Thursday, April 27, 2017

நகைகள்



ஜெ

இரண்டு மனநிலைகள் மிக நுட்பமாக வெளிவந்துள்ளன. அவற்றை நான் மட்டும்தான் கவனித்தேனா என்று சந்தேகப்படுகிறேன்

தேவயானி நகைகள் செய்வது இயற்கையை பிரம்மனை இழிவுசெய்யும்  மனிதனின் திமிர் அல்லது அறியாமை என்று நினைக்கிறாள். அதன்பின்னர்தான் அவள் அனைத்தையும் துறந்து காட்டுக்குச் செல்கிறாள்

யயாதி நேர்மாறாக நகைகள் செய்பவர்களைப்பார்த்து பிரம்மன் மகிழ்ச்சி அடைவான். அவர்கள் தந்தையை நடிக்கும் மைந்தரைப்போல என்று நினைக்கிறான்

இந்த இருமனநிலைகலும் ஒன்றொடொன்று தொடர்பு கொண்டவை. இருவர் இருநிலைகளில் பார்ப்பவை. இருவரில் நிலைகளை காட்டுபவை என தோன்றியது

ஆர், மகாதேவன்

உறக்கம்



வெறும் நல்லுறக்கத்தால் தீர்வன என்றால் உளச்சிடுக்குகளுக்கு உண்மையிலேயே என்னதான் பொருள்?

ஜெ

சிலசமயம் வெறும் காமன்சென்ஸ் சார்ந்த ஒருவரி ஒரு அடியைப்போட்டுவிட்டுப்போகும். அத்தகைய வரி இது.பலமுறை நான் இதை உணர்ந்திருக்கிறேன்  அதை இந்தவரியை வாசிக்கும்போது உணர்ந்தேன் ஒரு பெரிய திகைப்புதான் வந்து என்னைச்சூழ்ந்துகொண்டது

ஜெயராமன்

மௌன வாசகர்கள்



இனிய ஜெயம்,

ஒரு முறை  நமது விஷ்ணுபுரம் விருது விழாவில் சுரேஷ்குமார் இந்திரஜித் அவர்களை அறிமுகம் செய்து கொண்டு  அவரது கதைகள் குறித்து பேசினேன். [ சுரேஷ்குமார இந்திரஜித்  உயிர்மையில் தொடர்ந்து கதைகள் எழுத துவங்கி இருக்கிறார் . ]

அவர் ''நீங்க ஏன் வந்து சந்திக்கல?''

நான் '' தெரியல. இப்படி சொல்லலாம்  ஒவ்வொரு எழுத்தாளருக்கும் நூறு வாசகர் உண்டு என்றால். எழுத்து உரையாடல் சந்திப்பு வழியே அந்த எழுத்தாளரை ஒரு எழுபது பேர் தொடர்பு கொள்வர். மீதம் முப்பது பேர் நிலை? அவர்களும் அந்த எழுத்தாளரின் வாசகர்கள்தான் , எழுத்தாளர் ஒருபோதும் அறிய வராத அவர்களை 'மௌன வாசகர்கள் ' என்று சொல்லலாம். நான் உங்களின் 'மௌன வாசகர்களில் 'ஒருவன்.

இந்திரஜித் மெல்ல சொல்லிப் பாத்தார் ''மௌன வாசகர்கள் '' முகம் மலர்ந்து புன்னகைத்து என் தோளை தட்டினார். 

இப்படி  உங்கள் வாசகனாக ஒரு போதும் உங்கள் அறிதல் வட்டத்துக்கு வராத, இனியும் வரவே போகாத ஒரு பத்து பேரையாவது நான் அறிவேன்.  நெல்லை துணிக்கடையில் இருந்து ஒரு வாசகர்.  இணையம் வழி அல்லாமல், வெண் முரசு வரிசையை நூல்கள் வழி வாசிப்பவர்.  வெய்யோன் முடிந்ததும் இணையத்தில் தொலைபேசி எண் கண்டடைந்து பேசினார். 

நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தோம்  .'' சே எப்படி ஆயிட்டு பாத்தீளா ..  கத முடிஞ்சிட்டு.. புஸ்தவத்த வெக்க ஏலாம .. கைல கொண்டிட்டே லாந்திக்கிட்டு இருக்கேன்..பாத்துக்கிடுங்க '' 

நான் ஜெயமோகன் எண் தருகிறேன் அவருகிட்ட பேசுங்க என்றேன்.  அவர் மறுத்து விட்டார்  அவர்க்கு அங்கே இது குறித்து பேச யாரும் இல்லை. தேடி இந்த எண்ணை அடைந்து பேசினார். அது போதும் என்றுவிட்டார். சார்கிட்ட என்னத்த பேச ஒண்ணுமே புரியாதே..இத ஒத்த ஒரு மனுஷன் எழுதிக்கிட்டு இருக்கான் அப்டிங்கறதே நம்ப முடியல இன்னும் எனக்கு, நான் அவர்கிட்ட என்னத்த பேச   அவரது எண் மட்டும் இருக்கிறது என்றேனும் அழைப்பார் என காத்திருக்கிறேன். 

உங்கள் பிறந்த நாள் அன்று திருப்பூரில் எளிய பணியில் இருக்கும் , பள்ளி வாசிப்பு சூழல், இலக்கிய வாசிப்பு சூழல் அருகிய சூழலால் தயக்கமாக உரையாடும் உங்களின் வாசகர் சுந்தரவடிவேலன் பேசினார். 

தயங்கி தயங்கி பேசினார். மொபைல் வழியே உங்கள் பிளாக் மட்டும் பல வருட பழக்கம் அவருக்கு.  ஆ மாதவன் விழாவுக்கு வந்து கூட்டத்தில் ஒருவராக நின்று உங்களை வேடிக்கை பார்த்துவிட்டு சென்றிருக்கிறார்.  இலக்கியம் சார்ந்து எந்த அறிமுகமும் இன்றி  சுப்ரபாரதி மணியன் பேச்சு வழியே உங்கள் தளம் வந்தவர்.   இதன் பல தீவிர தளங்கள் புரியா விட்டாலும் அதிலேயே அதற்க்கு இருக்கும் உரையாடல்களை தேடி வாசிக்கிறார்.  பெரிய ஒன்றின் முன் நிற்கும் பணிவும். தான் ஒரு நுட்பமான வாசகன் அல்ல என்ற துணுக்குறலும் கொண்ட தயங்கிய பேச்சு. 

நான் கடலூர் சீனு என்றறிந்ததும் அடுத்த வினாடியே கட்டுக்கள் தளர்ந்து ஆசுவாசம் ஆனார். உங்கள எனக்கு ரொம்ப ரொம்ப தெரியும் மாதிரி ஒரு உணர்வு என்றார்.  தயங்கி தயங்கி விஷயத்துக்கு வந்தார். அவரிடம் பழைய மாடல் நோக்கியா கவர் பிரிக்காமல் புத்தம் புதிதாக இருக்கிறது  அதை உங்களுக்கு பரிசளிக்க விரும்பி இருக்கிறார். ''அவருக்கு ஏதாவது தரணும்னு ஆசையா இருக்கு .இதை அனுப்பின்னா சார் ஏதும் தப்பா எடுத்துக்குவாங்களா '' என வினவினார். 

எனக்கு சட்டென கண் கலங்கி விட்டது. வள்ளுவர் குறளை சொன்னேன். விஷமே ஆகிலும் உபசரிப்பை புறக்கணிக்காத மேன்மை குறித்து சொன்னேன். ஜெயமமும் அப்படிப் பட்டவர்தான். நம்பர் தரேன் அவர் கிட்ட பேசுங்க ,உங்க பரிசு என்ன உங்க குரலை கேட்டா போதும் அவர் ரொம்ப சந்தோஷப் படுவார் என்றேன். 

