர்ணன் அம்பெய்து வீழ்த்தும் போது காலம் நெரிகிறது.  காலம் சுருங்கும் போது திரௌபதியை மிக அருகில் காண்கிறான் , அவள் சிலையாக பொருட்படுத்தாமை கண்டு அங்கு காலம் நீள்கிறது. ஐந்தாவது கிளியை குறிவைக்கும் போது காலம் உறைகிறது, பின்னோக்கிச் செல்கிறது பரசுராமரை நினைவூட்டுகிறது, வண்டு தொடையை மீண்டும் துளைக்கிறது குறி தவறுகிறது.    

காலம் என்பது நாம் வாழும் கணம் மட்டுமே அது சூழலின் எடைகேற்ப சுருங்கி விரியும், ஒரு நொடியில் ஒரு பெருவாழ்வு வாழ்வோம், கர்னணன் சில யுகங்கள் வாழ்ந்து விட்டான். 

3. வெல்லவேண்டிய நெருக்கடியில் துரியன், துரியனிடம் அதை கொடையாகப் பெற்ற கர்ணன், கர்ணன் வெல்லும் அச்சத்தில் வாய்ப்புக்காக் காத்திருக்கும் அர்ஜுனன், இதை உயரத்தில் இருந்து பார்க்கும் திரௌபதி, திறக்க இயலா அவள் மனதில் ஆடும் நமது ஊகம் என கதையான விதி  அந்த அரங்கில் தனது  நாடகத்தை நிகழ்த்திக் கொண்டு இருக்கிறது, குறி தவறுகிறது.    

இது ஒரு சுருக்கப் பட்ட குருட்சேத்திரம். 

4. வில்லேந்தி கிளி தகர்த்தல் என்கிற போட்டியும் களமும் சுயம்வரமும் ஒரு பெரும் சம்பவம். இங்கு நடக்கும் ஒவ்வொரு அசைவும் ஓர் எடை கூடிய சம்பவமே. இறுதியில் ஜராசந்தனை உயர்த்துவது கர்ணன் வித்தை நிகழ்ந்த சம்பவமே. குறி பிழைத்த கணை தான் இறுதியில் அர்ஜுனையும் பிழைக்கிறது, அர்ஜுனனின் இருப்பு கர்ணனின் குறியை தவறச் செய்கிறது.    

பொதுவாக சம்பவங்கள் மனிதனைக் காட்டும் சில சமயம் உருவாக்கும்.

5. அர்ஜுனன் கர்ணனே வெல்லட்டும் என்கிறான், தர்மன் இது தர்மம் வெல்லும் தருணம் என்கிறான், தோற்றாலும் துரியன் கர்ணனை தழுவிக்கொல்கிறான், ஒரு கணம் இகழ்ந்த சபை பின் போற்றுகிறது. கர்ணன் திரௌபதியை எண்ணுகிறான் அழைக்காத  பெண்ணை வெல்ல வேண்டம் என எண்ணுகிறான் அவன் குறி பிழைக்கிறது. 

திரளாக இருக்கும் மனிதன் கீழானவனாகவும், தனியாக எழும் மனிதன் மேலானவனாகவும் இருக்கிறான்.  

6. ஜனமேஜயன் யாகத்தில் பிழைத்த ஒரு துளி விஷம் இங்குள்ளது , ஐந்து கிளிகளும் ஐந்து சக்கரங்கள் அல்லது புலன்கள் . ஒரு துளி  விஷமுள்ள அர்ஜுனனை தேர்வு செய்யும் திரௌபதியின் செயல் அவளிலும் உள்ள விஷத்தின் துளியே. முழுமையும் உன்னதமும்  செயலின்மையே, அடைந்த பின் செய்வதற்கு ஒன்றும் இல்லை.  கர்ணனை வென்ற பின் செய்வதற்கு ஒன்றும் இல்லை ,அர்ஜுனனை  வென்றால் அவன் நிராகரிப்பை களைந்து  முழுமை நோக்கி நகரலாம்.                                   
               
இழிக்கப் பட்டவனின் அகம் என ஒன்று உண்டு,இதை உணரும் ஒருவனுக்கு மீட்சி இல்லை.   முதலில் துரோனரால், பின் களத்தில் என இழிக்கப் பட்டவன் கர்ணன், போக பரசுராமரால் நிராகரிக்கப் பட்டவன். அந்த அகம் குறி பிழைத்தே தீரும், கையும் மனமும் இணைவதல்லவா வித்தை. குறி தவறுகிறது. இங்கும் குருட்சேதிரத்திலும் அவனை அது கைவிடுகிறது.  

அனைத்திற்கும் பிறகும் திரௌபதி என்ன எண்ணினாள்  என்கிற பொருள் மயக்கம். அவள் உள்ளே காதல் வைத்து வெளியே திரையிட்டுக் கொண்டாள்  என்பது ஒரு நோக்கென்றால் அது காலம் காலமாக ஆண்கள் பெண்ணின் ஆழத்தை தமக்கு உகந்த வகையில் புரிந்து கொள்வது. அவள் அக்கணம் கர்ணனை அர்ஜுனின் இருப்பால் எழுந்த விளைவால்  முற்றாகவே நிராகரித்திருக்கலாம் அதுவே கூட அவள் முகக் குறிப்பாகக் கொள்ளலாம்.  

7. இப்பகுதியின் விவரணை ஒரு இசைபூர்வமானது. நாயகர்கள் அமர்ந்திருக்கும் அவையும் ,கர்ணன் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் , அவன் தகர்த்த  கிளி துகள்களாக காற்றில் இறங்கும்போதும், இறுதியில் அவையின் ஆரவாரமும் ஒரு பெரும் இசைக் கோவை. குறி பிழைத்த ஒரு விரல்கடை என்பது ஹஸ்தினாபுரிக்கும்  பாரதவர்ஷத்துக்கும் உள்ள தூரம், ஷத்திரியனுக்கும் சூதனுக்கும் உள்ள தூரம், அசலுக்கும் நகலுக்கும் உள்ள தூரம், அதிருஷ்டத்துக்கும் துரதிர்ஷ்டத்துக்கும் உள்ள தூரம், புறத்துக்கும் அகத்துக்கும் உள்ள தூரம், கூறப் போனால் பீமனுக்கும் துரியனுக்கும் உள்ள தூரம், தருமனுக்கும் விதுரனுக்கும் உள்ள தூரம்,சகுனிக்கும் கிருஷ்ணனுக்கும் உள்ள தூரம், குந்திக்கும் திரௌபதிக்கும் உள்ள தூரம் , கர்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் உள்ள தூரம், வெற்றிக்கும் தோல்விக்கும் உள்ள தூரம். அருகேன்றால் அருகே,  தொலைவென்றால் நீந்திக் கடக்க முடியாத சமுத்திரத் தொலைவே.  

கிருஷ்ணன்.