Wednesday, December 9, 2020

ஊழ்

 




அன்பு ஜெயமோகன்,


நலமா?

முதற் கனல் இரண்டாம் முறை படித்துக்கொண்டு இருக்கிறேன். அதில் பெண் கதாபாத்திரங்கள் மிகவும் வலுவானதாக இருந்தாலும், இந்த முறை (இரண்டாம் முறை) வசிக்கும் போது  தந்தை - பிள்ளைகளின் உறவு  சார்ந்த விஷயங்கள் என்னை முன்னும் பின்னுமாக சிந்திக்க வைக்கின்றன. ஒரு  தந்தையாக காசி மன்னன்  என்ன மாதிரி தவித்து இருப்பான்  - அம்பையை அவனால் ஏற்றுகொள்ள முடியாத அந்த தருணத்தில்... அதே மாதிரி சந்தனு பீஷ்மர் சபதம் எடுக்கும் போது  எவ்வளவு துயருற்று இருப்பான்... அப்பாக்கள் தான் எவ்வளவு துயரம் தங்க வேண்டி இருக்கிறது . இது கூடவே நான் சு. ரா. நினைவின் நதியில் படித்து கொண்டு இருக்கிறேன். இந்த இரண்டு புத்தகங்களும் எனக்கு  ஏனோ என் அப்பாவை நிறைய நினைவு படுத்தி கொண்டே இருந்தது. உங்கள் அறம் தொகுப்பை படிக்கும் போதும் எனக்கு என் அப்பாவின் நினைவு வந்து கொண்டே இருந்தது.  

நான் அறம் சிறுகதை தொகுப்பின் கடைசி பக்கங்களை பெங்களூர் ரயில் பயணத்தில் முடித்தேன். அருகில் இருந்தவர் கேட்டார், சார், படிச்சிடீங்களா; ஆமா, ரெண்டு மூணு முறை படிசிருப்பேன்; எனக்கு கொடுக்கீறீங்களா நான் படிக்கிறேன்; oh , no  problem. அவர் காட்பாடியில் இறங்கும் போது கேட்டார் இத எங்க வாங்கினீங்க சார், நானும் வாங்கணும்; நீங்களே வச்சிக்கிங்க; எவ்வளவு சார் தரணும் உங்களுக்கு; ஒன்னும் வேணா , நீங்க படிச்சிட்டு  யாருக்காவது படிக்கச் கொடுங்க. என் அப்பா இருந்தால் சொல்லி இருப்பார் - இதைத்தான் சொன்னேன், மனசு ஒரு மாதிரி நெகிழ்ந்து இருக்கும் இந்த மாதிரி புத்தகம் படிச்சா - 

இதையெல்லாம் யோசிக்கும் பொது, என் அப்பா இறக்கும் தருவாயில் (புற்று நோய் ), அவர் என்னிடம் கேட்டது ஒரு அறம்  பற்றிய கேள்வி - நான் எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவன், கடன் இல்ல, பிள்ளைகள் தொல்லை இல்ல (நான் ஒரே  பிள்ளை), என்னோட விவசாய தொழிலாளிங்கள நல்லா நடத்தினேன் யாருக்கும் வம்பு பண்ணினது இல்ல, ஆனா எனக்கு ஏன் இந்த நோய் ? நல்லா நியாயமா வாழ்வதினால் என்ன பயன்... நான் யார் யாரிடம் எல்லாம் இந்த கேள்வியை  கேட்டேன். ஒரு பதில் இல்ல... அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும், செவ்வியான் கேடும் நினைக்க படும்  - இன்னு மட்டும்தான் வள்ளுவர் சொல்றார். அவரும் ஒரு காரணம் சொல்லல. ..இத என்ன ஊழ்  அப்படின்னு புரிஞ்சிக்கறதா? அததான் நிறைய விதத்துல எனக்கு முதற் கனல் சொல்ற மாதிரி புரியுது ... அந்த புரிதல் சரியா சார்?

மிக்க அன்புடன்,

தேவா 

அன்புள்ள தேவா

ஒருவகையில் சரிதான்.

