Thursday, June 30, 2016

அறமும் அவையும்




அன்புள்ள ஜெ

இப்பொழுதெல்லாம் - வெண்முரசு படிக்க பயமாக உள்ளது. தருமன் மற்றும் திரௌபதியின் வீழ்ச்சியை படிக்க மனம் அஞ்சுகிறது. முன்ன வெய்யோனில், துரியோதனுக்காக - அவன் படைப்பு போகும் அவமானத்திற்கு மனம் அஞ்சியது.

எப்படி ஒன்றின் பின் ஒன்றாக ஒரு பெரு வீழ்ச்சி நிகழ்கிறது என்பதும் - தருமன் தன்னை இழந்த பின் பதட்டம்  அடைவதும். அதன் பின் வரும் அபத்தங்களும் ஒரு புதிய பரிமாணங்களை பெருக்குகிறது.

ஒரு விதத்தில் சகுனி, போரைத் தவிர்த்து, துரியோதனனுக்கு அனைத்தும் வென்றளிக்கிறார். துரியோதனன் அறம்  மீறாமலிருந்தால், அது பாண்டவர்களை அதல பாதாளத்தில் தள்ளி இருக்குமோ? 

ஊசலை மறுபுறம் வேகமாக தள்ளுவது போல, விதியன்றோ துரியோதனனை வடிவமைக்கிறது.

தருமத்தின் வாழ்வதனை சூது கவ்வும் ; தருமம் மறுபடியும் வெல்லும் - என்பது ஒளி வடிவ கருத்து போலும் - எனில் இதன் இருள் வடிவம் என்ன?

தருமத்தின் வெண்மையில் அதர்மம் கருக்கும்  - அதர்மத்தின் அடர் இருளில் தர்மம் துளிர்க்கும்  (yin - yang வடிவம்),

மனதில் ஓடிக் கொண்டே இருக்கிறது. நிலை கொள்ளாமல் இருக்கிறது. அது உங்கள் எழுத்தின் அரிய சக்தி என்று தோன்றுகிறது 

அன்புடன் 
முரளி

பெண்களின் தருணம்

 
 
அன்புள்ள ஜெ

நிஜமாகவே பயந்து கொண்டிருந்தேன்.

இந்த தருணத்தை எப்படி நீங்கள் வடிக்கப் போகின்றீர்கள் என்று?

நான் எதிர்பார்த்த உக்ரகம் இல்லை.

ஆனாலும் மனது வலித்தது வழக்கம் போல இந்தத் தருணத்தை படிக்கும் போதெல்லாம்
ஏற்படுவது போல.

“அன்பினால் ஆற்றலிழக்கிறாள்”

இதை எதை வைத்து எழுதினீர்கள் என்று எனக்குத் தெரியாது.

ஆனால் ஒரு வரியில் சொல்லப் பட்ட உச்சக் கட்ட உணர்வை ப்ரதிபலிக்கும் வரிகள் அவை.

இந்த உண்மை ( ஆமாம்) இந்த உலகில் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் கோடிக்
கணக்கான பெண்களின் நிலை இது.

கோவிந்தன் ஆடை கொடுத்து மானம் காத்தான் என்பதே நான் அறிந்தது.

உங்கள் கோணம் அற்புதம்.

த்ரெளபதிக்கு ஆறுதல் அளித்த அத்தனை பெண்களுக்கும் கோடி கோடி நமஸ்காரம்.

வாழ்க பல்லாண்டு.

அன்புடன்
மாலா

ஆடை



அன்புள்ள ஜெ

இன்று மிகவும் அருமையாக இருந்தது. தரும - அதரும விளையாடல் பல தளங்களில் இருந்தது போல். 

மற்றவர்கள் கதை பாத்திரங்களா ? அல்லது படைக்களமா? 

கிருஷ்ணா (கிருஷ்ணை) ஓடி வர, மற்ற பெண்களும் வந்து சூழலாக - அதருமம் ஒங்கும் பொழுதெல்லாம்  - உள்ளிருந்து எழுந்த ஒளியாக தருமம் பிரகாசித்தது.

அதருமத்தின் நுனியில் தருமம் தழைக்க ஒரு துளி கருணை - ஈரம்.

மனம் நெகிழ்ந்தது. 

