Saturday, January 31, 2015

துணைவழிகள்



ஜெ சார்

முதற்கனலைத்தான் இன்னும்கூட வாசித்துக்கொண்டிருக்கிறேன். அற்புதமான அனுபவமாக இருக்கிறது. குறிப்பாக மகாபாரதத்திலே உள்ள துணைக்கதைகளை மையக்கதைகளுடன் இணைத்திருப்பதைச் சொல்லலாம். மகாபாரத மூலத்தை நான் வாசித்திருக்கிறேன். அதில் துணைக்கதைகள் உள்ளே வருவதற்கு ஒரு சந்தர்ப்பம் இருக்கும் அவ்வளவுதான். மற்றபடி அந்தக்கதை மையக்கதையிலே ஒருவகையான அர்த்தத்தையும் அளிக்காது. அது செருகப்பட்டதுபோலத்தான் காணப்படும்

முதற்கனல் நாவலில் எல்லா கதாபாத்திரங்களும் தெளிவாகவே அந்தக்கதைகளுடன் மறைமுகமாகச் சம்பந்தபப்டுகின்ரன. அந்தக்கதாபாத்திரங்களின் மனசின் ஆழத்தை அந்தக்கதைகள் வழியாகப்புரிந்துகொள்ளமுடிகிறது. குறியீடாக அந்தக்கதையைக் கொண்டுதான் அந்தச்சந்தர்ப்பத்தையும் மனநிலைகளையும் குணச்சித்திரங்களையும் விளக்கியிருக்கிறீர்கள் என்று தெரிந்தது. அந்தக்கதைகளை கொஞ்சம் ஆழமாக யோசித்தால் மையக்கதை விரிவாகிக்கொண்டே செல்கிறது

குறிப்பாக தாட்சாயணி பற்றிய கதை. அம்பையைப்புரிந்துகொள்ள அந்தக்கதை மாதிரி சிறந்த குறிப்பே வேறு கிடையாது

வெண்முரசு நாவலின் சிறப்பு என்றால் இதுதான் என்று சொல்லத்தோன்றுகிறது


அருண் பிரபு சென்னை

இடைவெளிகள்



அன்புள்ள ஜெமோ

கதாபாத்திரங்களுக்கு உள்ளே இருக்கும் உறவுகளெல்லாம் மிகச்சிக்கலாக ஒன்றோடொன்று பின்னிக்கிடக்கின்றன என்று தோன்றுகிறது. முதலில் எல்லாம் தெளிவாக இருக்கிறது. பின்னர் சிந்தனை செய்தால் எல்லாமே சிக்கலாகி கிடக்கின்றன. ஒவ்வொன்றிலும் கொஞ்சம் சொல்லப்பட்டிருக்கிறது. பெரும்பகுதி சொல்லாமலேயே விடப்பட்டிருக்கிறது. ஒவ்வொருவரும் இன்னொருவரைப்பற்றி என்ன நினைத்தார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனால் நிறையபகுதிகள் சொல்லப்படவில்லை. கர்ணன். தருமன் எல்லாம் என்ன நினைக்கிறார்கள் என்பது சொல்லப்படாமலேயே உள்ளது. ஆகவே விதவிதமாக யோசிக்கவேண்டியிருக்கிறது. இப்படி இருக்குமோ அப்படி ஆகியிருக்குமோ என்றெல்லாம் எண்ணம் போகிறது. வெண்முரசின் பிரச்சினை இதுதான் என்று நினைக்கிறேன்

சபரி


அன்புள்ள சபரி,

நவீன இலக்கியப் படைப்பின் இலக்கணங்களில் முக்கியமானது கொஞ்சம் மட்டுமே சொல்லி பெரும்பகுதியை வாசகன் ஊகிக்கும்படி விட்டுவிடுவதே. இதை நவீன இலக்கியத் திறனாய்வில் subtext என்று சொல்வார்கள். நவீன இலக்கிய படைப்பு அதன் கூறுமுறையிலேயே இடைவெளிகளை உருவாக்கும். இதை gaps என்பார்கள். இதை நான் என் ‘நாவல் கோட்பாடு’ என்ற நூலில் விரிவாகப் பேசியிருக்கிறேன். 1991ல் வந்த நூல். கிழக்கு பிரசுரமகா மீண்டும் வந்துள்ளது

இந்த ஆழ்பிரதி முழுக்கமுழுக்க வாசகனின் கற்பனையால் நிறைக்கப்படவேண்டியது. நவீன இலக்கியம் அளிக்கும் இலக்கிய அனுபவமென்பதே இதுதான். சொல்லப்பட்டதை தெரிந்துகொள்ளுவது அலல வாசிப்பு. இடைவெளிகளை நிரப்பி நமது இலக்கிய உலகை நாமே உருவாக்கிக்கொள்வதுதான். ஆகவே இடைவெளிகளும் விடுபடல்களும் ஆசிரியனால் நிரப்பித்தரவேண்டும் என எதிர்பார்க்கவேண்டாம். அது உங்கள் கற்பனைக்காக விடப்பட்டிருப்பதுதான்

ஜெ

அழகிய நிலங்கள்


[பெரிதாக்க படம் மீது சொடுக்கவும்]

ஜெ சார்

மழைப்பாடலை இப்போதுதான் வாசிக்கிறேன். அர்ஜுனன் பிறந்த சமவெளியின் அழகை வாசிக்க வாசிக்க கனவில் இருப்பதுபோல இருக்கிறது. பர்ஜன்யபதம் என்று சொல்லச் சொல்ல அந்தக் கனவு. உடனே கிளம்பி வடக்கே போய்விடவேண்டும் போல் இருந்தது. இடியின் பாதை. மின்னலின் பாதை. மழையின் பாதை. மழை மலையிறங்கிவரும் வழி. அற்பிதமான சித்தரிப்பு சார்

ஆனால் இனிமேல் இத்தகைய அழகான நிலவர்ணனைகள் வரமுடியாதே  என்ற நினைப்பும் வந்தது. இனிமேல் பான்டவர்கள் கஷ்டப்படுவதும் கடைசியில்போரும்தானே என்றும் தோன்றியது. ஏக்கமாக இருந்தது

சித்ரா

அன்புள்ள சித்ரா,

இனிமேலும் பல வித்தியாசமான விபரீதமான நிலக்காட்சிகள் வரக்கூடும். மகாபாரதத்தின் உட்பகுதி என்பது அர்ஜுனனின் சாகசங்களால் ஆன பயணங்கள் கொண்டது. கிட்டத்தட்ட இலியட்ம் போல

ஜெ

நதிக்கரை நகர்கள்



ஜெ

வெண்முரசின் காலகட்டத்தில் நீங்கள் காட்டும் பெரும்பாலான நகரங்கள் நதிகளின் கரைகளில் அமைந்திருக்கின்றன. அஸ்தினபுரி மட்டும் சற்று தள்ளி அமைந்திருக்கிறது. காம்பில்யம் சத்ராவதி எல்லாமே நதிக்கரை நகரங்கள்தான். இதற்கு ஏதேனும் தனிப்பட்ட காரணம் இருக்குமா?

சிவராஜ்


அன்புள்ள சிவராஜ்

தமிழகத்தில் இன்றுள்ள நகரங்களும் பெரும்பாலும் அனைத்துமே நதிக்கரைகளில் அமைந்தவைதானே? ஒரு நகரத்தின் முதன்மைத்தேவையான குடிநீரை நதிகளே அமைக்க முடியும்

மேலும் நதிகள் தான் அன்றைய ‘நெடுஞ்சாலைகள்’ நதிவழி போக்குவரத்தே அடிப்படையானது. ஆகவே வணிகமையங்கள் நதிக்கரைகளில் அமைந்தன. அவை நகரங்கள் ஆக மாறின

ராணுவரீதியாகவும் நதிகள் முக்கியமானவை. பெரும் படைகளை தளவாடங்களுடன் விரைவில் கொண்டுசெல்ல சிறந்த முறை நீர்வழிப்பாதைகள்தான்

ஜெ

பள்ளத்தாக்குகள் நதிச்சமவெளிகள்



அன்புள்ள ஜெமோ

ஒரு சிறிய சந்தேகம். மகாபாரதம் முழுக்கவே இமையமலையடிவாரம் முதல் விந்தியமலைச்சாரல் வரை இருந்த நிலப்பரப்பிலே நடக்கிறது. நீங்கள் எழுதியிருக்கும் சித்திரங்களில் கங்கைக்கரைகளும் இமையமலையின் அற்புதமான சரிவுகளும் சமவெளிகளும் மலையிடுக்குகளும் அடர்காடுகளும் வருகின்றன.

இமையமலையைப்பற்றிய சித்திரங்களில் சதசிருங்கம் போகும் வழியில் உள்ள கந்தமாதனமலை மிக அற்புதமாகச் சொல்லப்பட்டது. அது மகாபாரதத்தில் உள்ளதுதானா? சதசிருங்கம் அதில் சொல்லப்பட்டிருக்கிறது. அதேபோல அர்ஜுனன் பிறந்த மலைச்சரிவும் மகாபாரதத்தில் ஓரளவு சொல்லப்பட்டிருக்கிறது

என்னுடைய கேள்வி இமையத்தின் மலை உச்சிகளை மகாபாரதகாலத்தில் அறிந்திருந்தார்களா? மலைச்சிகரங்களை வர்ணித்திருக்கிறார்களா? அதேபோல ஆழ்கடல் வர்ணனைகள் நிறைய மகாபாரதத்தில் உள்ளனவா?

