ஒரு ஆறு ஓடிக்கொண்டு இருக்கிறது. அது சிறிது தூரத்தில் ஒரு பெரும் பள்ளத்தாக்கை நோக்கி பெரும் உயரத்திலிருந்து விழுகிறது. கற்பாறைகளை பொடிபொடியாக்கும் உயரம் கொண்டது. அதை மக்கள் அறிந்திருக்கிறார்கள். அதனால் மக்கள் அந்த ஆற்றில் இறங்கிக்குளிக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர். ஆனாலும் சிலர் கரையோரம் இறங்கி குளிக்கின்றனர் சிலர் துணிந்து ஆற்றில் சிறிது தொலைவு வரை நீந்தி குளிக்கின்றனர். ஆனாலும் ஒரு எல்லைக்கப்புரம் சென்றால் நாம் திரும்பிவருவதற்குள் நீர்வீழ்ச்சியில் விழுந்துவிடுவோம் என்பதை உணர்ந்திருக்கிறார்கள். ஒவ்வொருவர் திறனுக்கேற்ப ஒரு எல்லையை அவர்கள் குறித்து வைத்துக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் அந்த எல்லையை மனதில் இருத்தி அதை கடக்காமல் இருந்துவிடுகின்றனர். ஆனாலும் யாரோ ஒருவர் கவனக் குறைவாக அந்த இறுதி எல்லையக் கடந்து விடுகின்றார். அவரை ஆறு நீர் வீழ்ச்சி நோக்கி கொண்டு போகிறது. இனி அவரால் கரை திரும்ப முடியாது. மற்றவர்களாலும் காப்பாற்ற முடியாது. அப்போது தான் இனி வீழ்வது உறுதி என்பதை அறிகிறார். தன் முயற்சியெல்லாம் கைவிட்டு ஆற்றின் போக்குக்கு தன்னை ஒப்புகொடுத்துவிடுகிறார். வினோதமாக ஒருவர் அந்த வீழ்ச்சியை நோக்கி வேகமாக நீந்துவதுகூட சில சமயம் நிகழ்கிறது. அதற்கு தான் இறுதி எல்லையைக் கடந்துவிட்டதையும் இனி தன் வீழ்ச்சியைத் தடுக்கமுடியாது என அவர் அறிந்தது மட்டுமே அல்லவா காரணமாக இருக்க முடியும்?
மனித சமூகம் ஆயிரம் நெறிகளை வகுத்து வைத்திருக்கிறது. அனைத்து மக்களின் நல்வாழ்வுக்கு, தனக்கும் மற்றவருக்கும் இடையூறற்ற வாழ்வுக்கு, ஒருவருக்கொருவர் பூசல் வராமல் இருப்பதற்கு, இயற்கையை பாழ் படுத்தாமல் இருப்பதற்கு, மற்ற உயிருக்கு தீங்கு இழைக்காமல் இருப்பதற்கு என ஆயிரம் ஆயிரம் நெறிகளை நாம் கொண்டிருக்கிறோம். அதே நேரத்தில் ஒவ்வொரு மனிதனும் நெறிகளை மீறிச்செல்வதற்கான விழைவையும் கொண்டிருக்கிறான். நெறிகளுக்குள் இருப்பது என்பது ஒரு பாதுகாப்பு வளையம் . ஆனால் புதிய கண்டு பிடிப்புகள் புதிய தத்துவங்கள் புதிய மேம்பாடுகள எல்லாம் இந்த நெறிகள் சிலவற்றை மீறுவதன் மூலமே அடையப்படுகின்றன. ஆனால் பெரும்பாலான நெறி மீறல்கள் சுய நலம் சார்ந்தவை. இன்னும் இன்பம், இன்னும் வெற்றி, இன்னும் புகழ், இன்னும் செல்வம், இன்னும் அதிகாரம் என ஒருவன் நாடிச்செல்கையில் நெறி மீறல்கள் நடை பெறுகின்றன. மற்றவர்களின் நலன்களை மிதித்து பாழ்படுத்தி தன் சுயநல நோக்கை அடையச் செல்லும் குணம் மனிதர்களுக்கு இருக்கிறது. அப்படி ஒருவன் நெறிகளை மீறிச் செல்வதை சமூகம் தடுக்கப்பார்க்கிறது. அதைவிட ஒருவன் உள்ளத்தில் இருக்கும் அற உணர்வு அவனை அப்படிச் செல்வதற்கு எதிராக செயல்படுகிறது. அந்த மனத் தடையை தாண்டியே ஒருவன் ஒரு குற்றத்தைச் செய்கிறான். அவனுள் வாழும் அந்த அறத் தேவதையை ஏமாற்றி அதை பல காரணங்களை கற்பித்துக்கூறி அதன் கண்களைக் கட்டிவிட்டே தன் தவறுகளைச் செய்கிறான். தவறு செய்யும் ஒவ்வொருவனும் தான் செய்த தவறுக்கு ஒரு நியாயத்தைக் கூறுகிறான். அந்த நியாயம் பிறருக்காக மட்டுமில்லை. தன்னுள் வாழும் அறத் தேவதையை ஏமாற்றிச் சமாளிக்கவும்தான். தன்னைக் காத்துக்கொள்ளஎன்று, மற்றவர்கள் செய்வதுதானேஎன்று, இது அவ்வளவு பெரிய தவறில்லைஎன்று, நாடு, மதம் மொழி, சாதியின் பொருட்டென்று, வேறு வழியில்லைஎன்று, இப்படி செய்வது இயல்பானதென்று, தனக்கு இழைக்கப்பட்ட குற்றத்துக்கு பதிலாக பழி தீர்த்துக்கொள்வதற்கென்று, ஏதேதோ விளக்கங்களை சொல்லி அந்த அறத் தேவதையை குழப்பி தன் தவறுகளுக்கு நியாயம் கற்பித்துக்கொள்கிறான்.