மிக்க நன்றி 

அன்புடன் முரளி

சபை


அன்புடன் ஆசிரியருக்கு,

இம்மூன்று நாட்களும்  பெருகி வந்த உளநிலை  இன்று விம்மலுடன் முற்று  பெற்றது. அன்னையென  எழுபவள் அடிபணிகின்றன அத்தனை  அறங்களும். "நில்லுங்கள்" என பீடம்  உரசி ஒலிக்க  விகர்ணன் எழும் கணம் அவனை கர்ணனாக காட்டினீர்கள். அவன் நானும்  தான்  என்றுணர்ந்தேன்.

துரியோதனனிடம் வெற்றியின்  தருக்கோ இறுமாப்போ வெளிப்படவில்லை. வெல்ல முடியாமையால் எழும் ஆற்றாமையே மேலோங்குகிறது. ஆம். அவள்  எவருக்கும்  உரிமையென ஆகவே முடியாது. காளிகன் காண்பது  கனிந்த அன்னை  துச்சாதனன்  காண்பது  முனிந்த அன்னை. மண்ணையும் மனையையும் மகளையும்  அன்னையென்றே கண்ட  நிலத்தின்  மைந்தன்  என நினைத்து  விம்முகிறேன். என் சிற்றூரை நோக்கும்  போதே  தெரிகிறது. பொது மகாகாளி மாரி திரௌபதி காளி அன்னபூரணி  என எத்தனை அன்னைகள்!
குழையவும் வெறுக்கவும் வெல்லவும் ஆண் கற்பது அன்னையிடம் தானே. அறத்திற்கும் பேரறத்திற்குமான மோதல் அப்பகடைக்களம். அத்தனை அன்னையரும் ஒன்றென்றாகி பேரன்னை என விரிகின்றனர்.  அவர்களை  ஒன்று திரட்டும்  விசையாய் நிற்கிறான்  குழலோன். 

காற்றினை தழுவ மட்டும் அனுமதிக்கும் பாறை. அவள்  கொற்றவை.
அன்புடன்
சுரேஷ் ப்ரதீப்

வெண்முரசு தளம்




அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நான் வெண்முரசின் தீவிர வாசகன். பெரும்பாலான வெண்முரசு அத்தியாயங்களை செல்பேசியில் வாசிப்பதுதான் எனக்கு வசதியாக இருக்கிறது. முதற்கனல் துவங்கி பன்னிரு படைக்களம் வரை பத்து அத்தியாயங்களுக்கும் குறைவாகவே நான் கணினியில் வாசித்திருப்பேன். மற்ற எல்லாமே செல்பேசியில் வாசித்ததுதான். வெண்முரசு இணையதளம் சார்ந்து எனக்கு சில யோசனைகள் தோன்றுகிறது. இது என் போன்ற செல்பேசி வழி வாசிக்கும் வாசகர்களுக்கும் தோன்றியிருக்கும் என்று எண்ணுகிறேன்.
வெண்முரசு அத்தியாயங்களின் நீளம் காரணமாக, அத்தியாயத்தை வாசித்து முடித்து மீண்டும் அத்தியாயத்தின் துவக்கத்துக்கு செல்வது சற்று சிரமமாக இருக்கிறது. “BACK TO TOP” என்ற சுட்டியை அத்தியாயத்தின் முடிவில் கொடுத்தால், மறுவாசிப்புக்கு மிக்க வசதியாகயிருக்கும். அதுபோல வெண்முரசு இணையதளத்தில் “தேடு” என்ற சுட்டி கறுப்பு நிறத்திற்குள் ஒளிந்திருப்பதால், அந்தச் சுட்டியையே தேட வேண்டியதாக இருக்கிறது. அதையும் கொஞ்சம் தெளிவாக்கினால் நல்லது.
இவையெல்லாம் சிறிய அசௌகரியங்கள்தாம். ஆனாலும், இவற்றைச் செய்ய சாத்தியமிருக்கும் பட்சத்தில் நிச்சயமாக அது வாசிப்புக்கு உதவவே செய்யும் என்பது என் தாழ்மையான எண்ணம். மிக்க நன்றி.
பணிவுடன்,
கணேஷ் பாபு
சிங்கப்பூர்

