Thursday, February 28, 2019

ஒரு தளம்



நண்பர்களுக்கு,

வெண்முரசை தொகுக்க இதுவரை எடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்து எனக்கு அறிமுகம் கிடையாது.

இந்த நிகழ்காவியத்தை தொகுப்பது ஒருவர் இருவரால் தனது வாழ்நாளில் இயலும் காரியம் அல்ல. ஒரு கூட்டு முயற்சியாக மட்டுமே இதை மேற்கொள்ள இயலும். 

ஏழு புத்தகங்கள் மட்டுமே உள்ள Harry Potter புத்தக வரிசையின் ஒரு விக்கி தளம் இதோ: https://harrypotter.fandom.com/wiki/Main_Page

16,000க்கும் மேலான பக்கங்கள் உள்ளன. அத்தனையும் வாசகர்களால் எழுதப்பட்டவை. ஹாரிபாட்டரின் ஒவ்வொரு கதாபாத்திரம், ஒவ்வொரு மந்திரச்சொல், ஒவ்வொரு இடம் என அனைத்தை பற்றியும் தகவல்கள் இங்கு தொகுக்கப்பட்டுளது. 

இதுப்போல் ஒரு விக்கிதளம் வெண்முரசுக்கும் அவசியம். ஹாரிபாட்டரை விட பன்மடங்கு பெரியது, மேலும் செறிவானது வெண்முரசு. இந்த ஒப்பிடல் கூட தவறுதான். ஆனால், விக்கியின் அவசியத்தை விளக்க மட்டுமே ஹாரிபாட்டருடன் ஒப்பீடு. 

 வெண்முரசில் உள்ள ஒவ்வொரு கதைமாந்தர், ஒவ்வொரு நிகழ்வு, ஒவ்வொரு இடம், குறிப்பிட்டுள்ள கலைகள் குறித்தும் ஒரு பக்கம் அவசியம். 

முதலில், ஒவ்வொரு நாவலுக்கும் ஒரு பக்கம் அமைக்க வேண்டும். 

முதல் பிடி மணலாக, https://venmurasu.fandom.com/ta/ என ஒரு விக்கி பக்கத்தை தமிழ் விக்கிபீடியா பக்கத்தின் உள்ளடக்கத்தை கொண்டு தொடங்கியுள்ளேன். 

Fandom / wikia தளத்தில் நண்பர்கள் அனைவருமே கணக்கு தொடங்கி இந்த விக்கியை edit செய்ய, பக்கங்களை சேர்க்க இயலும். 

நான் மிக மிக மெதுவாக எனக்கு தெரிந்த தகவல்களுடன் இந்த முயற்சியை முன்னெடுத்துக் கொண்டு தா இருப்பேன். 

அனைவரும் ஒரு பிடி மண் இட்டால் மிக விரைவில் ஹாரிபாட்டரின் 16,000 பக்கங்களை தாண்டி செல்ல இயலும். கதை மாந்தர், அரசுகள் குறித்த சிறு குறிப்பே சில ஆயிரங்களை தொடுமென எண்ணுகிறேன்.

Requesting all of you to kindly take it forward. 

நன்றி,


லாஓசி. 

வெற்றி



ஜெ

தனியாக நின்றிருக்கும் ஒரு வரி இது. அந்த சந்தர்ப்பத்தை கடந்து இந்த வரியை வாசித்துக்கொண்டேன்

அவர்கள் வஞ்சத்தால் வெல்லப்பட்டார்கள். பின்னர் ஒருங்கிணைவால் வெல்லப்பட்டார்கள். இறுதியாக மெய்யறிவால் வெல்லப்பட்டார்கள். வரலாற்றில் எப்போதுமே வெற்றி அம்மூன்று நிலைகளில் அவ்வரிசையில்தான் நிகழ்கிறது.

எப்போதும் அவ்வரிசையில்தான் நிகழ்கிறது என்ற இடம்தான் இவ்வரியின் உச்சம்

ராஜ்

கர்ணன்



அன்புள்ள ஜெயமோகன் சார்,

கார்கடல் 65ம் அத்தியாயத்தில் கர்ணனின் தவிப்பு என்னையும் ஆட்கொண்டது. இரு அன்னையருக்கு வாக்கு கொடுத்துவிட்டு தடுமாறி கொண்டிருக்கிறான். நாககுழந்தை ஆவநாளியில் அனல் என இருக்கிறது. ஆனால் எதிரில் நீலவண்ணனும் அர்ஜுனனும். எத்தனை தடவை வாழ்க்கையில் இருவரும் மோதி இருப்பார்கள். ஒரு தடவை கூட கர்ணன் வெற்றி பெற்றதே இல்லை. ஆனால் இது அவனது களம். ஊழ் குந்திவடிவில் வந்து தடுமாற வைத்துவிட்டது. பொங்கி பொங்கி சாகிறதுதான் சிலரின் ஊழ் போலும். இப்படி ஒரு கதாபாத்திரத்தை விவரிப்பதே எவ்வளவு பெரிய சவால்.அர்ஜுனனும் கர்ணனும் போரிடுவதை பார்க்கும்போது மனதுக்குள் நானும் காண்டீபத்தை எடுத்துகொண்டு இரண்டுபேரையும் எதிர்கொண்டு குருஷேத்திரத்தை விட்டு துரத்திவிட வேண்டும் என வெறி ஏறியது.  ஆனாலும் நுட்பமான வேறுபாடுகள் நிறைத்தது.இதற்குமுன் கர்ணன் நட்பாலோ இல்லை  அவமானதாலோ , இயலாமையிலோ தோல்வியை தழுவுவான். குருஷேத்திரத்தில் ரத்த உறவுக்கே மதிப்பு இல்லை என்னும்போது  குலமாவது கோத்திரமாவது. கடோத்கஜன் எல்லாம் வெற்றிவாகை சூடுகிறான்.ஆனால் கர்ணன் அனைத்து அஸ்திரங்களும் இருந்தும் எதையும் பயன்படுத்த முடியாமல் கை கட்டபட்டு நிற்கிறான். நாகபாசம் எல்லாம் கிருஷ்ணரின் ஒரு சிறிய விலகலில் விலகி செல்கிறது. அதற்கான காலகட்டம் முடிந்துவிட்டது. ஆனாலும் அது கர்ணனின் கையில் போய் சேர்க்கிறது. ஊழி ஊழியாய் இருக்கும். வெண்முரசு,செய்யபட்ட எந்த ஆயுதமும் அழிவதே இல்லை, அது தனக்கான ஆட்களை அடையும் என்றே கூறுகிறது. கர்ணனால் இப்போது செய்யமுடிந்தது யுதிஷ்டிரரிடம் “செல்க! இங்கு வீணாக தலைகொடுத்து அழியவேண்டாம். அந்தத் தலை குருதிபடிந்த இம்மண்ணில் உருளும் அளவுக்கு எடைகொண்டது அல்ல” என்று ஏளனம் உரைப்பது மட்டும்தான். "யுதிஷ்டிரர் கண்களில் சீற்றத்துடன் பற்களைக் கடித்து ஒரு கையில் வில்லும் இன்னொரு கையில் அம்பும் செயலற்றிருக்க நோக்கியபின் தலைகுனிந்து பாகனிடம் தன் தேரை திருப்பும்படி ஆணையிட்டார்" என வாசிக்கும் போது கொஞ்சம் சந்தோஷமாயிருந்தது. தர்மவானை திட்டும்போது ,மனகாயபடுத்தும் போது ஆனந்தம் அடையாதவன் யார்?


 வாசகர்களாகிய எங்களின் எரிச்சல்தான் துருமனின் எரிச்சல்.  திடீர் என கர்ணனின் உறவுகள் போர்க்களத்தில்,போர்முனையில் விவரிக்கபட்டது  பெரும் சர்பிரைஸ் ஆக இருந்தது. வெய்யோனில் கூட வரவில்லை.  அதிரதன் கூட மூத்து, மறுபிறவி எடுத்து கனிந்து விட்டார். 

ஸ்டீபன் ராஜ்

Wednesday, February 27, 2019

பால்ஹிகர்



அன்புள்ள ஜெயமோகன் சார்,


கார்கடலின் 64ம் அத்தியாத்தில் பீமனால் தலை உடைக்கபட்டு சாகும் பால்ஹிகரின் மரணம் அப்படிதான் முடியும் என நினைத்திருந்தேன். எனக்கு காந்தியின் மரணமும் கூடவே ஞாபகம் வந்தது. முதற்கனல்  8ம் அத்தியாத்தில் "சஞ்சலமேயற்ற பெரிய விழிகளும், அகன்ற மார்பும், பொன்னிற நாகங்கள் போன்ற கைகளும் கொண்ட சிறுவன் தன் தந்தையைவிட உயரமானவனாக இருந்தான். ஒவ்வொரு சொல்லுக்குப்பின்னும் அதுவரை அறிந்த ஞானம் அனைத்தையும் கொண்டுவந்து நிறுத்தும் பேச்சுடையவனாக இருந்தான். ஒரு கணமேனும் தன்னைப்பற்றி நினையாதவர்களுக்கு மட்டுமே உரிய கருணை நிறைந்த புன்னகை கொண்டிருந்தான். அவனைக் கண்டபின் அஸ்தினபுரியின் மக்கள் தங்கள் கனவுகளில் கண்ட அத்தனை பிதாமகர்களுக்கும் அவனது முகமே இருந்தது" என்று கூறப்பட்ட ஒரு மூதாதை அம்புகளில் படுத்து கொண்டிருக்கிறார். ஒருவர் தலை உடைபட்டு சாகிறார். அங்காரகனின் மரணமும் எதோ நமது கூடவே விளையாடிய நாய்க்குட்டி இறந்து போன உணர்வை கொடுத்தது. 