வாழ்க்கையில் நாம் நம்மைவைத்தே எல்லாவற்றையும் யோசிக்கிறோம். பிரபஞ்சம், ஊழ் எதைப்பற்றியும் நாம் யோசிப்பதில்லை. நாமும் பிரபஞ்சமும், நமது ஊழ் என்றே யோசிக்கிறோம். அது மானுட இயல்பு. ஆனால் அறிவு என்பதும் ஞானம் என்பதும் தன்னை விலக்கி, ஒட்டுமொத்த உண்மையை அறிவது. ஒட்டுமொத்தமாக இந்த பிரபஞ்சம் என்ன, இதன் செயல்பாடுகளிலுள்ள ஒழுங்கு என்ன, எதை நாம் அறியமுடியும் எதை நாம் அறியமுடியாது என உணர்வது. முதற்கனல் அதைநோக்கிய வாசல்

ஜெ

வெண்முரசு வாசிப்பு

 


பெருமதிப்பிற்குரிய ஆசிரியர் திரு.ஜெயமோகன் ஸார் அவர்களுக்கு சென்னையிருந்து கணேசலிங்கம் அன்புடன் எழுதுகிறேன்.

தங்களது மகாபாரதக் காவியமான...வெண்முரசின் ஜந்தாம் பாகம் "பிரயாகை" புத்தகத்தை பல நாட்களாக ரசித்துச் சுவைத்துப் படித்து...இன்று மாலை தான் முடித்தேன்.ஏற்கனவே தங்களின் அற்புதமான எழுத்து நடையில் படித்த நான்கு பகுதிகளைப் போலவே...பிரயாகையும் பிரமாண்டமாகவே இருந்ததென்பதை..பாராட்டுகளுடன் தெரியப்படுத்துவது கடமை என்றே கருதுகிறேன்.

மகாபாரதக் கதையை...சிறுவயதிலிருந்தே அப்பா வாயிலாக, திரு.இராஜாஜி அவர்களின் வியாசவிருந்து...புலவர் கீரன் அவர்களின் சொற்பொழிவுகள், மற்றும் அனேக டிவி சீரியல்களிலும் கேட்டு, பார்த்து ரசித்து இருந்தாலும்....தங்களுடைய எழுத்துநடையும், கதாபாத்திரங்களையும், நிகழ்வுகளையும் விவரிக்கும் விதமும்..மாபெரும் இதிகாச காவியத்தை அந்தக்கால கட்டத்தில் வாழ்ந்த மக்களோடு இணைந்து நேரில் கண்டு களித்த பேருவகை நெஞ்சில் எழுகிறது.

 

எல்லாம் வல்ல எம்பெருமான் ஸ்ரீவினாயகப் பெருமான், மகா ஸ்ரீசரஸ்வதி தேவி,ஸ்ரீவேத வியாசர் அனைத்து தெய்வங்களின் நல்லாசிகளையும் தாங்கள் அருளப் பெருவீர்களாக!!

 

அனேக வணக்கங்களுடன்

தங்கள் அன்பு வாசகன்

 

செ.கணேசலிங்கம்

Tuesday, December 8, 2020

திசைதேவர்

 


போர்

 


அன்புநிறை ஜெ,


நலமாக இருக்கிறீர்களா? தங்கள் அமெரிக்க பயணம் குறித்து இன்றுதான் வாசித்தேன். விரல் இன்னும் குணமாகாது கட்டுப்போட்டிருப்பது கவலையளித்தது. வலி குறைந்திருக்கிறதா?

இன்றுதானே ராலேயில் நூலகத்தில் சந்திப்பு எனக் குறிப்பிட்டிருந்தீர்கள். என் தம்பி பிரசன்னா அங்கிருக்கிறார்,  இன்றைய நிகழ்ச்சி குறித்து  கூறியிருக்கிறேன். 

அடுத்த வெண்முரசு நூல் தொடங்கி விட்டீர்களா?

உண்மையில் போர் உச்சம் பெற்றது முதலே மனது ஓய்ந்து போயிருந்தது. கர்ணன், தொடர்ந்து துரியன் என இரு நாவல்களும் சேர்ந்து கனத்துப் போயிருந்தது மனது.

வெண்முரசு இவ்வாழ்வுக்கு அளித்திருப்பது ஒன்றிரண்டு அல்ல. முன்பு குருகுலத்தில் குரு அவரவர் தன்மைக்கேற்ப ஏதாவது ஒரு நூலை தியான நூலாக அறிவுறுத்துவது வழக்கம் எனக் குறளுறையில் குறிப்பிட்டிருந்தீர்கள். அதுபோலத்தான் வெண்முரசை இவ்வாழ்வுக்கான எனது தியான நூல் என எண்ணிக்கொள்வேன். 