Wednesday, June 29, 2016

பெண்நிலை



அன்பின் ஜெ,
         வெண்முரசின் ஒரு முக்கிய தருணம்.
   "பெண்ணை உரிமைகொள்ள ஆணுக்கென்ன தகுதி? அறிவிலியே, அவள் கருவில் உறைகின்றது எதிர்காலம். எவரைப் பணயம் வைத்தான் இவன்? அவள் கருவில் பிருதுவும் பரதனும் யயாதியும் ராகவராமனும் மீண்டும் எழவிருக்கிறார்கள் என்றால் அவர்களும் கருவிலேயே அடிமைகள்தானா? அவர்களை இந்தப் பகடைக்களத்தில் வைத்தாட இவனுக்கு உரிமையளித்தது எந்த தெய்வம்? பிரம்மனிடம் படைப்பாடும் பெருந்தெய்வமா இவன்? பேதை! பெரும்பேதை!”
      எத்தனை நுட்பமான கூற்று.ஆம் இது பாஞ்சாலியின் கதை மட்டுமன்று.காலங்காலமாய் நிகழும் காட்சி.மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன்.தருமனும் சகுனியும் ஆடும் பகடைகளும் பாஞ்சாலியை அவைக்குள் இழுத்து வருவதும் பல வடிவங்களில் பார்த்த வாசித்த காட்சிகள்.நீங்கள் எப்படி கொண்டு வருவீர்களென்று நான் எண்ணியிருந்தேனோ ஏறத்தாழ அப்படியே வந்திருந்தது.மாயையும் கிருஷ்ணையும் அசலையும் எல்லாம் அவளே.ஒட்டுமொத்தமாக எல்லாப் பெண்ணும் ஏதேனும் ஒரு தருணத்தில் உணர்வதே.உலகின் எவ்விடத்திலும் பெண் உணர்வதே.இதனை மிகையாக உருவகிக்காமல் இயல்பாகவே கூற எண்ணுகிறேன் .பிலாக்கனங்கள் அல்ல.என்றென்றுமான மானுடத் துயரத்தின் ஒரு காட்சி.ஏன் இது என்ற வினாவிற்கு எவர் விடை கூற இயலும்.மிக வலுவான அத்தியாயங்கள்.என்னை இழுத்துக்கொண்ட வாசிப்பு.
நன்றி
மோனிகா மாறன்.

கௌரவர் சபை



ஜெ

இதை எப்படிச் சொல்வீர்களென ஒவ்வொரு நாளும் விதிர் விதிர்த்திருந்தேன்
கடுங்குளிரிலும் போர்வைக்குள் சுழலும் வெப்ப மூச்சென உள்ளே சுழன்று கனன்று காத்திருந்தேன் வாலையென, கன்னியென, மணவாட்டியென, அன்னையென அரசியென, கொற்றவையென, இருபாலுமற்ற ஆதி உயிரென....
அற்புதம் மாற்றென்று சொல்ல ஏதுமிலாதபடி நின்றாடுகிறீர்கள் களத்தில்...என் பாட்டன் பாரதியும் காணாத பார்வை.. வாழ்க....

கிருத்திகா ஸ்ரீதர்

தர்மம் முன்னரே



ஜெ

முதற்கனலில் சத்யவதி பீஷ்மரிடம் காசி இளவரசிகளை கவர்ந்து வர சொல்லும் போது பீஷ்மர் ஷத்ரிய தர்மம் மானுட தர்மத்தை மீறலாமா தெரியவில்லை என்கிறார்
மேலும் புராணங்களின் உண்மையாக அவர் சொல்வது பெண்பழி கொண்ட மண்ணில் அறதேவதைகள் நிலைப்பதில்லை என்கிறார்.

இன்று பகடைக் களத்தில் அவர் அத்தனைக்கும் நடுவில் இருப்பதைப் போல இருந்ததை இப்போது எண்ணுகையில் இதுதான் நடக்கக் கூடுமென்றும் அதில் தனக்கென பற்றேதும் கொள்ளாமல் இருப்பது போலவும் ஒரு தோன்றுகிறது.
மீனா