சரவணன்

அன்புள்ள சரவணன்,

மகாபாரதம் காட்டும் நிலக்காட்சிகளை ஒட்டுமொத்தமாகத் தொகுத்துக்கொள்ளவே முடியும். தனித்தனியாக நினைவில் எடுக்க்க முடியவில்லை

கைலாசம் தவிர பிற மலைமுடிகளைப்பற்றி மகாபாரதம் சொல்லவில்லை. பனிமலைமுடிகள் என்ற பெயரில்தான் ஹிமாலயம் என்ற பெயரே அமைந்தது. ஹிமம் என்றால் உறைவெண்பனி. கோமுகம் பற்றிய குறிப்புகள் உள்ளன. அன்றைய சூழலில் அதுவரைக்கும் சென்றிருப்பதே வியப்புக்குரியதுதான்

அதேபோல பாலைநில வர்ணனைகளும் குறைவாகவே உள்ளன. தார்ப்பாலைவனம் ஒருவேளை இன்றளவு வெறுமையுடன் அன்று இருந்திருக்காது

சமுத்திரவர்ணனைகள் நிறையவே உள்ளன. ஆனால் அவை கடலோடிகளின் நோக்கில் துல்லியமாக இல்லை. பெரும்பாலும் செவிவழிச்செய்திகளாக, கரையோர அனுபவங்களாகவே மகாபாரதத்தில் உள்ளன. கடலுக்குள் ஏராளமான பெரும் முதலைகள் உள்ளன என்ற வரிகளை அடிக்கடிக் காணமுடிகிறது

மகாபாரதம் அளிக்கும் அழகிய சித்திரம் இமையத்தை நதிகள் அரித்து உருவாக்கும் canyon களையும் மலைப்பள்ளத்தாக்குகளையும் குறித்ததுதான்

ஜெ

குந்தியின் தேர்வு



அன்புள்ள ஜெ சார்,

குந்தியின் தேர்வு 

இடும்பியை குறித்து குந்தி கிழே சொன்ன மொழிகளுக்குப்பின் , பீமனை  இடும்பியிடமிருந்து பிரித்து வருகையில், எனக்கு குந்தியின் மனதில் எந்த மாதிரியான எண்ண ஓட்டங்கள் உள்ளன என்பதை அறிய சற்று தடுமாற்றமாகவே இருந்தது, 

“சற்றுமுன் அந்தப்பெண் கண்களில் பொங்கி வழிந்த பெருங்காதலுடன் என்னருகே வந்தபோது நான் முதற்கணம் பொறாமையால் எரிந்தேன். பெண்ணாக அதை நான் மிக அண்மையில் சென்று கண்டேன். ஒருகணமேனும் அப்பெருங்காதலை நான் அறிந்ததில்லை” என்றாள் குந்தி. தொடர்பில்லாமல் சித்தம் தாவ, “சற்றுமுன் நீ சொன்ன சொற்களின் பொருளென்ன என்று என் அகம் அறிந்தது. ஆம், நான் தன்முனைப்பால் நிலையழிந்தேன். என் இடத்தை மீறிச்சென்று விட்டேன். என்னை பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தினியாக எண்ணிக்கொண்டேன்…” என்றாள்

பின்பு ஒரு புரிதல் வந்தது, 

தனக்கு வரும் மருமகளும் தன்னை போல் ஐந்து பேரையும் இணைத்துக்கொள்ளும் சக்தியாக இருக்கும் பட்சத்தில், ஒருவகையில்,, தன்னுடைய வாழ்க்கைக்கான நியாயப்படுத்தும், செயலாகவே இருக்கும் என்று குந்தி எண்ணி  இருக்கலாம் .  

அந்த வகையில் குந்தியின் சரியான தேர்வு திரௌபதி தான் என்றும், இனி யாருடைய இழி மொழிகளுக்கும் ஆளாக மாட்டாள் என குந்தி நம்புவதாகவும், புரிந்தது.

அன்புடன்
சௌந்தர்..G

Friday, January 30, 2015

பசித்திருப்பவர்



ஜெ

பிரயாகையை இடைவெளிவிட்டு வாசித்து முடித்தேன். இந்நாவல்களில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்துகொண்டே வரும் கதாபாத்திரம் என்றால் அது சகுனிதான் என்ற எண்ணம் வந்தது. சகுனியின் முகம் அமைதியும் ஆசையும் கொண்ட இளவரசனாக மழைபாடலில் வருகிறது. கொஞ்சம் கொஞ்சமாக அது மாறி இன்றைக்கு ஒரு பசித்த பாலைவன ஓநாயாக மாறியிருக்கிறது

அவரது மாற்றம் அஸ்தினபுரியை அழிவுக்குக் கொண்டுசெல்கிறது. காலேஜில் படித்த ஒரு நாடகத்தின் தலைப்பு man of destiny விதியின்மனிதன் என்று. சகுனிதான் விதியின் முகமாக இந்த  நாவல்களில் வந்துகொண்டே இருக்கும் கதாபாத்திரம் என்று நினைத்துக்கொண்டேன். அவரது முகம் கனவுகளிலே கூட வருகிறது

அந்த ஓநாய்க்கும் அவருக்குமான உரையாடல்தான் பிரயாகையிலேயே உச்சமான இடம் என்ற எண்ணம் வாசித்துமுடித்ததுமே வந்தது. அவரில் இருந்துதான் எல்லாமே ஆரம்பிக்கின்றன. அந்த கணிகர் கூட சகுனியின் ஒரு brewed essence தானோ, அவர் உண்மையிலே இல்லையோ இவருடைய imagination மட்டும்தானோ என்றெல்லாம் நினைக்கத் தோன்றியது

ராஜாராம் 

இந்திரனின் அலைக்கழிப்பு



ஜெ,

பிரயாகையை இப்போதுதான் முடித்தேன். நடுவே விட்டுப்போனதை எல்லாம் சேர்த்துக்கொண்டு வாசித்துமுடிக்க இத்தனைநாட்கள் ஆகிவிட்டன.

இந்த நாவலில் எனக்கு முக்கியமாகப் பட்டது அர்ஜுனனின் நிலையழிந்த நிலைமைதான். அவன் துரோணரிடம் போகும்போதே தத்தளிப்பு கொண்டவனாகத்தான் இருக்கிறான். இப்போது இன்னும் அதிக தத்தளிப்புடன் இருக்கிறான்

நம்முடைய புராணங்களில் இந்திரனை அப்படித்தான் சொல்லியிருக்கிறது. இந்திரன் பெண்களை தேடிப்போனபடியே இருக்கிறான் என்றுதான் நமக்குத்தெரியும். அது மட்டும் அல்ல அவன் வெவ்வேறு ரிஷிகளையும் அரசர்களையும் சென்று கலைத்துக்கொண்டே இருக்கிறான். புராணங்களில் அதிக சாபம் வாங்கியது இந்திரன் தான்

இந்த இந்திரனுடைய அம்சம் எப்படியெல்லாம் அர்ஜுனனை ஆட்டிவைக்கிறது என அற்புதமாகச் சொல்லியிருக்கிறது பிரயாகை. அதெல்லாம் அடங்கி அவன் எங்கே நிறைவை கொள்கிறான் என்பதையே மகாபாரதத்தின் முக்கியமனா கதையாக நான் நினைக்கிறேன்

சிவசுப்ரமணியம்

குகைமாளிகைகள்

[ஜோர்டான் குகைமாளிகை. பெரிதாக்க படத்தின்மேல் சுட்டவும்]

ஜெ சார்

வெண்முரசு முதற்கனல் நாவலில் சிகண்டி வடமேற்காகப் போய் சிபிநாட்டைப்பார்க்கிறான். அங்குள்ள அரண்மனைகள் எல்லாமே பெரிய செம்மண் பாறைகளைக்  குடைந்து செய்யப்பட்டவையாக இருக்கின்றன. அப்படிப்பட்ட நகரங்கள் உண்டா? இன்றைக்கும் அவை இருக்கவேண்டும் அல்லவா?

வெண்முரசு நாவலில் வரும் இந்தவகையான நகரச்சித்திரங்கள் என்னை பெரிய கனவுலகுக்குள் கொண்டுசெல்கின்றன. எங்காவது இருந்தால் சாவதற்குள் எப்படியாவது போய் பார்த்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். அதனால்தான் கேட்கிறேன்

சாரங்கன்


அன்புள்ள சாரங்கன்,

அந்நிலம் இன்று பாகிஸ்தானில் உள்ள சிபி மாவட்டம். இன்றும் அங்கே குன்றுகளைக் குடைந்து செய்யப்பட்ட அற்புதமான மாளிகைகள் பல உள்ளன

பொதுவாக பாலைவனப் பாறைகள் மென்மையானவை. ஆகவே அவற்றைக் குடைந்து குகைகளை அமைப்பது 5000 வருடங்களாக நிகழ்கிறது. குகைமாளிகைகளாலான நகரங்கள் ஈரானிலும் ஜோர்டானிலும் பல உள்ளன

ஜெ

சாட்சி நதி


[பெரிதாக்க படத்தின்மேல் சொடுக்கவும்]
ஜெ

ஒரு வழியாக நேற்றி பிரயாகையை முடித்தேன். ஏகப்பட்ட பிராஜக்டுகள். [சிக்கல்களைப்பற்றி எழுதியிருந்தேனே] அங்கே இங்கே என்று அலைச்சல். பல அத்தியயாங்களை விமானநிலையத்திலும் விமானத்திலும் வைத்துத்தான் வாசித்தேன்.