ஆனால் இவ்வளவு எளிமையாகவா? என தோன்றியது. பீமன் குலாந்தகன் என அழைக்கபடுவது சரிதான். சிபிநாட்டில் மணல் அறைகளுக்குள் மனநலம் குன்றிய பால்ஹிகராகவும் ,யானையின் மீது இருந்த ஒரு வெள்ளை யானையாகவுமே  பால்ஹிகரை நான் மனதுக்குள் வைத்திருந்தேன். " வணங்கானில்" அதன் மைய பாத்திரம் யானையில் எழுந்து செல்லும் காட்சியும்  சேர்ந்து எப்போதும் இரண்டையும் ஒன்றையொன்று இடை மறிக்கும். குரு வம்சத்தில் ஓடும் பால்ஹிக குருதியின் ஒரு வடிவம் பீமன். இன்னொரு வடிவம் துரியோதனன். இருவரும் கதை போர்களில் வல்லவர்கள். 


அங்காரகன் யார்?  "ஆதுரசாலையில் வளர்ந்த தேவாபியா? இல்லை அண்ணனை தானும் சுமக்க எண்ணிய சந்தனுவா? ஏனென்றால்  தேவாபிக்கு இளவரசன் பட்டம் சூட முற்பட்டபோது ‘பகல் ஒளியை அறியமுடியாதவன் மன்னனாக முடியுமா?’ என அமைச்சர்கள் எதிர்த்தனர் என முதற்கனல் அத்தியாயம் 19ல் வருகிறது. இன்று இருட்டுக்குள் பால்ஹிகர் போர்புரிய முடியாமல்  குருட்டு யானைபோல் தலை கொடுத்து சாகிறார். ஒருவேளை அன்று தேவாபியை தூக்கி சுமக்கும்போது  கொஞ்சம் கசப்பும் அவரின் உள்ளில் இருந்திருக்குமோ?

ஸ்டீபன் ராஜ் குலசேகரன்

உச்சகட்டம்



அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

அத்தியாயம் 49  ஒரு கால்பந்தாட்டத்தின் கடைசி நிமிடங்களின் ஆக்ரோஷமான உச்சகட்ட உணர்வை அளித்தது.  முதலில் வெண்முரசு ஆசிரியரையும் பின் இளையயாதவரையும் வணங்கி ஒரு கோனார் நோட்ஸ் எழுதிக்கொண்டேன்.  உறக்கத்தில் பாதாளம் கொண்டு செல்லப்பட்டு  நாகங்களால் காக்கப்படுவதாக கனவு கண்டுகொண்டு  களத்திலே இருக்கிறான் ஜயத்ரதன் .  அவன் முன்னமே அஸ்வத்தாமன் உரைத்தபடி இடமாற்றம் செய்யப்பட்டவாறே களத்தில் இருக்கிறான்.  அர்ஜுனன் கூட அவன் வேறெங்கோ கொண்டு செல்லப்பட்டு விட்டதாக கருத நேர்கிறது.   தந்தை பிருஹத்காயர் ரத்தவாஹாவில் நாகவேத மந்திரங்களை உச்சரித்து அமர்ந்திருக்கிறார்.  இளையயாதவர் ஜயத்ரதனின் கனவில் ஊடுருவி அவன் தந்தை எனத்தோன்றி அவன் குறித்த நேரத்திற்கு முன்னதாகவே களத்தில் வெளிப்பட்டு  தோன்றும்படி செய்துவிடுகிறார்.  இன்னும் சிறிது நேரம் இன்னும் சிறிது நேரம் என்று எக்கணமும் முடிந்தது என்று  கௌரவ வீரர்கள் எதிர்நோக்கி இருக்க ஜயத்ரதனை வெளியேறச் செய்து அவர்களை ஏமாற்றிவிடுகிறார்.  கார்முகில்கள் அவர் திட்டத்திற்கு துணை அமைகின்றன அல்லாமல் கார்முகில்களால்-இருளால் மட்டுமே அவர்கள் ஏமாந்துவிடவில்லை.  ஏதோ பிழை என்று லேசாக புரிந்துகொள்ளும் அஸ்வத்தாமனின்  கூச்சல் பெருமுழக்கில் எடுபடாமல் போகிறது.   பூரிசிரவஸும் தோற்கிறான்.  அர்ஜுனனை நிலைகுலைத்து அவன் அந்தரத்தில் தட்டிச் செல்லும் பந்தை கீழேவிழச் செய்யும் பூரிசிரவஸின் முயற்சி தோற்று பந்து சரியாக கோல் சென்று சேர்ந்துவிடுகிறது.  முன்னதாக கழுத்தை அறுத்துக்கொள்ள அம்பெடுகிறான் அர்ஜுனன்,  தான்  தோற்றுவிட்டதாகவே எண்ணுகிறான்.  இளையயாதவனின் திட்டங்களை  அறிந்தவன் இளையயாதவன் மட்டுமே.  யாவும் அறிந்தவன் அல்லவா அவன்?  

கோனார் நோட்ஸ்க்கு பிறகு ஒரு தமிழ் புலனாய்வு பத்திரிக்கை போல  "ஜயத்ரதன் மற்றும் அவன் தந்தையின்  சாவில்  மர்மம்.  குருக்ஷேத்ர பின்னணியில் யோகி இளைய யாதவின் சதி திட்டங்கள்." 

ஜார்ஜ் குருட்ஷிப்  தொலைதூரங்கள் பயணம் செய்வாராம்.  சாதாரணமாக காணும் சில பறவைகளுக்கு கலர் அடித்து  அபூர்வ பறவைகள் என்று ஏமாற்றி விற்றுவிடுவாராம்.  அந்த பணம் அவர் வழி செலவுக்கு என்று படித்த ஞாபகம்.  ஏசுவும் அற்புதங்கள் செய்தார்.  கொஞ்சமேனும் ஏமாற்றாத யோகி என எவர் இருந்துள்ளார் புத்தன் உட்பட.  வெறும் லௌகீக மடையர்களை வேறு எவ்வாறுதான் கையாள முடியும்?  ஆனால் அர்ஜுனனின் அம்புகள் மெய்மைகள் என்று கூறப்படுகின்றன.  அத்தனை மெய்மைகளை தன் சீடனுக்கு வழங்கி இருக்கிறான் இளைய யாதவன்.  எந்த ஒரு உண்மை யோகியும் போலவே அவனும் மனிதருக்கு உச்சபட்ச நன்மையே செய்கிறான்.  ஜயத்ரதன் மற்றும் பிருஹத்காயரின் நிறைவுற்ற முகங்கள் அதைத் தெரிவிக்கின்றன.  

நீச்சல் தெரியாதவர்கள் தரையில் மட்டுமே இருக்க முடியும்.  தர்க்கம் என்னும் தரை நீங்கி  தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட  நீர்நிலைகளில் நீந்துவது யோகியான அவனக்கு இயல்வது.  நனவின் மீது மட்டுமே கொஞ்சம் கட்டுப்பாடு தமக்குள்ளது என்று கருதும் சாமானியரிடையே போதை, கனவு, நனவு, சாவுக்குள் என இருப்பின் எல்லா நிலைகளின் மீதும் ஆளுமை செலுத்தக் கூடிய பெருங்கருணை ஆயிற்றே இளைய யாதவன்!
              
அரவான் சொன்னான், ஏகாக்ஷர் சொன்னார், பார்பாரிகன் சொன்னான் என்ற சொற்களை எடுத்து சில மாற்றங்கள் செய்வீர்கள் என்றால் ஏறத்தாழ ஒரு தனித்த சிறுகதை.  

அன்புடன் 
விக்ரம்
கோவை

அறம்



அன்பு ஆசிரியருக்கு,
        

 முதலில் பாரதப்போர் அறத்திற்கும் அறமீறலுக்குமான போர் என்றே எனக்கு உரைக்கப்பட்டது.நானும் அப்படியே நம்பினேன்.வெண்முரசும் அதைத்தான் காட்டுகிறது.ஆனால்,அறமீறல் செய்வது யார் என்பதில்தான் மாற்றம்.
   

போர் துவங்கியதில் இருந்தே பாண்டவர் தரப்பிலேயே அறம் என இதுவரை எண்ணிய அனைத்தும் கடக்கப்படுகின்றன.அதுவும் அறச்செல்வனென போற்றப்படும் யுதிஷ்டரின் ஒப்புதலுடன்.
  

கௌரவர் தரப்பின் பிழையாக கூறப்படும் அபிமன்யுவின் பலிக்குக்கூட யுதிஷ்டரே காரணமாகிறார்.அறச்செல்வர் இவர்கள் பக்கம் இருப்பதாலேயே அதனை மீற இவர்களால் முடிகிறது,அதற்கான காரணத்துடன்.அறம் கூற இருந்த விதுரரும் இல்லாததால் இவர்களால் எது அறம் உணரமுடியாமல் எந்த பாண்டவரையும் எந்த உபபாண்டவர்களையும் அழிக்காமல் ஒட்டு மொத்தமாக அழிகிறார்கள்.



பகுத்தறிவு என்பது நல்லதையும் கெட்டதையும் அறிந்து கெட்டதை செய்வது என கேட்டுள்ளேன்.இப்போது புரிகிறது அறத்தை அறிந்தவர்கள்தான் அதனை மீறுவதற்கான வழிகளையும் கண்டு மனச்சாட்சி குத்தாமல் மீறுவார்கள் என்பதை. 
       