இப்படி மனிதர்கள் தவறுகளைச் செய்தாலும் அவற்றுக்கு என ஒரு எல்லை ஒவ்வொருவர் மனதிலும் இருக்கிறது. இந்த இறுதி எல்லையைத் தாண்டினால் அவன் மனதில் வாழும் அறத்தேவதையை அவன் இழந்துவிடுகிறான். தன் வாழ்வதற்கு ஆதாரமான பெருமிதத்தை இழந்துவிடுகிறான். அதற்கப்புரம் அவன் தன்னையே மிகக் கீழானவன் என்று உணரத் தொடங்குகிறான். இனி அவன் செய்யும் தவறுகளுக்கு எவ்வித விளக்கங்களையும் சொல்லத் தேவையில்லை என ஆகிவிடுகிறது. தவறு செய்வதற்கான அனைத்து மனத் தடைகளும் அகன்றுபோன அந்நிலை, அவனை அவனே வெறுத்து கைவிட்டுவிட்ட நிலை. அந்த இறுதி எல்லையை ஒருவன் கடக்க உண்மையில் விரும்புவதில்லை. ஆனால் ஏதோ ஒரு கணத்தில், ஏதோ ஒரு வஞ்சம், கோபம், காமம் அல்லது இச்சை காரணமாக பெருங்குற்றமிழைத்து அந்த நிலையை அவனறியாமல் கடந்துவிட்ட பிறகு தனக்கு இனி மீட்பில்லை என்று அறிகிறான். அதற்கப்புரம் அவன் ஒருவகை தற்கொலை போல மேலும் மேலும் ஒருவித வெறியுடன் குற்றங்களைச் செய்கிறான். சமூகத்திற்கு அவன் ஒரு பகை என ஆகிறான். அவனை அழித்தொதுக்குவது ஒன்றே இனி சமூகம் செய்ய முடியும் என்ற நிலையை அவன் தோற்றுவித்துக்கொள்கிறான். முடிவாக சமூகம் அவனை கொன்றொழிக்கும்போதுதான் அவன் அந்த நிலையிலிருந்து விடுபட முடிகிறது. அதன்படி தன்னை அடக்கி சிறைபிடிப்பவனை அல்லது தன்னைக் கொல்பவனை அவன் மனதிற்குள் நன்றி சொல்லிக்கொள்வான் என நினக்கிறேன்.
நாம் படிக்கும்புராணங்களில் இந்த எல்லைக்கோட்டைக் கடந்தவர்கள் அசுரர் என வர்ணிக்கப்படுகின்றனர். அந்த எல்லைக்கோட்டை கடப்பதின் உளப் போராட்டங்களை அவை பெரும்பாலும் சித்தரிப்பதில்லை. இன்றைய கதைகளிலும் நாயகனைப்பற்றிதான் அதிகம் எழுதப்படுகிறது. ஆனால் ஒருவன் நல்லவனாக இருப்பதைப்பற்றி எழுதுவதற்கு ஒன்றுமில்லை. உண்மையில் அதிகம் எழுதப்படவேண்டியது எதிர் நாயகனைப்பற்றி, அவன் அந்த இறுதி எல்லையை கடப்பது என்பது மிகச்சிக்கலான உளவியல். மேலை மதங்கள் ஒருவன் இப்படி இறுதி எல்லையக் நோக்கி செலுத்துவது அந்த எல்லையை கடக்க வைப்பது சாத்தானின் வேலை என எளிமைப்படுத்திவிடுகின்றன. ஆனால் இந்திய மதங்கள் செயல்களைவிட இப்படி உள்ளம் போவதற்கான காரணங்களைப்பற்றி அதிகம் பேசுகின்றன. புராணக் கதைகளில் இப்படி இறுதி எல்லையை கடந்து நின்றவர்களை இறைவனே அவதரித்து அழிப்பதாக எழுதப்பட்டிருக்கின்றன.