எத்தனை எத்தனையோ தருணங்கள், அருகிருந்து வாழ்வைப் பார்த்துக் கொண்டிருப்பது போல அன்றைய நாளை, அப்போதைய எனது மன அவசங்களைத் திறப்பதற்கான ஒளியோடு எப்படி எழுதப்படுகிறது என ஆரம்பத்தில் வியந்து போனதுண்டு. எதுவுமே தற்செயலல்ல என ஆழமாக நம்புவதால், இது எப்படியோ வாழ்வின் இத்தருணத்தில் இந்த நூல், குறிப்பாக அந்தந்தப் பகுதி வாசிக்கும் வரம் அமைந்திருக்கிறது என நிறைவு கொள்வேன். (சொல்வளர்காட்டின் மெய்மைதேடும் குருநிலைகளைக் குறித்தும், தரிசனங்கள் குறித்தும் படித்தபோதே முதல்முறையாக உங்களை ஆசிரியரென நேரில் காணும் பேறு பெற்றதும் இதில் அடக்கம்) 

அதுவே பேரிலக்கியங்களின் காவியங்களின் ஒளி எனப் புரிந்து கொள்கிறேன். ஒவ்வொருவரைப் பற்றியும் பெயர் வரை அறிந்தது போன்ற கருணையும், அனைவரையும் அனைத்து நிலைகளையும் வேறுபாடற்ற கண்ணோட்டத்தோடு கூடிய இரக்கமற்ற விலக்கமுமாக வரும் கருநிற யாதவனே வெண்முரசு என்று படுகிறது. அடுத்த நூலுக்காகக் காத்திருக்கிறேன்.

மிக்க அன்புடன்,
சுபா

சொல்வளர்காடு


 


அன்புள்ள ஜெமோ


இரண்டு வருடங்களாக எனது காலை பொழுது காப்பியுடனும், உங்கள் வெண்முரசுடனுவே தொடங்குகின்றது. ஒரு பகுதி முடிந்து அடுத்து தொடங்கும்  இடைப்பட்ட நாட்களில் மறுபடியும் பழைய வெண்முரசின் பக்கங்களையே படிக்கின்றேன்.

சொல்வளர்காடு படித்தாலும், சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. அதற்கான உளநிலை இப்போது இல்லை என்றே சொல்ல வேண்டும். வெய்யோன் படித்து விட்டு, மனம் பேதலித்து அலைந்த நாட்கள் உண்டு.

ஆனால், என்றும் படிப்பது நீலமும், இந்திரநீலமுமே. வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களை, தடுமாற்றங்களை நீலத்தைப் பற்றி கொண்டே கடக்கின்றேன். சமீபத்தில் கடுமையான உளசிக்கல் ஏற்பட்ட போது, நீலம் படித்தும் கலக்கம் தீரவில்லை. இந்திரநீலம் படித்க தொடங்கிய போது, எங்கேயோ திருஷ்டத்யுமனாக என்னை உருவகித்து கொண்டேன். இந்திரநீலம் படித்து முடிக்கும் போது அவனது மனநிலையிலே நான் இருந்தேன். நீலனான அவனிருக்கிறான் என்னுடன் என்ற தெளிவுடன், அவனையன்றி யாருமில்லை என்ற உண்மையையும் உணர்ந்தேன்.

இப்படிபட்ட ஒரு படைப்பை தந்த உங்களை பாராட்ட எனக்கு தகுதியில்லை, என்பதால் வணங்குகிறேன்.

நன்றி
ராதா  

அகழ்வு

 


ஆசிரியருக்கு,


 இன்றைய கோயிலை அகழ்வு செய்து முடித்த பின்னர் தான் திடீரெனத் தோன்றியது சில நாட்களுக்கு முன்பு கனகர் குதிரையில் இலக்கில்லாமல் சென்று கொண்டே இருந்து, பரத்தையர் தெருவுக்கு சென்று பின்னர் மீண்டது. தன்னை உள்ளுணர்வுக்கு ஒப்படைத்துவிட்டு அவர் அறியாமல் செய்த பயணம் அது.

காந்தாரி  தீர்க்கசியாமரை  தொட்டது பின்பு கண்ணிழந்த யானையை உணர்ந்து அதன் வழி சென்றது எல்லாமே உள்ளுணர்வு ஒன்று இன்னொன்றைப்  தட்டி தூண்டி எழுப்பி அதை தொடரும் அனுபவம். மிக அபாரமான அனுபவம்.