சுந்தர வடிவேலனும் உங்களது பல மௌன வாசகர் போல தயங்கி  மறுத்து விட்டார். பரிசை அனுப்ப உங்கள் முகவரி மட்டும் கேட்டார் தந்தேன். அதில் உங்கள் கைப்பட ஒரு கடிதம் எழுதி ஜெயம்முக்கு அனுப்புங்க என்றேன். அய்யய்யோ அவருக்கு எழுத எங்கிட்ட என்னங்க இருக்கு என்றுவிட்டார். 

பரிசு வரும். வந்தால் அந்த பரிசின் வழியே முதலில் அந்த வாசகரை அழைத்து பேசுங்கள்.  தயங்கி தயங்கி இறுதியாக அவர் அந்த பரிசை உங்களுக்கு அனுப்பா விட்டால்...

சுந்தரவடிவேலன்  என்றொரு மௌன வாசகர் உங்களுக்கு இருக்கிறார் என்பதை இந்த மடலின் வழி அறிந்து கொள்ளுங்கள். 

கடலூர் சீனு

வாசக எதிர்வினை






ஜெ

விஷ்ணுபுரத்தில் ஆரம்பித்து மாமலரின் நேற்றைய அத்தியாயம் வரை உடன் பயணித்தாலும் கடிதம் எழுதவேண்டும்  என்ற எண்ணம் வரவில்லை .தூரத்தில் இருந்தபடியே ரசித்துக்கொண்டிருக்கலாம் என்றுதான் இருந்தேன்.என் மனைவி அறம்,வெண்கடல் மேலும் நீலம் படித்ததில் இருந்து தினம் ஒரு தடவையாவது உங்களைப்பற்றி பேச்சு வந்துவிடும்.சென்னையில் வெண்முரசு வெளியீட்டு விழாவிற்கு சென்றாகவேண்டுமென அடம்பிடித்து என்னையும் அழைத்துக்கொண்டு வந்தார்.

இன்று உங்களுக்கு பிறந்தநாள் என்றவுடன் வாழ்த்து சொல்லியாகவேண்டுமென்று கூறிவிட்டார்.

நீண்டநாட்கள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறோம்

        --அங்கம்மாள் மற்றும் சிவசுப்பிரமணியன்

Wednesday, April 26, 2017

எரிமலர்



அன்புள்ள ஜெ

எரிமலர்க்கிளை படிக்க தோல் கூசியது. என்ன ஒரு உக்கிரமான உணர்வு !

அம்பை, கர்ணன், துருபதன், துரோணர் என்று பல அவமதிப்பின், சுயவெறுப்பின் சித்திரங்கள் வந்துள்ளன. ஆனால் இது வேறு ஒரு ரகம். அவளே சொல்வதுபோல குருதிச்சுவை. கிராதத்தில் அது படைப்பூக்கத்தின் சுகம் என்றால் இதில் வலி.

இதையெல்லாம் அனுபவிக்காத மனிதர்களே இருக்கமாட்டார்கள். ஆனால் சர்மிஷ்டையின் மகன்களிடம் பேரன்னையாக வெளிப்பட்டு பின் தனிமையில் வெளிவரும் அமிலம். பேரலை ஒன்று பின்வாங்கி திருப்பி அடிப்பது போல...அதுவே இதை காவியமாக்குகிறது. 

தேவயானி என்ற அழகிய இளம் காதலி இன்று வேறு யாரோ...வண்டு தன்னில் மட்டும் தங்கும் என்று எண்ணியிருந்த மலர். காமம் அகன்றபின் சுருண்டு வாடுகிறது. கசனின் சொற்களில் வெறும் பெண்ணென நிலம் ஒட்டிக் கிடக்கிறாள்.

சாயை காணும் காட்சியின் சித்தரிப்பு - சீப்பு போல பாலத்தின் கால்கள் - வேறொரு காட்சியுடன் சேர்ந்துகொண்டது. 