            

கா.சிவா

Tuesday, February 26, 2019

இருளுக்குள் நடக்கும் போர்



அன்புள்ள ஜெயமோகன் சார்,

கார்கடலின் 62ம்  இருளுக்குள் நடக்கும் போர் "PLANET OF THE APES , SPIDER MAN "திரைப்படங்களின் அனைத்து பாகங்களையும் ஒரே ஸ்கிரீனில் பார்ப்பதுபோல் இருந்தது. இருளுக்குள் போர் நடக்கும் என்பது எனது மனதில் உதிக்கவே இல்ல. குண்டாசி, பூரிசிரவஸ் உடலை எரிக்க சுடுகாட்டில் துரியோதனன் நிற்கும் போது வரும் தகவல் சும்மா பாண்டவர்கள் புரளி கிளப்பிவிடும் ஒரு யுக்தியாகத்தான் செய்கிறார்கள் என எண்ணினேன். இந்த அத்தியாயத்தில் படிக்கும்போது புதிய அனுபவமாக இருந்தது. இரவின் போர் என்றால் அறியாமையின் போரா? இல்லை கவனகுவிப்பின் போரா? மனம் என்னும் கடிவாளமற்ற கற்பனையின் போரா? இல்லை இருண்ட நமது மன ஆழங்களுக்குள் கிடக்கும் அரக்கதனதிர்க்கும் கொஞ்சம் அறத்தொடு நடக்க துடிக்கும் மன போராட்டமா? 

ஸ்ரவ்யாக்ஷம்  - விழியும் செவியும் ஒன்றாகும் யோகம்,காட்சிகளை ஒலியென்று அறியவும் ஒலிகளை காட்சிகளாக விரிக்கவும் செய்யவேண்டியது. மனிதன் என்று தன்னை உணர்ந்த ஓன்று இந்த போர்கலையைதான் முதலில் அறிந்து கொண்டிருக்கும்.சப்தஸ்புடம் -  ஒலிகளைக்கொண்டு போரிடும் கலை . கொஞ்சம் முன்னேறியபின் வந்த அடுத்த போர்கலையாக இருக்கலாம். இல்லை ஒலிகளை  மட்டுமே கொண்ட  மனதிற்கு ஆன கலை. துரோணர் ஒரு இடத்தில் என்னுள் ஒலிக்கும் காயத்திரியை நான் எப்படி தடுக்க முடியும் என அழுது புலம்பியது ஞாபகத்திற்கு வந்தது.இருளில் விழி துலங்குவது பற்றி வாசிக்கும்போது "இரவு " நாவலில் சரவணன்  கடலுக்குள் இருந்து அவனை நோக்கும் பல்லாயிரம் விழிகளை பார்ப்பது  ஞாபகம் வந்து திடுக்கிட வைத்தது. வெண்முரசு கூறுகிறது" போர் தொடங்குவதற்கு முன்னரே ஒளிகள் போரிடத் தொடங்கிவிட்டிருந்தன. ஏனென்றால் அவை அங்கிருந்தோரின் உள்ளத்துடன் நேர்தொடர்பு கொண்டிருந்தன" என்று. எத்தனை இருளுக்குள் இருந்தாலும் கொஞ்சமாவது வெளிச்சம் தேவைதான்  போலும் இல்லை அது அவர்களின் ஒலிகளின் வெளிச்சமா? முதலிலே வெண்முரசு கூறியது போல் எந்த இருண்ட ஞானமும்  கொஞ்சம் வெளிச்சத்தை கொண்டே இருக்கும், அதற்கடுத்த காலங்களில் மனித குலம் கண்டடையும் தரிசனதிற்கு அதுவே அடிப்படை. அந்த கொஞ்சம் வெளிச்சம் போதும் என பிடிவாதம் பிடிக்கும்போதுதான் பிரச்சனையும் போர்களும். 

கடோத்கஜனுக்கு உரிய இரவின் போராக இருந்தாலும் "துரோணர் சிலந்திவலையை இருளில் தொட்டுணர்வதுபோல மெல்ல மெல்ல அவனுடைய தாக்குதலின் சுழிமையத்தை உய்த்துணர முயன்றார். தன் செவிவிழியால் அம்புகள் எங்கிருந்து எங்கு நோக்கி செல்கின்றன என்று கணித்தார். இடும்பர்கள் எத்திசையில் தாவி தாக்கி எவ்வண்ணம் நிலைமீள்கிறார்கள் என்று உணர்ந்து மெல்ல மெல்ல அந்த சுழிமையத்தை நோக்கி தன்னைச் சூழ்ந்திருந்த படைவீரர்களை கொண்டுசென்றார். சல்யரும் அஸ்வத்தாமரும் இருபுறத்திலிருந்தும் அவரை துணைத்தனர். தாக்குதலின் கொண்டாட்டத்திலிருந்த இடும்பர்கள் துரோணரின் பொறி கைகளை விரித்துச் சூழ்வதை உணரவில்லை. கௌரவப் படைவீரர்கள் கடோத்கஜனை அவனறியாமலேயே நெருக்கி ஒற்றைப் புள்ளியை நோக்கி கொண்டுசென்றனர் என வாசிக்கும்போது முந்தைய அத்தியாத்தில் அலம்புஷருக்கும் அலாயுதனுக்கும் நடந்த விவாதத்தை இணைத்தால் அரவில் இருந்து அல்லது அரக்கதனத்தில் இருந்து வேதத்தின் முளை முனையை புரிந்து கொள்ளமுடியும் என்றே நினைக்கிறேன். 


ஸ்டீபன் ராஜ் குலசேகரன் 

Monday, February 25, 2019

போர்



மூத்தவருக்கு, வணக்கம். 

இளமையில் வியாசர் விருந்து படிக்கும்போது இறுதிப் 
போரே என் விருப்பமான இடம் . அம்மாவோ அதைப் படிக்காதே வீட்டிலும் 
சண்டை வரும் என தடுப்பாள். பிதாமகரின் 3 பாணங்களுக்கு பார்ததனின் 
பதில் 5 பாணங்களும், வருணாஸ்திரங்களும் மாயஸ்திரங்களும் நிறைந்த 
விறுவிறுப்பான யுத்தமல்ல இது. நெஞ்சுக்குமிழை அறுத்து உயிரடக்கும் யுத்தம். 
எவை எல்லாம் இது வரை நெறி என பேணப்பட்டணவோ அவை எல்லாவற்றையும் 
உடைத்தெறிந்து விளையாடுகிறான் கண்ணன். படைப்பின் வல்லமையால் 
நீங்களும். 
                

செழியன் கடக்க இயலா வெறும்முள்ளைக் குருதி வாரத் தாண்டி ஐசக் 
அடையும் தச்சன் மகன் அபிமன்யூவை, அகங்காரத்தை இழந்து பார்த்தன் 
அடையும் மெய்மை என நீங்கள் ஒரே கருத்தைத்தான் ஆலாபணை செய்வது 
போலிருக்கிறது. நளனுக்கு ஆண்டுதோறும் தூது விடப்பட்டாலும் ஒவ்வொரு 
முறையும் அது வேறு அன்னம் தானே. இறையின் கருணையால் இடைவெளி இன்றி வெண்முரசைத் தொடர்கிறேன்  

அன்புடன் 

இரா.தேவர்பிரான்

எல்லைகள்



ஜெ அவர்களுக்கு

வணக்கம் கார்கடல் அனைவரும் தங்கள் எல்லைகளை காணும்   வெ ளியாக உள்ளது.அர்சுனனுக்கு அபிமன்யூ. சுருதகீர்த்தி ஆரம்பம் முதலே  தந்தை அன்புக்கு ஏங்குபனாய் வருகிறான். தன் தந்தை அபிமன்யூ மேலே மட்டும் அன்பு உள்ளது என நினைகிறான்.அரவான் மீதும் அதே வெருப்பு அடை கிறான். அபிமன்யூ மரணத்தின் பின் தன்னுடன் சுருதகீர்த்தியை இருக்க கூறும்   ேபாது அபிமன்யூகாக முதல் முறை அழுகிறான் சுருதகீர்த்தி.அபிமன்யூ  இறக்கவேண்டும் என்ற எண்ணம் அவனுல் இருந்தி இருக்கவேண்டும்

பெ ரும் வீரர்கள் மரணம் எல்லாம் அங்கே  பாெ ருள் இல்லாததாக  பாேகிறது.பூரிசிரவஸ் மரணம் ஏதாே மனதை கலங்க செய்தது.தலையை வெட்டிய பின்னும் அவன் உயிர்  பாேகவில்லை.வெட்டிய கை சின் முத்திரைசெய்கிறது. காணும் யாவருக்கும் அவன் தலை உயிராேடு இருப்பதாய் தெரிகிறது.சிதை தீயில் தான் அவன் உயிர் வெளியே செல்கிறது. சாத்யகி  பூரிசிரவசை காெல்வதை திருஷ்டதுய்மனன் காண்கிறான்.அவனும் அதையே துராேணருக்கு  செய்ய பாேகிறான்