கிருஷ்ணன்

ஈரிலை முளை



 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு 

வணக்கம்

 இன்றைய நீர்ச்சுடரில் ‘’ஈரிலை முளை’’ என்று ஒரு சொல் வருகின்றது.  ''Dicotyledonous  plumule'' என்பதின் மிச்சரியான தமிழாக்கம் இது. வெண்முரசில் இப்படி ஏராளம் தாவரவியல் தகவல்களும், அத்துறை சார்ந்த  ஆங்கிலசொற்களுக்கு இணையான மிகச்சரியான  தமிழ்ச்சொற்களும் வந்துகொண்டே இருக்கின்றன. இவற்றைக்கொண்டு ஒரு நல்ல தாவரவியல் அகராதியை தொகுத்துவிடலாம்.

காந்தாரியின் திருமணத்தின் போது தாலிக்கு ஓலை தேடி பாலையில் பெண்கள் கண்டடையும் தாலிப்பனை-Corypha taliera என்று அறிவியல் பெயரிலேயே தாலியைக்கொண்டிருக்கிறது. ஒரிடத்தில் ‘’தன்னந்தனியே நிற்கும் கலையறிந்தது தாலிப்பனை’’ என்று சொல்லி இருப்பீர்கள், Corypha taliera குறித்த விவரணைகள்  // A solitary, massive, moderately slow growing, monoecious palm//  என்றுதான் துவங்கும். காண்டீபத்தில் ஒரு Dry Desert scrub jungle அழகாக விவரிக்கப்பட்டிருந்தது

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். பலவறை தொகுத்து வைத்திருக்கிறேன். சகுனியின்  கைகளில் நீலநரம்புகள் புடைத்தெழுந்திருப்பதை, ஊமத்தம் பூவினுள்ளிருக்கும் நரம்புகளுக்கு ஒப்பிட்டிருப்பீர்கள், அர்ஜுனனுக்கான மருத மரத்தின் அறிவியல் பெயர் Terminalia arjuna.

என் எல்லா வகுப்புக்களிலும் எப்படியும் இதுபோல வெண்முரசில் வரும் தாவரவியல் சார்ந்த தகவல்களை சொல்லிவிடுகிறேன். எனக்கு இவற்றை தொகுக்க தொகுக்க பிரமிப்பு கூடிக்கொண்டேயிருக்கின்றது. வெண்முரசு காட்டும் தாவரவியல் தகவல்ளை மட்டும் ஒரு பெரிய ஆய்வாக செய்யலாம்.

நேற்று டார்வினின் பரிணாமக்கொள்கையில்  இயற்கையின் சமநிலைப்படுத்துதலை சொல்ல வேண்டியிருக்கையில் வெண்முரசில் கடந்த  ஞாயிறன்று சொல்லியிருந்த // காட்டில் புல் வறளும் போது பெரும்புலிகள் தங்கள் குட்டிகளை கொன்றுவிடும் என்கிறார்கள் // என்பது நினைவுக்கு வந்து அதையும் சொன்னேன். என் மாணவர்கள் நல்ல தமிழிலும் தாவரவியல் படிக்கிறார்கள் உங்களால்.

அனைத்திற்கும் நன்றி

லோகமாதேவி

Monday, December 7, 2020

களிற்றியானை நிரை-07

 


ஓம் முருகன் துணை

 

அன்புள்ள ஜெ வணக்கம்

 

களிற்றியானை நிரை-07 வாசித்து அதன் அனுபவத்தை எழுத்தாக்க காத்திருக்கிறேன்.   வாசிப்பு அனுபவத்தை எழுத்தில் கொண்டுவர ஒரு மலர்தல் தருணம் தேவைப்படுகிறது. அடுத்து அடுத்து என்று உங்கள் சொற்களின்வழியாக உணர்வுகளின் வழியாக காட்சிகள் வழியாக மனம் இழுத்து செல்லப்பட்டுக்கொண்டே இருக்கிறது. நதியலை அடித்துச்செல்லும் வேகத்தில் உள்ளத்தின் உணர்ச்சியில் லயிப்பதா? கரையில் தோன்றி பின்னோக்கி நகர்ந்து  கடந்துபோகும் மரங்களின் மலர்களின் வண்ணத்தில் காட்சிகளின் எண்ணத்தில் லயிப்பதா? மகிழ்ச்சியாக இருக்கிறது. எத்தனை பெரிய இலக்கியத்தைப்படிக்கிறேன் என்ற ஆனந்தம். 

 

ஒரு சொல்லை கதையாக்கிவிடுகின்றீர்கள். ஒரு சொல்லை உணர்ச்சி கடலாக்கிவிடுகின்றீர்கள். ஒரு சொல்லை காட்சியாக்கிவிடுகின்றீர்கள். வெளிவரமுடியவில்லை, வெளியே வந்தால் அதன் அடர்த்தி அழுத்தி அமர்த்துகிறது.