முன்னர் தேவயானியின் கனவில் யயாதி அம்புவிட்டு நீரை நிறுத்தியிருக்கிறான். சீப்பு போன்ற அம்புகளில் குப்பைகள் சேர்ந்து நீர் நின்றிருக்கிறது. இன்று பாலத்தின் சீப்புக்கால்களை அரித்துக்கொண்டு நீர் பெருகி ஓடிக்கொண்டிருக்கிறது. நுரைக்கும் நீரைப் பார்த்து சாயைக்கு முதுமை நினைவு வர சிரித்துக்கொள்கிறாள்.
 
மது

மலரிதழ் கரவுகள்

 
 
அன்புநிறை ஜெ,

நமது பள்ளி பாடத்திட்டங்களில் ஆளும்கட்சியை சேர்ந்த சிலரின் வாழ்க்கை வரலாறு பாடமாக சேர்க்கப்படுவதும் ஆட்சி மாறும் போது அவை நீக்கப்படுவதும் நமது சாபங்களில் ஒன்று (தலைவர்கள் என்றோ ஆளுமைகள் என்றோ மாணவர்கள் கற்பதற்கு தங்கள் வாழ்வில் எச்சாதனைகளும்  இயற்றாதவர்களைக் குறிப்பிடுகிறேன்) . இவற்றைப் படிக்கும் மாணவர்கள் தவறான ஒரு வரலாற்றை கற்கிறார்களே என வருத்தமாக இருக்கும். நவீன ஊடகச் சூதர்கள் உருவாக்கும் பிம்பங்கள் வேறு.
ஆனால் அந்தக் காலகட்டத்தில் ஒரு உன்னதமான காவியம் எழுதப்படும் எனில் வரலாற்றில் வலி மிக்கவர் செய்யும் சந்திப்பிழைகளும் ஒட்டுண்ணியெனப் பெருகும் ஒற்றுப் பிழைகளும் திருத்தப்படும். 
காவியங்கள் வாயிலாக சரித்திரங்கள் திருத்தி எழுதப்படும், காலங்கள் தாண்டி வாசிக்கப்படும்.
//நாளடைவில் மேலோரின் கீழ்மைகள் மட்டுமே ஊழியர்களின் உருவங்களாகின்றன. அருள்வடிவாக பேரரசி தோற்றமளிக்கையில் அவர்களின் கொடியமுகம் அணுக்கத்தோழி சாயையின் வடிவில் வெளிப்படுகிறதென்பதை அறிந்திருப்பீர்கள்// 
சமீபத்திய அரசியல் நாடகங்களைக் இயல்பாக விளக்கி இடக்கையால் புறந்தள்ளி முன்நகர்கிறது வெண்முரசு. 

முதல் வாசிப்பில் காணத் தவறும் சில ஆழங்கள் மீள்வாசிப்பில் மேலெழுந்து வருவது பலமுறை நிகழ்வதே. ஆயிரம் இதழடுக்கில் மாமலர் கரந்திருக்கும் தேன்.

இன்று நண்பர்களுடனான மறுவாசிப்பில் கணேஷ் ஒன்றைக் குறிப்பிட்டார். மாகேதர் கொணரும் ஏழு புலிக்குருளைகளில் ஒன்று தேவயானி விரல்களால் அழுத்த சினம் கொண்டு சிறுகால் வீசி அறைய முற்படும் போது, 'கொடிவழியின் ஏழாவது மைந்தனே அரசன் என முடிசூடி அரியணையமரும் ஊழ்கொண்டவன்' என்ற நிமித்திகர் கூற்றைக் குறிப்பதாக உணர்ந்தார். முதல் வாசிப்பில் தவறிய நுண்மையிது. 