பிரயாகையை முடிக்கும்போது ஓர் எண்ணம் வந்தது. அதாவது கங்கைதான் இந்த ஒட்டுமொத்த காவியத்துக்கும் மையம் என்று தோன்றியது. ஆரம்பம் முதல் கங்கை எல்லா நாவல்களிலும் ஓடிக்கொண்டே இருக்கிறது.

நேரடியாகப்பார்த்தால் கங்கைக் கரையில்தான் அத்தனை நாடுகளும் இருக்கின்றன. அவர்களுக்குள்ளே mode of transportation கங்கைதான். ஆகவே கங்கை வந்தபடியேதான் இருக்கும். பயணம் எல்லாம் கங்கையிலேதான்

ஆனால் இன்னொருவகையில் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு கங்கை ஓடிக்கொண்டே இருப்பதுபோலத் தோன்றுகிறது. கங்கையை ஒரு பெரிய காலப்பிரவாகமாக எடுத்துக்கொள்ளலாம் என்று தோன்றியது

ஷோலக்கோவின் And Quiet Flows the Don வாசிக்கையில் வயசு 16. இப்போதும் அந்த நதிதான் முக்கியமானதாகத் தோன்றுகிறது. அந்த நதியின் கரையிலேதான் ஒரு இதிகாசம் போல அத்தனைபோர்களும் நடந்து முடிகின்றன.இந்நாவலில் கங்கை அந்த நதியைப்போல இருக்கிறது. வெண்முரசு என்பதற்குப்பதில் கங்கையை வைத்துக்கூட ஏதாவது தலைப்பு வைத்திருக்கலாம்.

ஜெயராம்

படகுகள் படகுகள்...



ஜெ

வெண்முரசின் முக்கியமான அழகு என்பதே அது படகுகளை  வர்ணிப்பதுதான் என்று தோன்றிவிட்டது. நதிகளின் அலைகளையும் கடல்களையும்  அதில் செல்லும் விதவிதமான படகுகளையும் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறது இந்த நாவல்கள். எத்தனை படகுத்துறைகள். முதலில் படகுத்துறையைக் கண்டது சால்வனை சந்திப்ப்தற்காக அமபை போகும் இடத்தில்தான். மிக நுணுக்கமான சித்திரம். கங்கைக்குள் நிறைய பெரிய மரங்களை நிறுத்தி அதன்மேல் துறையை எழுப்பியிருந்தார்கள். அது ஆயிரங்காலட்டையின் கால் போல இருந்தது. நீர் உள்லே அலையடித்து அந்த தூண்களில் மோதிக்கொண்டிருந்தது

அங்கே ஆரம்பித்து உவமைகள் வர்ண்னைகள் வந்துகொண்டே இருந்தன. எதுவுமே திரும்ப வரவில்லை.படகின் முனையில் அம்பை இருப்பது அகல் விளக்கில் சுடர் இருப்பது போல. படகு பாய் சுருக்குவது கொக்கு சிறகு குவிப்பது போல. மீன்கூட்டம் போல துறையை அணைந்தன படகுகள். பெரிய பன்றியின் மடியில் பால்குடிக்கும் பன்றிக்கூட்டிகள் போல சிறியபடகுகள்.

வண்ணக்கடலில் பெரிய கடல்துறைமுகங்கள் வந்தன. முதல் நாவலிலேயே பீஷ்மர் தேவபால புரத்தை பார்க்கும் பெரிய சித்திரம் வந்துவிட்டது. அதன்பிறகு ஒரு பாரததரிசனமாகவே வந்தது. எவ்வளவோ துறைமுகங்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. உவமைகள் திரும்ப வருகின்றதா என்று நான் பென்சிலை வைத்து மார்க் செய்துகொண்டே வந்தேன். ஆச்சரியம்தான். இவ்வளவு சொன்னபிறகும் கூட பாய்களைப்பற்றியும் படகுகளைப்பற்றியும் சொல்ல உங்களிடம் இருக்கிறது

இன்னும் ஆயிரக்கணக்கான பக்கங்கள் இருக்கின்றன. பிரியமுள்ள ஜெ, படகுகளைப்பற்றி மட்டும் சொல்லிக்கொண்டே இருங்கள். எவ்வளவு சொல்லமுடிகிறது என்றுதான் பார்ப்போமே

செல்வன்

எரிவதென்பது...



ஜெ

பிரயாகையின் அந்த அரக்குமாளிகை நிகழ்ச்சியை வாசித்தேன். நீங்கள் அந்தக் கட்டிடம் கட்டப்பட்ட விதம் ,அதில் உள்ள பொருட்கள், அதை அவர்கள் எப்படி கண்டுபிடித்தார்கள், அவர்கள் எப்படித்தப்பினார்கள் என்றெல்லாம் தெளிவாகச் சொல்கிறீர்கள். இந்த micro details அவையெல்லாம் சேர்ந்து அங்கே உண்மையில் தீ நிகழ்ச்சி நடப்பது போலவும் அதில் நாமும் சிக்கி தப்பித்துக்கொள்வதுபோலவும்தான் எண்ணச்செய்தது

ஆனால் பிறகுதான் விமர்சனத் தளத்திலே வந்திருந்த ஏராளமான கடிதத்தை வாசித்தேன். அந்த தீ நிகழ்ச்சியை ஒரு குறியீடாக வாசிக்கலாம் என்று தெரிந்த்து. அப்படி தோன்றியதுமே பெரிய பதற்ரம்  வந்தது. நினைக்க நினைக்க மனதுக்குள் விரிந்துகொண்டே போயிற்று

எரிந்து அழிவது என்பது சாமானியமானது இல்லை. எங்கள் மொத்தச் சொத்தும் எங்கள் அம்மாச்சியும் அவரது மூன்று பிள்ளைகளான தாய்மாமன்களாலும் சேர்ந்து எடுத்துக்கொண்டார்கள். அம்மா மட்டும்தான். அப்பா சின்னவயதிலேயே தவறிவிட்டர். ஒன்றுமே இல்லாமல் தெருவிலே நின்றோம். அம்மா சத்துணவு ஆயா வேலைக்குப் போனார்கள்

அதன்பின் நானும் அண்ணனும் படித்து நல்ல நிலைக்கு வந்துவிட்டோம். இன்றைக்கு அம்மாவுக்கு ஒன்றும் குறை இல்லை. ஆனால் அம்மா அப்படி மறக்கவே இல்லை. நினைத்து நினைத்து எரிந்துகொண்டே இருக்கும். அவளுக்கு அந்த துரோகம் பெரிய  ஒரு தீ போல.

அம்மாச்சி செத்துப்போன செய்தி கேட்டபோது அம்மா போய் அந்த சிதையிலே மண்ணை அள்ளி போட்டு தூற்றி அழுதுவிட்டு வந்தது. மாமன்கள் அம்மாவை விறகு கொள்ளியால் அடிக்க ஊர்க்காரர்கள் தடுத்தார்கள். ஒருநாள் அம்மா எங்கள் வீட்டுக்கு பக்கத்திலே குடிசையில் தீ வைத்தபோது கையை விரித்துக்கொண்டு ‘தீ தீ’ என்று சொல்லிக்கொண்டே ஓடி போனாள். அப்போது முகம் பைத்தியம் போல இருந்தது. அந்த காட்சியை மறக்கவே முடியாது

அரக்குமாளிகை நிகழ்ச்சியை இப்போது வாசிக்கும்போது நீங்கள் சொன்ன சித்திரம் மனசிலே வந்து அம்மாவை நுணுக்கமாகப் புரிந்துகொள்ள உதவுவதுபோல் இருந்தது. பயங்கரமான ஒரு கனவு போல. ஒரு வீடே உருகி வழிவது என்றால்.... அது பெரிய கெட்ட கனவு. அதைத்தான் அற்புதமாகச் சொல்லியிருந்தீர்கள். எங்கள் அம்மாவும் ஒரு குந்திதான்

சிவகுமார்

Thursday, January 29, 2015

மழைத்தவளை



அன்புள்ள ஜெமோ

மழைப்பாடலையே நான் இப்போதுதான் முடித்தேன். மழைப்பாடலில் நாயகன் என்று எனக்கு விதுரனைத்தான் சொல்லத் தோன்றியது. விதுரனுக்கும் சத்யவதிக்குமான உரையாடலை பலமுறை வாசித்து ரசித்தேன். சிலசமயம் முதிய பெண்கள் பேரன்களுடன் அப்படிக் கொஞ்சுவதைக் கண்டிருக்கிறேன்

அதேபோல மழைப்பாடல். மழை வந்துகொண்டே இருக்கிறது. முதலில் மழை பெய்யத்தொடங்குகிறது. பிறகு மழைக்கான ஏக்கம். அப்படியே மழைப்பிரளயம். கடைசியில் மழையில் போய் நாவல் முடிகிறது. எல்லாவகையிலும் கச்சிதமான முழுமையான ஒரு நாவல் என்று தோன்றியது. அதன் கட்டமைப்பைப்பற்றி எண்ணி வியந்தேன். மழையை விதுரன் ஏங்குகிறான். விதுரன் தான் மழையை ஏங்கும் அந்தத் தவளை

மழைப்பாடலில் விதுரனுக்கும் அவன் மனைவிக்குமான உறவும் அற்புதமானது. அவள் அவன் அன்பை உணரும் இடம். அவன் அவள் படுத்த இடத்தில் படுப்பது. அற்புதமான ஒரு சினிமாவின் காட்சி போல தோன்றியது

விதுரன் என்ற மழைத்தவளையின் ஒலி நாவல் முழுக்கக் கேட்டுக்கொண்டே இருந்தது. நாவலில் உள்ள எல்லா சமபவங்களையும் பெரிய கண்களுடன் அவன் பார்த்துக்கொண்டே இருப்பதாகத் தோன்றியது.