த.குணசேகரன்

சொற்களின் பெருக்கு



அன்புள்ள ஜெயமோகன் சார்,

சொற்களின் பெருக்கு  வழியாய் எழும் வரலாற்றுக்கு அரக்கர்கள் அறைகூவுவது ஆச்சரியமாய் இருந்தது. ஏன் என்றால் உலகம் முழுக்க இப்போது இதுதானே நடந்து கொண்டிருக்கிறது. எதிர்காலம் என்றால் இனி பழைய வரலாறுதானா? என் ஒரு கணம் மனம் திகைத்தது.இதைத்தான் நான் உண்மையிலே வாழ்க்கை என்று நினைத்துகொண்டிருந்தேன். ஆனால் இப்போது புரிகிறது எதிர்காலம் இல்லை என பழைய வரலாற்றை மீண்டும் மீண்டும் மக்களிடம் கூறி அவர்களை வெறி ஏற்றும் செயலை தவிர அதன் மெய் ஞானத்தை அறியாமலே அழிவது. அரக்கர்களுக்கு சொல் ஆவநாழி அழிவதே இல்லை போலும். என்ன கத்து கத்துகிறார்கள்.சொல்லே இல்லாதவர்கள் வெறும் ஞானிகள் மட்டும்தானா?  இல்லை சொற்களை அறியாதவர்களா? தண்டகாரண்யம் என்றால் தண்டனை பெற்றவர்கள் வசிக்கும்  இடம் என விக்கிபீடியா கூறுகிறது. இன்றைய சத்தீஷ்கர், ஒரிசா,ஆந்திரா ,மகாராஷ்டிரத்தின் ஒரு பகுதிகள். அங்கு இருந்து  இலங்கைக்கு சென்றவர்கள் தான் இன்றைய சிங்களவர்கள்., ராவணன் அவர்களின் அரசனாய் இருந்திருக்கலாம் என எங்கோ படித்தது ஞாபகம் வந்தது.அவர்கள் தான் ராவணனை எடுத்து சென்றவர்களாக இருக்கும். ஆனால் அவன் வில்லன் போல் சித்தரிக்கபட்டிருப்பதினால் பவுத்தத்தை தழுவி இருக்கலாம். எல்லாமே சொற்கள். சொற்களில் இருந்து முளைத்தெளும் வரலாறுகள். பிறகு பிரிவினைகள் , சண்டைகள் அழிவுகள் . அமெரிக்காவும் ஐரோப்பாவும்  ஏன் உலகை ஆள்கிறது என்று இப்பொது புரிகிறது. அமெரிக்காவிற்கு பெரிய வரலாறு இல்லை. ஆகையால் குழப்பம் இல்லை. ஐரோப்பா நீண்ட வரலாறு உடையது. அனைத்தையும் சொற்களாக தோண்டி எடுத்து போட்டுவிட்டு  அரக்கத்தனமாக உலகை அழித்து உருவாக்கி தனது ஆவநாழியை அனேகமாக காலி செய்துவிட்டது. இனி  அதனிடம் இருந்து என்ன எதிர்பார்க்க?. நாம் உலகத்திற்கு என்னத்தை கொடுக்க? அதற்கான விடை நமது வரலாற்றின் மெய்ஞானம் உரக்க நமது மனதுக்குள் ஒலிக்கவேண்டும்., பிறகு அல்லவா உலகத்திற்கு கொடுப்பது.ஜெயமோகன் சார் அதற்கு உங்களைப்போன்ற ஓராயிரம்  பொன் கவசமிட்ட நெஞ்சுகள் வேண்டும். 

கார்கடலின் 61ம் அத்தியாத்தில் "ஒழியா அம்புகளுடன் ராமனுக்கு எதிர்நின்று போரிட்டபோது ஒரு கணத்தில் தன் உள்ளத்தில் சொல்லும் ஆவநாழியில் அம்பும் இல்லாததை உணர்ந்தார்" என்பதை வாசிக்கும்போது  ராவணனும் மெய்ஞானத்தின் தொடுகையை போர்க்களத்தில் தான் அறிந்திருக்கிறான். இந்த இரு குழுவுக்குமான முரண்கள் தான் போர்களம்.  உலகம் இருக்கும் வரை நீடிக்கும். சக்ரர் "நிஷாதருக்கும் கிராதருக்கும் அசுரருக்கும் அரக்கருக்கும் அவ்வண்ணம் பழைய பழியின் கதைகள் பலநூறு உள்ளன. நமக்கும் அவர்களுக்குமான போர் என்பது இந்த யுகத்தில் தொடங்கியது அல்ல. ஆனால் வரும் யுகத்தில் அது மறைவதற்கு வாய்ப்புள்ளது. அதன்பொருட்டு களமிறங்குவோம். அதை வென்று நம் கொடிவழியினருக்கு அளிப்போம்.” என கூறும்போது இது இன்னும் துலங்கியது. அலாயுதன் கூறும் சொற்களான "“நாம் தோற்கடிக்கப்படுவது அவர்களால் அல்ல, நம்மை எதிர்க்க அங்கே சூழ்ந்திருக்கும் அரக்கர்களால்தான். நான் இரவில் பலமுறை விண்ணிலெழுந்து பாண்டவப் படைகளுக்குள் செல்ல முயன்றேன். இருளிலேயே பாண்டவரை கொன்று மீளமுடியுமா என்று பார்த்தேன். அங்கே காவலுக்கிருப்பவர்கள் இடும்பர்கள். காட்டுநாய்களை மோப்பம் பிடிக்கும் நாட்டுநாய்கள் அவர்கள்" என்பதை வாசிக்கும்போது நெஞ்சு திடுக்கிடது. ஏன் என்றால் இது எனது நெஞ்சை நீங்கள் படித்தது போலவே இருந்தது. தலைவனுக்கு கீழ் வேலை பார்த்துகொண்டு, கூட இருப்பவர்களை குறை சொல்லி அவர்களுக்கு குழி தோண்டுவது கூடவே தலைவனுக்கும் , என்ன ஒரு அரக்கத்தனம்? .எப்படி கதி மோட்சம் கிட்டும்? வெறும் வரலாற்றை மட்டும் படித்து ஞானத்தை அடையாமலே போருக்கு எழுவது. ஆனால் அதற்கும் விடை "“இவர்களிடமிருக்கும் அத்தனை மெய்மைகளும் வெவ்வேறு போர்க்களங்களிலிருந்து இவர்கள் பெற்றுக்கொண்டவை போலும். அந்நெறிகளால்தான் இவர்கள் மேலும் மேலும் ஆற்றல்கொண்டவர்களாக ஆகிறார்கள்".  என அலம்புஷர் கூறுகிறார். ஆனால் உடனே அதை அலாயுதன் "வீண் பேச்சு " என கூற சிரிப்பு வந்தது. அரக்க பெரியவர்களுக்கு சொற்கள் இருக்கின்றன,ஆனால் அதை அதிகாரமாய் கடத்த தெரியவில்லை. தெரிந்தவர்களை கொண்ட சமுகம் அரக்கதனத்தில் இருந்து விடுபடுகிறது. அலம்புஷருக்கும் அலாயுதனுக்கும் நடக்கும் விவாதம் எனக்கு ஒரு விடுதலயையே அளித்தது. ஆனால் அவர்களின் முடிவினால் துரியோதனனின் நிலை ? 

ஸ்டீபன் ராஜ் குலசேகரன் 

Sunday, February 24, 2019

நகைமுரண்



அன்புள்ள ஜெயமோகன் சார்,

கார்கடல் 59ம் அதிகாரமே ஒரு நகைமுரணில் தொடங்குகிறது. உயிருடன் இருக்கும்போது ரத்தபந்தங்கள் எல்லாம் போர்க்களத்தில் எதிரும் புதிருமாக ஆயுதங்களோடும், வஞ்சங்களோடும், மனதாலும் தூரமாக இருக்கிறார்கள். ஆனால் அனைத்தும் அவிந்து சடலங்களான பின் "தென்சரிவில் இரண்டு தரப்பினரின் இடுகாடுகளும் அருகருகே இருந்தன. அங்கே புழங்குபவர்களின் கண்களுக்கு மட்டுமே அவை வெவ்வேறாக பிரிக்கப்பட்டிருப்பதை காணமுடிந்தது என்று வெண்முரசு கூறுகிறது. எனது ஊரில் இருந்த புராட்டஸ்டன்ட் சர்ச்சின் காம்பவுண்ட் சுவர்தான் சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கும் காம்பவுண்ட் சுவர். சர்ச்சின் ஆல்டரின் நேர் பின்பக்கம் காம்பவுண்ட் சுவரில் சுடலை மாடன் உக்கிரமாய் அரிவாளை ஓங்கியபடி பல்லை கடித்துக்கொண்டு பச்சையும் கருப்பும் கலந்த நிறத்தில் வரையபட்டிருப்பார். சிறுவயதில் இரு மதத்திற்குமான வேறுபாடு பிரமாண்டமாய் தெரியும் போது இது ஆச்சரியமாய் இருக்கும். இவர்கள் அங்கு செல்வதில்லை. அவர்கள் இங்கு வருவதில்லை. கல்லறை தோட்டமும் அருகில்தான். அனைவருமே பங்காளிகள். இப்பவும் பொண்ணு கொடுத்து பொண்ணு எடுப்பவர்கள்.,ஆனால் பெயர் மாற்றத்திற்கு பின். என்ன கணக்கோ?

ஆயிரக்கணக்கான சடலங்கள் முகத்தில் துணி சுற்றபட்டு அடுக்கி வைக்கபட்டிருப்பதை நினைக்கவே நெஞ்சு கூசுகிறது. குண்டாசியின் இடத்திற்கு சுஜாதன் வருகிறான். சுடலைகள் எல்லாம் மனம் மரத்தவர்களா? இல்லை மனம் துடிப்பவர்களா? . பூரிசிரவசின் உடல் துணி குவியல்போல் இருப்பதும் அதை அவிழ்க்க சுஜாதான் ஆணையிடுவதும் ஹாரர் படத்தை நெஞ்சு அடைக்க பார்த்துகொண்டிருப்பதுபோல் இருந்தது. ஆனால் அவன் உடல் ஊழ்கத்தில் முத்திரை காட்டி இருக்க அவன் தலை அவன் மடியில் நிறைவுடன்  இருப்பது எதற்கு ? என்று இன்னும் தேடிகொண்டிருக்கிறேன். யோகி நிலையில் இருக்கும் ஷத்ரியனாகிய பூரிசிரவசின் உடலை எப்படி எரிப்பது என அனைவரும் குழம்பும் இடம்  முக்கியமான ஓன்று.  இதை நான் சென்னையில் பல தடவை நேரில் பார்த்திருக்கிறேன். அது மறந்துபோன அல்லது பாதி ஞாபகத்தில் இருக்கும் இன,ஆச்சார குழப்பம். ஆனால் இது உண்மையிலே யாருக்கும் புரியாது. என்ன சடங்கு செய்யவேண்டும் என குண்டாசி இருந்திருந்தால் சரக்கை அடித்துவிட்டு சரியாய் கூறியிருப்பான். அவன் கூறுவதை புறக்கணிக்கவும் முடியாது. பூரிசிரவசின் எரியும் உடல்  துள்ளும்போது மனமும் துள்ளியது. 