மீள்வாசிப்பில் மீட்டிய மற்றுமொரு வரி. பின்வருநிகழ்வை முன்னோட்டமென ஒற்றை வரியில் கோடிட்டுச் செல்கிறீர்கள்: 
//தேர் தோரணவாயிலை அணுகியபோது சரளைக்கற்களுடன் மண்கலந்து விரித்து நீர்தெளித்து கல்லுருட்டி இறுக்கிய புதிய தேர்ப்பாதையில் கண் அறியாதபடி ஆழத்தில் ஓடிச்சென்ற முயல்வளை ஒன்றுக்குள் அவள் தேரின் சகடம் ஒன்று இறங்க நிலைதடுமாறி அசைந்து தோளால் சாயையின் விலாவை முட்டிக்கொண்டாள்//

யாதொரு அசைவிலாமல் அணி ஊர்வலமென செல்லும் அரச வாழ்வெனும் தேவயானியின் தேர்ச்சகடம், கண் அறியா ஆழம் கொண்டுவிட்ட சர்மிஷ்டையின் குழிமுயல் வளையில் சிக்கி, அதன் அதிர்ச்சி தரும் உச்ச தருணத்தில், தன் நிழலென அதுவரை வரும் சாயையுடன் மோதுகிறாள். அவள் அணுகும் அத்தோரணவாயில் - சரிந்துவிடலாகாது எனும் அச்சத்துடன் யயாதி மற்றும் பார்க்கவன் எனும் தச்சர்களால் இறுக்கிக் கட்டபட்ட தோரணவாயில். வானளாவ 
கட்டி எழுப்படுபவை எல்லாமே எதையோ பிறக்குக் காட்டுவதன் வாயிலாக தன்னிடமே
மறைப்பதற்காகத்தானோ.

மிக்க அன்புடன்,
சுபா

விடுபட்டது





ஜெ

வெண்முரசு மாமலரில் ஒர் அத்தியயாம் விடுபட்டிருந்தது. நான் ஒழுக்கிலே எந்தக்குறையையும் உணரவில்லை. இடம் மட்டும் கொஞ்சம் சிக்கலாக இருந்தது. அந்த அத்தியாயம் வந்தபோது பெரிதாக கதை என ஏதும் சேரவில்லை. ஆகவே அது இல்லை என்றாலும் சரிதானே என நினைத்தேன். ஆனால் சாரங்கன் அவர்களின் கடிதத்தை வாசித்தபின் அந்த அத்தியாயத்தை வாசித்தேன். அது சாயைக்கும் தேவயானிக்குமான உறவு முறிவதைக் காட்டுகிறது. அது மெல்ல மென்மையாக சொல்லப்பட்டிருக்கிறது. அது இல்லாவிட்டால் அவள் திடீரென்று சீறுவதும் பிரிவதும் ஜஸ்டிஃபை ஆகியிருக்காது என தெரிகிறது. என் வாசிப்பை மேலும் தீட்டிக்கொள்ளவேண்டும் என நினைத்துக்கொண்டேன்

செல்வராஜ்

முரண்




தெய்வத்தால் ஆகதெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும். என்கிறார் வள்ளுவர்.

மாதா பிதா குரு தெய்வம் என்ற இந்த வரிசையில் தெய்வத்தால் ஆகத ஒரு செயல் முயற்சியால் ஆகும் என்றால், அந்த முயற்சிக்கு நம்மை கொண்டுச்செல்ல மாதா பிதா குரு மூவரும் முயல்கின்றார்கள். மாதா தன்அன்பால் முயற்சியின் முன்தடையாகிவிடுகின்றாள். பிதா பாசத்தால் தடையாகிவிடுகின்றார், குரு அன்பை பாசாதத்தை காட்டுவதில் தாய்தந்தையினும் மிக்கு உடையவராக இருந்தாலும்  முயற்சியின் திறவுக்கோலாகவே இருக்கிறார், முயற்சிக்காக அவர் மாணவனின் எதிரியாகவும் ஆகின்றார். குருவை அடைந்தவர் வென்றே வருகின்றார். குருவே முயற்சியாக இருக்கிறார் அல்லது முயற்சியே குருவாக ஆகிறது. 

விருஷபர்வன் முன் மேற்கண்ட குறள் தன்னை ஒரு அழகு கவிதையாக்கி வெண்முரசில் நவின நடனம் செய்து செல்கின்றது.