கிருஷ்ண ரகசியம்




உங்களுடைய மகாபாரத நாவல் வரிசையை தொடர்ந்து வாசித்து வருகின்றேன். மகாபாரதத்தில் ஒரு நிகழ்ச்சி இப்படி நடந்தது என்று காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் விசயங்களை எதார்த்தமாக எப்படி நடந்திருக்கும் என்று அதை மாற்றி எழுதிவிட்டு சூதர்கள் அதை எப்படி பாடினார்கள் என்பதன்மூலம் ஏற்கனவே அந்த விசயம் மற்றவர்களால் எப்படி சொல்லப்பட்டு வருகிறதோ அதையும் இணைத்திருப்பதை வாசிக்கையில் புதியவிதமானதொரு அனுபவம் ஏற்படுகிறது. குறிப்பாக கிருஷ்ணனைப் பற்றிய காலம் காலமாக கேட்டு வரும் அற்புத விசயங்களை (மலையை தூக்கினார்.... பாஞ்சாலிக்கு முடிவற்ற சேலையை கொடுத்து மானம் காத்தார்) போன்ற விசயங்களையும் அதே விதத்தில் எழுதியிருப்பதன் மூலம் கிருஷ்ணனை கடவுள் என்ற கோணத்தில் அனுகாமல் அவர் ஒரு மன்னன் என்ற கோணத்தில் எழுதுகின்றீர்களா என்று தெரிந்துகொள்ள விரும்புகின்றேன். பாஞ்சாலியின் துகில் உரியும் காட்சியை படிக்கும்போது அற்புதமானதொரு அனுபமாக இருந்தது. கிருஷ்ணனின் பெயரை சொல்லிக்கொண்டு அதே சமயத்தில் அற்புதத்தால் அல்லாமல் எதார்த்தமானதொரு முறையில் அவளுக்கு உடை கிடைத்துக்கொண்டே இருந்தது புதியவிதமாக இருந்தது. இருந்தாலும் ஏன் அது கிருஷ்ணனின் அற்புதமாக எழுதவில்லை என்று யோசிக்கும் போது அவரை நீங்கள் எப்படி அனுகுகின்றீர்கள் என்று தெரிந்துகொள்ள ஆவல் ஏற்பட்டது.     

நன்றி

பூபதி


அன்புள்ள பூபதி

கிருஷ்ணன் பாரதத்தின் மிகப்பெரிய மர்மம் என்று நடராஜ குரு சொல்வார். மர்மம் என்றால் மறைஞானம் சார்ந்த மர்மம். esoteric phenomenon. பக்தர்களின் ஒற்றைப்படையான ‘கடவுள்’ அல்ல. அரசன், ஞானி, காதலன், புரட்சியாளன், புதுயுகசிற்பி, ஆம் தெய்வமும் கூட.

எல்லா கோணத்திலும் ஒரேசமயம் கிருஷ்ணனைச் சொல்லும் முயற்சி வெண்முரசு.

ஜெ

பெண்ணில் நல்லாளோடு இருந்த பெருந்தகை:



பன்னிருபடைக்களம் – 86 ல் படைக்களம் வரையப்பட்ட அவையில் இருந்த ஒவ்வொரு ஆணின் இடப்பாகத்திலும் அவர் தம் பெண் முன் தருக்கி எழும் கீழ்மையின் பருவடிவம் என பேருரு கொண்டு எழுந்து நின்ற மகிடன் இறுதியாக விகர்ணனிடம் வருகிறான். அவனிடம் தன்னை விட்டு விலகிச் செல்லுமாறு கெஞ்சும் விகர்ணன், இறுதியாக உன்னை எவ்வாறு வெல்லுவது என்று கேட்கிறான். அதற்கு மகிடன், “என்னைக் கடப்பதற்கு வழி ஒன்றே. என்னிடம் போரிடாதே. துளிக்குருதி சொட்டினாலும் ஒன்று நூறெனப் பெருகும் ஆற்றல் கொண்டவன் நான். என்னை வென்றவன் பெண்ணில் நல்லாளுடன் இருந்த பெருந்தகை ஒருவனே. தன்னைப் பகுத்து பெண்ணென்றான தாயுமானவன் அவன். உன்னை இரண்டெனப் பகுத்து என்னை எதிர்கொள்!பெண்ணென்றா?” என்று அவன் கேட்டான். ஆம். உன் முலைகள் ஊறவேண்டும். கருப்பை கனியவேண்டும். அன்னையென கன்னியென மகளென என்னை நீ தொடவேண்டும். என்னை வென்று கடக்க வழி என்பது ஒன்றே. ஆணென நின்று நீ கைக்கொள்ளும் அத்தனை படைக்கலத்திலும் எழுவது உனது கீழ்மை. கீழ்மைக்கு முன் ஆடிப்பாவையென பெருகி நிற்பது எனது வலிமை.