தான் இந்த இறுதி எல்லையை கடக்காமல் ஒருவன் எப்படி தன்னைக் காப்பாற்றிக்கொள்கிறான் என்பதையும், அப்படியல்லாமல் ஒருவன் இறுதி எல்லையை கடந்துபோகும் உளவியல்சூழல்களையும், அப்படி இறுதி எல்லையக் கடந்தவனின் அதீதச் செயல்பாடுகளையும் வெண்முரசு பல்வேறு கதாபாத்திரங்கள் வழியாக நமக்கு விவரித்து வருகிறது. புஷ்கரன் இப்படி தன் உள்ளத்தை இறுதி எல்லையைக் கடக்க வைத்து தன்னுள் இருந்த அறத்த்தேவதையை முற்றாக இழந்தவன். அவன் கடந்த அந்த இறுதி எல்லை எதுவாக இருக்கும் என நினைத்துப்பார்க்கிறேன். அவன் தன் அண்ணனுக்காக உயிர் கொடுப்பதைப்பற்றி சிந்தித்தவன். அவன் உள்ளம் சிறிது சிறிதாக அந்த எல்லைக்கோட்டை நோக்கி நகர்வதை வெண்முரசு விவரித்தது. ஆனால் அதற்கு அவன் குலத் தலைவர்களின் ஆலோசனை, மனைவ்யின் தந்திரம் என்று கூறிக்கொள்ளலாம். அவன் நட்புறவு நாடி ஒரு அண்ணன் என்ற நேசத்தோடு வந்த நளனை சூதாட்டத்தில் தோற்கடித்து நளனையும் அவன் மனைவியையும் நாடு கடத்தும்செயலில் அவன் தன் இறுதி எல்லையை கடந்துவிடுகிறான். இதற்கப்புரம் அவன் செய்யும் அடாத செயல்களுக்கு எல்லாம் இதுவே காரணமென ஆகிறது. ஒருவகையில் புஷ்கரனின் ஒரு முக்கிய கூறு அந்தச் சூதாட்டத்தின்போதே இறந்துவிட்டது என்றுதான் கூறவேண்டும்.
துரியோதனன் மற்றும் கர்ணனும் தங்கள் இறுதி எல்லையக் கடந்தவர்களகவே எனக்குத் தோன்றூகின்றனர். துரியோதனன் இளம் வயதிலேயே பாண்டவர்களிடம் வஞ்சம் கொண்டுதான் இருக்கிறான். பீமனுக்கு நஞ்சூட்டீக்கொல்ல முயன்றதை அவன் எற்றுக்கொண்டான். பின்னர் பாண்டவர்கள் வாரணாவத எரிப்பு நிகழ்வு எல்லாம் பெருங்குற்றங்களே. ஆனாலும் அப்போது அவன் உள்ளம் எல்லை கடந்து போகாமல் அவன் தந்தை தாய் மனைவி போன்றோர் காப்பாற்றிவிடுகின்றனர். இந்தச் செயல்களுக்காக அவன் மனம் வருந்தியதை நாம் கண்டிருக்கிறோம். அவனை மீட்டெடுக்க தருமனின் மன்னிப்பும் பயன்பட்டிருக்கிறது. ஆனால் தருமனை சூதாட்டக்களத்தில் தோற்கடித்து அவன் நாட்டை வெல்வது ஒரு வீரன் என்ற வகையில் துரியோதனனை எல்லைதாண்டியவனாக உணரச் செய்கிறது. அதன் கார்ணமாகவே பாண்டவர்களை அடிமைகளாக்குவது திரௌபதி துகில் களைய முற்படுவது போன்ற செயல்களில் அவனை இறங்க வைக்கிறது, அப்போது வெகுண்டெழுந்து எதிர்க்கும் அஸ்தினாபுர பெண்களின் செயல்கூட அவனை மீட்க முடியவில்லை. துரியோதனன் இப்படி ஆவான் என எதிர்பார்க்கும் கர்ணனும் தன் நண்பனை இந்நிலையில் இருந்து மீட்க முடியாது என்றறிந்து தன் தோழனுடன் கைகோர்த்து அவனும் அந்த இறுதி எல்லையைக் கடந்துவிடுகின்றான். அவர்கள் அதற்கப்புரம் நிகழ்த்திய, இனி நிகழ்த்தப்போகும், அத்தனை செயல்களுக்கும் நாம் வேறு பொருள் கானவேண்டியதில்லை. திருதராஷ்டிரர் தன் மகனின் அடாத செயலுக்காக அவனைக் கொன்றிருக்கவேண்டும். ஆனால் பிள்ளைப்பாசத்தின் காரணமாக அவர் துரியோதனனை ஏற்றுக்கொள்ளும் செயல் அவரையும் தன் இறுதி எல்லையை கடக்கவைத்துவிடுகிறது. இனி அவர்கள் எடுக்கப்போகும் முடிவுகளைவைத்து முன்னர் அவர்கள் இருந்த நிலையுடன் நாம் ஒப்பிட்டுப் பார்க்கமுடியாது. ஏனென்றால் இப்போது இருக்கும் திருதராஷ்டிரன், துரியோதனன், கர்ணன் தன் இறுதி எல்லையைக் கடந்தவர்கள். அவர்கள் வீழ்வது ஒன்றே அவர்களின் மீட்புஎன ஆகும். அவர்களும் அதற்காகவே காத்திருக்கின்றனர் என்று தோன்றுகிறது.
தண்ட்பாணி துரைவேல்
ட்ர்ஹ