துரியோதனன் யுயுதுஸுவிடம் நலம் விசாரிப்பது எல்லாம் உண்மையிலே அவன் யார்? என்ற எண்ணம் வந்தது. தர்மருக்கும் அவருக்கும் மயிரளவில் தான் வித்தியாசம் இருக்கும் போல,இல்லை என்றால் மூவாயிரமாண்டு வரலாற்றில் நிற்க முடியாது அல்லவா?.துரியோதனன் இரவில் பாண்டவர்கள் போர்தொடுக்க எப்படி தர்மர் அனுமதி கொடுத்தார் என கேட்கிறான்?  இதுவும் ஒரு நகை முரண்தான்.தான் போர்க்களத்தில் நிற்ப்பதே  எதிரில் நிற்பவரின் அறத்தின் மீது நம்பிக்கை கொண்டு என்னும் நிலை.  துரியோதனன் “இழப்பா? இனி என்ன இழப்பு? இனி என்ன எஞ்சுகிறது எனக்கு? சொல், இனி நான் வென்றடைய என்ன உள்ளது? நான் இப்போது போரிடுவது தன்மதிப்புக்காக மட்டுமே. அந்த அங்கநாட்டுக் கோழை தன்மதிப்பையும் இழந்து களத்திலிருந்து திரும்பி வந்திருக்கிறான்… அதை அவனிடம் கேட்காமலிருக்க என்னால் இயலாது.”என கூறும்போது எனக்கும் ஆம், அப்படி கேட்க வேண்டும் என்றே தோன்றியது.ஆனால் அதற்கு என்ன பதிலை கர்ணன் கூறிவிட முடியும்? . நட்புகள் சிதைந்து விடுதலை அடைவதை தவிர,ஜெயமோகன் சார் இந்த சுட்டுகாட்டு  அத்தியாயம் என் மனதில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் மிகபெரிது.

ஸ்டீபன்ராஜ்

Saturday, February 23, 2019

நியாயங்கள்



அன்புள்ள ஜெயமோகன் சார்,

செந்நாவேங்கை அத்தியாயம் நாற்பதில் " யுயுத்சு பாண்டவ அணியில் கிருஷ்ணர் இருப்பதினால் தானும் அவருக்காய் அவரின் அணியில் சேர்ந்து கொள்ள போவதாய் துரியோதனனிடம் கூற  துச்சாதனன், சுபாகு எல்லாம்  கடுப்பாகிறார்கள். துரியோதனின் அன்பையும் பெருந்தன்மையையும் மிஸ்யூஸ் பண்ணுவதாக குண்டாசி கூறுகிறான்.  ஆனால் துரியோதனனோ “இளைய யாதவரிடம் என் வணக்கத்தை தெரிவி. எதிர்நிலையில் நிற்பவனைப்போல் அவரை அறிந்தவர் எவரும் என்றுமிருந்ததில்லை என்று சொல்” என்றான் துரியோதனன். “யுதிஷ்டிரனிடமும் தம்பியரிடமும் நானும் என் தம்பியரும் கொண்டிருக்கும் அன்பை சொல். பிறிதொரு பிறவியில் ஷத்ரியர்கள் அல்லாமல் பிறந்து எளிய உள்ளத்துடன் இணைந்து வாழ்வோம் என்று கூறு.” என கூற யுயுத்ஸு தலைவணங்கினான். ஜெயமோகன் சார் இதை மீண்டும் படிக்கும்போது மனது பிசைந்தது. உண்மையிலே ஷாத்ரம் என்றால் என்ன ? என மனம் கிண்ட ...வெண்முரசு  பல இடங்களில் ஷத்ரியர் யார்? என கூறி இருக்கிறது. மண் மீது பெரும் விருப்பு கொண்டவன். எடுத்த முடிவில் உறுதியாய் இருப்பவன். கிண்டலாகவும் பல இடங்களில் கூறி இருக்கிறது. ஆனால்  துரியோதனின் இந்த வார்த்தைதான் ஷாத்ரம் என நினைக்கிறேன் . தன்னையும், தனது இலக்குக்கு அல்லது விருப்புக்கு எதிரி என்று கொண்டவனையும்  உள்ளும் புறமும் அறிவது. ஆனாலும் நடைமுறைகளுக்கு அதை வெளிபடுத்தாமல் அரசியல் செய்வது.  மற்ற எல்லாரும் எளிய பிறவிகள் தான்.

ஸ்டீபன் ராஜ் குலசேகரன் 

Friday, February 22, 2019

இறப்புகள்



அன்புள்ள ஜெயமோகன் சார்,


கார்கடல் 57ம் அத்தியாயத்தில் "ஏகாக்ஷர் சொன்னார்: குருக்ஷேத்ரம் இறப்புகளால் கலங்கிவிட்டிருந்தது" என்று வாசிக்கும்போதுதான் மனம் கலங்க ஆரம்பித்தது. முதலில் பார்பாரிகன் கூறுகிறான் " குருஷேத்ரத்தில் நடை பெறுவது வெற்று கொந்தளிப்பு " என்று. அதுபோலவே சோமதத்தர் வெற்று உணர்ச்சிகளால் பூரிசிரவசின் மரணத்தை ஏற்க மறுத்து நகைக்கிறார். நடிக்கிறார். தான் செய்த தவறுகளை பூரிசிரவஸ் மேல் ஏற்றி வைத்து கொதிக்கிறார்.மது மது என கதறுகிறார். இது கிராமங்களில் ஒரு இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன் நடப்பதை கண்டிருக்கிறேன். என்  கூட படித்த ஒரு பெண் சைக்கிளில் செல்லும்போது விபத்தில் உயிரிழந்துவிட ரோட்டோரத்தில் அவளின் உடல் சாக்குப்பை கொண்டு மூடபட்டிருந்தது.  ஊரில் அவளது அப்பாவிற்கு தகவல் சொல்ல செல்லும்போது அவரின் நிலையும் நடவடிக்கையும் சோமதத்தர் செய்வது போலவே இருந்தது. ஒரு ஐந்து நிமிடம் கழித்து அவளின் அம்மா "தேவி" என அலற அப்போது அந்த ஆண் ஓடிய ஓட்டம் மனதில் இருந்து கண்ணுக்குள் வந்தது. அந்த வெற்று கொந்தளிப்புகள்.ஆனால் அவர் நேராக சென்றது சீமை முள் மரங்களுக்குள் விற்கப்படும் கள்ள சாராயம்  குடிக்கத்தான். குடித்துவிட்டு அந்த பெண்ணின் உடலை பார்த்து அழுதது இன்னும் ஞாபகம் இருக்கிறது. போலிஸ் வருகிறவரை அந்த உடலை யாரையும் தொடவிடாமல் அழுதுகொண்டிருந்தார்.வேறு என்னதான் செய்ய? .இன்று இத்தனை உணர்ச்சி இருக்குமா ? என தெரியவில்லை. சென்னையில் இதேபோல் நடந்த ஒன்றில் அவளது பந்தங்களின் செயல்களை நேரடியாகவே கண்டதினால் கூறுகிறேன். 

துரியோதனன் கலங்கி பித்து பிடித்து அலைகிறான். " மது ,மது " என அலைந்து கலங்கி தெளிந்த குண்டாசிதான் அவனை சமாதான படுத்தவேண்டிருக்கிறது. பூரிசிரவஸ் அவனுக்கு மாப்பிளையாய் வரவேண்டியவன். அதை அவன்கூட நினைத்து படைகூட்டுக்காய் தவிர்த்திருக்கிறான். துச்சளை மீதுகொண்ட காதலை  கனவாய் உணரும் தருணம் பிடித்த ஓன்று . வெண்முகில் நகரம் 64ம் அத்தியாயத்தில் சல்லியருடன் சொற்போர் புரிந்து தோற்று படுத்துகிடக்கும் பூரிசிரவசின் கனவில் இளையவளாய் இருக்கும் தேவிகை மூத்தவள்  துசசளை  வந்து "வாள்புண் மிக ஆழமானது. ஆறுவதற்கு நெடுநாளாகும்.” பூரிசிரவஸ் “வாள்புண்ணா? எங்கே?” என்று கேட்டதும்தான் தன் வலதுகை வெட்டுண்டிருப்பதை கண்டான். “எங்கே?” என்று அவன் கேட்டன். “இங்கு போரில் கையை வெட்டும் வழக்கம் உண்டு. ஆனால் விரைவிலேயே கைகள் முளைத்துவிடும்….” துச்சளை சிரித்தபடி வந்து கட்டிலில் காலடியில் அமர்ந்தாள். “அறிந்திருப்பீர்கள், கார்த்தவீரியரின் ஆயிரம் கைகளையும் பரசுராமர் வெட்டிக்குவித்தார்.”பூரிசிரவஸ் பெருமூச்சுடன் “ஆம்” என்றான். “அதன்பின் யாதவர்கள் அனைத்துப்போர்களிலும் கைகளை வெட்டுவதை ஒரு பழிதீர்த்தலாகவே கொண்டிருக்கிறார்கள்.” “ஏன்?” என்றான். “அவர்கள் பழிதீர்ப்பது தெய்வத்தை“ என்று அவள் கரியமுகத்தில் வெண்பற்கள் தெரிய சிரித்தாள். “நான் விரைவில் நலமடைய விழைகிறேன்” என்றான் பூரிசிரவஸ். “நலமடைந்தாகவேண்டும் இளவரசே. நமது மணநிகழ்வுக்கு ஓலை எழுதப்பட்டுவிட்டது. மூத்தவர் அதை விதுரரிடம் அளித்துவிட்டார். ஆனால் அங்கநாட்டரசர் அதை ஏற்கவில்லை. பால்ஹிகக்கூட்டமைப்பினர் ஒருங்குகூடி வந்து கேட்டாலொழிய மகற்கொடை அளிக்கலாகாது என்கிறார்.” என்றபடி கனவு கண்டுகொண்டிருந்தவன். 