கணேஷ் பொன்னம்பலம்

ஆயிரம் வாழ்க்கைகள்



[பெரிதாகக் காண படத்தின் மேல் சுட்டவும்]

அன்புள்ள ஜெமோ

வெண்முரசின் மழைப்பாடலைத்தான் இப்போது வாசித்துக்கொண்டிருக்கிறேன். கதை என்று பெரிதாக ஒன்றுமில்லை . பாண்டவர்கள் பிறக்கிறார்கள். ஆனால் அதைச் சொன்னதில் இருக்கிற grandeur பிரமிக்கவைக்கிறது. எவ்வளவு காட்சிகள். பிரம்மாண்டமான படை நகர்வுகள்.பெரிய கோட்டைகள் நிலங்கள். ஒரே அத்தியாயத்தில் வம்சங்களே உருவாகி வளரக்கூடிய காட்சிகள் .ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்து போகும் ஏராளமான புராணக்கதைகள். பிரமிப்பை ஏற்படுத்தியது என்றால் சாதாரணமாகச் சொல்வதுபோல ஆகிவிடும் அதற்கும் மேலே. ஒரு தனி ஜென்மம் எடுத்து அங்கெல்லாம் வாழ்வதுபோல இருந்தது. மழை வெயில் புயல் பாலைவனக்காற்று பனி காட்டுத்தீ என்று எல்லாவற்றையுமே பார்த்துவிட்டேன். நான் வாசித்ததில் மிகப்பெரிய கனவு என்றால் அது மழைப்பாடல்தான். முழுக்க வாசித்துவிட்டு எழுதுகிறேன்

எஸ். பாஸ்கர்

பெண்களின் வருகை



அன்புள்ள ஜெமோ

மழைப்பாடலில் நான்கு நகர்நுழைதல்களை ஒப்பிட்டுப்பார்த்து வாசித்துக்கொண்டிருந்தேன். சகுனி நுழைவது தீ உள்ளே நுழைவது போல இருக்கிறது. அதற்கு முன்னால் ஒரு பெருவெள்ளம் வந்தது போலவே அதுவும் இருப்பதாகக் காட்டப்படுகிறது

அதற்குமுன்னால் காந்தாரி. அவள் வருவதற்கு முன்னாலேயே ரத்தமழை பெய்துவிடுகிறது. ஏற்றித் தயார்நிலையில் வைக்கபபட்ட ஆயுதங்கள் மேல் மழைபெய்து அவைகள் ரத்தத்த்துளிகள் சொட்டுகின்றன. காந்தாரி உள்ளே வரும்போது மக்கள் மிகப்பெரிய வரவேற்பு அளிக்கிறார்கள். மழையில்லாமல் காய்ந்து கிடந்த அஸ்தினபுரிக்கு போதும் போதும் என்பதுபோல மழை. அவர்கள் மழையிலேயே இறங்கி அஸ்தினபுரிக்குள் செல்வது அற்புதமான காட்சியாக இருந்தது. இப்போதும் கனவுபோல ஞாபகம் வருகிறது

அதற்குப்பின்னால் குந்தி. அப்போது இளமழை.அவளுக்கு பெரிய வரவேற்பு இல்லை. ஆகவே அவளை அவளே நிமிரச்செய்து கம்பீரத்தை த்ருவித்துக்கொண்டு போகிறாள். அங்கேதான் அவளுடைய மனக்குறைகள் எல்லாமே தொடங்கியிருக்கவேண்டும்

அதற்கு முன்னால் அம்பாலிகையும் அம்பிகையும் வ்ந்தபோது வேறுமாதிரி நிகழ்ச்சி. அம்பாலிகை ஒரு வெள்ளைப்பூவை பறித்து கையில் வைத்திருக்கிறாள்

ஒவ்வொரு பெண்ணாக உள்ளே வந்துகொண்டே இருக்கிறார்கள். இனி வரப்போகிறவள் பாஞ்சாலி

சிவராமன்.


புல்தெய்வம்




அன்புள்ள ஜெ,

வண்ணக்கடல் - அரசப்பெருநகர் துரோணரை வாசித்தது மிகத்தீவிரமானதொரு அனுபவம். மனம் இத்தனை தீவிரம் கொள்ளும் என்று நினைத்ததில்லை. துரோணர் - குசை நிகழ்விற்குப் பிறகு இளநாகன் வருகிறபோது, மனதை ஆழத்திலிருந்து பிடுங்கி எடுத்து சாதாரணங்களின் நிகழ்வெளியில் வீசப்பட்டது போல, மனதில் ஒரு தவிப்பு. துரோணர் தர்ப்பையும் கைவிட்டது என்ற போது அவர் தனிமையின் துயரம் என்னுள் கண்ணீரைக் கிளப்பிவிட்டிருந்தது.  
வாசித்தவனின் உணர்வுநிலை இப்படி என்கிற போது, எழுதிய உங்கள் மனநிலையை நினைத்துகொண்டிருக்கிறேன். அத்தனை தீவிரத்திலிருந்து எவ்வாறு சாதரணமாக இளநாகனுக்கு வரமுடிந்தது (அடுத்த அத்தியாயத்தில்) உங்களால்?   

நன்றி,
வள்ளியப்பன்.


அன்புள்ள வள்ளியப்பன்

பலசமயம் இசை வழியாகவே அடுத்த மனநிலை நோக்கிச் செல்கிறேன். அது ஒரு பெரிய சவால்தான்

ஜெ

பிரயாகை-91 பொற்காலம்




அன்புள்ள ஜெ வணக்கம்.

எல்லா பெண்களையும் அம்மாவாக நினைக்கும் அகம் அமைந்துவிட்டாள் எவ்வளவு நிறைவாக இருக்கும். ஆனால் எந்த பெண்ணையும் அம்மாவாகவோ, அம்மாவிடத்திலோ வைத்து நினைக்கமுடியாத வயது ஒன்று இருக்கிறது.

காலம் விசித்திரமானது கனவுக்கன்னியை அம்மாவாக நினைக்க வைக்கும் காலத்தையும் உருவாக்குகின்றது. பேத்தி முதல், பாட்டிவரை உள்ள அனைவரையும் அம்மாக நினைக்கவைக்கும் அகக்கனிவையும் தந்துவிடுகின்றது.  அது வருவதற்குள்தான் எத்தனைபாடு. வழுக்கி வழுக்கி அந்த இடத்தில் நிற்கமுடியாமல் நிலைக்கமுடியாமல்போகும் போகும் பெரும் திரள்கூட்டத்தில் யாரோ ஒருவர் அசைவின்றி அங்கு நிற்கின்றார். நீயும் நில் என்று நம்பிக்கை தருகின்றார். வழுக்கினாலும் அவர்களை கண்டவர்கள் அங்கு செல்லவிழைகின்றார்கள். செல்கின்றார்கள். நிற்கின்றார்கள்.  
நிறைவாக என்னதான் என்று எண்ணிப்பார்த்தால் பெண்ணெல்லாம் கடல்போல ஆகி காமம் அலையடிக்கும் தருணத்தில் அதில் முத்துபோல, பவழம்போல அன்னை மின்னிமின்னி செல்கின்றாள். அதுதான்..அதுதான்..அதுதான் எத்தனைபெரிய ஆழமான விரிவான காமத்தை அங்கு கண்டாலும் கற்பனை செய்துக்கொண்டாலும் அதற்கும் அப்பால் பெண் அன்னையாக இருக்கிறாள். அன்னை அவள் வளர்வதோ, தேய்வாதோ பெருகுவதோ சுருங்குவதோ இல்லை.  அன்னைக்கு பாதுகாப்பாக இருக்கும் உடல்தான் வளர்கின்றது தேய்கின்றது பெருக்கின்றது சுருங்’குகின்றது. அந்த உடம்பைத்தான் பெண் என்று நினைத்து திரிந்தகாலம் ஒன்று உண்டு. இதுதான் பெண்ணா? இது பெண் என்றால் அம்மா என்று சொல்கின்றோமே அது எது என்று எண்ணி எண்ணி ஒய்ந்தபோது உங்கள் எழுத்து காட்டிக்கொடுத்தது அம்மா உடம்பல்ல  அந்த உடம்புக்குள் இருக்கும் அகம் என்று. எத்தனையோ பெண்களின் வழியாக அந்த மாறாத அம்மா என்னும் மையம், உலகம் முழுவதற்குமான அம்மா என்ற அந்த உச்சம், அனைவருக்கும் உள் உள்ள அந்த அம்மா என்னும் அழிவின்மை இலக்கியத்தில் கிடைத்தது. 