//தெய்வத்தை நம்பியவர்கள்கூட அழியக்கூடும்,ஆசிரியரை நம்பியவர்கள் கைவிடப்பட்டதில்லை” என்றார்.//
-------------------------------------------------
முரண்களை தழுவி தன்னை முழுமை என்று வடித்துக்கொள்ளும் கவிதை ஒன்று மானிட மனம்மொழி மெய்களில் ஏறி செல்லும் கணத்தை வாழ்க்கை என்று பார்க்கின்றோம். வாழ்க்கையின் முரண்கள் மட்டும் நமக்கு கிடைக்கிறது ஆனால் அந்த கவிதையின் மெய்மை  மாசுப்படாமல்  கைநீட்டும் அளவுக்கு அப்பால் அப்பால் என்று  இருக்கிறது.  

கவிதையின் முரண்களில் காலம் ஏறி உட்கார்ந்துக்கொண்டு அதை கதை என்று நமக்கு காவியமாகதருகின்றது அதை வாழ்வின் வடிவம் என்று நாம்பார்க்கின்றோம். முரண்களுக்கு அ்பபால் உள்ள கவிதையின் மெய்மையில் பூக்கும் ஒளியில் வழிகிறது ஆன்மாவின் ஞானம். ஜெவின் அயராத அந்த உழைப்பு வெண்முரசின் வழியாக வாழ்க்கையின் முரண்களை மெய்மையை கவிதையாக்கிக்காட்டுவது.

தேவயானி வாழ்க்கை அழகு மலையருவி என்ன ஜெவால் படைக்கப்பட்டு துள்ளியும் குதித்தும்  ஓடியும் வீழ்ந்தும் மனம்நிறைக்கும்போது அதற்குள் இருக்கும் முரண்கள்தான் வாழ்க்கையை எத்தனை வித கவிதை கணங்களாக செய்கின்றது.

சுக்ரனுக்கு ஒற்றைக்கண் கொண்டவன் என்ற பெயர் உண்டு. தன் மகளுக்காக இன்னொரு மகளின் வாழ்க்கையை உள்ளீடு அற்ற நிழல்போல் ஆக்குவது என்பதுதான் எத்தனை பெரிய ஒற்றைக்கண் பார்வை. ஒரு கணத்தில் சுக்ரர் ஆண் கைகேயி என்று வந்து நம் முன் நிற்கின்றார். தன் மகள் என்ன ஆவால் என்றுப்பார்க்க தெரிந்த சுக்ரருக்கு மற்றொரு மகள் என்ன ஆவல் என்றுப்பார்க்க தெரியவில்லை. ஒரு சேடியின் பார்வைகூட இல்லாத சுக்ரர் என்பதை பார்க்கும் இடத்தில் மனம் கனக்கின்றது. 

//சேடி என்பவள் தன் உள்ளிருப்பவை அனைத்தையும் எடுத்து வெளியே வீசிவிட்டு நன்கு கழுவிய வெற்றுக்கலம்போல் தன்னை ஒழித்துக்கொள்பவள்பிறரால் முற்றிலும் நிறைக்கப்படுபவள்துயரங்களில் பெருந்துயரென்பது தன்னுள் தானென தும் இல்லாமலிருப்பதுபிறிதொருவரின் நிழலென வாழ்வது” என்றாள். மூச்சிரைக்க தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு “பெண்ணுக்கு இறுதியாக எஞ்சுவது தன்னகம் மட்டுமே சேடிக்கு அதுவும் இல்லை” என்றாள்.//

மரணத்தை மரணம் செய்யும் சஞ்சீவி மந்திரம் அறிந்த ஒரு ஞானியின் பார்வை பிள்ளைப்பாசத்தில் இத்தனை குருடாக இருக்கும் என்றால் மானிட ஞானம் பெற்றதுதான் என்ன?  மானிட ஞானத்தை எல்லாம் காலம் எத்தனை எளிதாக சுட்டு சுண்ணாம்பாக்கிவிட்டு தனது முரண் கவிதையை எழுதி சென்றுவிடுகின்றது.