வெண்முகில் நகரம் 67ல்  தமகோஷ இளவரசிகளை சிறைபிடிக்க திட்டத்தில் இருக்கும்போது வரும் துச்சளையின் ஓலையை படிக்கும் போது "‘என் மணநிகழ்வு அரசியலாக்கப்பட்டுவிட்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள்" ஆனால் அதை அவனால் வாசிக்கமுடியவில்லை. அத்தனை நொய்மையானவனாக இருப்பதைப்பற்றிய நாணம் ஏற்பட்டதும் தன்னை இறுக்கி நிமிர்ந்து அதை நீட்டி வாசிக்கத் தொடங்கினான் என வாசிக்கும்போது மிகவும் அணுக்கமானவனாக உணர்ந்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது. பானுமதியை கவர காசிக்கு செல்லும்போது துரியோதனன் கேட்டும் துச்சளையின் மீது உள்ள காதலை துரியோதனனிடம் தெரிவிக்காமல் இருக்கிறான். அவன் கொஞ்சம் எல்லையை கடந்திருந்தால் துரியோதனன் சம்மதித்து இருப்பான். எதோ தாழ்வுணர்ச்சி. பிறகு அச்தினபுரிக்கு வருகைதரும் பாண்டவர்களை வரவேற்க செல்லும்போது தேவிகை, விஜயை இருவரும் அவனை ஒரு பொருட்டாக மதிக்காமல் பேச அதை அறியும் துச்சளை திருமணம் ஆன பெண்கள் அப்படிதான் " நீ என்றும் அவர்களின் மனதில் இளமையாகவே நீடிப்பாய் " என்கிறாள். அப்படியெல்லாம் இருந்த பூரிசிரவஸ் கவுரவர்களின் பக்கம் இருக்கும் ஒரு கிருஷ்ணன் என்றே நினைக்கிறேன். கிருஷ்ணன் கொஞ்சம் புத்திசாலி .வீரன். மற்ற எல்லா குணங்களும் பூரிசிரவஸ் தான். இவன் ஒருவனை கொண்டு துரியோதனன் தான் தனது சகோதரர்கள் மீது உணமையிலே அன்பு வைத்துருந்தேனா என சந்தேகம் கொள்வது வரை செல்கிறார். குண்டாசியும் பீமனால் தலை உடைக்கப்பட்டு கொல்லபட்டான் என்பதை அறிந்து துரியோதனன் மட்டும்  சுடுக்காட்டை பார்க்க ஆசைப்படவில்லை  நானும்தான். இதுவும் வெற்று கொந்தளிப்புதானா? அப்படி என்றால் வாழ்வில் எதுதான் நிஜம் ? எல்லாம் மாயாதானா? 

ஸ்டீபன் ராஜ் 

Thursday, February 21, 2019

பிரயாகை



அன்புள்ள ஜெயமோகன் சார்,

இன்று வெண்முரசின் பிரயாகையை வாசிக்கும்போது பிரயாகை என்றால் என்ன?   என்று கேள்வி எழுந்தது. ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் சங்கமம் ஆவதன் குறியீடா? ஏன் என்றால்  அதில் பாண்டவர்கள் திரௌபதியை மணந்தவுடன் அது முடிந்துவிட்டது . நதிகள் சங்கமம் ஆகின்றதை பிரயாகை என கொண்டாலும் நமது இந்த வாழ்வில் அது எங்கேயோ கனக்ட் ஆகவில்லை என்றால் இவ்வளவுகாலம் நீடிக்கமுடியாது. இல்லை சங்கமங்கள் அனைத்தும் பிரயாகை தானா? 

வெண்முகில் நகரம் இருபதாம் அத்தியாயத்தில்   பாஞ்சாலியின் மணத்தன்னேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அடிவாங்கி மலைப்பாதைகளின் வழியாய் பால்ஹிக நாட்டிற்கு திரும்பிகொண்டிருக்கும் சல்யரோடு  பூரிசிரவஸ் தனது தந்தையோடும் சகோதரர்களோடும் அறிமுகமாகிறான். பால்ஹிகர் ஏன் மலைநாட்டுக்கு ஓடி வந்தார் என சல்லியர் பூரிசிரவசிடம் கேட்டு "“சந்தனுவின் மைந்தர்களை அவர் பார்த்ததே இல்லை, அவர் புண்பட்டு மலைக்கு ஓடிவந்த விலங்கு” என கூறிவிட்டு  “சைப்யபுரியின் நிலவறையில் இன்றும் அவர் வாழ்கிறார். முதுமையில் தசைகளெல்லாம் தளர்ந்தபின்னரும் பேராற்றல் கொண்டவராகவே இருக்கிறார். அவரை சென்று பார். அவரிடம் கேட்டு அறியமுடியாது. ஆனால் அவர் அருகே நின்று அறியலாம். அவருள் எரியும் அழல் வெம்மையை அவ்வறையிலேயே உணரலாம்” என்கிறார். மீண்டும் இதை படித்தபோது பால்ஹிகர் இந்த குருஷேத்ரத்தில் இருக்கிறார் என எண்ணியபோது  மனம் பெரிதாக ஆரம்பித்தது. பூரிசிரவசின் மரணமும் சேர்ந்து எதோ தயங்கியது. ஏனென்றால் பால்ஹியரின் மகன்  சுகேது. அவரது மைந்தர் அக்னிதத்தர். அவரது மைந்தர் தேவதத்தர். தேவதத்தரின் மைந்தர் சோமதத்தரின் மகன் பூரிசிரவஸ்.

கார்கடல்  56ம் அத்தியாத்தில் வெண்முரசு பூரிசிரவசை பற்றி கூறும்போது "பூரிசிரவஸ் தன் எல்லைகளைக்கண்டு அதை கடந்து சென்றதில்லை என்று தெரிந்தது. அவன் தன் முதிரா இளமையின் கற்பனைகளில் எழுந்து வெளிக்கடந்ததில்லை என ஒவ்வொரு அம்புக்கும் அவன் உடல் எழுந்தெழுந்து அமைந்தமை காட்டியது" என்கிறது. இதை வாசிக்கும்போது நானே என்னை கண்முன் கண்டேன். பூரிசிரவசின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் இதைவிட நறுக்காய் கூறிவிடமுடியாது.

பால்ஹிகரை கூட்டி வர சிபி நாடு செல்லும் பூரிசிரவஸ் அதன்  இளவரசி தேவிகையையும்  மத்ர நாட்டு இளவரசி விஜயையும் அஸ்தினபுரியின் இளவரசி துச்சளையையும் எல்லைகளை கடக்காததால் இழந்தவன்.  ஆனால் அவன் கொஞ்சம் எல்லை கடந்து அடைந்தவள் பிரேமை. அவளிடம் அவளின் மலைப்பாம்பு போன்ற கைகளை குறித்தே பேச  அவள் " கைகளை குறித்தே பேசுகிறீர்கள் " என்கிறாள். இன்று அர்ஜுனனால் கை அறுக்கபடுகிறான். வாழ்நாள் முழுக்க எல்லைகளை கடக்காதவன் போர்க்களத்தில் எல்லைகளை கடந்து தலை அறுபட்டு சாகிறான். அப்போ அப்போ தங்களின் எல்லைகளை கடக்காதவர்களுக்கு தலை இருக்காது போல.  சாத்யகி செய்வதை பார்க்கும்போது பீமனும் அவனுக்கு ஆசிரியராய் இருந்திருப்பான் என்று நினைக்கிறேன்.  


ஸ்டீபன் ராஜ் குலசேகரன் 

Wednesday, February 20, 2019

மைந்தர்கள்



அன்புள்ள ஜெயமோகன் சார்,

கார்கடலில் சாத்யகி- மைந்தர்கள் போல்  நிறைய பேர் களத்தில்  இருக்கிறார்கள். தந்தைகள் மகன்களுக்காய் பரிதவிக்கிறார்கள். ஜயத்ரதன்- பிருகதஹாயர் மகன் பாசத்திற்கு ஒரு உச்சம் என்றால்  துருபதன்- திருஷ்டதுய்மன்  தந்தை மீது கொண்ட பாசத்திற்கு ஒரு உச்சம். அவரின் வஞ்சத்தில் உருவானவன். வஞ்சத்தில் துயிலும் குழவி போல் துருபதனை திருஷ்டதுய்மன் பார்ப்பது மனதை கனக்க செய்தது.  தந்தை தனது வஞ்சத்தை நிறைவேற்றிவிட்டே செல்லவேண்டும் எண்ணுகிறான்.இறந்துபோன கௌரவர்களின் வஞ்சமே அற்ற கண்களை நினைத்து பார்த்து அது தனக்கு என்ன பொருட்டாக இருந்தது என எண்ணிக்கொள்கிறான். நான் அபிமன்யு மட்டும்தான்  மாபெரும் வீரர்களோடு போர்புரிய ஓடி ஓடி சென்றான் என எண்ணிகொண்டிருந்தேன். ஆனால் திருஷ்டதுய்மனும், துருபதனும் , பூரிசிரவஸும் எல்லாரும் இதையே செய்து கொண்டிருந்திருக்கிறார்கள். அவன் கடைசி ஜெனரேஷன். அவனுக்கு இந்த களத்தில் நிற்பவர்கள் எல்லாம்  ஆசிரியர், மாணவன், நண்பர்கள், மாபெரும் வஞ்சம் கொண்டவர்கள் என அறியாமல் ஓடி முடிந்துவிட்டான். படைகளின் பெருக்கு கூட முடிந்துவிட்டது. இனி அனைவரும் பெரு வீரர்கள். அனைவரும் பதிமூன்று நாளில்  தங்களின் ஆடி பிம்பங்களின் முன் ஒத்திகை பார்த்து மீண்டிருக்கிறார்கள்.  துரோணரை விட்டால் வாழ்வின் அடுத்த கட்டம் என்ன? என எண்ணி  நொய்ந்து கிடந்த  துருபதனும் பிரகாசமாகி இருக்கிறார்.