இந்த நேரத்தில் இலக்கிய கர்த்தாக்கள் அனைவரையும் வணங்குகின்றேன். உங்கள் எழுத்துகள் எத்தனை ஆழத்தில் இறங்கினாலும், எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் அந்த அம்மாவில் வந்து மையம் கொண்டு அசைவின்மையை அடைவதில் மகிழ்கின்றேன். 

காமம் உடல்பிடித்து இழுக்கும்போதும், காதல் மனம்பிடித்து இழுக்கும்போதும் ஆண்மனம் தேடும் அசைவின்மை அம்மாதான். அந்த அம்மாக்கள் புனிதமானவர்களாக இருந்துக்கொண்டு ஆணையும் புனிதப்படித்திப்போகின்றார்கள். அந்த மையத்தை தெரிந்துக்கொள்ள இலக்கியத்தை ஆடியாக்கின்றீர்கள் ஜெ. இங்கு நான் அம்மா என்று சொல்லும் ஒரு உடம்பு அல்ல. அது அம்மாமட்டும் அகம் மட்டும் அறியும் ஒன்று.

திரௌபதி கொற்றவை ஆலயத்திற்கு வருவதில் ஆரம்பித்து இதோ மணமேடையில் வந்து நின்று  கபாலிகர் மண்டையோட்டு பலியேற்பு கிண்ணத்தில் செங்காந்தள்மலர் காணிக்கையிடும்வரையிலும்  விரிந்துபோகும் பிரயாகை-91வரை, ஒரு பெண் ஆணின் இதயத்தில் என்ன என்னச்செய்வாள் என்பதின் வழியாக சென்று அன்னையாக வந்து நிற்கும் தருணம்வரை சென்றது.

கபாலிகன் மட்டும் இல்லை நானும் “அன்னையே வாழ்க“ என்று வாழ்த்தி வணங்குகின்றேன்.

திரௌபதி என்பவள் ஒரு பெண்ணா இல்லை ஒட்டுமொத்த மானிட பெண்களின் ஒரு மூலவிதை அவளுக்குள் எல்லாம் இருக்கிறது. அவளிடம் இல்லாத எதுவும் பெண்களிடம் இல்லை, பெண்களிடம் இல்லாதது எல்லாம் அவளிடம் இருக்கலாம் அதில் ஒன்று அவள்  தந்தைக்கும் கணவனுக்கும் அன்னையாக இருத்தல். அன்னைக்கும் தோழியாகிய மாயைக்கும் அருகில் இருந்துக்கொண்டு அப்பால் இருத்தல், வெல்வான் கண்ணன் என்று தெரிந்தும் அதற்காக அகம் பதறாமல் தோழிபோல் மடியில் கைபிணைத்து வைத்து இடக்கால் சற்று நெகிழ நீட்டி கனமின்றி இருப்பாள். இது தோழிக்கு உரியநிலை அதை இன்னும் நெருக்கமாக நினைத்தால் அண்ணன் என்ற நிலை. தன் காதல் முழுமைக்கும் உரிய அண்ணன் என்ற நிலை. தனக்கு ஒரு ஆண் பிறந்தால் அந்த அண்ணன்போல் பிறக்கவேண்டும் என்று ஆசைக்கொள்ளும் தங்கைநிலை. அம்மாவயிற்றில் பிறந்து எனக்கு அண்ணனானதால் காதலன் ஆகமுடியாமல் போய்விட்டதே என்றெங்கும் பாசநிலை.  அந்த திரௌபதிதான்  எங்கோ உலக அன்னைகளுக்கும் அப்பால் சென்று அவளுக்குள் இருக்கும் பெண்ணின் பெருதக்கயாதென்று கண்டு அவள் நிற்கின்றாள். அந்த திரௌபதி மானிடப்பெண்கிளின் ஆலமரசிறுவிதை.

அம்மாவைத்தாண்டி  பெண்கள் தெய்வாம்சம் என்று காட்டிப்போகும் உச்சநிலை, இந்த வெண்முரசுதான் எத்தனை மகத்தானது. திரௌபதி காதல் காமம் என்பதை எல்லாம் ஆண்கள் மனதில் விதைத்து தானும் அதில் ஒரு பாத்திரமாக ஆடி அசைந்து அப்பால் சென்று போன நாட்களைப்பார்க்கின்றேன். காதல் காமம் அதெல்லாம் ஒன்றுமே இல்லை இந்த பெருவாழ்வில் என்று காட்டுவதற்காக வந்த பெரும் பிறவி என்று இன்று திரௌபதி தோன்றுகின்றாள். மலையே குழம்பாக உருகி ஓடும் ஒரு காலத்தில் அதில் ஒரு பனித்துளி விழும் நிலை என்னவாக இருக்கும் என்று ஓசித்தால் அதுதான் வாழ்வில் காதலும், காமமும்.  பஞ்சபூதங்களையும் பெண்வடிவாக்கி வைத்ததுபோல் ஆகி நிற்கின்றாள் திரௌபதி. திரௌபதி நீராட்டு அறையில் நீராடும்போது பிருஷதி காணும்போது அவள் நீரின் வடிவம். சுயவரமண்டபத்திற்கும் வரும்போது அவள் வானின் வடிவம். ஆலயத்திற்கு சாமிகும்பிடவரும்போது காற்றின் வடிவம். சுயம்வர மண்டபத்தில் பாண்டவர்கள் யுத்தம் செய்யும்போது குருதியும் மலரிதழும் படிந்த முகத்தோடு இருப்பது மண்ணின் வடிவம் இன்று திரௌபதி அனலின் வடிவம். இந்த ஐந்து வடிவங்களில் உருகொள்ளும் பாஞ்சாலிக்கு பாண்டவர்கள் என்னும் ஐந்து கணவர்கள் அவளுக்குள் காமத்தை எழுப்பும் கணவர்களாக இருக்க முடியாது மாறாக அவளுக்கு தேங்கி இருக்கும் ஐம்பூதங்களின் சொருபத்தை கொண்டாடும் வழிபடும் பூசகர்களாகத்தான் இருக்கமுடியும். அவர்கள் ஐவரும் ஒருவர் கண்டதை இன்னொருவர் காணமுடியாது. திரௌபதியும் ஒருவருக்கு காட்டிய தரிசனத்தை மற்றொருவருக்கு காட்டப்போவது இல்லை. மானிடக்குணங்கள் நிறம்பி பெண்ணாக திரௌபதியை படைத்து மானிடக்குணங்களின் கீழ்மைகள் தொடாத பெரும் வெளியில் கொண்டு திரௌபதியை நிருத்தியவிதத்தில் வெண்முரசை பெருவெளியில் வைத்து உள்ளீர்கள் ஜெ. இன்னும் அழகாக இதை எப்படி சொல்வது என்று தெரியவில்லை. இப்படி சொல்லிப்பார்க்கின்றேன். வானத்தில் வரைந்த திரௌபதி ஒவியத்தை மண்ணில் ஆடிவைத்து குனிந்து பார்த்து மண்ணில் உள்ளது என்று காட்டுகின்றீர்கள். 


பிரயாகை-91ல் ஒவ்வொரு குலத்தாரும் ஒவ்வொரு மலர்கிளைகளை பாண்டவர்களுக்கு பரிசளிக்கின்றார்கள். மருதக்கிளையை அர்ஜுனன் வாங்குகின்றான். வேங்கையை பீமன் வாங்குகின்றான். கடம்பை நகுலன் வாங்குகின்றான். செண்பகத்தை சகாதேவன் வாங்குகின்றான். பாலையை தருமன் வாங்குகின்றான். இந்த மலர்கிளைகள்தான் அவர்களின்அகமாக உள்ளது. தருமன் பாலையை வாங்கியதுதான் எத்தனை பொருள் பொதிந்தது. எப்போதும் திரௌபதி அவனுக்கு பலிகொள்ளும் கொற்றவைதான். இதோ இன்று திரௌபதி வைக்கும் நெருப்பில் நரிகள் ஓடுவது ஒரு குறிப்பு அதனோடு பாலை மரம் ஒன்று தழைப்பொசிங்கி தவிப்பது ஒரு குறிப்பு.  பெரும் வெம்மைக்கொண்ட பாலையில் தருமன் என்றும் தனது பசுமையை தாங்கி வாழும் எளியவன் ஆனால் சாகவரம் கொண்ட திடநெஞ்சன். துப்பாக்கி குண்டு பாயும் தருணத்தில் ”ஹே ராம்” என்று இயல்பாய் அதுதான் சொருபம் என்று சொல்லிச்செல்பவன்.  