பெண்ணை வென்று கீழடக்க எண்ணும் கீழ்மை மாற பெண்ணை பெண் என்றே ஆகி எதிர்கொள்ளச் சொல்லும் வெண்முரசு தருவது ஒரு வாழ்க்கைத் தரிசனம். இதற்கும் பெண்ணை தாயாக, சகோதரியாகப் பார்க்கச் சொல்லும் அறவுரைகளுக்கும் என்ன வித்தியாசம்? “அன்னையென கன்னியென மகளென என்னை நீ தொடவேண்டும்.” – என்றே சொல்கிறது வெண்முரசு. அது பெண்ணின் எந்நிலையையும் விலக்கவில்லை. கன்னியாகவும் பெண்ணைத் தொடு, ஆனால் நீயும் ஒரு கன்னி என்று ஆகித் தொடு என்கிறது. அதுவும் முழுப் பெண்ணாக அல்ல, பாதி பெண்ணாக மாறு என்கிறது. எப்பேர்பட்ட அறைகூவல்!!! இன்றைய தேதிக்கு நம் மைந்தர்களிடம் நாம் சொல்ல வேண்டியது இதைத் தான். அர்த்தநாரீஸ்வரன் என்பதை ஒரு மிகப் பெரிய ஆழ்படிமமாக நம்மை உணர வைக்கிறார் ஜெ.

இப்படி ஒரு ஆணால் பெண்ணைக் கொஞ்சமேனும் உணர இயலுமென்றால் அவன் வாழ்வு எப்படி இருக்கும்? அனைவராலும் பெண்ணன் என்று எள்ளி நகையாடும் படியா? இல்லை, அதற்குப் பதிலை திருஞான சம்பந்தர் தருகிறார்.

மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலை,
கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப் 
பெண்ணில்நல் லாளொடும் பெருந்தகை இருந்ததே.

“எண்ணிப்பார்க்கையில் அப்படிப்பட்டவனின் நல்ல கதிக்கு எந்த குறையும் இல்லை. அவன், காணும் இடங்களில் எல்லாம் நல்லவை தோன்றும் வளம் நிறைந்த சீர்காழி நகரில் வாழ்வாங்கு வாழும், ஒரு பெண்ணில் இருக்கச்  சாத்தியமான நல்லாளை அடைந்த பெருந்தகை (தாயுமான மாதொரு பாகன்) போன்று இம்மண்ணில் எந்நாளும் நல்ல வண்ணம் வாழலாம்.” – இப்பாடலின் முக்கியமான வரியே ‘பெண்ணில் நல்லாள்’ என்பது தான். பெண்களில் நல்லாள் – பெண்களில் சிறந்த பெண் என்று சொல்லியிருக்கலாம். ஆனால் பெண்ணில் நல்லாள் என்கிறார் சம்பந்தர். அப்படி ஒரு நல்லாளை ஒரு பெண்ணில் கண்டடைந்ததால் தான் அவன் பெருந்தகை!! எப்பெண்ணிலும் நல்லாளை அடைய வழி சொன்ன ஞான சம்பந்தரை மேலும் நெருங்கி துலக்கிய வகையில் பன்னிருபடைக்களத்தின் உச்சம் தூய இருளில் துலங்கும் தீபமாகிறது.

மகிடன் வாயிலாகச் சொன்னது ஒரு தரிசனம் என்றால், அதை ஏற்றுக்கொள்ள, கைக்கொள்ள இயலாத விகர்ணனின் நிலை நிதர்சனம்!!! கொஞ்சமேனும் மாதொருபாகனாக ஆக இயன்றால் சுவாதிகளும், வினுப்ரியாக்களும், வினோதினிகளும் உயிரோடு இருந்திருப்பார்கள்.

அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்

Friday, June 3, 2016

சிக்கல்கள்

கசங்கிய பட்டுச் சேலையை நீவி நீவி விரித்தெடுப்பது போல ஜெ மகாபாரதத்தின் விளங்க முடியா சிக்கல்களை நீவி நீவி சிக்கெடுத்துக் கொண்டிருக்கிறார். சூதாட்டத்திற்கு திருதாவிடம் அனுமதி வாங்க விதுரரே செல்கிறார். ஏன் விதுரர், பீஷ்மர் உட்பட ஒவ்வொருவரும் அதற்கு அனுமதியளித்தனர் என்பதற்கு விடை பன்னிருபடைக்களத்தின் விருச்சிக மாத அத்தியாயங்கள். ஜராசந்தனின் வருகையையும், அவன் கொண்ட பேருருவையும் அதற்கான முழு நியாயத்தையும் வெண்முரசு செய்து விட்டது. இதோ குருஷேத்ரம் ஒருங்கி விட்டது. அது தவிர்க்கப்படவே ஒவ்வொருவருமே முயன்று கொண்டிருக்கப் போகிறார்கள். எண்ணற்றோர் குருதி வீழ்வதைத் தடுக்கவே ஒவ்வொரு சிறு சிறு அறப் பிழைகளையும் அனுமதிக்கப்போகிறார்கள். ஆம், மிகப்பெரிய அறத்தில் இருந்தே மாபெரும் தீமை கிளைத்தெழ இயலும் இல்லையா!!!