 

கர்ணன் பெயர்கூட தெரியாத ஒரு நாகன் இருக்கிறான். கவசகுண்டலமின்றி பெரும்போர் களத்தில் நிற்கும் கர்ணன் கதை நடக்கும் இடத்தில் தியானத்தில் ஆழ்ந்து முகமலர்வில் ஒருவன் இருக்கின்றான். எத்தனை பெரிய உண்மையும், தூரங்களை கடந்த எல்லையும்.  இந்த இருபெரும் எல்லைகளை கண்டும் தனக்கென்று ஒரு இடத்தில் வழிபோக்கன்கள் இருக்கிறார்கள். வந்துகொண்டும் போய்கொண்டும் இருக்கிறார்கள். 

 

வழிபோக்கன்களுக்கானதுதான் கதையும் காவியமும், அதற்குள் அவர்கள் இருக்கிறார்கள். அதற்குள் அவர்கள் வாழ்கிறார்கள். அவர்களை கடந்து கதையும் காவியமும்இருக்கிறது. அவர்களும் அதை கடந்தும் தொடர்ந்தும்  வாழ்கிறார்கள்.   வழிபோக்கன்கள்தான் இந்த பூமிக்கு வந்துவந்துபோகும் வாழ்வியலியலாளர்கள்.   எத்தனை அற்புதமான வாழ்க்கையின் யாதார்த்த உண்மை.  யதார்த்தமான உண்மை என்றாலும் எத்தனை உயரமான தாழ்வான மானிட எண்ணங்கள்  தனக்குள் முட்டிக்கொள்ளும் இடத்தை காவியம் மையத்தில் நின்று தொட்டுக் காட்டுகின்றது.  இந்த எண்ண தூரங்களை கடக்காமல் வாழ்க்கையை புரிந்துக்கொண்டுவிடமுடியாது. அந்த அந்த எண்ணங்களுக்கு தகுந்தபடி வாழ்க்கை அங்கே அங்கே நின்றுவிடுகிறது. எண்ணங்களை எட்டிப்பிடித்தவன் வாழ்க்கையை பிடித்தவன்தான். 

 

 

ஆறாம்வகுப்பு படிக்கும்போதுதான் முதன் முதலில் தீமிதி விழாவை அருகில் நின்றுப்பார்த்தேன். 


கங்கை கொண்ட சோழபுரம் அருகில் உள்ள  சின்னவளையம் என்ற ஊரில் அருள்பாளிக்கும் அன்னை திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா.  முப்பதுநாள் பாரதம் படித்து தீமிதி  திருவிழா வைப்பார்கள். கூட்டத்தோடு கூட்டம் முட்டிமோதி பூக்குழி அருகில் சென்று நின்றேன்.

 

தொலைவில் இருக்கும்போது மலர்செண்டுபோல் வா வா என்று அழைத்த பூந்தீ அருகில் சென்றதும் நில் நில்  என்று செந்தீயாக அடித்து வெளுத்து வேகவைத்தது. உள்ளுக்குள் சுடர்பரவி அங்குலம் அங்குலமாக உறிஞ்சியது. இரு இரு இன்னும் கொஞ்சம் இரு என்று உள்ளேறி முத்தமிட்டது. 


எப்படி இந்த அனல் கங்கு தீயில் நடக்கிறார்கள்?  


அன்னையின் அருள்தான் என்று குண்டத்திற்கு முன்னால் நிற்கும் அன்னை திரௌபதியைப்பார்த்தேன். பூவாடை பொன்மேனி, தூரத்தை அருகழைக்கும் பார்வை. மின்னும் கன்னத்தில் செந்தழல்மேவி முகம் உருகி வழிந்துவிடுமோ என்று ஏங்கவைக்கும் குழைவு.  செந்தீ சுடர் மின்ன மின்ன ஏறி அன்னை கன்னத்தை எச்சில் படுத்துகிறது. தீ முத்தமிடும்போதும் கன்னம் ஈரம்படுமோ?   அந்த எரிதழளுக்குள் அன்னை மந்தகாசம் புரிகிறாள். 


வீட்டிற்கு வந்து ஆயாவிடம் அன்னை திரௌபதி முகத்தில் தீ எரியும் வலியும், வலிமறந்த புன்னகையும் இருக்கிறது என்றேன். 