இவர்கள் அனைவரையும் வெல்லும் மனநிலையில் நின்று மண்டையோட்டில் காந்தள் மலர்வைத்த திரௌபதி சிகரம். காந்தள் மலருக்கு பெண்களின் விரல்கள் உவமையாக்கப்படுகின்றது. அந்த காந்தல்மலரும் அந்த மண்டையோடும் அவள் மாகாளி என்று காட்டுகின்றது. சிவந்த விரல்தாங்கும் மானிட மண்டையோடு, காளி பயங்கரி சூலிலினி மாதங்கி கண்களில் தெரிகின்றாள். மாகாளியாக இருந்தாளும் அவள்தான் இங்கொரு எளிய பெண்குழந்தை. துருபதனையும், பிருஷதியையும் கண்ணீர்விடவைக்கும் சின்னக்குழந்தை.

அன்புள்ள ஜெ பிரயாகை என்னும் அற்புத நூலாகிய வாழ்வுக்குள் மலரவைத்த பொற்காலத்தை எண்ணி மகிழ்கின்றேன். நன்றி பலநூறு.


அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல். 
  

Wednesday, January 28, 2015

துரோணரின் வீழ்ச்சி



ஜெ,

வெண்முரசில் அப்படியே கைவிடப்பட்ட கதாபாத்திரம் என்றால் துரோணர்தான் . முந்தைய வண்ணக்கடல் நாவலிலே அப்படி ஒரு ஞானியாக எழுந்து வந்தார். இந்த நாவலிலே அப்படியே சுருங்கி ஒரு சின்ன மனிதனாக ஆகி விட்டார்

அவரை அப்படி ஆக்கியது  என்ன என்று பார்த்தால் பிள்ளைப்பாசம் என்று தோன்றும். அது இல்லை ஈகோ தான் . தான் இன்னதாக இருக்கவேண்டும் என்ற ஆசை. அப்படிக் காட்டிக்கொள்ளும் தன்முனைப்பு

அது அவரை அழித்துவிட்டது. பீஷ்மரின் ஆயுதசாலையில் துரோணரைப்பார்த்தபோது பரிதாபமாக இருந்தது. என்ன வாழ்க்கை என்று சொல்லத்தோன்றியது

கணேஷ் திருமூர்த்தி

அலையும் அசைவின்மையும்




ஜெமோ சார்

வெண்முரசு பிரயாகை வாசித்து முடித்ததும் மீண்டும் ஒரு முறை ஆங்காங்கே வாசித்தேன். இந்தவகையான நாவல்களில் கதையோட்டம் நம்மை இழுத்துவந்துவிடுகிறது. ஆனால் கதை முக்கியமல்ல. குறியீட்டமைதிதான் முக்கியம் என்று சொல்லியிருந்தீர்கள். அந்த எண்ணம் வந்தது. இந்த நாவல் முழுக்க தொடரக்கூடிய விஷயம் நிலையின்மைதான். அர்ஜுனன் பீமன் திரௌபதி தருமன் எல்லாருமே நிலையழிந்து அலைக்கழிந்துகொண்டே இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் தலைக்குமேலே துருவ நட்சத்திரம் நிலையாக அமைதியாக இருக்கிறது. அதிலிருந்து ஆரம்பித்து அதை வந்துசேரும் நாவலின் கட்டமைப்பு திகைக்கவைக்ககுடியதாக இருந்தது

ரகுநாதன்

திருமகள்




ஜெ,

தலைப்பே அடுத்த நாவலின் கரு என்ன என்பதைச் சொல்லிவிடுகிறது. இந்திரப்பிரஸ்தத்தை இந்திரனின் நகரமாக அதாவது களியாட்டங்களின் நகரமாக உருவகிக்கிறீர்கள் என நினைக்கிறேன். சரிதானே?

இந்திரநகரியின் தலைமையில் திரௌபதி இருக்கிறாள். இந்திரன் மாறுவான் இந்திராணி மாறுவதில்லை என்று ஒரு சொல் உண்டு. இவளும் ஐந்து இந்திரர்களுக்கு ஒரு இந்திராணிதானே?

இந்திராணி லட்சுமி அம்சம் உள்ளவள். அர்ஜுனன் திரௌபதியைக் காண்பது லட்சுமி கோயிலுக்குச் செல்லும் வழியில் என்பது அந்த வகையிலே அர்த்தம் மிகுந்ததாகத் தோன்றியது

ஐந்து துதிக்கைகள் கொண்ட வெள்ளையானையாகிய ஐராவதமும் நெஞ்சில் நிழலாடியது.

இந்திரநகரில் ஆட்சிசெய்யப்போகும் திருமகளான இந்திராணியை எதிர்பார்க்கிறேன்

சுவாமி

வெண்முரசு சொற்கள்

ஜெ,

வெண்முரசில் எனக்கு தெரியாத ஒரு சொல்லை கண்டால் விக்சனரி (http://ta.wiktionary.org), தமிழ் அகராதி (http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/), Google என்ற வரிசையில் தேடுவேன். பெரும்பாலும் பொருள் கிட்டிவிடும். பொருள் கண்டுபிடிக்க முடியாதவைகளுக்கு அவை வரும் சூழலை வைத்து யூகிக்க முயல்வேன். அவற்றை பற்றி உங்களிடம் கேட்கவேண்டும் என்று முதற்கனலிலிருந்தே யோசனை. ஒத்திப்போட்டு ஒத்திப்போட்டு இன்றுதான் முடிந்தது.

நேரமிருக்கும்பொழுது இச்சொற்களுக்கான பொருளை கூறமுடியுமா?

அரசுசூழ்தல் -

அறிவாணவம் - அறிவு+ஆணவம் என்று பிரிப்பது சரியா?

ஆமாடப்பெட்டி -

ஊண்கொடை - அன்னதானம்?

ஏவல்மைந்தர் - பணியாட்கள்?

கருநோக்கு மருத்துவம் - மகப்பேறியல்?

கறங்குபுள் -

குடைமறை - குடை?

கொடித்தோன்றல் -

கோட்டல் -

சரப்பொளி -

சூழ்மொழி -

சொல்மீட்சி - சாபவிமோசனம் (?)

தற்சமன் - 

நிகழ்விலி -

மதனிகை -

மதிவினை - mindgame?

மதிசூழ்கை -

மதிசூழறை -

முனம்பு -

வரிப்பாணர் -

வயற்றாட்டி -

விழிமயக்கு - தோற்றமயக்கம்? 

நன்றி

கார்த்திகேயன்



அன்புள்ள கார்த்திகேயன்,


அரசுசூழ்தல் - ராஜந்தந்திர நடவடிக்கை

அறிவாணவம் - அறிவின் ஆணவம், 

ஆமாடப்பெட்டி - ஆமையோட்டை மூடியாகக் கொண்ட சின்ன பெட்டி

ஊண்கொடை - அன்னதானம்

ஏவல்மைந்தர் - பணியாட்கள்.

கருநோக்கு மருத்துவம் - மகப்பேறியல்

கறங்குபுள் - ஒலிக்கும் சிறிய பறவை

குடைமறை -  தலையில் கூடாரம்போல போட்டுக்கொள்ளும் ஒருவகை குடை. 

கொடித்தோன்றல் - ரத்த உறவில் தோன்றியவன்

கோட்டல் - கொள்ளுதல். வளைத்த்துக்கொள்ளுதல்

சரப்பொளி - சிறிய பதக்கங்களை அடுக்கிச் செய்த மாலை. காசுமாலை மாதிரி

சூழ்மொழி - ராஜதந்திர பேச்சு

சொல்மீட்சி - சாபவிமோசனம் 

தற்சமன் -  சுய சமநிலை

நிகழ்விலி - எதுவும் நிகழாத சூனியம்


மதனிகை - கோபுரம் போன்றவற்றைத் தாங்கும் குட்டையான உடலுள்ள தேவதைகள்.

மதிவினை -  சதி,சூழ்ச்சி

மதிசூழ்கை - அரசியல் தந்திரச்செயல்பாடு

மதிசூழறை - மந்திராலோசனை அறை

முனம்பு - இயற்கையாக உருக்கொண்ட முனை, நிலம் போன்றவற்றின்

வரிப்பாணர் - வரிப்பாடல்கள் பாடும் பாணர். [கானல்வரி வேட்டுவ வரி போன்று]

வயற்றாட்டி - பிரசவத்தாதி

விழிமயக்கு - தோற்றமயக்கம்.பிரமை

ஜெ

பிரயாகை-87-வானக நடிகன்




அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

ஆன்மா உடலெடுத்து மண்ணுக்கு வருகின்றது. சில ஆன்மாக்கள் உடலுக்குள் இருக்காமல் உடலாகவே ஆகி, உடலென்றும் ஆன்மாவென்றும் இரண்டாக இல்லாமல் ஒன்றாகி நிற்கின்றது. அதைத்தான் வாழையடி வாழையாக வந்த திருக்கூட்டமரபென்கின்றோம். அதையும் தாண்டி ஒவ்வொரு யுகத்திலும் தருமத்தை நிலைநாட்ட நானே பிறக்கின்றேன் என்கின்றான் கண்ணன்.