அருணாச்சலம் மகராஜன்

Thursday, June 2, 2016

முதுமையின் முகங்கள்

எப்போதெல்லாம் கையறு நிலையில், தன் அனைத்து அரசு சூழ்தல் அறிவும் திகைத்து நின்று விதுரர் தவிக்கும் போதெல்லாம் இதெல்லாம் ஒன்றுமே இல்லை என்பது போல மிக எளிமையான தீர்வுகளை எடுத்தளிக்கும் சுருதையை மீண்டும் சந்தித்தது இரு நாட்களாக இருந்து வந்த ஒரு உளச் சோர்வில் இருந்து அபாரமாக என்னை மீட்டது. ஒரு வகை ஆசுவாசம். எனக்கே இப்படி என்றால், விதுரருக்கு!!! மிகச் சரியாகத் தான் விதுரர் சொல்கிறார் - "முப்பதாண்டுகாலமாக இந்நகரின் அரசியலில் முதன்மை முடிவுகள் அனைத்தையும் இச்சிறுமாளிகைக்குள் இருந்து எடுத்துக் கொண்டிருக்கிறாய்."

"காமம் அணைந்த பின்னர் அவர்களுக்குள் விழிநோக்கிப் பேசுதலும் உடல்தொடுதலும் மிகவும் குறைந்துவிட்டிருந்தது..........." எனத் துவங்கும் ஒரு பாராவில் ஒரு முழு வாழ்வையுமே சொல்லத் தனி அருள் வேண்டும். இறுதியாக சுருதையின் கையைத் தன் கைக்குள் வைத்துக் கொண்டு அவர் நெகிழும் அந்த காட்சி தந்த பரவசம், ஆஹா!! என்ன இருந்தாலும் தனக்கென ஒரு ஆன்மா இருப்பதன் பேரின்பம் அடைந்தவன் தானே மண்ணில் வாழ்ந்தவனாகிறான். என்ன ஒரு அருமையான தாம்பத்யம்!! என்ன ஒரு எழுத்து வன்மை!! அபாரம் ஜெ. 

வயதானாலும் அவர்களுக்குள் எந்நாளும் இருந்துவரும் அந்த ஒளித்து விளையாடும் விளையாட்டு மட்டும் போகவே இல்லை. எது முதலில் இருந்ததோ அதுவே கடைசி வரை எஞ்சும் போலும்!! 

அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்

அரசுசூழ்தலும் விடுதலையும்:


விதுரரின் கனவுகளில் சத்யவதி, அம்பிகை, அம்பாலிகை, மூவரும் வந்துகொண்டே இருக்கிறார்கள். இவரைப் போலவே அரசுசூழ்தலில் ஒவ்வொரு நொடியும் ஈடுபட்டவர்கள். அதற்கென்றே தன் வாழ்க்கையைச் செலவிட்டவர்கள். ஆனால் அனைத்தையும் ஒருகணத்தில் அறுத்துக்கொண்டு சென்றவர்கள். இன்று அந்தப்பட்டியலில் சுருதையும் சேர்ந்திருக்கிறாள். ஒருவகையில் அவர்களைப்போலவே அறுத்துக்கொண்டு செல்லும் விதுரரின் ஆழ்மன ஆசையே அவர் கனவுகளாக வெளிப்படுகிறது போலும். ஆனால் அவ்வாறு விதுரரால் வெளியேற முடியாது என்பதை சுருதை அறிந்திருக்கிறாள். அதனாலேயே "எதுவும் நம்மிடமில்லை" என்றும் "எதிலும் முட்டிக்கொள்ளாதீர்கள்" என்றும் சொல்கிறாள்.