வெண்முகில் நகரம் 41ம் அத்தியாத்தில் இளைய யாதவரை சந்திக்கும் சாத்யகி,காம்பில்ய போரில் கௌரவர்களின் தோல்வி பற்றி அவரோடு அரசு சூழ்தலில் ஈடுபடுகிறான். அவனது திறமையை கண்ட இளைய யாதவர் அவனை பார்த்தனிடம் மாணாக்கனாக சேர்த்துவிடுவதாக கூறுகிறார்.  அர்ஜுனனின் மாணவன் சாத்யகி என்பதே மனதுக்குள் இப்போதுதான் நுழைகிறது.  ஆதலால் தான் தனது ஆசிரியரின் ஆசிரியனாகிய துரோணரை அச்சம் என்பதை அறிய வைக்க முடிகிறது. ஆசிரியர்களுக்கு தான் எத்தனை முனைகள்.

ஸ்டீபன்ராஜ் குலசேகரன் 

முற்றறிதலின் நிறைவு:



கார்கடல் 56 ல் மிக அழகான, நுட்பமான, புன்னகையை வரவழைக்கும் அபாரமான ஒரு வாழ்வியல் தருணம் வந்து சென்றுள்ளது. அர்ஜுனனும், பூரிசிரவஸும் பொருதுகையில் சாத்யகியும், அஸ்வத்தாமனும் அவர்களுக்கிடையே உள்நுழையும் காட்சி. சட்டென்று பார்த்தால் தனது குருவுக்கு இணையாக ஒருவன் போரிடுவதா என்ற சாத்யகியின் கோபமும் (சாந்தீபனி குருநிலையில் பத்ரர் இளைய யாதவருக்கு எதிராகக் கொண்டிருந்தது போன்றது), அர்ஜுனனுக்கு இணையாக ஒரு எளிய மலைமகன் நிற்பதா (அர்ஜுனன் பூரிசிரவஸுடன் பொருதுவதை உவகையுடன் வேறு கொண்டாடுகிறான், அஸ்வத்தாமனிடம் கூட அவன் இவ்வாறு மகிழ்வுடன் பொருதியதில்லை) என்ற துரோணர் மைந்தனின் அசூயையும் தான் காரணம் எனச் சொல்லி விடலாம். ஆயினும் நாவல் இக்கோணத்தை ஒரு சொற்றொடரில் மறுத்து கடந்து செல்கிறது. இதைக் கண்டு கொண்டிருக்கும் திருஷ்டதுய்மன் சாத்யகி, அஸ்வத்தாமன் இருவரையும் பொங்கச் செய்து குறுக்கிட வைத்த உணர்வு ஒன்றே என்கிறான்.

ஆம், அர்ஜுனனும், பூரிசிரவஸும் நிகழ்த்தியது போர் அல்ல. இரு உயிர்கள் ஒன்றை ஒன்று முற்றறிந்து, நிறைவுற்றுக் கொள்ளும் அலகிலா ஆடல்!!! அங்கே வஞ்சம் இல்லை, வெற்றி தோல்வி இல்லை, ஆடலின் உவகையும், நிறைவுமே உள்ளது, அது எந்த ஒரு வீரனும் தன் முற்றெதிரியுடன் அல்லது தன் உள்ளத்தைத் திறந்து உள்நுழைந்து, அனைத்தையும் கொட்டிக் கவிழ்த்து, தன்னை வெறுமையாக்கி நிறைவடையச் செய்யும் ஆருயிர் தோழனுடன் கொள்ள விழையும் நிலை. அர்ஜுனனுடன் அஸ்வத்தாமனும் (அவன் இளம் பருவத்திலிருந்தே) பூரிசிரவஸுடன்  சாத்யகியும் அடைய விழைந்த நிலை. எண்ணியிரா வகையில் அர்ஜுனனும், பூரிசிரவஸும் அதை அடைகின்றனர். அது அஸ்வத்தாமனையும், சாத்யகியையும் எரியச் செய்கிறது. உண்மையில் இது ஒரு வகை உடைமை மீறல் (Possessiveness) சார்ந்த உணர்வு வெளிப்பாடே!!! அது பூரிசிரவஸுக்கும் புரிகிறது. எனவே தான் அவன் சாத்யகி அவனை நோக்கிப் பாய்கையில் தத்தளிக்கிறான்!!! மாறாக சாத்யகி பற்றி எறிகிறான். தான் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டதாக உணர்கிறான். எனவே தான் உச்ச வெறியில் ஊழ்கத்தில் அமர்ந்தவனின் தலையைக் கொய்கிறான். நான்காம் நாள் போரில் இறந்த தன் பிள்ளைகளுக்காக பதினான்காம் நாள் பழி வாங்குவதாகச் சொல்கிறான்!!! மானுட மனம் கொள்ளும் வேடங்களுக்கு கணக்கே இல்லை. கதாபாத்திரங்களுடன் மிக நெருங்கிய உறவு இல்லாத ஒரு ஆசிரியரால் அமைத்திருக்க இயலாத ஒரு காட்சி இது.போர்க்களத்தில் முகிழ்த்த அபாரமான ஒரு காட்சி இது!!

அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்,  காளிபிரசாத்

Tuesday, February 19, 2019

ஊழ்



ஜெ

சாத்யகி தன் மைந்தர்களிடம் இவ்வாறு சொல்லும்போது இதென்ன அபத்தமானதாக இருக்கிறது என்றுதான் தோன்றுகிறது. அதிலும் அவன் மைந்தர்கள் எல்லாருமே கொல்லப்பட்டார்கள் என நமக்குத்தெரிந்தபின்னர் இது ஒருவகையான கண்மூடித்தனம் மட்டும்தான் என்றுதான் நினைக்கத்தோன்றியது

இப்புவியில் பிறப்பவரில் பெரும்பாலானவர்கள் வாழ்க்கை முழுக்க தேடுவது ஆற்றுவதற்குரிய பணியை, கொள்ளவேண்டிய படைக்கலத்தை, செல்லவேண்டிய திசையை. அவை முன்னரே வகுக்கப்பட்டு இங்கு வருபவர் நல்லூழ் கொண்டவர் என்று உணர்க! தேடுபவர் தேடலை மட்டுமே அடைகிறார். நாமே நம் இலக்கை தெரிவுசெய்ய முடியாது. ஏனென்றால் அது இங்கு நிகழும் அனைத்தையும் நுண்ணறிவால் உணர்ந்துதெளிந்து அடையவேண்டிய விடை. அவ்வறிதலுக்கே திசையும் படைக்கலமும் பணிக்களமும் தேவையாகிறது. வழிகாட்டப்படுவோர் பேறுபெற்றோர். வழிநடத்தப்படுவோர் பெரும்பேறுபெற்றோர். அவர்கள் அடையாளம் காணப்பட்டவர்கள். தெய்வத்தால் கொடையேற்றுக்கொள்ளப்பட்டோர்

ஆனால் தொடர்ச்சியாக அவன் சொல்வதைக் கேட்கும்போது உண்மைதானே என்ற எண்னம் ஏற்படுகிறது.


தெரிவுசெய்தா அன்னை வயிற்றில் பிறந்தீர்கள்? அவள் தெரிவுசெய்யப்படவில்லை என்பதனால் பிறிதொருத்தியை அவ்வன்னைக்கு நிகரென வைப்பீர்களா என்ன? குலமும் குடியும் நிலமும் நாடும் தெரிவுசெய்யப்பட்டவை அல்ல. இளையோரே, உங்கள் மொழியும் தெய்வங்களும்கூட நீங்கள் பிறக்கையிலேயே அளிக்கப்பட்டுவிட்டவை.


நாம் நம் வாழ்க்கையில் எதையெல்லாம் வாழ்க்கைக்கும் மேலானவை, அதற்காக உயிரையே கொடுக்கலாம் என நினைக்கிறோமோ அவை எவையும் நம்மால் தேர்வுசெய்யப்பட்டு அடையப்பட்டவை அல்ல. அவையெல்லாமே நமக்கு கொடுக்கப்பட்டவைதான். ஆகவே வாழ்க்கையை முன்னரே தீர்மானிக்கப்பட்டவற்றுக்கு முழுமையாக அளிப்பதே சிறப்பானது என நினைத்தேன்

அதன்பின் ஓர் எண்ணம் உருவானது. உண்மையில் நாம் நமக்கான தெரிவுகளைச் செய்யலாம் என நினைத்தாலும் நமக்கு வேறுவடியே இல்லை. நாம் எப்படி என்னதான் செய்தாலும் நாம் என்ன செய்யவேண்டும் என்பது நம் பிறப்புக்கு முன்னரே முடிவுசெய்யப்படுவிட்டது

உங்கள்

பிரகாஷ் 

போர்க்களம்



அன்புள்ள ஜெ

வெண்முரசின் போர்க்களம் மீண்டும் மீண்டும் வந்தாலும் போர் உத்திகளும் அவற்றை எதிர்கொள்ளும் முறைகளும் தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருப்பதனால் சலிப்பில்லாமல் வாசிக்க முடிகிறது. கவசக்கோட்டை, அதற்குள் இருந்து எதிர்பாராமல் எழுந்து தாக்குவது சீனர்களின் போர்முறை. அதை இப்போது கொண்டுவந்திருப்பது பொருத்தமாக உள்ளது. மகாபாரதத்தின் இறுதிச்சிலநாட்கள் போர் மிகமிக நீளமாக செல்லும். பலர் கொல்லப்படும் காட்சிகள் உண்டு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் காட்சிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கிறேன்