கண்ணன்போல ஆன்மாமே உடலாகி வந்த ஒரு சீவன் திரௌபதி. எல்லாவற்றிலும் ஆன்மா இருக்கும் ஆன்மாவுக்குள் எதுவும் இல்லை. கண்ணனும் திரௌபதியும்கூட அப்படித்தான். கண்ணனையும், திரௌபதியையும் அச்சத்தோடு பார்க்கும் அர்ஜுனன் கண்டது அதுதானா? 

லெட்சுமிக்கோவிலில் அர்ஜுனன் கண்களில் காமம்வழியக்கண்ட திரௌபதி அல்ல இவள். இவள் கண்ணனின் பாதி. துர்க்கை ஆலயத்தில் துர்க்கையாக இருப்பாள். லட்சுமி ஆலயத்தில் லட்சுமியாக இருப்பாள். சரஸ்வதி ஆலயத்தில் சரஸ்வதியாக இருப்பாள். சாவித்திரி ஆலயத்தில் சாவித்திரியாக இருப்பாள். கேசினி ஆலயத்தில் கேசினியாக இருப்பாள். யுத்தகலத்தில் ஆற்றலாக இருப்பாள். பிணத்தின்மேல் நின்றாலும் மணமாலைசூட்டையில் மணப்பெண்ணாக இருப்பாள். அதற்கும் அப்பாலும் அவள் இருப்பாள்.

ஏகலைவனுக்கு எதிராக மதுராவின் மீது போர்தொடுத்த கண்ணன் பலரை கொன்று செல்லும் அன்று பாடிய காதல்பாடலும், பலரைக்கொன்று பின்பு திங்கும் இனிப்பு பண்டமும் இன்று அர்ஜுனன் அகம் எழுந்து திரௌபதியில் கண்ணனைக்காண வைக்கின்றது. பிணங்களின் நடுவே மங்கல இசை ஒலிக்கும் இந்த தருணத்தில் அர்ஜுனன் கிருஷ்ணனையும், கிருஷ்ணையையும் மாறிமாறிப்பார்ப்பது எத்தனை பொருள் பொதிந்தது. ஓரு உயிரின் இரண்டு உடல்கள். 

துருபதன் மனையில் அந்த மணமேடைத்தொட்டில் நன்றாகத்தானே ஆடிக்கொண்டு இருந்தது. இந்த கள்வன் ஏன் தொட்டிலில் ஆடிய திரௌபதியை கிள்ளினான். அவர்கள் பாண்டவர்கள் அவனுக்கு தெரியும் பலருக்கும் தெரியும் ஆனால் வைதீகர்கள் என்கின்றான். வைதீகர்கள் என்றதும் எதிர்க்கும் சத்திரியக்கூட்டத்திடம் அவர்கள் வேடம் புனைந்தவர்களாக இருக்கலாம் என்கின்றான். இவன் தொட்டிலையும் ஆட்டி குழந்தையை கிள்பவன் அல்ல குழந்தையையும் கிள்ளி தொட்டியை ஆட்டுபவர்களையும் கிள்ளி, வேடிக்கைப்பார்ப்பவர்களையும் கிள்பவன். அதை திரௌபதி மட்டுமே அறிந்து இருக்கிறாள். ஒரு மணமேடையை பிணமேடையாக்கி அந்த பிணமேடையை மணமேடையாகவும் செய்த பெரும் மாயக்கண்ணன் அவன். அதனால்தான் திரௌபதி சீற்றத்துடன் கண்ணனை நோக்கி திரும்பி பின் அவன் புன்னகையைக்கண்டு விழிநுனிகள் சுருங்க திரும்பிக்கொள்கின்றாள். அவன் வலப்பக்கம் இவள் இடப்பக்கம் அதனால்தான் மணவிழாவுக்கு வரும் கண்ணனின் வலப்பக்கத்தை மட்டும் திரௌதிப்பார்க்கிறாள். அவன் அன்றி ஒன்றும் தன்வாழ்வில் நடக்காது என்பதை அவள் அறிகின்றாள் ஆகவே அர்ஜுனன் கழுத்தில் மாலைச்சூடும்போதுகூட கண்ணனைப்பார்த்தே மாலை சூடுகின்றாள்.

அன்புள்ள ஜெ. திரௌபதி குளிக்கும்போது குருதிவடி வந்த குழந்தைபோல இருந்தாள். தனிக்கோலத்தில் நகர்வலம் வந்தபோது வானத்து தேவதைபோல் இருந்தால், உடலெல்லாம் வைரங்கள் மின்ன மணமேடையில் இருந்தபோது உடலெல்லாம் கண்கள்கொண்டவள்போல் முழுதும் பூத்த பூமரம்போல் இருந்தாள். இந்த திரௌபதியைத்தான் மகாமங்கலை என்றான் நிமித்திகன். இன்று குருதியும் மலரிதழும் ஒட்டிய முகமும்.அணங்குகொள், ஆயிழைகொள் என்பது இதுதானோ? துர்க்கையும் மகாலெட்சுமியும் என்பது இதுதானோ? யார்தான் இந்த திரௌபதி?   

மகளின் மணவிழா போர்கக்கோலம் ஆனதில் கண்ணீர்விடும் துருபதனை என்ன சொல்வது. இந்த கண்ணீருக்காகத்தானே அவன் தவம் செய்தான். குரோதம் அக்கினிப்போன்றது. அக்கினி மகாஅக்கினியையே பிறப்பிக்கிறது என்று உபயாஜர் சொன்னபோது கேட்காமல் “பிறக்கட்டும், அந்த அக்கினியில் நானும் என் தலைமுறைகளும் எரிந்து அழிகின்றோம்” என்று சொன்ன துருபதன் ஏன் இன்று அழுகின்றான்.

தீயவை தீயப் பயத்தலான் தீயவை
தீயினும் அஞ்சப் படும் என்றார் வள்ளுவர்.  தீயை பிள்ளையாகப்பெற்றவன் மடியிலும் வைக்கமுடியாமல், மண்ணிலும் வைக்கமுடியாமல் இனிப்படும்பாடு காலம் போடும் நாடகம். பலாபழத்தை முள்ளாடையில் கட்டிவைத்த இறைவன். தீயை பூவாடையில் கட்டிவைப்பான். அவனுக்கு எல்லாம் சாத்தியம்.

எல்லாம் சரிதான் இந்த கண்ணன் ஏன் இப்படி சொன்னான். //கிருஷ்ணன் “துருபதரேஉமது மகள் தகுதியானவர்களைஅடைந்திருக்கிறாள்” என்றான்துருபதன் என்ன சொல்வதென்றுஅறியாமல் பதைப்புடன் தன் மைந்தர்களை நோக்கினார்//

துருபதரே. உமது மகள் தகுதியானவனை அடைந்திருக்கிறாள் என்றுதானே சொல்லவேண்டும். வென்றவன் ஒருவன்தானே. திரௌபதி மாலையிட்டதும் ஒருவனுக்குதானே. துருபன் அதைக்கேட்டு பதைப்பதும். மைந்தர்களை நோக்குவதும் துருபனுக்குதான் ஆச்சர்யம். கண்ணன் எல்லாவற்றையும் எழுதி அதன்படியே யதார்த்தமாக நடப்பதுபோல் நடிக்கிறான். வானக ரசிகருக்காக மண்மீது நடிக்கும் மகாநடிகன். அவன் தலைசூடிய மயிற்பீலிக்கண் காண்பது எல்லாம் வானகத்தை மட்டுமே. மண் அவனுக்கு நாடகமேடை மட்டும். 

என்னப்பன் முருகனை பாடும் அருணகிரிநாதர் சுவாமிகள் முருகனின் மாமனை இப்படி பாடுகின்றார்.

திருவொன்றி விளங்கிய அண்டர்கள்
மனையின்தயிர் உண்டவன் எண்திசை
திகழும் புகழ்கொண்டவன் வண்டமிழ்-------------பயில்வோர்பின்

திரிகின்றவன் மஞ்சுநிறம் புனை
பவன் மிஞ்சுதிறங்கொள வென்று அடல்
செயதுங்க முகுந்தன் மகிழ்ந்தருள் ------------------மருகோனே. (திருப்பரங்குன்றம்-சருவும்படி---திருப்புகழ்)

முருகனை மருகானாய் கொண்ட அந்த முகுந்தன்  பாஞ்சாலியை வாழ்த்துகின்றான்.  இளவரசிஇன்றுடன் அரசியாகிறீர்கள்எட்டுமங்கலங்களும் திகழ்க!”  மண்ணும் விண்ணும் காணா இப்படி ஒரு திருமணத்திற்கு  என்னை அழைத்துசென்ற ஜெவுக்கு நன்றி 

வாழ்த்தும் கிருஷ்ணனையும், வாழ்த்துபெறும் கிருஷ்ணையையும் வாணங்குகின்றேன்.

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல். 