 

ஆயா “ஆத்தா, தீயை தன் மடியிலதானே ஏந்துறா, அதான் அவள் பிள்ளைகளுக்கு சுடுவதில்லை, எல்லா சூட்டையும் அவளே வாங்கிக்கொள்கிறாள். அதான் அந்த வலியும் சிரிப்பும்” என்று சிரித்தது. 

 

அன்னை மடியில் தீமிதிக்கும் கால்கூச்சம் எனக்கு.

 

திரௌபதி அம்மன்கோயிலில் முப்பது நாள் பாரதம் படிக்கும்போது, தனது தள்ளாத வயதிலும் நான்கு மயில்  தூரம் நடந்துபோய் ஆயாள் பாரதம் கேட்டது  உண்டு. அந்த ஆயாள் பெற்ற பிள்ளையை, எனது தந்தையை, எனது தாயுடன் எத்தனையோ ஊர்களில் இறைவனும் இறைவியும் குடுத்தனம் நடத்த வைத்தார்கள்.

 

காட்டுமன்னார்கோவில் வீரநாராயணபெருமாள் கோயில் தெப்பக்குளக்கரையில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் பாரதம் படிப்பதை அப்ப அருகில் உள்ள வீட்டில் வாழ்ந்து கேட்டார்கள். தன்னை நாடிநாடி வந்து பாரதம் கேட்ட தாயின் பிள்ளைக்கு முதுமையில் தாயே நாடிவந்து பாரதம் சொன்னதுபோல் இருந்தது.

 

முப்பது நாள் மட்டுமல்ல முன்னூறுநாள் பாரதம் படித்தாலும் கேட்காத மக்களும் உண்டு.  

 

//ஆனால் ஒருமுறைகூட இக்கதைகளை செவிகொள்ளாதவர்கள் இந்நிலத்தில் பல கோடி. அவர்களின் மொழிகளில் இக்கதைகள் இன்னும் எத்தனை யுகங்களுக்குப் பின் சென்று சேரும் என்று தெரியவில்லை. இன்று அவர்களுக்கும் நமக்கும் இடையே இருப்பவை சில சொற்கள். சில ஆணைகள், சில உசாவல்கள், சில மறுமொழிகள். நாணயங்கள்போல அவை புழங்குகின்றன//   

 

கிருபானந்தவாரியார் சுவாமிகள் ஒரு கதை சொல்வார்.  வயல் வேலை செய்யும்  பாட்டி தினமும் ராமாயணம் கேட்க போகும்  அதைப்பார்த்த பண்ணையார் மகன் “ பாட்டி, நேற்று என்ன ராமாயணம் கேட்டாய்” 

 

பாட்டிக்கு என்னவென்று சொல்லத்தெரியாது. மறுநாளும் பாட்டி ராமாயணம் பார்க்கபோனது. அதே ஆள்  “பாட்டி, நேற்று என்ன ராமாயணம் கேட்டாய்” 

 

பாட்டிக்கு சொல்லத்தெரியவில்லை. இளைஞன் “உனக்குதான் ஒன்றும் தெரியலையே, நீ எல்லாம் எதுக்கு தூக்கத்தை தொலைத்து ராமாயணம் கேட்க போகிறாய்” என்று சிரிக்கிறான். 

 

பாட்டி அருகில் கிடந்த சாணியள்ளும் தட்டுக்கூடையை காட்டி அதில் தண்ணீர் மொண்டு வரசொல்லியது. அதில் எப்படி தண்ணீா அள்ளுவது என்று இளைஞனுக்கு கோபம். பாட்டி கோபப்படாமல் சிரிக்காமல்  “முடிந்த அளவு  தண்ணீர் கொண்டுவா, முயற்சி செய்” என்றது. 

 

இளைஞன் தண்ணீரை அள்ளி அள்ளிப்பார்த்தான். தண்ணீர் சொட்டுக்கூடநிற்க வில்லை. வெறுத்துபோன இளைஞன் தட்டுக்கூடையை தூக்கி எறிந்தான். 

 

பாட்டி இளைஞனிடம் தட்டுக்கூடையை சுட்டிக்காட்டி, “அதுல தண்ணீ மொல்ல முடியாது, ஆனா  அதுல உள்ள அழுக்கு எல்லாம் போயிட்டுது பாத்தியா“ என்றது. 