இறைவனுக்கு எளியவன் என்ற பெயர் உண்டு. எளியவனாக இல்லாமல் எளியவனை அறியமுடியாது என்பார் குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர். ஞானியாக முடி’யும், மன்னனாக முடியும் ஆனால் எளியவனாக ஆகமுடியாது என்பதுதான் எத்தனை பெரிய உண்மை.

உயிரின் கொண்டாட்டமோ என்று தொடங்கும் தேவதேவனின் கவிதை ஒரு உயிரின் பாதுகாப்பையும் பேரின்பத்தை தாயும் சேயும் ஆக்கி நடனம் செய்கிறது இப்படி .

உயிரின் பேரின்பக் கொண்டாட்டமோ
ஒரு தாயும் சேயும் கொஞ்சிக் கொண்டிருந்த
காட்சி?
தாயின் மெய்தீண்டலில் அக்குழந்தை
பாதுகாப்பினையும்
குழந்தையின் தீண்டலில் அத்தாய்
பேரின்பத்தையும்
அனுபவித்துக் கொண்டிருந்தார்களோ,
பாதுகாப்பிற்க்குக் கோட்டைகளையும்
இன்பத்திற்குக் கேளிக்கைகளையும்
சார்ந்துவிட்ட இருள் நடுவே
தம்மை மறந்து?-தேவதேவன்

இந்த கவிதையின் தாய்போல தன் மகளை குட்டிமுயலே என்று கொஞ்சி அழைக்கும் ஒற்றைச்சொல்லில் வழியாக எத்தனை ஆண்டுகள்  பேரின்பத்தை நுகர்ந்து இருந்தான் விருஷபர்மன் என்பதை காட்டி,  குலத்தின் நன்மைக்காக அதன் பாதுகாப்பிற்காக என்று அவன் விழும் இடத்தில் அவன் பேரின்பம் வெறும் கல்மண் கொண்ட சடமாக மாறுவதை அறைகின்றது. உயிரை வெறும் கல்லாக மாற்றும் ஒரு முரண்இணைவை வாழ்க்கை என்று காலம் கவிதை எழுதுகின்றது இங்கு.   அந்த சடத்தன்மையை தானே தாண்டிச்செல்ல அவன் அராய்ந்து கூறும் காரணங்கள் அந்த கல்லின்மீது வண்ணங்களை வீசிப்பார்க்க வைக்கிறது. 

//அசுரகுலம் என்றும் ஏமாற்றப்படுவதுதன் அன்புக்காகநெறிநிலைக்காகபெருந்தன்மைக்காககொடைக்காகஅருந்தவத்திற்காக அது தோல்வியை விலையாக பெற்றிருக்கிறதுநம்பியதன்பொருட்டு முற்றழிந்திருக்கிறதுஇம்முறை குருவைப் பணிந்தமைக்காக நான் தோற்கடிக்கப்படுகிறேன்.  இவ்வாறே இது நிகழ்ந்தாகவேண்டும்,//

ஆனால் மெய்மை எத்தனை வலிக்காமல் ஊசி ஏற்றுகின்றது. இதுவரை வந்த அசுரர்கள் யாரும் தொடத எல்லையாகிய மரணமில்லா உலக ஆட்சியைப்பிடித்தவன் மகளை காலம் கொல்லாமல் கொல்கிறது. எத்தனை பெரிய உயரத்தை மனிதன் தொட்டாலும் அதையே அவனின் பாதாளமாகவும் காட்டும் காலசக்கரம்தான் வெல்லப்படாத வெற்றி உடையது.

தெரிந்தகதைதான் ஆனால் அதன் முரணை’யும் மெய்மையையும் கவிதையாக்கும் விதத்தில் ஜெவின் படைப்பு புதிய ஆனந்தம்.நன்றி


அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.