Thursday, August 31, 2017

கைவிட்டவரா





கைவிடப்பட்டோரிடம் காட்டும் கருணையின் வழியாகவே தெய்வம் தன் இருப்பை அறிவிக்கிறது

முற்றிழந்து கைவிரிப்பவனே அக்கொடையை பெறமுடியும் போலும்


என்ற இரண்டு வரிகளும் முக்கியமானவை. ஆனால் கைவிடப்பட்டவரா கைவிட்டவரா என்பது அடுத்த பகுதியிலேயே வந்துவிடுகிறது. புஷ்கரன் அனைத்தையும் கைவிட்டுவிட்டுச் செல்பவன் அல்லவா?

ராஜன் ஆறுமுகம்

சொல்லவேகூடாது






அன்புள்ள ஜெ

அர்ஜுனன் உத்தரையிடம் சங்கடமும் குழப்பமுமாகப் பேசுமிடம் நுட்பமானது. அங்கே ஒரு வரிதான் சொல்லவேகூடாது. அபிமன்யூ தானே என்று. அதைச் சொல்வது மிகவும் தப்பான அர்த்தம் அளிப்பது மட்டும் அல்ல அந்தப்பெண்ணின் அந்தரங்கத்தை கொஞ்சம் அவமானம் பண்ணுவதும்கூட. அதைச் சொல்லக்கூடாது. ஆனால் சொல்லக்கூடாது என்று அறிந்து தவிர்க்கும் ஆண்கள் அனேகமாக இல்லை. அவர்கள் ஏன் சொல்கிரார்கள் என்பது பெரிய மர்மமான விஷயம்தான்

எஸ்

மௌன உரையாடல்





அன்புள்ள ஜெ

உத்தரைக்கும் அர்ஜுனனுக்கும் இடையேயான அந்த மௌன உரையாடல் ஆழ்ந்த அர்த்தம் கொண்டது. அதைப்புரிந்துகொள்ளவேண்டும் என்றால் நேராக நாம் கரவுக்காட்டுக்குள்தான் போகவேண்டும் இல்லையா? அங்கே அவர்கள் வேறு ஒருவராக இருந்தார்கள். அந்தக்கரவுக்காட்டுக்குள் அவர்கள் கனவுகளில் செல்லகூடும். அங்கே வேறு ஒருவராக காண்பார்கள்
மகாதேவன்

விண்ணிலாடுவதும் மண்ணிலாடுவதும்





நீரிலாடும் கோலங்கள் நீ.
விண்ணிலாடுவதும் மண்ணிலாடுவதும்
சொல்லிலாடுவதும் பொருளில் நின்றாடுவதும்
பிறிதொன்றல்ல.

என்ற வரியை மீண்டும் வாசித்து நீர்க்கோலத்தை முடித்தேன். ஒரு கனவுபோன்ற அனுபவம். ஒவ்வொன்றும் உருமாறிக்கொண்டே இருக்கின்றன. தமயந்தி இளம்பெண்ணாக இருந்து முதுமகளாகி திரும்பி வருகிறாள். அவள் இளமையும் அழகும் எல்லாம் உடல். உள்ளே அவள் என்றைக்கும் முதுமகள். ஆகவே உடல் உருகியதும் முதுமகள் வெளியே வருகிறாள். நளன் உள்ளே விளையாட்டுப்பையன். அந்த முரண்பாடும் அழகாக இருந்தது.

நீர்க்கோலம் வெண்முரசுநாவல்களிலேயே வித்தியாசமானது. இந்த கட்டமைப்பு ஒன்றிலிருந்து ஒன்று என்று கதை சுழன்றுகொண்டே இருந்தது. இப்படி இரு கதைகளிலும் இருக்கும் பொதுவான கூறுகளைக் கண்டுபிடித்து அவற்றைச் சரியாகப் பொருத்த இருகதைகளையும் எந்த அளவுக்குக் கூர்மையாக வாசித்திருக்கவேண்டும் என வியந்தேன்

சாரங்கன்

Wednesday, August 30, 2017

ஒவ்வொன்றும் பிறிதொன்றே




ஜெ
நீர்க்கோலம் முடிந்ததும் அதன் முதல் அத்தியாயத்தை எடுத்துப்படித்தேன். எல்லா நாவல்கள் முடிந்ததும் அதன் முதல்பகுதியை வாசிப்பது என் வழக்கம். எனேன்றால் நாவலின் ஒருமை அப்போது தெரியும். பெரும்பாலும் முதல் அத்தியாயத்திலேயே நாவல் ஒட்டுமொத்தமாகத் தெரிந்துவிடும்

அந்த யானை விழிகளுக்கு அப்பாற்பட்ட
வெண்வடிவொன்றின் கருநிழல்
இந்த வெண்கொக்கின் மெய்வடிவும் கரியது.
ஒவ்வொன்றும் பிறிதொன்றே என்றறிக!

என்ற வரி பிருஹத்பலனிடம் சூரியன் சொல்வது. அதைத்தான் மொத்த நீர்க்கோலத்திலும் பார்த்தோம். ஒரு பெரிய பிரமிப்பு ஏற்பட்டது. ஒரு சில வரிகளில் ஒரு கருவை அடைந்துவிட்டு அதைத்தான் விரிவாக்கம் செய்கிறீர்கள் என நினைக்கிறேன். பீம்சேன் ஜோஷி  முதலில் முனகாலாக ராகத்தை கோடிகாட்டுவார். சுவையறிந்தவர்கள் அப்போதே ஆகா போட்டுவிடுவார்கள். அதன்பிறகுதான் மணிக்கணக்காக ஆலாபனம்

சுவாமி