 

ஏன் இ்நத தொல்கதைகளை கேட்கவேண்டும் என்றால்? அது நம்மை கழுவி விடுகிறது. அந்த கழுவுதல் தூய்மை மட்டும் செய்யவில்லை, களைப்பையும் போக்கிவிடுகிறது. அந்த கழுவுதல் வேண்டாத மக்களை அந்த தொல்கதை நதி, சொல்நதி கண்டுக்கொள்ளாமலே போய்கொண்டே இருக்கிறது. 

 

மூத்த அண்ணனுக்கும் கடைசி தம்பிக்கும் சொத்து தகறாறு, ஐந்துசெண்ட் அண்ணனுக்கு அதிகமாக கொடுத்ததால் வந்த தகறாறு. விலக்கபோன இரண்டாவது தம்பி இருவருக்கும் எதிரியாகி, நமக்கு எதற்கு வம்பென்று போனபின்பு. குடும்பசண்டையாகி, உறவுசண்டையாகி, ஊர்  பஞ்சாயத்தானது.  இதில் எதிலுமே கலந்துக்கொள்ளாமல், இங்கிருந்தும் எங்கோ இருப்பதுபோல்  இருந்த கல்யாணம் செய்யாத முதல்தம்பி சிரிக்காமல் சொன்னான், ஆனால் ஊருக்கும் உறவுக்கும் சிரித்துக்கொண்டு சொன்னதுபோல்தான் இருந்திருக்கும் “அந்த ஐந்து செண்டை என்னிடம் கொடுங்கள் நான் விற்று தேவஊழியம் செய்யபோறேன்” என்றான்.

 

பழுத்த இரும்பில் நீர் விழுந்தால் சுர்ர்ர்ர்..ங்கும். ஆனால் பழுத்த இரும்பில் தீயே விழுந்தால்? ஊர் சண்டை ஒரு பழுத்த இரும்பு, அதில் கண்ணீர்விழுந்தால் ஊர் சுர்ர்ர்..என்று பொங்கி பூரிக்கும்.  அங்கு தீ விழுந்தது. ஊர் மட்டும் இல்லை அண்ணன் தம்பிக்கூட அந்த ஐந்துசெண்டைப்பற்றி அப்புறம் பேசவில்லை .

 

//கர்ணன் களத்தில் கவசங்களும் குண்டலங்களுமின்றி நின்றிருக்கும் கொடுந்துயரக் காட்சியை சூதன் சொல்லிக்கொண்டிருந்தபோது மிக அப்பால் மரத்தடியில் இலைப்பரப்பில் அமர்ந்து ஊழ்கத்திலிருந்தான். அரைக்கணம் திரும்பி அவன் விழிகளை பார்த்தேன். அதிலிருந்த மலர்வு என்னை திகைக்கச் செய்தது. அது தன்னுள் தான் நிறைந்தவனின் உளமறியும் உவகையின் வெளிப்பாடு.//


குலதெய்வம் பெயர் அறியாத குடும்பஸ்தன்போல, குடும்பத்தை விட்டு குலதெய்வம்கோயிலிலேயே சன்னியாசியாக இருப்பர்கள்போல கர்ணன் பெயர்  அறியாத நாகனும் இங்குதான் இருக்கிறார்கள். போர்களத்தில் ஊழகத்தில் உட்காரும் முனிவர்களும் இங்குதான் இருக்கிறார்கள். 

 

களிற்றியானை நிரை-07 அறியாதவரா? அறிந்தவரா? என்கிறது.

 

அன்பும் நன்றியும்

ராமராஜன் மாணிக்கவேல். 

களிற்றியானை நிரை - புது மொழியும், இலக்கணமும்



மிகப் பெரிய பாரதப் போர் முடிந்து விட்டது. பழைய நகர் ஒழிந்து புது நகர் எழுந்துவிட்டிருக்கிறது. அப்போரின் மையமே நெகிழ்வற்ற சட்டங்கள், அவற்றை உருவாக்கிய உறைந்த முறைமைகள், அம்முறைமைகளை உருவாக்கிய இறுகிய நெறிகள் போன்றவற்றை அழித்து, அத்தகைய நெறிகளை உருவாக்கிய அறம் தன் புது நெறிகளைக் கண்டடைவது தான். இனி இந்நெறிகள் முறைமைகள் ஆகி, முறைமைகள் சட்டங்கள் ஆக வேண்டும். அனைத்தும் அதன் ஆரம்பத்திற்கு சென்று, மறுபடியும் முதலில் இருந்தே துவங்கியாக வேண்டும். இதோ அதன் அடிப்படையாக ஒரு புது மொழி பிறந்து வருகிறது. இலக்கணமும், இலக்கியமும் அற்ற மொழி. ஒருவரை ஒருவர் தொடர்புறுத்துவதெற்கென்றே உருவாகிய மொழி… அம்மொழியில் கவிதை நிகழும் அக்கணம் மிகப்பெரிய உளஎழுச்சியைத் தந்தது. இனி மொழி சிறகு கொள்ளும். அனைவரையும் ஒன்றிணைக்கும். அதில் புது காவியங்கள் எழும். அதன் பிறகு இலக்கணம் உருவாகும். அத்தகைய ஒரு இலக்கணம் உருவாகி வருகையில் புதிய நெறிகளும், முறைமைகளும், சட்டங்களும் கூட உருவாகி விட்டிருக்கும் இல்லையா. இன்று மக்கள் ஆடும் அந்த நடனம் யுயுத்ஸுவை தன் கையில் எடுத்துக் கொள்ளும் அந்த காட்சி ஒரு மிகச் சிறந்த படிமம். இவ்வளவு எழுதிய பின்னும் இன்னும் சொல்ல எஞ்சியிருக்கிறது இல்லையா ஜெ!!!