ஜெய்கணேஷ்



பார்பாரிகன்



அன்புள்ள ஜெயமோகன் சார்,

பார்பாரிகன் என்றால் " BARBARIC "  தன்மை உள்ளவனா?  அவன் ஆதி மனிதன் . காமம், பசி தான்  உடம்புக்கு முதல் உணர்வுகள் என்றாலும் அதை போக்கிக்கொள்ள கால மாற்றத்திற்கு தக்கபடி வழி இருக்கிறது. இருபது முப்பது வருடத்திற்கு முன் பஞ்சத்தினால் சாப்பாடே கம்மி. இன்று சாப்பிட்டுவிட்டு ஜீரண கோளாறினால் பார்க்கில் சுற்றுகிறோம். பத்து வருடத்திற்கு முன் பெண் உடம்பிற்கு இருந்த மதிப்பு இன்று இல்லை. கொஞ்சம் முயன்றால் சுலபமாக கிடைக்கும்.  ஆனால் மனதின் முதல் உணர்வு அன்பும் வஞ்சமும். மனம் என்ற ஓன்று தோன்றியவுடன் குடியேறிய உணர்வுகளாய் இருக்கும் என்று நினைக்கிறேன். அதை நவீன படுத்தி நவீன படுத்தி இருபத்தோராம் நூற்றாண்டுக்கு வந்திருக்கிறோம். ஆனால் அது மாறவே மாறாதது. ஈசல் போன்ற இந்த வாழ்வில் அல்லது யுக யுகமாய் நீளும் இந்த வாழ்வில் இந்த  இந்த இரு உணர்வுகள் மட்டும்தான் மனதுக்குள் சுற்றி வருகிறது. அதன் பல்வேறு வடிவங்களே வேறு வேறு பெயரில் அழைக்கப்படும் குணங்கள். 

கார்கடலின் 55ம் அத்தியாத்தில் திருஷ்டதுய்மன்- துருபதன் உரையாடலையும் , துருபதன் - துரோணர் போரையும் படித்துக்கொண்டு இருக்கும்போதே மனம் உடைந்து  அழுது  இலகுவாகிகொண்டே வந்தது.  எப்படி துருபதன் துரோணரை சந்திக்க பயத்தால் நடுங்கவில்லையோ அதே போல் படிக்கும்போதும் எதற்கு மனம் நடுங்குகின்றது என்றே தெரியவில்லை. இப்படியெல்லாம் வஞ்சம் கொண்டு வாழ்வதற்கும் ஒரு கொடுப்பினை வேண்டும். அவனே தான் ஆவது. " இந்தக் களத்திற்குப் பின் எனக்கு வாழ்க்கை இல்லை, ஆனால் இந்தத் தருணம் என்னைவிட மிகப் பெரியது என்று உணர்கிறேன். இதன் முன் நான் சிறுதூசுபோல் அதிர்வுகொள்கிறேன்.” என துருபதன் கூறும்போது  வாழ்வது என்றால் இதே போல் தருணங்களில் வாழவேண்டும் என மனம் விம்மியது. வாழ்வுதான் எத்தனை பொருள் உள்ள பிரமாண்டம். த்ருஷ்டதுய்மன்  கூறுவதை எல்லாம் கூறுவதற்கு எனக்கு உங்களை விட்டால் வேறு ஆள் கிடையாது சார். தமிழ்நாட்டில் இப்போது வேறு யாராவது இருக்கிறார்களா? என்பதும் சந்தேகம்தான். எதிரியளவுக்கே நம்மை பெரிதாக்குகின்றன நாம் வணங்கும் தெய்வங்கள். அறத்தின் தெய்வங்கள், வஞ்சத்தின் தெய்வங்கள், சிறுமையின், கீழ்மையின் தெய்வங்கள்”  என்று திருஷ்டதுய்மன் கூறும்போது " யார் எதிரி? என்று தேட மனம் துடித்தது. ஆனால் நான் வஞ்சம் கொண்டு இவன்தான் எதிரி என நினைத்து மூன்றே நாளில் மறக்கும் ஆள். அவ்வளவுதான் எனது மனதின் சக்தி. த்ரிஷ்டதுய்மன் கூறும் " மானுடனை மேம்படுத்தும் எதுவும் அவன் வாழ்வு நிகழும் களத்திற்கு அப்பால்தான் இருக்க முடியும். தொடர்ந்து தன் எல்லைகளைக் கடந்தே அவன் அங்கே சென்றடையமுடியும். வஞ்சம் கொண்டவர்கள் இறந்தகாலத்தின் பிணையில் இருக்கிறார்கள் " என்ற வரிகளை   இன்று முழுதும் நினைத்து கொண்டிருக்கிறேன். துருபதன்- துரோணர் இருவரின் வாழ்வையும் கேள்விக்குள்ளாக்குவது. உண்மையிலே வாழ்வது என்றால் களத்திற்கு வெளியேதான். ஆனால் அந்த களத்திற்கு முன் தூசு நாம் என்று உணரும் தருணங்களில் எல்லாம் மீண்டும் மனம் சுருண்டு கொள்கிறது.ஆனால் அதற்கும் விடை  துருபதனே கூறுகிறார்" ஆம். ஆனால் நான் மாற்றி எண்ண போவதில்லை" என. கர்ணன் -துரியோதனன் நட்பு செஞ்சோற்று கடன், அர்ஜுனன் - கிருஷ்ணர்  நட்பு ஒரு மாதிரி காதல் என்றால் துருபதன்- துரோணர் நட்பு வஞ்சம். அப்படி மகாபாரத்தின் ஒவ்வொருவருக்கும் ஒரு குண சொல்லை வரையறுத்து விடலாம். அனைவரும் வெண்முரசு சொல்வது போல் " ஆடி பிம்பங்கள்" .  அவர்கள் நிற்கும் களம் ஒவ்வொருவரும் தன்னை தூசு என்று என்ன செய்யும் குருஷேத்ரம். அவரவரின் இயல்புக்குதக்கபடி ஆடிபிம்பங்கள்.  இப்போது இன்னும் துலங்குகிறது கார்கடல் 52ம் அத்தியாத்தில்  சாத்யகி தனது மகன்களிடம் கூறும் “இப்புவியில் பிறப்பவரில் பெரும்பாலானவர்கள் வாழ்க்கை முழுக்க தேடுவது ஆற்றுவதற்குரிய பணியை, கொள்ளவேண்டிய படைக்கலத்தை, செல்லவேண்டிய திசையை. அவை முன்னரே வகுக்கப்பட்டு இங்கு வருபவர் நல்லூழ் கொண்டவர் என்று உணர்க என்ற இந்த வரிகளின் பொருள். இதுவும் பார்பாரிகன் மூலம் வெண்முரசு கூறுவது தான். ஊழால் பணியோ, படைக்கலமோ , செல்லவேண்டிய திசையோ இல்லாமல் வருபவர்கள் [ அதற்கு முதலில் தன்னை அறியவேண்டும்]  எவ்வளவுக்கு எவ்வளவு சீக்கிரம் தவமோ யோகமோ செய்து அதை அறிந்து கொள்கிறார்களோ அதுதான் வாழ்வு. 


வண்ணக்கடல் 33ம் அத்தியாயத்தில் கூஷ்மாண்டர் துரோணரிடம் "பிருஷதனின் மைந்தனான யக்ஞசேனன் இளமையிலேயே அகத்திலும் புறத்திலும் ஆற்றலற்றவன் என்று அறியப்பட்டான். ஐந்துகுலத்தவருமே அவனை இழிவாக எண்ணினர்" என கூறுகிறார்.அப்படி இருந்தவர்,துரோணரால் பயிற்றுவிக்கபட்டு ஆற்றல் ஊட்டபட்டு பிறகு  அவற்றினாலேயே அகந்தை அடைந்து துரோணரை அவமதித்து  துரோணரால் தோற்கடிக்கப்பட்டு வஞ்சம் கொண்டு இங்கு வந்து நிற்கிறார்.  ஜெயமோகன் சார் , துரோணரின் முன் துருபதன் அடையும் விஸ்வரூபத்தை பார்க்கும்போது ஏனோ " தர்மரும்- துருபதனும்" பகடை ஆடும் இடம் நினைவுக்கு வந்தது. மீண்டும் கூஷ்மாண்டர் "காம்பில்யத்தில் நடந்த துருபதனின் முடிசூட்டுவிழாவிற்கு அக்னிவேச குருகுலத்தின் தலைவர் இரண்டாம் அக்னிவேசரும் அவரது மாணவர்களும் வந்திருந்தனர். அவர்கள் கங்கையில் படகிறங்கியபோது துருபதனே நேரில் வந்து அக்னிவேசரின் பாதங்களை தன் சென்னியில் சூடினான். அவரை பொன்னாலான ரதத்தில் அமரச்செய்து நகரத்துத் தெருக்கள் வழியாக அணிக்கோலத்தில் அழைத்துச்சென்றான்"  என்று கூறியதை மீண்டும் வாசிக்கும்போது ஒருவன் ஒருவனிடம் வஞ்சம் கொள்ள ஒரு காரணம் மட்டும் போதாதோ? என எண்ணினேன். தன்னிடம் வித்தையை கற்றவன் , "இவன்தான் எனது ஆசிரியன்" என கூறுவதற்கு கூட கூசினால் ஆசிரியனின் மனம் என்ன பாடுபடும்.  இன்னொன்று ஆசிரியன் தனது நிலையை விட்டு இறங்க கூடாதோ என்றும் தோன்றியது.  ஷத்ரிய சோதனை. 


ஸ்டீபன்ராஜ் குலசேகரன்