அரசுசூழ்தலில் ஈடுபடும் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒருகணத்தில் அடையும் சலிப்பை வெண்முரசு விவரித்துக்கொண்டே வருகிறது. விதுரருக்கு அவ்வளவு விரைவில் மீட்பு நிகழப்போவதில்லை. ஆம் "இன்னும் நெடுநாட்கள் இருக்கிறது". இன்றைய அத்தியாயத்தில் மனைவியின் இறப்புச்சடங்கு நிகழும் நேரத்தில் கூட அரசர் நிலையழிந்தது குறித்தும் பிதாமகருக்குச் செய்யவேண்டிய முறைமைகளைப் பற்றியுமே சிந்திக்கமுடிகிறது அவரால். விதுரர் பாவம்தான்

திருமூலநாதன்

அந்தச் சாளரம்:



சுருதை அன்னையின் மறைவு மிக முக்கியமான ஒரு நிகழ்வு. விதுரர் என்னும் மனிதர் வெறும் அமைச்சராக மட்டுமே எஞ்சப் போகும் நிகழ்வுக்கான அச்சாணி. இன்று விதுரர் தன் தாய் சிவை உட்கார்ந்து வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த அந்த சாளரத்தைத் திறக்கிறார். எதிலிருந்து அவர் விலகி ஓடிக் கொண்டிருந்தாரோ, எதில் சென்று அவர் விழுந்து விடக் கூடாது என சுருதையன்னை இத்தனை காலமும் தடுத்துக் கொண்டிருந்தாரோ அதில் சென்று தானாகவே விழுகிறார். வாழ்வின் வெறுமை!! எத்தனை கொடிது!! ஆனால் எத்தனை இனியதும் கூட அல்லவா? அந்த சாளரம் ஒரு வாசல். அதன் ஒரு புறம் உலகம் என்று ஆக்கி, நம்மால் உணர்ந்து நடிக்கப்படும் நிகழ்காலம்; மறுபுறம் காலமென்றே ஒன்று பொருளாகாத, இன்றும், நேற்றும், நாளையும், இருக்கும் அனைத்தும் ஒரு குமிழியாக உருவாகி, வெடித்து சென்று கொண்டிருக்கும் ஒரு பேரொழுக்கு. அப்பேரொழுக்கில் எதற்குத் தான் பொருள் உண்டு... பொருள் என்பதே நிலைத்த ஏதோ ஒன்றைச் சார்ந்து விளக்கப்படுவது தானே!! சார்ந்திருக்க ஒன்றுமே இல்லாத ஒழுக்கு அல்லவா அங்கு இருக்கிறது. அந்த ஒழுக்கைத் தானே விதுரரின் அன்னை சிவை கண்டுகொண்டே இருந்தார். சம்படை அன்னையும் அதையே தான் கண்டு கொண்டிருந்தார் அல்லவா!! கிருஷ்ணன் கூட சம்படை அன்னையிடம் பேசிய பிறகு அவ்வொழுக்கைத் தானும் முற்றறிந்திருக்கக் கூடும். 

அங்கு சென்று அமர்ந்து இவ்வுலகத்தவர் அனைவரையும் கடந்து நின்று பார்ப்பது என்பது மனதை அழிப்பதே!! மனம் அழிவதையே, எண்ணம் என்ற ஒன்று இல்லாமல் ஆவதே சிறந்த தவம் அல்லவா. அதுவே பேரின்பம்!! அதுவே அச்சாளரத்தில் ஒரு முறை அமர்ந்தவரை மீண்டும் மீண்டும் அங்கே வர வைக்கிறது, இறப்பின் இறுதிக் கணம் வரை! விதுரருக்கு அவ்வெண்ணம் வந்து விட்டது என்பதை மைந்தர்கள் உணர்ந்து கொள்கிறார்கள். எனவே தான் அவரை இனி இல்லத்திற்கே வர வேண்டாம் என்று கூறுகிறார்கள். காலமெல்லாம் வேலை, அலுவல்கள் என்று ஓடினாலும், இறுதியில் மனமெல்லாம் எது இருந்தது, எது எஞ்சுகிறது என்பது என்றைக்குமே ஆண்களுக்கு புதிர் தான் போல!!! விதுரருக்கு என் ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னையின் ஆத்மா நிச்சயம் மாமங்கலைகளின் உலகில் ஒரு பெரிய அரியணையில் அமர்ந்திருக்கும் என்றே நம்புகிறேன்!!

அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்