 

அன்புடன்,

அருணாச்சலம் மகராஜன்

களிற்றியானை நிரை - கண்ணி நுண் சிறு தாம்பு




களிற்றியானை நிரையின் போக்கு மெல்ல மெல்லத் தெளிவாகி வருகிறது. ஒரு புது மக்கள் தொகை ஒரு நாடாக தன்னை உணர்ந்து உருவாவதன் சித்திரம். யானைகள் நிரை நிரையாக வருவது போல புது மக்கள் வரிசை வரிசையாக களிற்றுநகரிக்கு (ஹஸ்தினபுரி) வருகிறார்கள். இனி அவர்களை மேய்க்கும் பாகர்கள் அந்த களிறுகளை அறிந்து அவற்றை மேய்க்கும் திறனை எய்தவேண்டும். 19 ஆம் பகுதியில் யானையைப் பழக்குவதைப் பற்றிய சாரிகரின் 'யானைகளைப் பழக்குவது என்பது யானைக்கும் அதை பழக்குபவர்களுக்கும் இடையே ஒரு பொதுவான மொழியை உருவாக்குவது மட்டும் தான்.'  என்ற கூற்று முக்கியமான ஒன்று. யுயுத்ஸுவை அவர் அந்த மக்கள்திரளின் மொழியைக் கற்றுக் கொள்ளச் சொல்கிறார். அவர்களுடன் இணைந்து அம்மொழியை அறிந்து, அவனுக்கும் அவர்களுக்குமிடையே ஒரு உரையாடலை ஏற்படுத்தச் சொல்கிறார். அவர் அம்மக்கள் திரளை ஒரு பெருங்களிறாக உருவகிக்கிறார். அதை பழக்கி எடுத்து ஆளச் சொல்கிறார். பழக்கி எடுத்த யானையைத் தளைக்க கட்டப்பட்ட காலை அழுத்தக்கூடிய கண்ணிகள் நிரம்பிய ஒரு சிறு தாம்புக் கயிறு போதும். அரசனுக்கும், மக்கள் நிரைக்கும் இடையேயான ஒரு பொதுவான மொழியில் உருவாகும் நெறிகள், முறைமைகள் மற்றும் சட்டங்கள் தான் அப்பெரும் களிற்று நிரையையே கட்டி செலுத்தப் போகும் கண்ணிநுண் சிறு தாம்பு, இல்லையா!!!

 

ஆனால் அத்தாம்புக் கயிரைக் காட்டியது யார் என்பது தான் முக்கியம். அறியாதவர் காட்டினால் மதமிளகும். ஏறி மிதித்துச் சென்று விடும் அக்களிறு. அதே கயிறை அன்னை கட்டினால் அந்த முதல் பெரும் பரம்பொருளும் கூட கட்டுண்டு விடும் அல்லவா. யசோதையின் கட்டில் உரலுடன் கட்டுண்ட வெண்ணைக் கண்ணனைச் சுட்டிய மதுர கவியாழ்வாரின் பிரபந்தத்தின் முதல் அடிக்கு இப்படி ஒரு விரிவான சித்திரம் எழுந்து வரக்கூடும் என நினைக்கவில்லை ஜெ.  நிச்சயம் வெண்முரசின் காவியச் சுவை ததும்பும் பகுதிகளில் ஒன்று என இப்பகுதியைத் தயங்காமல் சொல்லலாம்.

 

அன்புடன்,

அருணாச்சலம் மகராஜன்