Tuesday, January 27, 2015

மாதிரிக் கதாபாத்திரங்களை தவிர்த்தல்



ஜெ,

வெண்முரசு நாவலின் இதுவரையில் அடைந்த வெற்றி என்ன என்று ஒரு நண்பர் கேட்டார்

இந்தமாதிரி கிளாஸிக்குகளை திரும்ப எழுதும்போது வரக்கூடிய சிக்கலே சில ஆர்கிடைப் அல்லது ஸ்டாக் கேரக்டர்களைத் தவிர்ப்பதுதான். ஆனால் கிளாஸிக்குகள்தான் அந்த ஆர்கிடைப்புகளை உருவாக்கி நம் கலாச்சார ஞாபத்திலே நிறுத்தி வைத்திருக்கின்றன. அவற்றை விடவும் முடியாது. அவற்றை உடைத்தால் கிளாஸிசமே இல்லாமலாகிவிடும்

உதாரணமாக trickster , wise old man இரண்டு கதாபாத்திரங்களையும் Carl Jung குறிப்பிடுகிறார். அவற்றை தவிர்க்க முடியாது. பெரும்பாலும் எல்லா கிளாஸிக்குகளிலும் அவர்கள் இருப்பார்கள். மகாபாரதத்திலேயே வியாசர், வசிஷ்டர், வைசம்பாயனர், பீஷ்மர், துரோணர் என்று ஏகப்பட்ட ஞானியான முதியவர்கள் இருக்கிறர்கள். சகுனி ஒரு தந்திரச்சதிகாரன்.

அந்தக்கதாபாத்திரங்களை நீங்கள் கையாண்டிருக்கும் விதம்தான் இதை நவீன கிளாஸிக் ஆக்குகிறது. தந்திரக்காரனாகிய சகுனிக்கு பல தளங்கள் கொடுத்து அவனை உயிருள்ள காம்பிளெக்ஸ் கதாபாத்திரமாக ஆக்கி அவன் டைப் கதாபாத்திரமாக அல்லாமல் ஆக்கிவிட்டீர்கள். வியாசரையும் மற்றவர்களையும் தவிர்த்து விட்டீர்கள். பீஷ்மர் துரோணர் இருவரையும் ஆசாபாசங்கள் கொண்ட மனுஷர் .களாக ஆக்கிவிட்டீர்கள்

அது பெரிய சாதனைதான். வாழ்த்துக்கள்

சண்முகம்


wise old man

வெளிச்சத்துண்டுகள் வழியாக...



ஜெ

வெண்முரசின் முக்கியமான சிறப்பம்சமே ஆங்காங்கே ஒரு கதாபாத்திரம் வந்து வெளிச்சத்தில் நின்றுவிட்டு இருட்டுக்குள் போய்விடுவதுதான். ஒருகதாபாத்திரம் வரும்போது மிக நுட்பமாக அதை நாம் பார்க்கிறோம். அது உடனே மறைந்து அடுத்த கதாபாத்திரம் வரும்போது நாம் முந்தைய கதாபாத்திரம் என்ன நினைக்கிறது என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். மீண்டும் அந்த கதாபாத்திரம் நேரில் வரும்போது அது கொஞ்சம் மாறுதல் அடைந்திருக்கிறது. அந்த மாறுதல் ஏன் நடந்தது என்பது நமக்கு புதிராக இருக்கிறது. அதை ஊகிப்பதுதான் வெண்முரசின் பெரிய சவால் என்று நினைக்கிறேன்

திருதராஷ்டிரன் வந்து வந்து போவதை வைத்து நானே அவரைப்பற்றி ஒரு அருமையான மனச்சித்திரத்தை உருவாக்கி வைத்திருக்கிறேன். அவர் மூர்க்கமானவர். அன்பானவர். மகன்களிடம் பெரும்பாசம் கொண்டவர். தவறுகளை ஏற்காதவர். தம்பியிடம் பெரும் பாசம் வைத்திருக்கிறார். ஆனால் ஒரு தாழ்வுணர்ச்சி அவரிடம் இருக்கிறது. கண் தெரியாதவர் என்பதனால். ஆகவேதான் சோதிடர்க்ள் சொன்னபோதும் அவரால் மகனை விடமுடியவில்லை.

இந்த அம்சம்தான் அவர் தன் மகனை நியாயப்படுத்தும் இடம் வரைச் செல்லவைக்கிறது என்று நினைக்கிறேன். அந்த அஸ்திவாரம் முன்னாடியே போட்டுவைத்திருக்கிறது

பிரபா சுந்தர்

அஸ்தினபுரியின் அரசு


ஜெ

வெண்முரசின் அரசியல் கட்டுமானத்தைப்பற்றி வாசித்தேன். அதிலுள்ளது அரசுகள் உருவாகி வந்த காலகட்டம் இல்லை என்று எனக்குத் தோன்றுகிறது. ஏனென்றால் எல்லா அரசாங்கங்களையும் அரச வம்சங்களையும் பற்றிய குறிப்புகளில் நீண்ட வம்ச வரிசை உள்ளது. இந்த வம்ச வரிசை மிக முக்கியமானது. இதுதான் உண்மையில் மகாபாரதம் பொய்யல்ல, நடந்த கதை, வரலாறு என்பதற்கான ஆதாரம். இத்தனை பெரிய வம்சவலைச்சிக்கலை சும்மா உக்காந்த இடத்தில் உண்டுபண்ணிவிடமுடியாது

ராமாயணம் வேண்டுமென்றால் ஆரம்பநிலையில் இருந்த கதையாக இருக்கலாம். மகாபாரதம் நடக்கும் காலம் சத்ருக்னனின் படையெடுப்பே வரலாறாகப் பேசப்படும் காலம். ஆகவே ராமன் என்ற இலட்சிய அரசன் வந்து விட்டான். கதை அதற்குப்பிறகுதானே ஆரம்பிக்கிறது. ஆகவே மகாபாரதம் நிலைத்துப்போன பழைய அரசுமுறைகள் மாறுவதன் கதை என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது

அஸ்தினபுரியின் கதை என்பது இந்த மாறிய சூழலிலே நின்று நிலைப்பதற்காக அது போராடுவதும் பாண்டவர்க்ள் என்ற யாதவகுலப்பின்னணி கொண்ட குடும்பம் அஸ்தின்புரியின் ஆட்சியை கைப்பற்றுவதற்காகப் போராடுவதும்தான். அந்த வரலாற்றையே நாம் பார்க்கவேண்டியிருக்கிறது

செம்மணி அருணாசலம்

காளியின் கால்கள்



ஜெ,

வெண்முரசை வாசிக்கும்போது ஒவ்வொரு முறையும் நீங்கள் திரௌபதிக்குப் பாதாதிகேச வர்ணனைதான் கொடுக்கிறீர்கள் என்பதைக் கவனித்தேன். காளியை அப்படித்தான் வர்ணிப்பார்கள். கேசாதிபாதம் என்பது பக்தியில். யோகமரபில் சாக்த மரபில் பாதாதிகேசம் . உங்கள் கேரள வளர்ப்புப்பின்னணியில் இது உங்கள் மனதில் பதிந்திருக்கலாம்

இப்போது வாசிக்கும்போது அவளுடைய வர்ணனைகளை மீண்டும் மீண்டும் கவனிக்கிறேன். மென்மையான கரிய கால்களுக்கு அளித்திருக்கும் ஏராளமான அழகான வர்ணனைகள் மனசை கொள்ளைக் கொள்கின்றன. காளிஸ்தவம் என்று நாராயணகுரு எழுதியிருக்கிறார். ஆங்கிலத்தில் சாகித்ய அகாடமி பிரசிரித்திருக்கிறது. அந்தப்பாட்டு அற்புதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். அது நினைவுக்கு வந்தது

காளியின் கால்கள் அழகானவை. சிவனின் நெஞ்சில் வைத்தவை. ஆலாலகண்டன் சூடிய மலர்கள் அவை

சுந்தரம்

அன்புள்ள சுந்தரம்

அது காளிநாடகம். மொழியாக்கம் வினய சைதன்யா

ஜெ

காளிகோயில்




அன்புள்ள ஜெமோ

திரௌபதியை மூலவிக்ரகமாகக் கொண்ட ஒரு கோயில் என்றுதான் பிரயாகையைச் சொல்லவேண்டும். அந்த தெய்வம் எப்படி அங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டது, எப்படி அது எழுந்தது என்று சொல்லும் ஒரு புராணம் அது.

சண்டிகை அதன்பிறகு ஐந்து தேவிகள் எல்லாமே அதன் அர்ச்சாவதாரங்கள் போல. அந்தத் தெய்வத்தினுடைய உத்சவம் கடைசியில் வருகிறது. கூடவே பெருந்தோழி. கடைசியில் கல்யாணக்காட்சி முடிந்து  மாயானக்கொள்ளையில் முடிகிறது.

யோசித்துப்பார்த்தால் எல்லாமே சரியாக இப்படி அமைந்திருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. திட்டமிட்டிருக்க மாடீர்கள். ஆனால் நமது மனசு இப்படித்தான் வேலைபார்க்கும் என்று நினைக்கிறேன்

அம்மனின் முன் சாதாரணமனிதர்கள் அவள் அருளைப்பெறுவதற்காக ஆடும் ஆட்டங்கள் கூட அலகு குத்தி காவடி எடுத்து போடும் சித்திரவதைகளைப்போலத்தான் இருந்தன

அம்மன் அனல் வடிவானவள். அக்னிகிரீடம் சூடி கோயில் கொண்டவள். உக்ர-சாந்த ரூபிணி

சுவாமி